Published:Updated:

மளிகைக்கடை TO பிராண்ட் ஸ்டோர்... கலக்கல் Nuts N Spices! - சென்னை பிசினஸ்மேனின் வெற்றிப் பயணம்!

BUSINESS

பிரீமியம் ஸ்டோரி
க்களின் தேவையை அறிந்து பொருள்களை விற்போர் ஒரு ரகம். ஒரு பொருளுக்கான தேவையை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சில பொருள் களைத் தேர்ந்தெடுத்து அதைப் பிரபலப்படுத்தி வெற்றி பெறுவோர் மற்றொரு ரகம். அந்த வகையில், உயர் வர்க்கத்தினருக்கான உணவுப் பொருளாகக் கருதப்பட்ட உலர் பழங்களைப் பிரபலப்படுத்தும் வகையில், அதற்கான விற்பனை நிலையத்தை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் சுனில் சங்க்லெசா. ‘நட்ஸ் ‘என்’ ஸ்பைசஸ்’ என்ற இவரது நிறுவனம், சென்னையின் முக்கியப் பகுதிகளில் தனது கிளைகளைப் பரப்பியிருக்கிறது. சென்னை தி.நகரில் உள்ள அவரது நிறுவனத்தில் சுனிலை சந்தித்துப் பேசினோம்.

படித்தது 12-ம் வகுப்பு

“என் பூர்வீகம் ராஜஸ்தான். இளமைக் காலத்தில் தன் சகோதரர்களுடன் தொழில் வாய்ப்புக்காக என் தாத்தா சென்னை வந்தார். செளகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் சிறிய அளவில் மளிகைக்கடை தொடங்கினார். அவருடன் என் அப்பாவும் ஒரு கட்டத்தில் இணையவே, அந்தத் தொழில் மேலும் விரிவடைந்தது. வாடிக்கையாளர் களின் வீட்டுக்கே மளிகைப் பொருள் களைக் கொண்டு சேர்க்கும் முறையை என் அப்பா பிரபலப்படுத்தினார். சிறு வயதிலிருந்தே நானும் என் தம்பிகள் இருவரும் குடும்பத் தொழிலான மளிகைக்கடை வியாபாரத்தில் கவனம் செலுத்தினோம். பொட்டலம் கட்டுவது உட்பட எல்லா வேலைகளையும் ஆர்வமாகச் செய்தோம். அந்த வியாபாரச் சூழலிலேயே வளர்ந் ததால், மக்களின் எதிர்பார்ப்பு, தொழில் விஷயங்கள் பலவும் எனக்குப் பரிச்சயமானது. 12-ம் வகுப்புடன் படிப்பிலிருந்து விலகி, அப்பாவின் தொழிலில் இறங்கினேன்.

சுனில் சங்க்லெசா
சுனில் சங்க்லெசா

ரூ.12 லட்சம் முதலீட்டில்...

இந்த நிலையில், எங்கள் மளிகைக்கடையைப் புதுப்பிக்கும் முயற்சிகள் சில வருடங்கள் நடந்தன. எனவே, அந்தப் பகுதிக்கு அருகிலேயே எங்கள் மளிகைக் கடையை இடமாற்றம் செய்திருந்த நிலையில், விற்பனை குறைந்தது. எனவே, குடும்ப நண்பர் ஒருவரது மளிகைக் கடையில் சில காலம் வேலை செய்தேன். அந்தக் கால கட்டத்தில்தான் சூப்பர் மார்க்கெட் ஸ்டோர்கள் பிரபலமாகி வந்தன. அவற்றைவிட வித்தியாசமாகவும், மக்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கும் நட்ஸ் உணவுகளைப் பிரபலப் படுத்தும் வகையிலும் ஸ்பெஷா லிட்டி ஸ்டோர் தொடங்கும் எனது ஆசை என் மனதில் வேரூன்றி இருந்தது. வேலை செய்துவந்த அந்த மளிகைக் கடையிலிருந்து ஒருகட்டத்தில் விலகும் சூழல் உருவாகவே, ‘இதுவரை கிடைத்த தொழில் அனுபவத்தில் புதிதாகத் தொழில் தொடங்க இதுதான் சரியான தருணம்’ என உறுதியாக முடிவெடுத்தேன். ரூ.12 லட்சம் முதலீட்டில், 1999-ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘நட்ஸ் ‘என்’ ஸ்பைசஸ்’ கடையின் முதல் கிளையைத் தொடங்கினேன்.

ஜெயிக்கும் என்பதில் உறுதி

‘இந்தத் தொழில் வெற்றி பெறாது’ எனச் சிலர் சொன்னாலும், ‘இது ஃப்யூச்சர் கான்செப்ட்’ என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போது அதிகபட்சம் 10 வகை நட்ஸ்தான் பிரபலமாக இருந்தன. மற்ற நாடுகளில் பிரபலமாக இருந்த மற்ற நட்ஸ் வகைகளையும் வாங்கி விற்பனை செய்ததுடன், இந்தத் தொழிலுக்கான வியாபாரத்தையும் சென்னையில் பிரபலப்படுத்தினேன்.

ஸ்நாக்ஸ், பிஸ்கட், சாக்லேட், ஜூஸ் உட்பட பல்வேறு உணவுப் பொருள்களுடன், சூப்பர் மார்க்கெட் கடைகளில் விற்பனை ஆகாத வெளிநாட்டு பிராண்ட் உணவுப் பொருள் களைத் தேடிப் பிடித்து வரவழைத்து விற்பனை செய்தோம். இதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து பிரத்யேக உணவுப் பொருள்கள் குறித்துத் தெரிந்துகொண்டோம்.

என் இன்னொரு சகோதரரும் நண்பர் ஒருவரும் என் நட்ஸ் தொழிலில் பார்ட்னர்களாக ஆகி, அவர்கள் இருவரும் விற்பனையைக் கவனித்துக் கொள்ள, உற்பத்தி மற்றும் உணவுப் பொருள்களை வாங்கும் விஷயங்களை நான் கவனித்துக்கொண்டேன். நேரடியாகச் சாப்பிடும் உணவுப் பொருள்களுடன், சமைத்துச் சாப்பிடும் வகையில் ஆயில், மசாலாப் பொருள்கள், நூடுல்ஸ் போன்ற பல்வேறு உணவுப் பொருள்களையும் விற்பனை செய்யவே, வரவேற்பு அதிகரித்தது. தற்போது 30 வகையான நட்ஸ் வகைகளை விற்பனை செய்கிறோம்.

‘‘உங்கள் நிறுவனப் பெயர் மற்றும் லோகோவுடன் வேணும். அப்பதான் பலருக்கும் பெருமிதத்துடன் தர முடியும்’’ என்று வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்கு எங்கள் மதிப்பு உயர்ந்தது. அதுதான் எங்கள் வெற்றி...’’

உங்க லோகோ வேணாம்..!

தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நேரங்களில் கிஃப்ட் பாக்ஸ் மற்றும் விற்பனைக்கான ஸ்வீட் பாக்ஸில், ‘உங்கள் நிறுவன லோகோ வேணாம்’ எனப் பலரும் கூறினார்கள். எங்கள் நிறுவன வளர்ச்சியால், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த நிலை மாறியது. ‘உங்கள் நிறுவனப் பெயர் மற்றும் லோகோவுடன் வேணும். அப்பதான் பலருக்கும் பெருமிதத்துடன் தர முடியும்’ என்று வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்கு எங்களுக்கான மதிப்பு உயர்ந்தது.

சுனில் சங்க்லெசா
சுனில் சங்க்லெசா

ஓரளவுக்குமேல் உற்பத்தியை அதிகப்படுத்தினால் சமயங்களில் நம் பொருளுக்கான தரமும், மக்களிடம் நமக்கான மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது. எனவேதான், எங்கள் நிறுவனத்துக்கும் விற்பனைப் பொருள்களுக்கும் தனிப்பட்ட மதிப்பை தக்கவைத்துக்கொள்ளவே, எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு இந்தியா முழுக்க நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் வலியுறுத்தினாலும் நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. எங்கள் நிறுவன உணவுப் பொருள்களை, ‘நட்ஸ் ‘என்’ ஸ்பைசஸ்’ கடைகளில் மட்டுமே விற்பனை செய்கிறோம்.

100 கோடியை நோக்கி...

சென்னையில் 31 கிளைகள், புதுச்சேரி மற்றும் கோயம்புத்தூரில் தலா ஒரு கிளையும் இருக்கின்றன. பெங்களூரு உள்ளிட்ட பிற மாநில பெரு நகரங்கள் சிலவற்றில் புதிய கிளைகளைத் தொடங்கவிருக்கிறோம். நேரடி விற்பனை தவிர, இந்தியா முழுக்க ஆன்லைன் விற்பனையும் நடக்கிறது. ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் நிலையில், இந்த ஆண்டு 100 கோடி இலக்குடன் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் சுனில்.

மக்களுக்குத் தேவையான பொருளைத் தனித்துவமான தரத்துடன் விற்பனை செய்தால், யாருமே தொழிலில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதற்கு நட்ஸ் என் ஸ்பைசஸ் ஒரு சிறந்த உதாரணம்!

பிட்ஸ்

பொருளாதாரப் புள்ளிவிவரங் களைத் தரும் ஐ.ஹெச்.எஸ் மார்கிட் நிறுவனத்தை எஸ்&பி குளோபல் இங்க் நிறுவனம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய இணைப்பாகக் கருதப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு