Published:Updated:

`கல்சட்டி முதல் காப்பர் பாத்திரங்கள் வரை ஒரே கடையில்!' - பாரம்பர்ய பாத்திர பிசினஸில் சாதித்த சரவணன்

சரவணன்
சரவணன் ( படம்: நா.ராஜமுருகன் / விகடன் )

வழக்கொழிந்துபோன வெண்கலக் கும்பா, அஞ்சறைப்பெட்டி, தமிழர்கள் முன்பு பயன்படுத்திய கல்சட்டி என பாரம்பர்ய பாத்திரங்கள் முதல் நவீன வீட்டு உபயோகப் பொருள்கள் வரை அத்தனையும் ஒரே கடையில் விற்பனை செய்கிறார் சரவணன்.

தொழிலில் புதுமையைப் புகுத்தி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் திருப்தியையும் பெற்றுவிட்டால், தொழிலில் எளிதாக வெற்றிக்கொடியை நாட்டிவிடலாம் என்பதற்கு, உதாரணமாக மாறியிருக்கிறார் சரவணன். கரூர் ஜவஹர் பஜாரில், `ஸ்ரீ சரவணன் கிச்சன் வேர்ஸ்’ என்ற பெயரில் பாத்திரக்கடை நடத்திவரும் சரவணன், பாரம்பர்ய பாத்திரங்களை மீட்டெடுத்து, அதை மக்களிடம் விற்பனை செய்வது, பாத்திரங்களின் தன்மைகள், உலோகங்கள் குறித்து விளக்குவது என வியாபாரத்தையும் தாண்டி, வாடிக்கையாளர்களின் நலனிலும் அக்கறை காட்டுகிறார்.

பாத்திரக் கடையில், வாடிக்கையாளர்களிடம் பொறுமையாக பாத்திரங்களைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்த சரவணனை, அவரது `பிஸி’யான நேரத்துக்கு இடையில் சந்தித்துப் பேசினோம்.

எவர் சில்வர் பாத்திரம்
எவர் சில்வர் பாத்திரம்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

``எனக்குச் சொந்த ஊர், கரூர் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம். விவசாயக் குடும்பம். ஆனா, பெரிய அளவில் நிலமெல்லாம் இல்லை. கஷ்டப்படுற சூழல்லதான் பொறந்து வளர்ந்தேன். அதனால, நல்லா படிச்சேன். 1997-ம் ஆண்டு, டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கோர்ஸ் முடிச்சுட்டு, கரூர்ல உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் ஒரு வருஷம் வரை, மாதம் ரூ.1,500 சம்பளத்துல வேலை பார்த்தேன். அதன் பிறகு, சென்னையில உள்ள ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஒரு வருடம் அப்ரண்டிஸ்னு பணியாற்றினேன்.

அதன் பிறகு, கரூருக்கு வந்து இங்குள்ள கொசு வலை கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக இரண்டரை வருஷம் வேலை பார்த்தேன். கொசு வலை தயாரிப்பு குறித்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு, 2004-ம் வருடம் கொசு வலை கம்பெனிகளுக்கு ஜாப் வொர்க்ஸ் தயாரிக்கிற தொழிலை ஆரம்பித்தேன். இடமும் மெஷினரியும் வாடகை அடிப்படையில் பிடித்து தொழில் பண்ணினேன். கையில் இருந்த ரூ.3.5 லட்சத்தை வச்சு, வாடகைக்கு இயக்கி வந்த இயந்திரங்களை சொந்தமா வாங்கினேன். கடுமையா உழைச்சதுல வருமானம் வர ஆரம்பித்தது. குடும்பத்தைப் பீடித்த வறுமை கொஞ்சம் கொஞ்சமா ஒழியத் தொடங்கியது. இந்த நிலையில 2015-ல எனக்கு கல்யாணம் ஆச்சு.

கலைப்பொருள்கள்
கலைப்பொருள்கள்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

அந்த வருஷமே, நண்பர் ஒருவர் மூலமா மத்திய அரசுக்கு சொந்தமான சேலம் உருக்காலையின் பாத்திரப் பிரிவின் கரூர் மாவட்ட அங்கீகாரம் பெற்ற விற்பனையாளராக டீலர்ஷிப் எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தெரியாத தொழில் என்றாலும், மனதில் இருந்த தன்னம்பிக்கையின் காரணமான அந்தத் தொழிலில் கால் பதிச்சேன். கடை, மெட்டீரியல்ஸ்னு ரூ.12 லட்சம் வரை மூலதனம் போட்டேன். சில்வரில் சிறந்த தரமான 304 கிரேடு சில்வர் பாத்திரங்களை மட்டும்தான், சேலம் உருக்காலை தயாரித்தது. வேறு வகை சில்வர் பாத்திரங்களில் பலவிதமான பிரச்னைகள் வரும். ஆனா, சேலம் உருக்காலையில் தயாரிக்கப்படும் பாத்திரங்களல அதுமாதிரி எந்தப் பிரச்னையும் வராது. அதனால 100 வகையான பாத்திரங்களை வாங்கி விற்க ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

304 கிரேடு பாத்திரங்களை லோக்கல் சேனல் விளம்பரம் செஞ்சேன். அது, மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஆனா, எல்லா கம்பெனிகள் தயாரிக்கும் பொருளையும் மக்கள் எதிர்பார்த்ததால, 304 கிரேடு தரமுள்ள பாத்திரங்களைத் தயார் பண்ணும் ஏழு தரமான தனியார் கம்பெனிகளின் டீலர்ஷிப்பையும் எடுத்தேன். இதனால கஸ்டமர்கள் என் கடையைத் தேடி வர்றது அதிகமாச்சு.

அதுவரை சில்வர் பாத்திரங்களை மட்டும் வித்துவந்த நான், அடுத்து மண்பாண்டங்களை விக்க ஆரம்பித்தேன். மண் பாத்திரங்களில் வாட்டர் ஜக், வாட்டர் பாட்டில், கப் அண்ட் சாசர், சொம்பு, டம்பளர்னு பல ஊர்களில் இருந்தும் வாங்கி வந்து விற்க ஆரம்பித்தேன். அதோடு, கடைக்கு வந்த கஸ்டமர்களிடம், மண்பாண்டங்களின் பலன், தன்மைகள் குறித்து, சுவாரஸ்யமாக விளக்கினேன். அது, கஸ்டமர்களைக் கவர்ந்தது.

என் மாமனார் மணி, லாரியில் இந்தியா முழுக்க சுற்றியவர். அதனால், அவருக்கு எங்கெங்கு எந்தப் பாத்திரங்கள் கிடைக்கும்ங்கிற விவரம் அத்துப்படி. அவர் எனக்கு பெரிதும் உதவினார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழக்கொழிந்த பாரம்பர்ய பாத்திரங்களை மீட்டெடுத்து, அதை மக்களுக்கு பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னு முடிவு பண்ணினேன். அதற்காக, அடுத்து வெண்கலம், காப்பர், பித்தளை பாத்திரங்களை விற்க ஆரம்பித்தேன். ஜாயின்ட் இல்லாமல் ஒரே மோல்டில் செய்யப்படும் தரமான பாத்திரங்களை மட்டும் வாங்கி, விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். பாத்திரக் கடை தொழில் பிக்கப் ஆனதால், கொசுவலை ஜாப் வொர்க் தொழிலை மூடிட்டேன்.

காப்பர் பாத்திரங்கள்
காப்பர் பாத்திரங்கள்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

அடுத்து, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் போன்ற பிரசித்திப் பெற்ற ஆன்மிகத் தலங்களில் மட்டும் கிடைக்கும் பித்தளை பூஜைப்பொருள்களை வாங்கி விற்க ஆரம்பித்தேன். அதுவும், கஸ்டமர்களை ஈர்த்தது. அதேபோல், `காப்பர் பாத்திரங்களை சமைக்கப் பயன்படுத்தினால், உடலுக்கு நல்லது’னு சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனபோது, கரூர் மக்கள் என் கடைக்கு வந்து காப்பர் பொருள்களை வாங்கினாங்க. வெறுமனே, `கஸ்டமர்கள் வந்தாங்க, அவங்ககிட்ட பேசி பொருளை வித்தோம்’னு இல்லாம, அவர்களிடம் நிறைய உரையாடுவேன். தரமான காப்பரில் 98% காப்பரும், 2% வெள்ளீயமும் இருக்கணும்னு புரிய வைப்பேன். தொடர்ந்து, இரும்புப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தினேன். பிறகு, வார்ப்பு இரும்புப் பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தினேன்.

பிளாட்பாரங்களில் விற்கப்படும் இரும்புப் பாத்திரங்கள் ரீசைக்கிள் தயாரிப்பு இரும்பில் செய்வது. அதில் உள்ள இரும்புச் சத்து உடம்பில் சேராது. ஆனா, ஃப்ரெஷ் ஷீட்டில் தயாரிக்கப்படும் பாத்திரங்களில் சமைத்தால், அதில் உள்ள இரும்புச் சத்து நமக்கு கிடைக்கும். `இரும்புப் பாத்திரங்களில் 100% இரும்பு கன்டென்ட் மட்டும் இருக்கும். ஆனால், வார்ப்பு இரும்பில் 98% இரும்பும், 2% சிலிக்கா மற்றும் கார்பனும் இருக்கும். இரண்டு பாத்திரங்களும் ஒரே நன்மைதான் தரும். ஆனா, வார்ப்பு இரும்பு பாத்திரங்களில் அடி பிடிக்காது. அதுல சமைச்சா உணவின் சுவை சிறப்பா இருக்கும்’னு மக்களிடம் பல விஷயங்களை விளக்குவேன்.

வெண்கலப் பாத்திரங்களைத் தட்டுனா, கோயில் மணி போல டங்னு சத்தம் வரணும். வெண்கலப் பாத்திரங்களில் புளிப்பு சுவையுடைய பொருள்களையும், செம்புப் பாத்திரங்கள்ல பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும் வைக்கக் கூடாது. உப்பு, புளி போன்ற அரிப்பு தன்மையுள்ள உணவுப் பொருள்களை பீங்கான் ஜாடியில் மட்டும் வைக்க வேண்டும்ன்னு பல விஷயங்களை கஸ்டமர்களுக்குப் புரிய வைத்தேன்.

``பெட்டிக்கடையா ஆரம்பிச்சது; இப்போ 7 கிளைகளா விரிஞ்சிருக்கு!" - அறந்தாங்கி சுந்தரம் பேக்கரியின் கதை

இதை நேரடியா கடைக்கு வரும் கஸ்டமர்கள்கிட்ட சொன்னதோட, லோக்கல் சேனலிலும் தினமும் ஒரு மணி நேரம் இந்தப் பாத்திரங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தேன். இதன்மூலமா, கரூர் மாவட்டம் முழுக்க எனக்கு கஸ்டமர்கள் கிடைச்சாங்க. அதன்பிறகு, `ஶ்ரீ சரவணா கிச்சன் வேர்ஸ்’ங்கிற பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு, அதுல பாத்திரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பிச்சேன். அதன்மூலம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரானு மத்த மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கனடானு பல நாடுகளில் இருந்தும் எங்க கடைக்கு கஸ்டமர்கள் கிடைக்க ஆரம்பிச்சாங்க. அதன்மூலம், தினமும் குறைந்தது 10 பேர்களுக்கு நாங்க பாத்திரங்களை பார்சலில் அனுப்பும் அளவுக்கு இப்போது வளர்ந்திருக்கிறோம்.

அதேபோல், வழக்கொழிந்துபோன வெண்கலக் கும்பா, அஞ்சறைப்பெட்டி, நாகரிகம் தோன்றிய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கல்சட்டி உள்ளிட்ட சமையல் பாத்திரங்களை விற்க ஆரம்பித்தேன். தொடர்ந்து, பீங்கான், கண்ணாடி, கல் சமையல் பாத்திரங்களை அறிமுகப்படுத்தினேன். அடுத்த முயற்சியாக, குக்கர், மிக்ஸி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், இன்டக்ஷன் ஸ்டவ், பிளாஸ்க், ஹாட் பாக்ஸ், அயர்ன் பாக்ஸ், ஃபேன்னு எலெக்ட்ரிக்கல் பொருள்களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். மரத்திலாலான கைவினைப் பொருள்களையும் விக்க ஆரம்பிச்சேன். இதனால, `ஒரே இடத்தில் எல்லா பொருள்களும் கிடைக்குது’னு கஸ்டமர்கள் எங்க கடைக்கு ரெகுலரா வர ஆரம்பிச்சாங்க.

`ஒருநாள் என் பெயரை எல்லோரும் உச்சரிப்பாங்க!' - கூலி வேலை டு செல்போன் ஷோரூம்; சாதித்த தொழிலதிபர்

எங்க கடையில நான், மாமனார், மனைவி, மாமியார்னு 80% வேலையை செய்றோம். வெளி ஆள்கள் கஸ்டமர்களிடம் இயல்பாகப் பேச மாட்டார்கள் என்பதால, எங்க குடும்ப உறுப்பினர்களே பெரும்பாலும் கடையில் இருக்கிறோம். அஞ்சு ரூபாயில இருந்து, அதிகபட்சமா வெண்கலப் பொங்கல் பானை ரூ.5,000-க்கும் விக்கிறேன். வர்ற வருமானத்துல பெரும்பகுதியை கடையை டெவலெப் செய்றதுக்கே செலவழிக்குறதால, எல்லா செலவுகளும்போக மாசம் ரூ.1 லட்சம் லாபம் வருது.

நான் விற்பனை செய்யும் 12 வகையான பாத்திரங்களையும் விற்க, ஒவ்வொரு பாத்திர வகைக்கும் ஒரு ஃப்ளோர் என 12 ஃப்ளோர் கொண்ட கடையைத் திறக்கணும்ங்கிறதுதான் என் லட்சியம்’’ என்று உறுதியாகப் பேசிமுடித்தார் சரவணன்.

முயற்சி திருவினையாக்கும் சரவணன்!

அடுத்த கட்டுரைக்கு