Published:Updated:

பிரச்னைக்குத் தீர்வளிக்கும் தொழில்நுட்பம்! - நம்பிக்கை தரும் எதிர்காலம்!

கொரோனா காலகட்டத்தில் தொழில்நுட்பம் அனைத்துத் துறையினருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
ல்லாச் சிக்கலான காலகட்டங்களிலும் தொழில்நுட்பம்தான் கைகொடுத்திருக்கிறது; கைகொடுப்பதாக இருக்கிறது. ‘‘அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து உலகப் பொருளாதாரத்தில் முன்னணியிலிருக்கும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.

இந்தியர்கள் அனைவரும் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை உபயோகிப்பவர்களாக இருப்பார்கள் அல்லது அவற்றின் மூலம் தங்களது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்களாக இருப்பார்கள். அனைவருக்கும் தரமான வேலை, சிறந்த மருத்துவ வசதி, திறன் அடிப்படையிலான கல்வி ஆகியவை மிகவும் அணுக்கமாக இருக்கும்’’ என்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பிரச்னைக்குத் தீர்வளிக்கும் தொழில்நுட்பம்! - நம்பிக்கை தரும் எதிர்காலம்!

மேலே குறிப்பிட்ட அனைத்தும் சாத்தியம் என்பதுடன், தொழில்நுட்பம் மனிதர்களுக்கு எதிரியில்லை; மாறாக, மனிதர்களின் சிறப்பான வாழ்வுக்கு அது துணையாக இருக்கும் என்பதைப் பல உதாரணங்கள், பரீட்சார்த்த முயற்சிகள், நிஜ வாழ்க்கையில் தொழில்நுட்ப உதவியால் பலனடைந்த பலரின் அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி செறிவாக வெளிவந்திருக்கும் புத்தகம் `பிரிட்ஜிட்டல் நேஷன்: சால்விங் டெக்னாலஜி’ஸ் பீப்பிள் பிராப்ளம்’ (Bridgital Nation: Solving Technology’s People Problem). இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர்கள் உலகப் புகழ்பெற்ற டி.சி.எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்.சந்திரசேகரனும், டாடா குழுமத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ரூபா புருஷோத்தமனும்.

ஸ்மார்ட் நேஷன்..!

நமது மத்திய அரசாங்கம் `ஸ்மார்ட் சிட்டி’ பற்றிய முன்னெடுப்பில் இருக்கும்போது இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் `ஸ்மார்ட் நேஷனு’க்கான ஒரு வரைவை இந்தப் புத்தகம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்களென்றால் அது மிகையில்லை. `என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...’ என்பதற்கேற்ப நம்மிடமிருக்கும் வளங்களையும், நாள்தோறும் மேம்பட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தையும் முறையாகப் பயன்படுத்தினால் இன்னும் சில ஆண்டுகளில் நமது நாடு கண்டிப்பாக ஒரு `ஸ்மார்ட் நேஷனாக’ உருவெடுக்கும்.

பிரச்னையைத் தீர்க்கும் தொழில்நுட்பம்!

இந்தப் புத்தகம், அஸ்ஸாம் மாநிலத்தில் சில்சார் (Silchar) என்ற இடத்திலிருக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 37-ல் தனது வண்டியிலிருக்கும் விளக்கை `சிமிட்ட’ விட்டு விட்டு, அதிகாலையில் காத்திருக்கும் நிகில் பர்மனிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு மருத்துவத்தில் அனுபவம் எதுவும் இல்லை. ஆனால், நெடுஞ்சாலைக்கு அருகிலிருக்கும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு அவர் ஓர் ஆபத்பாந்தவன். எப்படி?

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

மருத்துவ வசதிக்கு அதிக தூரம் செல்ல வேண்டும்; ஒரு நாள் வேலை கெடும் என்பதால், முதலில் அப்பகுதி மக்கள் மருத்துவ உதவி வேண்டி சந்திப்பது இவரைத்தான். அவர்களின் பிரச்னையை அறிந்துகொண்டு அதற்கான ஏற்பாட்டை அதாவது, நகரத்திலிருக்கும் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது, எவ்வளவு செலவாகும், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும், உத்தேசமாக எவ்வளவு நாள்கள் தங்க வேண்டியிருக்கும் ஆகிய விவரங்களுடன் தங்குவதற்கு அந்த நகரத்திலிருக்கும் விடுதி அறைகளை முன்பதிவு செய்வது போன்ற அத்தனை உதவிகளையும் ஓர் `இடையாளாக’ இருந்து தொலைபேசி மூலம் செய்துதருகிறார். இவரைப் பார்ப்பதற்கென்று மக்கள் ஒரு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதற்கென்று அவர் ஒரு சிறிய தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொள்கிறார்.

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

``இவற்றையெல்லாம் அவர் இன்னும் சிறப்பாகவும், விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் செய்வதற்குத் தொழில்நுட்பம் உதவும்’’ என்று நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

கோலாரில் மருத்துவ முயற்சி..!

இன்னோர் உதாரணமாக, ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸிலும், கோலார் மாவட்டத்தில் ஓர் இடத்திலும் டி.சி.எஸ் முன்னெடுத்துச் செய்யும் முயற்சிகள் விளக்கப் பட்டிருக்கின்றன.

கோலாரில் நகரின் ஒரு மூலையிலிருக்கும் சுகாதார நிலையம் டி.சி.எஸ்-ன் முயற்சியால் `டிஜிட்டல் நெர்வ் சென்டராக’ மாற்றப்பட்டிருக்கிறது. இதனுடைய குறிக்கோள் தொழில்நுட்பத்தை உபயோகித்து, சிலரின் வேலை முறையை மறு வரையறை செய்து, அவர்களைத் தகுதி பெற்ற மருத்துவ உதவியாளர்களாக மாற்றியமைப்பது. இதன் மூலம் மருத்துவர்கள் செய்துவரும் சில வேலைகளை இவர்கள் செய்ய ஆரம்பித்ததன் காரணமாக, மருத்துவர்களுக்கு முக்கியமான வேலைகளைச் செய்யக் கூடுதலாக 4,000 மணி நேரம் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன், அந்த நகரின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்ட அவர்கள் `ஆஷா’வாக (ASHA -Accredited Social Health Activist) நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஐபேட் தரப்பட்டது. அதிலிருக்கும் செயலியை உபயோகித்து அவர்கள் சுற்றுவட்டாரத்திலிருக்கும் வீடுகளுக்குச் சென்று அங்கு வசித்துவருபவர்கள் குறித்த விவரம், உடல்நிலை, வியாதி ஏதேனும் இருந்தால் அதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து ஆலோசனை கூறுவது, அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆவணப்படுத்தி அதை `க்ளவுடி’ல் பாதுகாப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். இதன் மூலம் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரைத் தேடி மக்கள் பயணிப்பது நாளடைவில் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் பல புதிய வேலைகள் உருவாகின.

bridgital nation solving technology's people problem
bridgital nation solving technology's people problem

இதுபோல, இன்னொரு சிறிய முன்னெடுப்பு அதாவது, பெண்களுக்குக் கல்வி அளிப்பதன் மூலம் ஒரு குடும்பத்தின் தலைவிதியே எப்படி மாறுகிறது என்பதற்கு உதாரணமாக ஜஸ்லீனின் கல்வியும், அதன் மூலம் அவர் காவல்துறையில் சேர்ந்ததும், அதன் பிறகு அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளைக் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பியதும், அதற்காக அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்..!

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வோர் உண்மையான நிகழ்வும் ‘பிரிடிஜிட்டல் செயல்முறை’ (தொழில் நுட்பத்தின் உதவியுடன் மறுவடிமைக்கப்பட்ட செயல்முறை), ‘பிரிட்ஜிட்டல் தொழில்நுட்பம்’ (ஒருங்கிணைந்த டிஜிட்டல் முன்னோக்கு என்பதன் தேவை), ‘பிரிட்ஜிட்டல் பணியாளர்கள்’ (பயிற்றுவிக்கப்பட்ட, பகுதியளவில் திறன் வாய்ந்த பணியாளர்கள் வாயிலாக தொழில்நுட்பப் பரவலாக்கம்) ஆகியவற்றை முன்னிறுத்துகிறது.

என்.சந்திரசேகரன்,  ரூபா புருஷோத்தமன்
என்.சந்திரசேகரன், ரூபா புருஷோத்தமன்

‘‘நம் நாடும், மக்களும் கல்வி, திறன் வளர்ச்சி, விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எனப் பல துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு மேற்குறிப்பிட்ட கலவை நல்ல ஒரு தீர்வு. ஆனால், இதற்கு தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் மக்களின் தேவையறிந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

‘‘1980, 90-களில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது பெரும்பாலானவர்களுக்கு வேலை போய்விடும் என மக்கள் பயந்தனர். ஆனால், இன்றைக்கு எங்கும் வியாபித்திருக்கும் கணினி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதுபோல, இனிவரும் ஆண்டுகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, குறிப்பாக ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்றவை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இந்தத் துறைகளின் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 30 மில்லியன் வேலைகளுக்கு வாய்ப்பிருக்கிறது’’ என்பது நூலாசிரியர்களின் கணிப்பு.

கொரோனா காலகட்டத்தில் தொழில்நுட்பம் அனைத்துத் துறையினருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. முயற்சிகள் நேர்மையாகவும் கடமையுணர்வுடனும் இருக்கும்பட்சத்தில், `அனைவருக்கும் முன்னேற்றம்’ என்பது சாத்தியமே! சிறப்பான உதாரணங்களுடனும், தரவுகளுடனும், யதார்த்த நிகழ்வின் எடுத்துக்காட்டுகளுடனும், என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளுடனும் ஆழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு