Published:Updated:

நாடு போற்றும் நாச்சியார் கோயில் குத்துவிளக்கும் தஞ்சாவூர் ஓவியமும்..!

வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
வெங்கடேசன்

ஜி.ஐ பிசினஸ்

நாடு போற்றும் நாச்சியார் கோயில் குத்துவிளக்கும் தஞ்சாவூர் ஓவியமும்..!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
வெங்கடேசன்

தஞ்சை மாவட்டம் விவசாயத்துக்கு மட்டுமல்ல, கலைகளுக்கும் பெயர் பெற்றது. தலையாட்டி பொம்மை, வீணை, தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார்கோயில் குத்துவிளக்கு எனத் தஞ்சையில் உற்பத்தி செய்யப்படும் சிறப்பு மிக்க கலைப்பொருள்கள் உலகப் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோயில் குத்துவிளக்கு உள்ளிட்ட பல பொருள்கள் புவிசார் குறியீடு பெற்றிருப்பதால், உலகம் முழுக்க விற்பனையாகிறது.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்கானது நாச்சியார் கோயில் குத்து விளக்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மண்ணும் பொன்னைப்போல ஜொலிக்கும் என்பார்கள். நாச்சியார் கோயில் பித்தளை குத்துவிளக்கு ஜொலிப்பதற்கு அந்தப் பகுதி மண்ணும் ஒரு காரணம் என்கின்றனர் குத்து விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்கள்.

சுவேதா அண்ட் சுஷ்மிதா மெட்டல் வொர்க்ஸ் என்ற பெயரில் குத்துவிளக்கு செய்யக்கூடிய பட்டறை வைத்திருக்கும் வெங்கடேசனுடன் பேசினோம்.

நாடு போற்றும் நாச்சியார் கோயில் குத்துவிளக்கும் தஞ்சாவூர் ஓவியமும்..!

‘‘நாச்சியார் கோயிலில் 500 ஆண்டுகளுக்கும் மேலாகக் குத்துவிளக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் அனைத்து வேலைகளையும் கையாலேயே செய்து குத்துவிளக்கை உருவாக்கினார்கள். இப்போது எல்லாவற்றுக்கும் மெஷின் வந்துவிட்டது இருந்தாலும், பலர் தாங்கள் எதிர்பார்க்கிற ஃபினிஷிங் வருவதற்காகக் கையில் செய்வதையும் தொடர்கின்றனர்.

நான் 30 வருடங்களுக்கு மேலாகப் பட்டறை நடத்தி பித்தளை குத்துவிளக்கைத் தயார் செய்து வருகிறேன். இந்தப் பகுதி மண்ணில் களிமண்ணும் மணலும் கலந்திருக்கும். அந்த மண்ணை எடுத்து மரப்பலகையில் சதுர வடிவில் செய்யப்பட்ட பெட்டியில் வைத்துக்கொள்வோம். அடுப்பில் பெரிய சட்டி வைத்து எரித்து மெட்டலை உருக்கி வைத்துக்கொள்வோம். மண் வைக்கப்பட்ட பெட்டியில் எந்த வடிவமைப்பில் எந்த அளவில் பித்தளை குத்துவிளக்குத் தேவையோ, அதை மண் வைக்கப்பட்ட பெட்டியில் அந்த அச்சை பதித்துக்கொள் வோம். பின்னர் உருக்கிய பித்தளையை அந்த அச்சில் ஊற்றுவோம். அரை மணி நேரம் கடந்த பிறகு, அதை எடுத்து மெஷினிலோ, கைனாலேயோ ஃபினிஷிங் வொர்க் செய்வோம். கீழ்ப்பகுதியான பீடம், தட்டு, காய், கர்ணை, தகழி என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வார்ப்பு செய்து பின்னர், அதை இணைப்போம். இந்தக் கடைசல் வேலை மூலம் தனித்தனியாகச் செய்த பாகங்களை இணைத்து நாச்சியார் கோயில் குத்துவிளக்கைத் தயார் செய்வோம்.

குத்துவிளக்கின் மேல்பகுதியில் இருக்கின்றவற்றை வாடிக்கையாளர்கள் என்ன டிசைனில் கேட்கிறார்களோ, அந்த டிசைனில் செய்து தருகிறோம். குறிப்பாக, அன்னம், பொறை, சங்கு சக்கரம், விநாயகர் போன்ற டிசைன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. நாச்சியார் கோயில் பகுதியில் மட்டும் சுமார் 400 பட்டறைகள் இருக்கு. பித்தளை குத்துவிளக்கு விற்பனைக்கு என்றே 100 கடைகளுக்குமேல் உள்ளது.

நாச்சியார்கோயிலில் செய்யப்படும் குத்துவிளக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல நாடுகளில் வாழும் தமிழர்கள் குத்துவிளக்கை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங் களுக்கும் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனர்.

ரூ.500 தொடங்கி ஒன்றரை லட்சம் வரை குத்துவிளக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரை அடி தொடங்கி 9 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது. தினமும் குத்துவிளக்கு விற்பனை சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பன்னீர்செல்வம், மனோஜ்குமார்
பன்னீர்செல்வம், மனோஜ்குமார்

தஞ்சாவூர் ஓவியம்...

கும்பகோணம் காமராஜர் நகரில் வசிக்கும் மனோஜ்குமார், தஞ்சை ஓவியம் தயார் செய்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்துவருகிறார். அவருடன் பேசினோம்.

‘‘வீட்டு பூஜை அறைகள், வரவேற்பறைகள் என ஒவ்வொரு வீடுகளிலும் அனைவரையும் கவரக்கூடிய வகையில் தன் அழகை வெளிப்படுத்துவதால், தஞ்சாவூர் ஓவியம் அனைவரது மனங்களையும் கவர்ந்த கலைப்பொருளாகத் திகழ்ந்து வருகிறது. அபாரமாக இயந்திர வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்திலும் கைனாலேயே உருவாக்கப்படுவதும் பல நூறு ஆண்டுகள் அழியாமல் அழகும் குறையாமல் இருப்பதும் தஞ்சை ஓவியத்தின் கூடுதல் சிறப்பு களில் ஒன்று என மெய் சிலிர்க்க தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் ஓவியத்தில் அழகும், அவை செய்யப்படுகிற நேர்த்தியும் சின்ன வயசிலிருந்தே எனக்குள் பெரும் பிரமிப்பை உண்டாக்கியதால், என் அப்பா விடமிருந்து அதை முறைப்படி வரைவதற்கு கற்றுக்கொண்டேன்.என் அப்பா பன்னீர்செல்வம் சக்கரபாணி ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் என்ற பெயரில் தஞ்சை ஓவியம் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். அதே பெயரில் கடந்த சில வருடங்களாக நானும் செய்து வருகிறேன்.

நாடு போற்றும் நாச்சியார் கோயில் குத்துவிளக்கும் தஞ்சாவூர் ஓவியமும்..!

ஓவியம் எந்த அளவில் வேண்டுமோ, அதற்கேற்ற சைஸ் மரப்பலகையில் வெள்ளை காடா துணியை நன்றாக ஒட்டி விட வேண்டும். சாக்பீஸ் பவுடர், பெவிக்கால் மற்றும் மஞ்சள் நிற காவி பவுடர் ஆகியவற்றை பெயின்ட் மாதிரி கலந்து துணி ஒட்டப்பட்ட பலகையின் மேல் மூன்று கோட்டிங் வரை அடிப்போம்.

நன்றாகக் காய்ந்த பிறகு, கூலாங் கல்லை கொண்டு வழவழப்பு தன்மை ஏற்படும் வரை அதன் மேல் தேய்ப்போம். பின்னர், வரையப் போகிற படத்தின் ஓவியத்தின் மாதிரியைப் பார்த்து அதன் அவுட்லைன் கொடுத்து அதன் மேல் அலங்கார ஸ்டோன் ஒட்டுவோம்.

அதன்மேல் தங்க முலாம் பூசப்பட்ட பேப்பரை ஒட்டுவோம். பின்னர் சாக்பீஸ் பெவிக்கால் கலந்த மாவில் ஓவியம் வரை வதுடன் அதைச் சுற்றி பார்டர் கட்டுவோம். அதன் பிறகு, தேக்கு மரத்தாலான கண்ணாடி பிரேம் செய்துவிட்டால் தஞ்சை ஓவியம் முழுவதுமாகத் தயாராகிவிடும்.

முன்பு, சாமி படங்கள் மட்டுமே தஞ்சை ஓவியத்தில் செய்யப்பட்டு வந்தது; தற்போது மாடர்ன் ஓவியங்களும் செய்யப்படுகின்றன. இயற்கைக் காட்சிகள் அல்லது வேறு ஏதேனும் உருவங்கள் என எந்த உருவ அமைப்பில் தேவைப் பட்டாலும் ஆர்டர் கொடுப்பதன் பேரில் செய்து தரப்படுகிறது. லஷ்மி, சரஸ்வதி, ராமர், கிருஷ்ணர், வெண்ணைத்தாழி கிருஷ்ணர், வெங்கடாஜலபதி என நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்களின் ஓவியங்கள் தஞ்சை ஓவியத்தில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்தத் துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி நடத்தி வருகிறது. அதில் ஸ்டால் அமைத்து தஞ்சை ஓவியத்தைக் கண்காட்சிக்கு வைத்து விற்பனை செய்வோம். இதில் பல மாநில மக்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் தஞ்சை ஓவியத்தை வாங்கிச் செல்கின்றனர்.

வெளிநாடுகளில் தஞ்சை ஓவியத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடு களில் ஸ்டால் அமைத்து கண்காட்சி நடத்தப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது. இதே போல, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஒரு ஓவியம் வேண்டும் என்று கேட்டாலும், அதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்டுள்ள சூட்கேஸில் உடையாமல் பாதுகாப்பாக அனுப்பி வைப்போம். இன்ச் கணக்கில் பத்துக்கு எட்டு தொடங்கி, முப்பதுக்கு நாற்பது அளவிலான போட்டோ வரை தயார் செய்கிறோம். ரூ.3,000 தொடங்கி ரூ.30 லட்சம் வரை ஓவியங்கள் தயார் செய்வது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கான பரிசு தருவதில் தஞ்சை ஓவியம் முதலிடத்தில் இருப்பதால், எப்போதும் இதன் விற்பனைக்கென தனி மார்க்கெட் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதன்மூலம் சுமார் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன’’ என்றார்.

நாச்சியார் கோயில் குத்துவிளக்கும் தஞ்சாவூர் ஓவியமும் தமிழரின் கலைநுட்பத்துக்கான அடையாளங்கள். இந்தப் பாரம்பர்யத்தை அழியாமல் காக்க வேண்டியது நம் கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism