தமிழக பட்ஜெட் 2022-23 Live Updates: மகளிருக்கான 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது?பி.டி.ஆர் பதில்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை மிஸ் பண்ணாமல் இருக்க, விகடனின் இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்!
மகளிருக்கான உரிமைத்தொகை எப்போது? பி.டி.ஆர் பதில்
``மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்காக, தகுதிவாய்ந்த பயனாளிகளைக் கண்டறியும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நிதிச்சுமை காரணமாக, இதை அரசின் முதலாண்டில் செயல்படுத்த முடியவில்லை. நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என பி.டி.ஆர் அறிவிப்பு.
பட்ஜெட் உரை நிறைவடைந்தது.
ஆங்கிலத்தில் பட்ஜெட் உரை
ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். உலக முதலீடுகளை ஈர்க்கும் முக்கியமான மையமாகத் தமிழகம் இருப்பதால், உலக முதலீட்டாளர்களின் வசதிக்காக ஆங்கிலத்தில் வாசிப்பதாக தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் வாசித்ததற்காக நன்றி தெரிவித்ததையும் குறிப்பிட்டார் பி.டி.ஆர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
- அரசின் தணிக்கை துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.
- வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதற்காக, அரசு துறைகளுக்கு மின்னணு கொள்முதல் கட்டாயமாக்கப்படும்.
- ஊழல் தடுப்புப் பணிகள் இன்னும் வலுப்படுத்தப்படும்.
தொழில்கள்
- 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி.
- புதிய காலணி மற்றும் தோல் தொழில் கொள்கை உருவாக்கப்படும்.
- தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காக்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.
- ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அந்நிறுவனங்களின் பொருள்களை 50 லட்சம் ரூபாய் அளவில் தமிழக அரசு துறைகல் கொள்முதல் செய்ய அறிவுறுத்த திட்டம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகவல் உதவி மையங்கள்
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்கவும் அவர்களுக்கான சட்ட உரிமைகளைத் தெரிந்து கொள்ளவும், நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- மின்னகம் மூலம் 6,77,838 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- போக்குவரத்துக்கு துறைக்கு 5375.51கோடி ரூபாய் ஒதுக்கீடு
- எரிசக்தி துறைக்கு 19,297.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பெண் பயணிகளின் சதவிகிதம் உயர்வு!
`மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம்' காரணமாக, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரின் சதவிகிதம் 40% -லிருந்து 61% ஆக உயர்வு.
- கொடுங்கையூரில் Bio mining முறையில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் பிரித்து அகற்றப்படும்.
- நகர்ப் பகுதிகளை பசுமையாக மாற்ற 500 பூங்காக்கள் அமைக்கப்படும்.
- 6 புதிய கூட்டு குடிநீர் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். ஜல் ஜீவன் திட்டத்துக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- கிழக்கு கடற்கரைச் சாலை 135 கோடி செலவில் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படவுள்ளது.
- விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு 20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி. வரும் நிதியாண்டில் மேலும் 1,000 வீடுகள் 50 கோடி மதிப்பில் கட்டித்தரப்படும்.
- தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் புனரமைப்புக்கு வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
- கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இந்த நிதியாண்டில் 8,38.01கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாத தந்தை பெரியார் சமத்துவ புரங்கள், 190 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
- ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கு 26,647.19 கோடி ஒதுக்கீடு.
மக்கள் நல வாழ்வு
- 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்த முடிவு.
- உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர, தமிழக அரசு உதவும். இதற்கான கொள்கைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது.
- மனநல மேம்பாட்டுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
நான் முதல்வன் திட்டத்துக்கு 50 கோடி ஒதுக்கீடு!
- மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்துக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு.
- ஒலிம்பிக் வீரர்களைத் தமிழகத்தில் உருவாக்க, `தமிழக ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டம்' செயல்படுத்தப்படும். 25 கோடி ரூபாய் இதற்கு ஒதுக்கீடு.
- வடசென்னை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு அமைக்கும். முதல்கட்டமாக சென்னை ஆர்.கே.நகரில் இதற்கான வளாகம் அமைக்கப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கெனவே அவர்கள் வேறு ஏதேனும் உதவித்தொகை பெற்றுவந்தாலும், இது கூடுதலாக வழங்கப்படும்.
- கோவிட் காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்ட `இல்லம் தேடி கல்வி' என்ற சிறப்புத் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டம் வரும் நிதியாண்டும் தொடரும். இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக் காட்சிகள் நடத்தப்படும். ஆண்டுதோறும் 4 இலக்கிய விழாக்கள் நடத்தப்படும். வரும் ஆண்டு நடக்கவுள்ள புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கிய விழாக்களுக்கு 5.6 கோடி ஒதுக்கீடு
- கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தக் கல்வியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் நிறுவப்படவுள்ளன. இதற்காக 125 கோடி ஒதுக்கீடு.
- அடுத்த 5 ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளை நவீன மயமாக்கிட பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. ஐந்து ஆண்டுகளில் 7,000 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இத்திட்டத்துக்காக 1,300 கோடி ஒதுக்கீடு.
- புதிய 6 மாவட்டங்களில் 36 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் உருவாக்கப்படும்.
- சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு 749.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர் மேலாண்மைக்காக 3,384 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கால்நடை பராமரிப்பு
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரும் பிறந்த நாளை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு `வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள்' எனும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்துக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சமூக ஊடகங்களில் செயல்படும் தவறான பிரசாரங்களைத் தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம்.
- அரசு நிலங்கள் நியாயமான குத்தகைக்கு விடப்பட வேண்டும் என்பதற்காக விரிவான நில குத்தகைக் கொள்கை வகுக்கப்படும். அரசு நிலங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சென்னை வெள்ளங்களைத் தடுக்க ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக இந்த ஆண்டு 500 கோடி ஒதுக்கீடு.
- பேரிடர் வரும் முன் சீராகக் கணிக்க வானிலை மையங்களும் கருவிகளும் மேம்படுத்தப்படுகின்றன. அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழ் வளர்ச்சி
- தமிழ் மொழிக்கும், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்துக்கும் இடையேயான உறவை வெளிக்கொணரும் வகையில், அறிஞர்களைக் கொண்டு அகர முதலி உருவாக்குவதற்கான சிறப்புத் திட்டம்.
- தந்தை பெரியாரின் கருத்துகளை இந்திய மற்றும் உலகின் 21 மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- தமிழகத்தில் கிடைத்த தொல்பொருள்களைப் பாதுகாக்க விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம்.

``சரக்கு மற்றும் சேவை வரி (GST) இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை விரைவில் முடிவடையவுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் இன்னமும் மாநிலங்களின் வருவாய் இயல்பு நிலைக்கு திரும்பாததால், அந்த இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்" - பி.டி.ஆர்
பட்ஜெட்டில் எதற்கு முன்னுரிமை?
``- சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்,
- வேலை வாய்ப்பு அதிகரித்தல்,
- கல்வி மட்டும் வாழ்வாதார மேம்பாட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல்,
- சமத்துவத்தை உறுதி செய்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது" - பி.டி.ஆர்
`உக்ரைன் போர் தாக்கத்தை ஏற்படுத்தும்!'
``உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மாநில பொருளாதாரம் பாதிக்கப்படும்; வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம் இதைக் கருத்தில்கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும்" - பி. டி. ஆர்

- இந்த ஆண்டு 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய்ப்பற்றாக்குறை குறைந்துள்ளது. வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8%-லிருந்து 3.8% ஆக குறையும்.
- நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசித்து வரும் நிலையில், அ.தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அமைதிகாக்குமாறு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

- சட்ட பேரவையில் அனைத்து அமைச்சர்களும் கூடிய நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
எதிர்பார்ப்புகள் என்னென்ன?
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். கடந்த ஆண்டு பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, ஆகஸ்ட் 13-ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்பிறகு தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இது.
கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்ததாலும், தொழில்துறையினர் சுணக்கம் கண்டிருந்ததாலும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய வரிகள் தொடர்பான எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இந்தமுறை இதில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நிதியமைச்சர் பி.டி.ஆரும், அரசின் நிதி வருவாயைப் பெருக்கும் முயற்சிகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே வரி உயர்வுகள், வருவாய் சீர்திருத்தங்கள் ஆகியவை இந்த பட்ஜெட்டில் பிரதானமாக இருக்கலாம்.
தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை மிஸ் பண்ணாமல் இருக்க, விகடனின் இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்!