Published:Updated:

இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனை; `அப்போலோ’ பிரதாப் சி.ரெட்டி சாதித்தது எப்படி?

அப்போலோ பிரதாப் ரெட்டி!
அப்போலோ பிரதாப் ரெட்டி!

அது 1970-ம் ஆண்டு. அமெரிக்காவில் அவர் பார்த்திருந்த மருத்துவ சிகிச்சைக்கும் இந்தியாவில் இருந்ததற்கும் இருந்த வித்தியாசம் அவரை மலைக்க வைத்தது. பல நோய்களுக்கு இங்கே சிகிச்சையளிப்பதேகூட சிரமமாக இருந்தது.

தாகத்துக்குத் தண்ணீர்; பசிக்கு உணவு. இவை தவிர, எப்பேர்ப்பட்ட மாற்று வழியும் உதவாது. அதேபோல, ஒரு தொழிலுக்கு எது ஆதாரமோ அதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். சில நேரங்களில், `இதற்கு, இந்தச் சூழ்நிலையில், இதுதான் தேவை’ என்கிற அவர்களின் அழுத்தமான ஐடியாக்கள் அந்தத் துறையில் சரித்திரம் படைத்துவிடுகின்றன. `புதுப்புது ஐடியாக்கள்தான் வரலாற்றின் போக்கையே வடிவமைக்கின்றன’ என்கிறார், பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கீன்ஸ் (John Maynard Keynes). அப்படி `இந்தியாவுக்கு இது தேவை; இதைச் செய்தால் தொழிலும் அபாரமாக இருக்கும்’ என்று ஒரு புது ஐடியாவோடு களத்தில் இறங்கினார் டாக்டர் பிரதாப் சி ரெட்டி. `அப்போலோ’ என்ற சாம்ராஜ்ஜியம் உருவானது!

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

`அப்போலோ’... இன்றைக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தியா முழுக்க உள்ள செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தனியார் நிறுவன முதலாளிகளின் முதல் சாய்ஸாக இருப்பது இந்த மருத்துவமனைதான். வெளிநாட்டில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளை நம்மூரில் அதே தரத்துடன் தருவதுதான் இந்த மருத்துவமனையின் வெற்றிக்கு அடிப்படை. `அப்போலோ’ என்கிற இந்த மிகப் பெரிய ஆலமரத்துக்கு விதை போட்டவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி.

1933-ம் ஆண்டு, அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் மாகாணம் (இன்றைக்கு ஆந்திர மாநிலம், சித்தூருக்கு அருகிலுள்ள), அரகோண்டாவில் பிறந்தார் பிரதாப் சந்திர ரெட்டி. இளம் வயதிலேயே மருத்துவத்தின் மேல் அவருக்குத் தீராத ஆர்வம். அதைப் பார்த்துவிட்டு, அவருடைய தந்தை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அவரைச் சேர்த்துவிட்டார். அங்கே தன் மருத்துவப் படிப்பை முடித்தார். மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குப் போனார். அங்கே மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் வேலை பார்த்தார். இதயநோய் மருத்துவத்தில் (Cardiology) கவனம் செலுத்தினார். பாஸ்டன் மிசோரி ஸ்டேட் செஸ்ட் மருத்துவமனையில் இதயநோய் தொடர்பான மருத்துவத்தில் தொடர்ந்து பயிற்சி செய்தார். பல ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பியவருக்கு அவர் சார்ந்த மருத்துவத்துறையில் பல சவால்கள் காத்திருந்தன.

பிரதாப் ரெட்டி
பிரதாப் ரெட்டி

அது 1970-ம் ஆண்டு. அமெரிக்காவில் அவர் பார்த்திருந்த மருத்துவ சிகிச்சைக்கும் இந்தியாவில் இருந்ததற்கும் இருந்த வித்தியாசம் அவரை மலைக்க வைத்தது. பல நோய்களுக்கு இங்கே சிகிச்சையளிப்பதேகூட சிரமமாக இருந்தது. தரமான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் இங்கே இல்லை. 38 வயதான ஒரு நோயாளிக்கு இதயநோய். பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு அன்றைய சூழலில் அமெரிக்காவில் இருப்பதைப்போல் போதுமான மருத்துவ வசதிகள் இங்கே இல்லை. அதன் காரணமாகவே அவர் உயிரிழக்க நேரிட்டது. அதைப் பார்த்துத் துடித்துப்போனார் டாக்டர் ரெட்டி. அது மட்டுமல்ல, அவருடைய தந்தைக்கு மூளை ரத்தக்கசிவு நோய் (Brain Hemorrhage). அவரையும் ரெட்டியால் காப்பாற்ற முடியவில்லை. அம்மாவுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer). அதற்கு சரியான சிகிச்சை கொடுக்க முடியவில்லை.

பிரதாப் சி ரெட்டியின் நெருங்கிய நண்பர் குமார ராஜா முத்தையா என்பவர். அவர் திடீரென்று வந்த மாரடைப்பில் இறந்துபோனார். இந்த நிகழ்வுகளால் நொறுங்கிப்போனார் டாக்டர் பிரதாப் சி ரெட்டி. இப்படி, எத்தனையோ பேர் தரமான சிகிச்சை கிடைக்காமல் இந்தியாவில் இறந்துபோகிறார்களே என்கிற வேதனை அவரை சதா வாட்டிவதைத்தது. இதற்கு என்ன செய்யலாம் என்கிற சிந்தனையே அவரைப் பிடித்துக்கொண்டிருந்தது.

நல்ல சம்பளத்தை விட்டுவிட்டு சொந்த மருத்துவமனை

எல்லா வசதிகளுடன்கூடிய ஒரு மருத்துவமனை, அத்தனை நோய்களுக்கும் உலகத் தரத்தில் சிகிச்சை தரும் ஒரு மையம்... அதுதான் இன்றைய அவசரத் தேவை என்பதை உணர்ந்தார் டாக்டர் பிரதாப் சி ரெட்டி. `அப்போலோ’ சாம்ராஜ்ஜியத்துக்கான அடித்தளம் அவர் எண்ணத்தில் உருவானது. 1983-ம் ஆண்டு. 150 படுக்கை வசதிகளுடன் சென்னையில் உதயமானது `அப்போலோ’ ஹாஸ்பிட்டல்ஸ். அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் மருத்துவமனையைத் திறந்து வைத்தார். `அப்போலோ’ மருத்துவமனையின் அடிப்படை இதுதான்... வெளிநாட்டில் பெறுவதைப் போன்ற உயர்தரமான மருத்துவ சிகிச்சை; ஆனால், இந்தியாவிற்கு ஏற்ற செலவில். மெள்ள வளர ஆரம்பித்தது `அப்போலோ.’

Prathap C Reddy
Prathap C Reddy

நல்ல சம்பளம், எதிர்காலம் வேண்டுமே என்கிற எண்ணத்தில் இந்தியாவிலிருந்து மேலைநாடுகளுக்குப் போன மருத்துவர்களெல்லாம் இந்தியாவில் உதயமாகியிருந்த `அப்போலோ’ என்கிற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அவர்களில் சில மருத்துவர்கள் `அப்போலோ’வுக்கு வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு நாளும் புதுமை படைத்துக்கொண்டிருக்கிறது `அப்போலோ’. ஆர்டர் செய்தால் இதன் மருந்தகத்திலிருந்து இரண்டு மணி நேரத்தில் மருந்து வீடு தேடிவரும். அந்த அளவுக்கு `அப்போலோ’ மருந்தகங்களின் நெட்வொர்க் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சேர்த்து 71 மருத்துவமனைகள், 3,400 மருந்தகங்கள், 150 பரிசோதனை மையங்கள், 15 மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள்... எனப் பரந்துவிரிந்திருக்கிறது `அப்போலோ’.

எத்தனையோ விருதுகளைத் தன் மருத்துவச் சாதனைகளுக்காகப் பெற்றிருக்கிறார் டாக்டர் பிரதாப் சி ரெட்டி. அவற்றில் இந்திய அரசின் மரியாதைக்குரிய பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளும் அடக்கம். 2017-ம் ஆண்டு இந்தியா டுடே வெளியிட்ட இந்தியாவின் 50 சக்திவாய்ந்த ஆளுமைகளின் பட்டியலில் டாக்டர் பிரதாப் சி ரெட்டியும் ஒருவர். அவருக்கு நான்கு மகள்கள். நால்வருமே அப்போலோ நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கிறார்கள். அப்போலோ, இந்திய மருத்துவத்துறையில் ஒரு வித்தியாசமான புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இதைப் பார்த்துத்தான் பல மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இங்கே உருவாகின.

Prathap C Reddy
Prathap C Reddy
M.Asokan

அப்போலோ மாதிரியான கார்ப்பரேட் மருத்துவமனைகள் மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், அந்த மருத்துவமனைகள் நம் நாட்டில் மருத்துவ சிகிச்சைகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவவே செய்துள்ளன.

இந்திய மருத்துவத் துறையில் அழுத்தமாக, தனித்துவமான ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது அப்போலோ. அதுவும் டாக்டர் பிரதாப் சி ரெட்டி என்ற ஒரு தனிமனிதரின் கனவால், உழைப்பால் அது சாத்தியமாகியிருக்கிறது என்பது நம்மை பிரமிக்க வைக்கும் உண்மை!

அடுத்த கட்டுரைக்கு