Published:Updated:

தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை
பிரீமியம் ஸ்டோரி
தலையாட்டி பொம்மை

ஜி.ஐ பிசினஸ்

தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
தலையாட்டி பொம்மை
பிரீமியம் ஸ்டோரி
தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் கலைகளுக்கும், கலைப் பொருள்களுக்கும் சிறந்து விளங்கும் ஊராக மன்னர்களின் ஆட்சிக்காலத் திலிருந்தே இருந்து வருகிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, தஞ்சாவூர் தட்டு, ஓவியம் என தஞ்சாவூரில் காலம் காலமாகச் செய்யப்பட்டு வரும் கலைப் பொருள்கள் மூலம் கடல் கடந்த வணிகம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

மக்கள் வாழ்வியல் முறையோடு இணைத்தே கலைப்பொருள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வணிகம் உள்ளிட்ட மக்கள் வாழ்க்கை முறையில் கஷ்டங்கள், தடைகள் என எந்த பிரச்னை வந்தாலும் கீழே விழுந்து சரிந்துவிடாமல் உடனே எழுந்து நின்று அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உலகப்புகழ் பெற்று திகழ்ந்து வருவதுடன் தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை சிறப்பாக உருவாவதற்கு தஞ்சை மண்ணின் வளமும், கைத்திறக் கலைஞர்களின் கலை நுணுக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் கிட்டத்தட்ட 150 குடும்பங்களுக்கு மேல் தலையாட்டி பொம்மை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வந்தனர். இப்போது பல்வேறு சூழலால் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

ஐந்தாவது தலைமுறையாகத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்துவரும் பூபதியிடம் பேசினோம்.

பூபதி
பூபதி

“என்னுடைய கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, இப்போது நான் என வழிவழியாகத் தலை யாட்டி பொம்மை உற்பத்தித் தொழிலை செய்து வருகிறோம். நான் 40 வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன். மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வந்த முன்னோர்கள், மன்னர் சரபோஜி காலத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைச் செய்யத் தொடங்கியுள்ளனர். அனைவரது மனதிலும் தன்னம்பிக்கையை விதைக்கும் விதமாக தடுமாறி கீழே விழுந்தாலும் உடனே எழ வேண்டும் என்கிற கொள்கையை உணர்த்தும் வகையில் தலையாட்டி பொம்மை தயார் செய்யப்பட்டு வருகிறது.

எங்க பகுதி களிமண் மற்றும் வண்டல் மண்ணில் லேசாக மணல் கலந்திருக்கக்கூடிய சிறப்பு கொண்ட மண். இந்த மண்ணை கைகளால் கலைப்பொருள்கள் செய்வதற்கு சிறந்த மண் எனவும் சொல்லலாம். அத்தகைய வளம் கொண்ட மண்ணைப் பெற்ற பகுதி என்பதால் மாரியம்மன் கோயில் பகுதியில் தலையாட்டி பொம்மை செய்யும் தொழிலில் பலர் ஈடுப்பட்டு வந்துள்ளனர். களிமண்ணை தண்ணீர் ஊற்றி பதமாக ஊர வைக்க வேண்டும். தலையாட்டி பொம்மைக்கு அடி பகுதிதான் ரொம்பவே முக்கியமானது. தேங்காய் கொட்டாங்குச்சி போன்ற வடிவிலான அச்சில் பிசைந்த களிமண்ணை வைத்து அமுக்கி விடுவோம். பின்னர், அதை வெளியே எடுத்து மூன்று நாள் வரை நிழலில் காய வைக்க வேண்டும். தலை முதல் மேல் பகுதியிலான உருவம் செய்வதற்கு ஷாக் பவுடர், காகித பவுடர் ஆகியவற்றுடன் மரவள்ளிக்கிழங்கு தூள் பவுடரில் பூச்சி வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக மயில் துத்தம் கலந்து செய்யப்பட்ட பேஸ்ட் மூன்றையும் ஒன்றாகக் கலந்து சப்பாத்தி மாவு பிசைவதைப் போல் பிசைந்து விட வேண்டும். பின்னர், சப்பாத்திக் கட்டை மூலம் சப்பாத்தி தேய்ப்பதைப் போலவே பிசைந்த மாவைத் தேய்க்க வேண்டும்.

தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

பின்னர் முன்பகுதி, பின்பகுதி என மேல் உருவ அமைப்பைக் கொண்ட அச்சில் தேய்க்கப்பட்ட பின்னர் லேசாகக் கையாலேயே அமுக்க வேண்டும். உள்கூடாக இருக்கும் பொம்மையின் மேல் பகுதி உறுதியாக இருப்பதற்கு பேப்பரை ஒட்டி விடுவோம். பின்னர் உருவ அமைப்பை அந்த அச்சிலிருந்து எடுத்து நிழலில் காய வைப்போம். தனியாக செய்யப்பட்ட இரண்டு பாகங் களை இடைவெளி எதுவும் இல்லாத வகையில் ஒன்றாகச் சேர்த்துவிடுவோம்.

அத்துடன் களிமண்ணில் செய்யப்பட்ட அடிப்பகுதியை மேல்பகுதியுடன் சேர்த்து விடுவோம். அதன் பிறகு, பொம்மை சொர சொரப்பு இல்லாமல் வழவழப்பாக இருப்பதற்கு உப்புத்தாளைக் கொண்டு லேசாகத் தேய்ப்போம்.பின்னர், தேவையான நிறத்துல சிறிய அளவிலான பிரஸ் மூலம் கையினாலேயே பெயின்ட் அடிப்போம். கடைசியாகக் கண் வரைவதுடன் தலையாட்டி பொம்மை முழுமையாக தயாராகிவிடும். ராஜா ராணி என்ற பெயரிலேயே தலையாட்டி பொம்மை செய்யப்படுகிறது. ஜோடியாகவே விற்பனையும் செய்யப்படுகிறது.

நாங்க மொத்தமாகத் தயார் செய்து அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கைத்திறக் கலைஞர் களுக்கான பூம்புகார் மற்றும் தனியார் வியாபாரிகளிடமும் விற்பனை செய்கிறோம். முழுவதும் கைகளாலேயே, நுணுக்கமாகச் செய்ய வேண்டும் என்பதால் இதைத் தயார் செய் வதில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் லாபமும் குறைந்த அளவிலேயே கிடைக்கும் என்பதால் பலர் பாரம்பர்யமான இந்தத் தொழில் செய்வதைக் கைவிட்டு வருகின் றனர். மூலப் பொருள்களின் விலையேற்றம், கொரோனா பரவலுக்குப் பிறகு சரிந்த விற்பனை எனப் பலவற்றால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கடந்த சில வருடங்களாகவே சரிவை சந்திக்கக்கூடிய நிலை தொடர்கிறது.

களிமண்ணால் செய்யாமல் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட டூப்ளிகேட் தலையாட்டி பொம்மை கடந்த சில ஆண்டு களாக மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரிஜினல் தலையாட்டி பொம்மை யின் விற்பனை பாதிக்கப்பட்டுள் ளது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும். தலையாட்டி பொம்மை உற்பத்தியில் ஈடுபடும் ஒரு குடும்பத்தில் மாதம் 20,000 வரை லாபம் ஈட்டலாம். அரசு எங்களை ஊக்குவித்து வருவது, சிறந்த கலைஞர்களை அடை யாளம் கண்டு விருது வழங்கி சிறப்பிப்பது போன்றவை இந்தத் தொழிலைக் காப்பாற்றும்” என்றார்.

ராஜேந்திர பிரபு
ராஜேந்திர பிரபு

ராஜேந்திர பிரபு என்பவர், “மண் தொடங்கி மூலப்பொருள் களான அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கியே இதைச் செய்து வருகிறோம். தஞ்சை மட்டு மல்ல களிமண் எங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் இதைச் செய்யலாம். ஆனால், தஞ்சை மண்ணுக்கு என தனி மகத்துவம் உள்ளது. தஞ்சாவூரில் தயார் செய்யப் படும் தலையாட்டி பொம்மையை தமிழகத்தின் பல மாவட்டங் களுக்கும் விற்பனைக்காக வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங் கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சாவூரில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் தலையாட்டி பொம்மை விற்பனை செய்யப் படுகிறது. அரை அடி உயரம் கொண்ட ராஜா ராணி தலையாட்டிப் பொம்மை ஜோடி ரூ.120, முக்கால் அடி ரூ.200, ஒரு அடி ரூ.550, ஒன்றே கால் அடி ரூ.850, இரண்டரை அடி ரூ.10,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

இந்த சிறப்புமிக்க தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு 2008-ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதன்பிறகு விற்பனை வாய்ப்பு அதிகரித்தது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மூலம் ஒரு மாதத்தில் மொத்தம் சுமார் ரூ.10 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆற்றுப் படுகையோரம் களிமண் எடுத்து உற்பத்தி செய்து வருகிறோம். ஆற்றில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் எங்களுக்கு களிமண் எடுப்பதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், லோடு ஆட்டோ உரிமையாளர்கள் ஒரு லோடு ஆட்டோ அளவிலான களிமண் ரூ.8,000 எனக் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.

மணல் எடுக்க அனுமதி இல்லாததைக் காரணம் காட்டியே விலையை உயர்த்திவிட்டனர். அரசு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் எங்களைப் போன்ற கலைஞர்கள் ஆற்றுப்படுகையில் களிமண் எடுப்பதற்கான அனுமதி கொடுக்க வேண்டும். அதன் மூலம் எங்களுக்கு உற்பத்தி செலவு குறையும். இன்னும் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும” என்றார்.

தலைநிமிரட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிப்பு தொழில்!