Published:Updated:

தொழில்துறையில் மீண்டும் தவறு நடக்கக் கூடாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தொழில்துறையில் மீண்டும் தவறு நடக்கக் கூடாது!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

49 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.28,508 கோடி முதலீடு, 83,482 பேருக்கு வேலை வாய்ப்பு எனத் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் ‘பாகுபலி’ படம் போல பிரமாண்டம்தான்.

முதல்வரின் இந்த அறிவிப்புகளைப் பார்க்கும்போது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொடப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் ஆழமாக உருவானாலும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததுபோல, இந்த ஆட்சியிலும் நடந்துவிடுமோ என்கிற சந்தேகம் நமக்குள் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், கடந்த ஆட்சியில் இது மாதிரியான பல அறிவிப்புகள் அடிக்கடி வரத்தான் செய்தன. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, உருவாக்கித் தந்த மார்க்கெட்டிங் டெக்னிக் அது. இப்படி அறிவிக்கப்படும் திட்டங்களில் எத்தனை நிஜத்தில் நிறைவேறியிருக்கின்றன என்கிற கேள்விக்கு பதிலே கிடைப்பதில்லை. கடந்த ஆட்சியில் நடந்த தவறு இந்த ஆட்சியிலும் நடந்துவிடக் கூடாது என்பதே நம் எதிர்பார்ப்பு!

இந்த அபாயம் நிகழாமல் தவிர்க்க, ஆளும் தி.மு.க அரசாங்கம் சில நடவடிக்கை களைக் கட்டாயம் எடுத்தாக வேண்டும். முதலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த தொழில் முதலீடு எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடந்த ஆட்சியில் எப்படி இருந்தது என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இப்படிச் செய்வதை கடந்த ஆட்சியுடன் நிறுத்திவிடாமல், இந்த ஆட்சியிலும் புதிதாக வரும் தொழில் முதலீடுகள் எவ்வளவு, உருவாகும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு என்பது குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விளக்கமான அறிக்கை வெளியிட வேண்டும். இப்படிச் செய்வதன்மூலம் தொழில்துறை முதலீட்டில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க முடியும்.

தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுப்பதுபோல, ஏற்கெனவே முதலீடு செய்து, தொழில் நடத்திவரும் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை ஆராய்ந்து, அவர்களின் தேவைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். காரணம், மூன்று மாதங் களுக்கு முன்புகூட மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில், இப்போது அடிக்கடி மின்தடை. தொழிலாளர்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சிறுதொழில் நிறுவனங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இந்தப் பிரச்னைகள் எல்லாம் முதலில் சரிசெய்யப்பட வேண்டும்.

‘‘தெற்காசியாவிலேயே தொழில் புரிய உகந்த மாநிலம் தமிழகம்தான்’’ என்கிற லட்சியத்துடன் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதும், அவருக்குப் பக்கத்துணையாக அரசு அதிகாரிகள் இருப்பதும் சிறப்பான அம்சங்கள்தான். ஆனால், மக்கள் மறந்துவிடுவார்கள் என்கிற எண்ணத்தில் பெரிது பெரிதாக வெறும் எண்களை மட்டும் சொல்லி ஏமாற்றிவிடக் கூடாது. தொழில்துறை முதலீடு சார்ந்த அறிவிப்புகள், வெற்று வாக்குறுதிக்கான விஷயமல்ல. அவை, பொருளாதாரத்தின் உயிர்மூச்சு என்பதைப் புரிந்துகொண்டு, முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism