Published:Updated:

படித்தது எம்.பில்... செய்வது முட்டை மிட்டாய்! - கலக்கும் விழுப்புரம் இளைஞர்

சையத் உஸ்மான்
பிரீமியம் ஸ்டோரி
சையத் உஸ்மான்

BUSINESS

படித்தது எம்.பில்... செய்வது முட்டை மிட்டாய்! - கலக்கும் விழுப்புரம் இளைஞர்

BUSINESS

Published:Updated:
சையத் உஸ்மான்
பிரீமியம் ஸ்டோரி
சையத் உஸ்மான்
“நம்முடைய வெற்றிக்கான பாதையில் நிறைய தடைகள் வரும். ஆனால், எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தால், வாழ்க்கையில் வெற்றி சாத்தியமே. என் வெற்றிக்கு என் உழைப்பே முதலீடு” என நம்பிக்கை யுடன் பேசுகிறார் சையத் உஸ்மான்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 4 கி.மீ சென்றால், அப்பம்பட்டு கிராமம். எந்த ஹைடெக் வசதியும் இல்லாது, பழைமை மாறாது இருக்கும் ஒரு ஸ்வீட் கடை. அந்தக் கடையில் விற்பனையாகும் முட்டை மிட்டாய் என்ற ஸ்வீட்டைச் சூடாக வாங்கிச் சாப்பிட மக்கள் கூட்டம் வரிசையில் காத்துக் கிடப்பது ஒருபக்கம் என்றால், இன்னொரு புறம், தயார் செய்து பாத்திரங்களில் உள்ள ஸ்வீட்களை வேனில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்துகொண்டு இருந்தது.

இப்படிப் பல பரபரப்புகளுக்கு மத்தியிலும் இயல்பாகப் பேச ஆரம்பித்தார் முட்டை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் சையத் உஸ்மான்.

சையத் உஸ்மான்
சையத் உஸ்மான்

நெல்லைக்கு அல்வா; விழுப்புரத்துக்கு முட்டை மிட்டாய்..!

“இது எங்களோட குடும்ப தொழில் 50 வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கோம். திருநெல்வேலிக்கு எப்படி இருட்டுக்கடை அல்வா பிரபலமோ, அந்த அளவுக்கு விழுப்புரம் சுற்றுவட்டாரங்களில் முட்டை மிட்டாய்க்குனு தனி ரசிகர் கூட்டம் இருக்கு. இந்தக் கடை எங்க அப்பா காலத்தில் டீக்கடையாக இருந்துச்சு. இப்ப முழு நேர ஸ்வீட் கடையாக மாத்திட்டோம். அப்ப இருந்து இப்ப வரை ஒரே மாதிரியான சுவையை மெயின்டெயின் பண்றோம். அதுதான் எங்ளோட வாடிக்கை யாளர்கள் அதிகரிச்சுட்டே இருக்க காரணமாக இருக்கு.

‘‘இந்த டீக்கடையை நீதான் எடுத்து நடத்தணும். நாம் தயாரிக்கும் இந்த முட்டை மிட்டாயைப் பெரிய பிசினஸாக மாற்ற முடியும். அதுக்கு நீதான் மனசு வைக்கணும்’’ என்றார் என் அப்பா..!

பிசினஸ் என் தலைமுறையின் அடையாளம்..!

‘‘நான் படிச்சது எம்.காம் எம்.பில். படிச்ச படிப்புக்கு சம்பந்தமே இல்லாமல் வேலை பார்க்கிறேன்னு நான் வருத்தப்பட்டதே இல்லை. என் பிசினஸை என் தலைமுறையின் அடையாளமாகத்தான் பார்க்கிறேன். என் கூடப்பிறந்தவங்க மொத்தம் ஒன்பது பேர். வீட்டுக்கு நான்தான் கடைசிப் பையன். ஐ.ஏ.எஸ் ஆகணும் கிறது என் கனவு. எங்க அப்பா டீக்கடை வச்சு நடத்தித்தான் 10 பிள்ளைகளையும் படிக்க வச்சு ஆளாக்கினார். எந்தக் கஷ்டம் வந்தாலும் புதுசு புதுசா யோசிச்சு வியாபாரத்தை அதிகப்படுத்தி நாங்க கேட்டதை வாங்கிக் கொடுப்பார்.

முட்டை மிட்டாய்
முட்டை மிட்டாய்

அப்படியான ஒரு சூழலைச் சமாளிக்க உருவானதுதான் முட்டை மிட்டாய். பாலை பால்கோவாவாக மாற்றி, அத்துடன் முட்டை சேர்த்து கேக் பதத்தில் கொண்டுவந்து, சுடச்சுட விற்க ஆரம்பிக்க, வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் மந்தாரை இலையில்தான் வச்சு வித்துகிட்டு இருந்தார் என் அப்பா. அப்புறம் மக்களோட வசதிக்காக கேரி பேக், அலுமினிய ஃபாயில் பேப்பர்னு பார்சல் வசதிகளும் மாறிருச்சு.

நிறைவேறாமல்போன ஐ.ஏ.எஸ் கனவு..!

என்கூட பிறந்த எல்லாரும் இதுக்கு முன்னாடி என் அப்பாகூட இந்த பிசினஸில் இருந்தாங்க. அப்புறம் வெவ்வெறு பிசினஸ்களில் செட்டில் ஆயிட்டாங்க. நான் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படிக்க திருச்செந்தூர் கிளம்புனேன். அப்ப என் அப்பா என் கையை இறுக்கமா பிடிச்சு, ‘இந்த டீக்கடையை நீதான் எடுத்து நடத்தணும். நாம் தயாரிக்கும் இந்த முட்டை மிட்டாயைப் பெரிய அளவில் வரவேற்பு இருக்க பிசினஸாக மாற்ற முடியும். அதுக்கு நீதான் மனசு வைக்கணும்’னு சொன்னார்.

சையத் உஸ்மான்
சையத் உஸ்மான்

அதுல எனக்கு பிடித்தம் இல்லைன்னாலும் அப்பாவுக்காக டீக்கடை பிசினஸை கையில் எடுத்தேன். ஆரம்பத்தில் என் கனவை அடைய முடியலையேன்னு நிறைய நாள் கவலைப் பட்டிருக்கேன். ஆனா, டீக்கடை பிசினஸ் பண்றோம்னு அவமானப்பட்டதில்லை.

‘‘ஒரு கிலோ ஸ்வீட் ரூ.400-க்கு விற்பனை செய்றோம். பால் விலை, முட்டை விலை எல்லாம் அதிகமாக இருக்கிறதால, லாபம் குறைவா இருக்கு. இப்படி எங்க விற்பனையை அதிகரித்து லாபத்தை அதிகரிக்கணும்..!’’

முட்டை மிட்டாய்ங்கிறது பால், சர்க்கரை, முட்டை, நெய் கலந்து கேக் பதத்தில் பால்கோவா சுவையில் இருக்கும் ஒரு ஸ்வீட். எங்களோட இந்த ஸ்வீட்டை சாப்பிட்ட எல்லோருமே முதல் சுவையிலேயே ‘வித்தியாசமா இருக்கு’னு சொல்லுவாங்க. அதனால இந்த பிசினஸை எப்படி யெல்லாம் வளர்க்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.

கிராமத்திலிருந்து செஞ்சிக்கு...

எங்க ஊரைத் தாண்டி முட்டை மிட்டாயை அறிமுகம் செய்தால் தான் நிறைய மக்களை சென்றடைய முடியும். ஆனா, லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்ய வசதி கிடையாது.

எங்க கிராமத்திலிருந்து டீக்கடைக்குப் பொருள்கள் வாங்க செஞ்சிக்குப் போவோம். அங்கிருக்கும் சில வீடுகள், கடைகளில் உள்ள வாடிக்கை யாளர்களுக்கு முட்டை மிட்டாயைக் கொண்டுபோய்க் கொடுத்து பிசினஸ்ல முதல்படி எடுத்து வச்சேன்.

படித்தது எம்.பில்... செய்வது முட்டை மிட்டாய்! - கலக்கும் விழுப்புரம் இளைஞர்

மக்களுடைய வாய்வழி விளம்பரம் மூலமா நிறைய ஊர் மக்களுக்கு எங்களோட ஸ்வீட் தெரிய ஆரம்பிச்சுது. வெவ்வெறு ஊர்களிலிருந்து, போன் பண்ணி மக்கள் முட்டை மிட்டாய்க்கு ஆர்டர்கள் கொடுப்பாங்க. கொரியர் அனுப்புனா, ரெண்டு மூணு நாள் ஆகும். செலவும் அதிகம் என்கிறதால, எங்களோட ஊரிலிருந்து ஆர்டர் கொடுத்த மக்களின் ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் பார்சல்களைக் கொடுத்து விட்டுருவோம்.

120 கிலோ வரை

ஆர்டர்கள் அதிகரிச்சதால, வெவ்வெறு ஊர்களில் கிளைகள் ஆரம்பிக்கும் திட்டம் வந்துச்சு. எங்க அப்பா காலத்தில் ஒரு நாளைக்கு மூணு கிலோ தயார் பண்ணிட்டு இருந்தாரு. இப்ப நாங்க ஒரு நாளைக்கு 120 கிலோ வரை தயார் செய்கிறோம். செங்கல்பட்டு, சென்னை, உளுந்தூர்பேட்டை, ஆம்பூர்னு இப்போ ஏழு இடத்தில் கிளைகள் இருக்கு. ஆனா, சுவை மாறக் கூடாது என்பதற்காக உற்பத்தியை மட்டும் எங்களோட கிராமத்தில் நானும் என் குடும்பத்தாரும் சேர்ந்து தயார் செய்து வண்டிகளில் ஏற்றி கிளைகளுக்கு அனுப்புறோம்.

ஒரு கிலோ ஸ்வீட் 400 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். பால் விலை, முட்டை விலை எல்லாம் அதிகமாக இருக்கிறதால, லாபம் குறைவாகத்தான் இருக்கு. ஆனா, விற்பனையை அதிகரித்து லாபத்தை அதிகரிக்கணுங்கிறது தான் எங்களோட பிளான்.

எங்க கடையில் எப்பவும் கூட்டமா இருக்கிறதைப் பார்த்துட்டு, நிறைய வெளியூர்க் காரர்கள் ‘இது என்ன இவ்வளவு கூட்டம்’னு தேடி வருவாங்க. அவங்க யார்கிட்டயும் ஸ்வீட் வாங்குங்கனு நாங்க சொன்னது கிடையாது. ஒரு பீஸ் ஸ்வீட் எடுத்து தட்டில் போட்டு இலவசமா சாப்பிடத் தருவோம். சாப்பிட்டவங்க டேஸ்ட் பிடிச்சுப் போயி ஸ்வீட் வாங்கிட்டுப் போவாங்க. இது தான் நாங்க கடைப்பிடிக்கும் சிம்பிள் பிசினஸ் உத்தி.

தினமும் 360 லிட்டர் பால்

எங்க ஏரியாவில் இருக்கும் பால் தொழில் செய்பவர்களிடம் இருந்து, தினமும் 360 லிட்டர் பால் வாங்குறோம். ஸ்வீட்டுக்கு தேவையான முட்டைகள் நாமக்கல்லிருந்து வருது. பேக்கிங் செய்ய டெலிவரி செய்ய சில மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பைத் தர்றோம். ஆன்லைன் மூலமாக இப்போ வெளிநாடுகளிலிருந்து எல்லாம் ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுருக்கு” என்று பேசிக்கொண்டிருந்த உஸ்மான் செலிபிரெட்டி கஸ்டமர்கள் பற்றி பேச ஆரம்பித்தார்.

‘‘விழுப்புரத்துக்கு வரும் எல்லா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் எங்களோட ஸ்வீட்டை சாப்பிட்டுவிட்டு புகழ்ந்துருக்காங்க. எங்க முட்டை மிட்டாய் சின்ன கிராமத்தில் ஆரம்பிச்ச எங்களோட பிசினஸ் கூடிய விரைவில் தமிழகத்துக்கு ஒரு அடையாளமாக மாறும். இந்த இனிப்பை தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும், விரைவில் இந்தியா முழுக்கவும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை’’ என்று விடை பெறுகிறார் உஸ்மான்.

பிட்ஸ்

வெளிநாடு களில் இருந்து நம் நாட்டுக்கு நேரடியாக வரும் முதலீடு (FDI) 500 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியிருக் கிறது. 2000-ம் ஆண்டில்தான் இந்த அந்நிய நேரடி முதலீடு நம் நாட்டுக்கு வர அனுமதிக்கப் பட்டது!