Published:Updated:

``Made in India போல Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்கவேண்டும்!" - மு.க.ஸ்டாலின் விருப்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த மாநாட்டில், 2120.54 கோடி ரூபாய் முதலீட்டில் 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 20.09.21 முதல் 26.09.21 வரை வர்த்தகம் மற்றும் வணிக வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இன்று ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது. `ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அரங்குகள்
அரங்குகள்

இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையும், குறு,சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேட்டினையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், இந்த மாநாட்டில், 2120.54 கோடி ரூபாய் முதலீட்டில் 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொன்னேரி அருகிலுள்ள வயலூரில் 240 ஏக்கரில் பாலிமர் தொழிற்சாலைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்காவில் இரண்டு நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன; தமிழ்நாட்டில் முதன்முறையாக `Cotton corporation of India' மூலம் பஞ்சுக் கிடங்குகள் அமைப்பதற்கான ஆணையும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் இறுதியாகப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``தொழில்துறை வளர்கிறது எனில், அனைத்து துறைகளும் வளர்கிறது என்று பொருள். இன்றைக்கு 2120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதன் மூலம் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

இந்தத் தருணத்தில் முதலீடு மேற்கொண்ட அனைவருக்கும் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு ஏற்றுமதியைப் பெருமளவில் பெருக்கிட ஏற்றுமதியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இந்த அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறேன்'' என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குக் காரணமாக இருந்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் அரசு அதிகாரிகளையும் பாராட்டினார். மு.க.ஸ்டாலின்

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
``'ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து சொல்வோம்" - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ``தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டும் இருந்ததில்லை. இந்தியா முழுவதும் பரந்த வளர்ச்சியாக இருந்திருக்கிறது. அதைத்தான் `திரைக்கடல் ஓடி திரவியம் தேடு' என்றார் ஓளவை மூதாட்டி. அத்தகைய பழம்பெருமையை நாம் மீட்டாக வேண்டும். நம்முடைய தயாரிப்புகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களைத் தொடங்கிட வேண்டும். அதாவது உலகம் முழுக்க நாமும் செல்ல வேண்டும். உலகம் தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். உலக வர்த்தகத் தரத்துக்கு ஏற்ற வகையில், மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்திட வேண்டும். ஏற்றுமதித் திறனை மேம்படுத்திடத் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நடவடிக்கைகளில் மிக முக்கியமாகத் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மாநிலத்திலிருந்து ஏற்றுமதியை மேலும் மேம்படுத்தத் தலைமைச் செயலாளரின் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு என்ற ஒரு குழு அமைக்கப்படவிருக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி திட்டங்களைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன" இப்படி பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒன்றுகூடிய கருணாநிதி குடும்பம்... நடக்காமல் போன மு.க.ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு!

மேலும், ``இந்தத் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும்போது தமிழ்நாடு அடையும் வளர்ச்சி என்பது இந்தியாவிலேயே சிறந்ததாக இருக்கும். தமிழ்நாடு கொண்டிருக்கும் பன்முகத்தன்மைகள் மற்றும் வளங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், நமது திறனுக்கேற்றவாறு ஏற்றுமதி இன்னும் பலமடங்கு வளர்ச்சியைப் பெற இயலும்.

உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் `Made in India' என்ற குரல் ஒலிக்கிறது. அதேபோல `Made in Tamilnadu' என்ற குரல் ஒலிக்க வேண்டும் அதுதான் எங்கள் லட்சியம். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு அமைத்திட வேண்டும் என்ற இலக்கினை நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம்." என்றார்.

தொழில்துறையில் தமிழகத்தை ஒரு பிராண்டாக மாற்ற நினைக்கும் முதல்வரின் சிந்தனை அற்புதமானது என்று தொழில் துறையினர் கருதுகிறார்கள். இந்த நோக்கில் தமிழக அரசாங்கம் நன்கு யோசித்து, பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு