Published:Updated:

ஜவுளித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா பி.எல்.ஐ திட்டம்..?

ஜவுளித்துறை

பிரீமியம் ஸ்டோரி

ரமேஷ் குணசேகரன்

ஐ.பி.எல் (IPL) - கிரிக்கெட் உலகில் இந்த மூன்றெழுத்து மிகப் பிரபலம். இந்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்குமா என்கிற எதிர்பார்ப்பில் நம் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரமேஷ் குணசேகரன்
ரமேஷ் குணசேகரன்

ஐ.பி.எல் மாதிரி, தொழில்துறை வட்டாரத் தில் இப்போது அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சொல்லாக இருக்கிறது பி.எல்.ஐ. அதாவது, புரடக்டிவிட்டி லிங்க்டு இன்சென்ட்டிவ் (Productivity Linked Incentive - PLI). அது என்ன பி.எல்.ஐ..? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கை...

கோவிட்-19 தொற்று நோய் உருவான பின்பு தொழில்துறை மிகப் பெரிய அளவில் பாதிப் படைந்தது. இந்தப் பாதிப்பிலிருந்து தொழில் துறையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கை கள் எடுத்தது மத்திய அரசாங்கம். பல லட்சம் கோடி ரூபாய் கடன் உதவிகளை அறிவித்தது. இந்தக் கடன் உதவி சிறு மற்றும் நடுத்தர அளவில் செயல்பட்டுவந்த தொழில் நிறுவனங் களுக்குப் பெரிய அளவில் உதவி செய்வதாக இருந்தது. பல தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்கவில்லை என்கிற புகார் ஒருபக்கம் இருந்தாலும், இந்தக் கடனுதவி அறிவித்திருக்காவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என்பது உறுதி.

நேரடிக் கடனுதவி என்பது ஒருபக்கம் இருக்க, பெரிய தொழில் நிறுவனங்கள் இன்னும் உற்சாகமாகத் தொழில் செய்ய மத்திய அரசு அறிவித்த திட்டம்தான் இந்த பி.எல்.ஐ. அதாவது, தொழில் நிறுவனங்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு உற்பத்தியை அதிகரிக்கும் எனில், அவர்களுக்குக் குறிப்பிட்ட ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்தது. இந்த ஊக்குவிப்பை ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல், எல்லாத் துறைகளிலும் அளிக்கத் தொடங்கியது மத்திய அரசாங்கம். ஆட்டோ, ஜவுளித்துறை, பார்மா என இந்த ஊக்குவிப்பு அறிவிக்கப்படாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏறக்குறைய எல்லாத் துறைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையில் பி.எல்.ஐ...

புதிய ஜவுளி அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்றவுடன் ஜவுளித் துறைக்கான மறுமலர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தார். ஜவுளித் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பி.எல்.ஐ என்ன மாதிரியான பாசிட்டிவ் விளைவுகளை ஏற்படுத்தும்..?

ரூ.19,000 கோடி முதலீட்டின்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ஜவுளி வர்த்தகத்தை எட்டுவதே ஐவுளித்துறை தொடர்பான பி.எல்.ஐ திட்டத்தின் நோக்க மாகும். இதன்மூலம் கூடுதல் மதிப்புள்ள செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்பத் துணி உற்பத்தியை ஊக்குவிக்கப்படும்.

ஜவுளித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா பி.எல்.ஐ திட்டம்..?

ஏன் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்பத் துணி உற்பத்தி?

சர்வதேச ஜவுளி வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு, செயற்கை இழை மற்றும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் ஜவுளி இடம்பிடிக்கிறது. இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், இந்தியாவும் செயற்கை இழை மூலம் தயாரிக் கப்படும் துணிகள் மற்றும் ஆடைகளின் உற்பத்தியில் சுற்றுச்சூழல் பங்களிக்க முடியும். விஸ்கோஸ், பாலியஸ்டர் மற்றும் அக்ரிலிக் போன்ற செயற்கை இழைகள் ரசாயனங் களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) தரும் தகவலின்படி, செயற்கை இழை ஆடைகள் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்காக உள்ளன. நவீன கால வகையான தொழில்நுட்ப ஜவுளி என்பது தனிமனித பாதுகாப்பு உடைகள், ஏர்பேக்குகள், குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தியாளர்களுக்குப் பயன் தருமா?

இந்தத் திட்டம் இரண்டு வகைகளில், தகுதியான உற்பத்தி யாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க உள்ளது. முதல் வகையில், செயற்கையிழைத் துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகளை உற்பத்தி செய்ய ஆலை, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் குடிமைப் (Civil) பணிகளில் (நிலம் மற்றும் நிர்வாகக் கட்டடச் செலவு தவிர்த்து) குறைந்தபட்சம் ரூ.300 கோடி முதலீடு செய்ய விரும்பும் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கத் தகுதியானவர். அதே நிபந்தனைகளின் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 கோடியைச் செலவிட விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் இரண்டாம் வகையில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இந்தத் திட்டம் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். ஏனெனில், இந்த மாநிலங்களில் ஜவுளித்துறை ஏற்கெனவே நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. என்றாலும், இந்தத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தும் அனைத்து மாநிலங்களுக்கும் பயன் கிடைக்க வாய்ப்புண்டு.

கால வரையறைக்குட்பட்ட திட்டம்...

இந்த பி.எல்.ஐ திட்டம் இனி காலகாலத்துக்கும் இருக்கும் திட்டம் அல்ல. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். ஏனெனில், உற்பத்தியைத் தொடங்குவதற்கான அரசின் உதவி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, தொழிற் சாலையை அமைத்து இரண்டு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கி விட வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த பி.எல்.ஐ திட்டத்தின்கீழ் ஜவுளித் தொழிலுக்கு நிரந்தர மானியம் கிடைக்காது. தொழில் உருவாக்கத்தை ஆதரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாகத் தொடங்கப்படும் அனைத்து ஜவுளி நிறுவனங் களுக்கும் ஊக்குவிப்பு சலுகை கிடைத்துவிடாது. சந்தையில் போட்டியிடும் அளவில் உருவாக்கப்படும் திறமையான நிறுவனங்கள் மட்டுமே ஆதரிக்கப்படும்.

தவிர, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக் கெடுவின்போது எந்தவொரு பங்கேற்பாளரும் வரையறுக்கப் பட்ட வருவாய் இலக்கை எட்ட முடியாவிட்டால், அந்த நிறுவனத்துக்கு இந்தத் திட்டத் தின்கீழ் எந்த ஊக்கத்தொகையும் கிடைக்காது என்பது முக்கிய மான விஷயமாகும்.

இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பங்கேற்க தகுதி வாய்ந்தவையாக உள்ளன. இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, பங்கேற்கும் நிறுவனம் தங்கள் சொந்தத் தொழிற்சாலை வளாகத்தில் கணிசமான மதிப்புக்கூட்டலை (value addition) மேற்கொள்ள வேண்டும். அதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தால் தயாரிக் கப்பட்ட பொருள்களை விற்பது வருவாய்க் கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப் படாது; ஒரு குழுவின் ஒரு நிறுவனம் மட்டுமே இந்த ஊக்குவிப்பு சலுகை பெற பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்பதெல்லாம் இந்தத் திட்டத்தின் பல்வேறு நிபந்தனைகளாக உள்ளன.

தமிழ்நாட்டுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

பல நன்மைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. இந்தத் திட்டத்துக்கான அனுமதியை வரையறுக்கப்பட்ட காலத்தில் விரைவில் வழங்க வசதியாக ஒரு நோடல் ஏஜென்சியை அமைப்பதாகவும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே ஜவுளித்துறையில் முன்னணியில் இருப்பதால், இந்தத் திட்டத்தின் மூலம் பல நன்மைகளைப் பெற வாய்ப்புண்டு. இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீடுகள் பலனளிக்கும்பட்சத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜவுளித்துறையில் ரூ.1 கோடி மூலதன முதலீட்டில் சுமார் 70 வேலைகளை உருவாக்க முடியும். வேறு எந்தத் துறையிலும் இந்த அளவு முதலீட்டில் இவ்வளவு வேலைகளை உருவாக்க முடியாது. தவிர, பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

தமிழக அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாக உள்ளது என்று ஜவுளித்துறை பிரதிநிதிகள் குறிப் பிடுகின்றனர். பருத்தி மற்றும் பருத்திக் கழிவுகள் மீதான 1% விவசாயச் சந்தை செஸ் (Agricultural Market Committee cess) நீக்கம் குறித்த சமீபத்திய அறிவிப்பு, ஜவுளித் தொழில் துறையை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனெனில், இது ஜவுளித் தொழில் சங்கங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. செயற்கையிழைப் பிரிவில் தமிழ்நாட்டிலிருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வணிகத்தை உருவாக்கிய ஒரு சில நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் இரண்டாம் வகையான ‘ரூ.100 கோடி’ முதலீட்டுத் திட்டத்தை இலக்காகக் கொண்டு செயல்படலாம். மேலும், நூற்பாலை நிறுவனங்கள் ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அளவுக்கு உயர முடியா விட்டாலும் துணி (processed) உற்பத்தி வர்த்தகம் செய்யும் நிலைக்கு உயர்வு பெறலாம்.

ஆக, இந்தத் திட்டத்தின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகள் மற்றும் முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியைப் பொறுத்தே அமையும். அரசும், தொழில்துறையினரும் கூட்டாகச் செயல்பட்டால் இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சியைப் பெருக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு