Published:Updated:

100 பில்லியன் டாலர் கம்பெனி... சென்னைத் தொழிலதிபரின் கனவு!

ஜெய் விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெய் விஜயன்

சாஃப்ட்வேர் பிசினஸ்

100 பில்லியன் டாலர் கம்பெனி... சென்னைத் தொழிலதிபரின் கனவு!

சாஃப்ட்வேர் பிசினஸ்

Published:Updated:
ஜெய் விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெய் விஜயன்

சென்னையைச் சேர்ந்த ஜெய் விஜயன், எலான் மஸ்க்கின் டெஸ்லாவில் வேலை பார்த்துவிட்டு, டெகியான் என்கிற நிறுவனத்தைத் தொடங்க, அது 2020-ம் ஆண்டிலேயே யுனிகார்ன் நிலையை (ஒரு பில்லியன் டாலர் மதிப்பு அல்லது ரூ.7,500 கோடி மதிப்புகொண்ட நிறுவனமாக) அடைந்தது. இப்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மூன்று மடங்குக்குமேல் உயர்ந்து 3.5 பில்லியன் டாலராக முன்னேற்றம் கண்டுள்ளது.

கோவிட் காரணமாகக் கடந்த சில ஆண்டு களாக அமெரிக்காவிலேயே இருந்த ஜெய் விஜயன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். ஆட்டோமொபைல் துறையில் கோவிட் 19-க்குப் பிறகான சூழல் குறித்தும், அவருடைய டெகியான் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் அவருடன் பேசினோம். அவர் நம்மிடம் சொன்னதாவது...

‘‘டெகியான் என்பது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குத் தேவையான சாஃப்ட்வேரை விற்பனை செய்யும் நிறுவனம். நிறுவனம் தொடங்கி நான்கு ஆண்டுகளில் யுனிகார்ன் நிலையை அடைந்தோம். யுனிகார்ன் நிலையை எட்டும்போது கோவிட் உச்சத்தில் இருந்தது. அதனால் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினார்கள். கணிசமான அளவுக்கு சம்பளமும் குறைத்தோம். அதன் பிறகு, சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியபோது பிடிக்கப்பட்ட சம்பளத்தைக் கொடுத்தோம்.

அது மட்டுமல்லாமல், பணியாளர்களுக்குப் பங்குகள் வழங்கியிருக்கிறோம். பொதுவாக, ஐ.பி.ஓ அல்லது முக்கியமான தருணங்களில் மட்டும்தான் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பங்குகளுக்கு வெளியேறும் வாய்ப்பு தரப்படும். ஆனால், நாங்கள் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் வெளியேற அனுமதித்தோம். இதனால் பணியாளர்களுக்கு பங்குகளின் மதிப்பு உடனடியாகத் தெரியும். நாங்கள் ஏற்கெனவே பல கோடீஸ்வரர்களையும் உருவாக்கியிருக்றோம்.

ஜெய் விஜயன்
ஜெய் விஜயன்

தற்போது வரை அமெரிக்காதான் எங்கள் மிகப் பெரிய சந்தை. சில மாதங்களுக்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இணைத்தோம். இப்போது அடுத்த கட்டமாக ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்யும் பணியைச் செய்துவருகிறோம். அங்கு பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வேலையில் இருக்கிறோம். அதே போல, கனடாவிலும் செயல்பாட்டைத் தொடங்கியிருக்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பெங்களூரு எங்களுடைய முக்கியமான அலுவலகம். அங்கு 1,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதை மேலும் அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது.இதுவரை இந்தியாவில் தொழில்நுட்ப குழுக்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால், இங்கு வாடிக்கையாளர்கள் இல்லை. வாடிக்கையாளர்களுடன் பேசி வருகிறோம்.

அமெரிக்காவில் இரு சக்கர வாகனங்கள் இல்லை. இந்தியாவில் காரைவிட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையே அதிகம். அதனால் கார் மட்டுமல்லாமல், இரு சக்கர வாகனங்களையும் எங்களுடைய சாஃப்ட்வேர் மூலம் விற்பனை செய்ய முடியும்.

இப்போது 250% வளர்ச்சியில் இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளுக்கும் இதே அளவிலான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறோம்.

எங்களிடம் போதுமான நிதி இருக்கிறது. ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்போதைக்கு ஐ.பி.ஓ கிடையாது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் ஐ.பி.ஓ கொண்டு வருவோம்.

2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் விஜயன்.

ஜெய் விஜயனிடம் பேசிய பிறகு, மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் களமிறங்கியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

படம்: சுரேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism