Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2021: Live Updates: ``பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு!"

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்
Live Update
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு, இன்று தனது முதல் பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்கிறது.

13 Aug 2021 1 PM

- 2021-22-கான திருத்திய நிதிஅறிக்கையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

- நாளை காலை 10 மணிக்கு மீண்டும் அவை தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்த நிதி நெருக்கடியான காலகட்டத்தில், இந்த நிதி நிலை அறிக்கையை தயாரிக்க முதலமைச்சர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்கு முன்பாக, இந்த அவையில் நிதிநிலை அறிக்கையை வாசித்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசியர் அன்பழகன் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர்களின் வழியில் நின்று, நான் இந்த நிதிநிலை அறிக்கையை வாசித்திருக்கிறேன். மேலும், எனது குடும்ப வழி முன்னோர்களையும் இந்த நேரத்தில் வணக்கி, இந்த நிதி நிலை அறிக்கையை நிறைவு செய்கிறேன்
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
13 Aug 2021 12 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

- நடப்பு நிதி ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.50 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

- வணிக வரி, பத்திரப்பதிவு, மோட்டார் வாகன வரி போன்ற துறைகளில் வரி சீரமைப்பை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருகிற நிதி ஆண்டில் இந்தத் துறையின் மூலம் வரி வருவாயை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வோரைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- 2021-2022-ம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
13 Aug 2021 12 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

13 Aug 2021 12 PM

பெட்ரோல் விலையில் ரூ.3 குறைப்பு

- பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு மூலம் லிட்டருக்கு 3 ரூபாயைக் குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இது உழைக்கும் வர்க்கத்திற்கு பயனளிக்கக்கூடிய அறிவிப்பு.

- இதனால் தமிழக அரசின் பெட்ரோல் வரி வருவாயில் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி இழப்பு.

Petrol
Petrol
Photo: Vikatan / K.Rajesekaran
13 Aug 2021 12 PM

``₹1000 உரிமைத்தொகை: பெண் குடும்பத் தலைவர் என்பது அவசியம் அல்ல!"

- பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்காக பயனாளிகளைத் தேர்வு செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதையடுத்து பலரும் குடும்ப அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவராக மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால், இது தேவையற்றது.

- பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற செய்தி தவறானது. குடும்பத் தலைவரின் புகைப்படத்தை மக்கள் மாற்றம் செய்ய வேண்டாம்.

Ration Card
Ration Card

- தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல, இல்லத்தரசிகளுக்கான உதவித்தொகை நிச்சயமாக அவர்களை வந்து சேரும்.

- தேர்தல் வாக்குறுதிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் அரசு இருக்கிறது. அதனால், அரசு வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

13 Aug 2021 12 PM

- மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் 77.88% நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் பின்னடைவை சரிசெய்வதே தமிழக அரசின் முன்னுரிமை ஆகும்.

- மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழகமெங்கிலும் நடைபாதைகள் அமைப்படும். காத்திருப்புப் பட்டியல்களில் இருக்கும் 9,173 பேருக்கு தலா ரூ.1,500 பராமரிப்புத் தொகையாக உடனே வழங்கப்படும்.

- இளைஞர்கள் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு.

13 Aug 2021 12 PM

- அங்கன்வாடி நிலையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ. 48.48 நிதி ஒதுக்கீடு.

- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி நிதி ஒதுக்கீடு.

- ஆதி திராவிடர் பழங்குடியினர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்காக ரூ.14,964 கோடி நிதி ஒதுக்கீடு.

- கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களை அமைக்க ரூ.123.02 கோடி நிதி ஒதுக்கீடு.

- குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்காக ரூ.2,536.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- மசூதிகள் மற்றும் தேவாலயங்களை மேம்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கீடு.

13 Aug 2021 12 PM

``100 நாள்களுக்குள் கோயில்களின் 187.91 ஏக்கர் நிலங்கள் மீட்பு!"

- ரூ.626 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் இந்த அரசால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

- இலவச பள்ளிச்சீருடைகள் வழங்குவதற்காக ரூ.409.30 கோடிநிதி ஒதுக்கீடு,.

- மகப்பேறு விடுமுறை நாட்கள் 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

- வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு.

- 100 கோயில்களில் ரூ.100 கோடி செலவில் குளம் மற்றும் தேர் சீரமைக்கப்படும்.

- 12,955 கோயில்களில் ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு

- பழனி தண்டாயுதபானி கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்த மருத்துவ முறை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

- மகளிர் கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ. 762.23 கோடி நிதி ஒதுக்கீடு.

- மூன்றாம் பாலினத்தவர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு.

13 Aug 2021 12 PM

- மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ.257.16 கோடியும்,

- மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.741.91 கோடி நிதியும்,

- தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கு ரூ.116.46 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

- இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.27 கோடி நிதி ஒதுக்கீடு.

13 Aug 2021 11 AM

சென்னையில் புதிய நிதிநுட்ப நகரம்

- நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் அமைந்து நெய்வேலியில் தொழில்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

- இலவச 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,303-ஆக உயர்த்தப்படும்.

- சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடி செலவில் புதிய நிதிநுட்ப நகரம் (Fin-tech City) உருவாக்கப்படும்.

Central
Central

- காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்காவும்,

- திருவள்ளூரில் மின்வாகனப் பூங்காவும்,

- மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனத்தில் உணவுப் பூங்காவும்,

- ராணிப்பேட்டையில் தோல் பொருள் தயாரிப்பு பூங்காவும் அமைக்கப்படும்.

- தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

- கோவையில் ரூ.225 கோடி செலவில் பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி பூங்காவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

- திருவண்ணாமலை, தேனி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

13 Aug 2021 11 AM

`குறைவான தடுப்பூசிகளே கிடைக்கின்றன!'

- தினமும் 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திறன் தமிழகத்தில் இருந்தும், 2.4 லட்சம் கொரோனா தடுப்பூசிகளே கிடைக்கின்றன.

- சித்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் `சித்தா பல்கலைக்கழகம்' அமைக்கப்படும்.

- டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு. முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,046 கோடி நிதி ஒதுக்கீடு.

- அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரியத் திட்டத்திற்காக ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு.

- மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18.933 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

13 Aug 2021 11 AM

- அண்ணா பல்கலைகழக்கத்துடன் இணைந்து `ஆளில்லா விமானக்கழகம்' அமைக்கப்படும்.

- உயர் கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.

- ரூ. 10 கோடி செலவில் 25 கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

- 413 ஒன்றியங்களுக்கு தலா 40 டேப்லெட்கள் வழங்க ரூ.13.22 கோடி நிதி ஒதுக்கீடு.

- 865 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

- நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2021
தமிழ்நாடு பட்ஜெட் 2021
13 Aug 2021 11 AM

- அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை மேம்படுத்த ரூ.66.70 கோடி செலவில் `எண்ணும் எழுத்தும் இயக்கம்' ஏற்படுத்தப்படும்.

- பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனப்பாடம் செய்வதில் இருந்து, மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்க நடவடிக்கை.

- வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டு மின்சார மானியத்துக்காக ரூ.19,872. 77 கோடி நிதி ஒதுக்கீடு.

13 Aug 2021 11 AM

``மின்மிகை மாநிலம் என்பது தவறானது!"

மின்மிகை மாநிலம் என்று கூறி வந்த கூற்று தவறானது. ஏனெனில் 2,500 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் 17,909 மெகாவாட் மின்சார உற்பத்தி சேர்ப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,

அடுத்த 4 ஆண்டுகளில் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

13 Aug 2021 11 AM

- புதிய பேருந்துகளை வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்கீழ் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க ரூ.750 கோடி டீசல் மானியமாக வழங்கப்படுகிறது.

- குடிசை மாற்று வாரியத்துக்காக ரூ.3,954 கோடி ஒதுக்கீடு. மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவங்குவதற்காக ஆய்வுகள் நடத்தப்படும்.

13 Aug 2021 11 AM

நான்கு நகரங்களில் புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள்

- புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.

- `நமக்கு நாமே' திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்துக்கு கணிசமாக பங்காற்றுபவர்களுக்கு முதல்வர் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.

- நகர்ப்புற ஏழைகளுக்குத் தேவையான வீட்டு வசதி தேவையை உறுதி செய்ய 9,53,446 குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்.

- நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தம் ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு. அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ-க்கு 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும்.

- வீட்டு வசதித்துறையில் உலக வங்கி திட்டத்துக்கு ரூ.320.40 கோடி, ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூ.171 கோடி ஒதுக்கீடு.

13 Aug 2021 11 AM

சிங்காரச் சென்னை 2.0

- சீர்மிகு நகரத் திட்டத்துக்காக ரூ.2,350 கோடி ஒதுக்கீடு. அம்ருத் திட்டத்துக்காக ரூ.1,450 கோடி ஒதுக்கீடு.

- - தற்போதைய சென்னையை பசுமை சென்னையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுவரொட்டிகள் இல்லா நகரமாகவும் மாற்றப்படும் இதற்காக சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும்.

- சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.2,056 கோடி ஒதுக்கீடு.

13 Aug 2021 11 AM

- ஊரக வேலைவாய்ப்பு நாட்களை 100-லிருந்து 150-ஆக உயர்த்தி, சம்பளத்தை ரூ.300-ஆக உயர்த்த நடவடிக்கை.

- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி அளவில் கோவிட் கால கடன் வழங்குவது உறுதி செய்யப்படும்.

தமிழக பட்ஜெட் 2021
தமிழக பட்ஜெட் 2021
13 Aug 2021 11 AM

- அண்ணா மறுமலர்ச்சி இயக்கம் மீண்டும் தொடங்கப்படும். கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதை இத்திட்டம் உறுதிசெய்யும்.

- 79,375 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை. 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் அனைத்து கிராம மக்களுக்கும் குடிநீர் இணைப்பு.

- இதற்காக ரூ.2,000 கோடி செலவில் `ஜல்ஜீவன் இயக்கம்' செயல்படுத்தப்படும்.

- எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு.

13 Aug 2021 10 AM

``பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்!"

``காலநிலை மாற்றத்தை சமாளிப்பது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய சவாலானது. எனவே அதை சமாளிக்க ₹500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

மீன் வளத் துறைக்கு ரூ.1,149 கோடி ஒதுக்கீடு. 10 கடற்கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்."

- இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.

- தமிழ்நாட்டில் ஈர நிலங்களின் சூழலை மேம்படுத்த, `தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' அமைக்கப்படும்.

- ஈர நிலங்களைச் சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு.

13 Aug 2021 10 AM

- ரூ.111.24 கோடி செலவில் தமிழகமெங்கும் உள்ள 200 குளங்கள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேட்டூர், பேச்சிப்பாறை, உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை மீன்டும் பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

- நீர்நிலை புனரமைப்புக்கு ரூ.610 கோடி ஒதுக்கீடு. இந்த நிதிக்காக உலக வங்கியின் உதவியை அரசு நாடும்.

- நீர்ப்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு.

13 Aug 2021 10 AM

ரேஷன் கடைகள் தேவையுள்ள தமிழகத்தின் பல்வேறு இடங்களை கண்டுபிடிக்க, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தனிக்குழு அமைக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு ரூ.8,437.57 கோடியாக உயர்வு.

13 Aug 2021 10 AM

காவல் துறையின் தரம் மீட்டெடுக்கப்படும். இந்த ஆண்டு காவல் துறைக்கு ரூ. 8,930.29 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தீயணைப்புத் துறைக்கு ரூ.405.15 கோடி நிதி ஒதுக்கீடு.

- தற்போதுள்ள 1985-ம் ஆண்டு தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றி அமைக்கப்படும்.

- இந்த பட்ஜெட்டில் நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- அரசு இடங்களை கண்டுபிடிக்க ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

- எந்த வகையான பேரிடரையும் சமாளிக்கும் சக்தி மாநில அரசுக்கு உள்ளது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

- 4,133 இடங்கள் அதிக வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் இடங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

13 Aug 2021 10 AM

அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கம்

- 2.05 லட்சம் ஹெக்டர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது, வெள்ளை அறிக்கையில் விளக்கமாக சொல்லப்பட்டிருந்தது. அதனால் பொது நிலங்களை முறையாக பயன்படுத்த `அரசு நில மேலாண்மை அமைப்பு' அமைக்கப்படும்.

- அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்படும்.

- இனி தணிக்கைத் துறையை நிதித்துறையின் கீழ் கொண்டுவந்து, தணிக்கைத் துறையின் அனைத்து செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும்.

- 1921-ம் ஆண்டு முதலான சட்டமன்ற செயல்பாட்டு ஆவணங்கள் அனைத்தும் வெளிப்படையாக வைக்கப்படும். அரசின் அனைத்து நிதியும் அரசு கஜானாவில் வைக்கப்படும்.

- கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

- தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 80.26 கோடி ஒதுக்கீடு. தொல்லியல் ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

- சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த இடங்களில் கடல்சார் துறையுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

13 Aug 2021 10 AM

``மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் உள்பட பல்வேறு சுங்க வரி விகிதங்களை 10 சதவிகிதத்திலிருந்து 20% -ஆக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. வரியை சரியாக பிரித்துக் கொடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதனால் மாநில அரசின் வரி வருமானம் பெரிதும் சரிவைச் சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி உள்பட அனைத்து வரிகளுக்கும் தனி ஆலோசனைக் குழு நிறுவப்படும்.

அனைத்து குடும்பங்களில் பொருளாதார நிதி நிலைமையை தெரிந்துகொள்ள, தகவல்களை திரட்ட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்."

பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்
பட்ஜெட் தாக்கல் செய்யும் பி.டி.ஆர்

``கடன் சுமையை நிச்சயம் குறைப்போம்!"

``கடன் சுமை அதிகமாக இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். கடன் சுமையை சரிசெய்வது எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வோம் என்பதையும் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருந்தோம். அதை நிறைவேற்றும் விதமாக நாளை முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது." - பி.டி.ஆர்

13 Aug 2021 10 AM

``கொரோனாவால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்த பட்ஜெட்டாகத்தான் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும். இதற்கு அடுத்து வரும் பட்ஜெட்டுக்கு இந்த பட்ஜெட் ஒரு முன்னோட்டம்." - பி.டி.ஆர்

``கலைஞர் எங்களை வழிநடத்துவார்!"

``சமூக நீதி, பாலின சமத்துவம், இட ஒதுக்கீட்டின் மூலம் அனைவருக்கும் வாய்ப்புகள், அனைவருக்கும் கல்வி என்கிற சரியான வழியில் தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். அதை தி.மு.க அரசு காப்பாற்றும். கலைஞர் எங்களை வழிநடத்துவார்

முதலமைச்சர் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். அந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது." - பி.டி.ஆர்

13 Aug 2021 10 AM

இ-பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக பட்ஜெட் 2021-22-க்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் பி.டி.ஆர். தற்போது பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். காகிதமில்லா பட்ஜெட் என்பதால் அனைத்து அமைச்சர்கள் முன்பாகவும் கணினிகள் பொருத்தப்பட்டு, பட்ஜெட் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பட்ஜெட் 2021
தமிழ்நாடு பட்ஜெட் 2021

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பட்ஜெட் வளாகத்துக்கு வந்திருக்கிறார். மேலும், அமைச்சரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பட்ஜெட் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கிறது.

13 Aug 2021 8 AM

முதல் காகிதமில்லா பட்ஜெட்

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடப்பு 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தாக்கல் செய்கிறார்.

தயார் நிலையில் கலைவாணர் அரங்கம்
தயார் நிலையில் கலைவாணர் அரங்கம்

வரலாற்றில் முதல்முறையாக `மத்திய பட்ஜெட் 2021-2022' காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் ஆனது. இதன் காரணமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் `பஹி காட்டா’ எனப்படும் கணக்கு லெட்ஜர்கள், அதாவது வழக்கான பட்ஜெட் ஆவணங்களுக்குப் பதிலாக `டேப்லெட்டு'டன் பட்ஜெட் அமர்வுக்கு வந்திருந்தார். அதே போன்றொரு `காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்'டைத்தான் தமிழக அரசும் தற்போது முன்னெடுத்திருக்கிறது. இதற்கான கணிணிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அமைப்புகள் கலைவாணர் அரங்கத்தில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன.

12 Aug 2021 7 PM

எப்படி இருக்கும் இந்த பட்ஜெட்?

இந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால், இது ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கையாகவே இருக்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தபோதும், இதை பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அதனால், 2022-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் பட்ஜெட்தான், தற்போதைய அரசின் முழுமையான பட்ஜெட்டாக இருக்கும் என்பது தெரிகிறது.

இந்தியாவின் பொருளாதாரமும், தமிழ்நாட்டின் நிதி நிலைமையும் மிகவும் மோசமாக உள்ள நிலையில் தாக்கல் ஆகும் பட்ஜெட் என்பதால், அரசியல் வாக்குறுதிகள் மற்றும் மற்ற நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் நிதித் தேவைக்காக மாநில அரசு ஏற்கெனவே கடன் வாங்கி சமாளித்துக் கொண்டிருக்கும் நிலையில், பட்ஜெட் அறிவிப்புகளில் ஒதுக்கப்படும் நிதிக்கான தேவையை தமிழக அரசு எப்படி கையாளப் போகிறது, வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் இந்த திருத்த பட்ஜெட்டில் தெளிவாகச் சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை மூலம் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அதை சரிசெய்ய வரி வருவாயை கூட்டவும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தொடர்பான அனைத்து அப்டேட்களுக்கும் இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த பட்ஜெட் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism