Published:Updated:

தனித்துவமிக்க தஞ்சாவூர் வீணை!

தஞ்சாவூர் வீணை
பிரீமியம் ஸ்டோரி
தஞ்சாவூர் வீணை

ஜி.ஐ பிசினஸ்

தனித்துவமிக்க தஞ்சாவூர் வீணை!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
தஞ்சாவூர் வீணை
பிரீமியம் ஸ்டோரி
தஞ்சாவூர் வீணை

தஞ்சை நகரம் தலையாட்டி பொம்மைக்கு மட்டுமல்ல, வீணை போன்ற இசைக் கருவிகள் தயாரிப்புக்கும் பெயர்பெற்றது. 1600 முதல் 1632 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த மன்னர் ரகுநாத நாயக்கர், இசையில் புலமை பெற்று விளங்கியதுடன் இசை குறித்த குறிப்புகளையும் எழுதியுள்ளார். ஒரே மரத்தில் செய்யப்படும் ஏகாந்த வீணையானது ரகுநாத நாயக்கர் காலத்தில் முதன்முதலாகச் செய்யப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தஞ்சாவூர் தெற்கு வீதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், 45 வருடங்களுக்கும் மேலாக வீணை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

நாராயணன்
நாராயணன்

‘‘மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது.அதையே நானும் செய்து வருகிறேன். பலா மரக்கட்டையில்தான் வீணை தயார் செய்யப் படுகிறது. பலா மரம் எல்லா விதமான கால சூழ்நிலைக்கும் ஏற்றது. வேறு மரங்களில் இருந்து செய்யப்படும் பொருள்கள் குளிர் மற்றும் ஈரப்பதத்தால் உப்பிவிடும். ஆனால், அனைத்துக் காலச் சூழ்நிலையையும் தாங்கி சிறு மாற்றமும் ஏற்படாத மரமாக இருப்பதால், பலாவை வீணை தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

இசைக்கருவி என்பது குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டுமே இசைக்க முடியும்; நல்ல இசையும் வெளிப்படும். அதுமட்டுமல்ல, பலா மரக்கட்டையில் இயற்கையிலேயே கண்ணுக்குத் தெரியாத மிகவும் சிறுசிறு ஓட்டைகள் இருக்கும். வீணை இசை சிறப்பாக அமைய அதுவும் ஒரு காரணம். அதனாலேயே பலா மரக்கட்டையில் வீணை செய்யப் படுகிறது. வீணை மட்டுமல்ல, தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக் கருவிகளும் பலா மரத்தில் செய்யப் படுகிறது.

வீணை இரண்டு வகையில் செய்யப் படுகிறது. உப்பலாக இருக்கக்கூடிய குடப்பகுதி, தண்டி எனப்படுகிற நடுப்பகுதி, வளவு எனச் சொல்லப்படுகிற நுனிப்பகுதி என மூன்று பாகங்களையும் தனித்தனி மரக்கட்டையில் செய்து அவற்றை இணைப்பது சாதாரண வீணை என்றும், முழு வீணையும் ஒரே மரக்கட்டையில் செய்வது ஏகாந்த வீணை என்றும் அழைக்கப்படுகிறது.

தஞ்சையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் கிடைக்கும். மரத்தை விலை பேசி வெட்டி எடுத்துக்கொண்டு வந்து வீணை தயாரிப்போர் சங்கத்துக்கான இடத்தில் வைத்து கோடாரியால் வெட்டி வீணை வடிவத்துக்குக் கொண்டு வருவோம். அதன் பிறகு, வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பட்டறைக்கு எடுத்துச் சென்று உளியால் செதுக்குவோம். குடம் பகுதி 14.5 இன்ச், உயரம் ஒரு அடி, நீளம் ஐந்தே கால் அடி அளவில் உளியால் செதுக்கி முழுமையான வீணை வடிவத்துக்குக் கொண்டு வருவோம். ஏகாந்த வீணை, சாதாரண வீணை என இவை இரண்டும் ஒரே அளவில்தான் செய்யப்படுகிறது.

குடம், தண்டி, வளவு செய்த பிறகு, மேல்பகுதியை பலகை யால் மூடிவிடுவோம். அதன் பின்னர் அறம், உப்புத்தாள் ஆகியவற்றைக் கொண்டு தேய்த்து வழவழப்பு ஏற்படுத்து வோம். மேல்பகுதி மற்றும் பக்கவாட்டில் கார்விங் மூலம் பூ வேலைப்பாடு செய்வோம். பின்னர், யாழி முகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பக்கவாட்டில் இசைக்கும் போது சரிசெய்யக்கூடிய பீருடை அமைப்போம். மேல் பகுதியில் மெழுகில் 24 கட்டைகள் வைத்து அதன்மேல் இரண்டே கால் இன்ச் அளவில் பித்தளைக் கம்பி பொறுத்துவோம்.

பின்னர் தண்டிக்கு மேல் இசையை வெளியேற்றும் கம்பிகள் கட்டுவோம். குடத்தின் மேல் பகுதியில் நான்கு கம்பிகள், பக்கவாடான கீழ்ப்பகுதியில் மூன்று கம்பிகள் எனக் குடத்தில் இருந்து யாழ்முகம் வரை கம்பிகளைக் கொண்டு சென்று பீருடையில் சேர்த்துக் கட்டுவோம்.அதன் பிறகு, பளபளப்பாக இருக்க பாலிஷ் செய்த பிறகு, முழுமையாக வீணை தயாராகி விடும். இந்த வீணையை மீட்டினால் 24 கட்டையிலிருந்து ஏழு ஸ்வரங்கள் எனப்படுகிற இசை வெளிப்படும்.

தனித்துவமிக்க தஞ்சாவூர் வீணை!

ஒரு நபர் மட்டுமே இந்த வீணையைச் செய்தால், ஒரு வீணை செய்து முடிக்க சுமாராக ஒரு மாதம் ஆகிவிடும். ஒரு வீணை விலை ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர் கொடுத்தால் ரூ.1 லட்சத்திலும் வீணை செய்து தருகிறோம்.

தஞ்சாவூரில் தயாராகும் வீணை இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு மேலைநாடுகளுக்கு விற்பனைக்காகவும், சொந்த பயன்பாட்டுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதம் சுமார் ரூ.25,000 வரை வீணை தயாரிப்பின் மூலம் எனக்கு வருமானம் வருகிறது.

வீணையின் மூலம் மட்டும் மாதம் ரூ.30 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தஞ்சையில் ஏறக்குறைய 60 குடும்பங்கள் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.தொடக் கத்தில் விஸ்வகர்மா சமூகத்தினர் மட்டும் இதைச் செய்து வந்தார்கள். இப்போது அனைத்து சமூகத்தினரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் தஞ்சாவூரைச் சுற்றி நிறைய பலா மரங்கள் கிடைத்தன. இப்போது பலா மரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், பலா மரம் கிடைப் பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் பண்ருட்டி போன்ற பகுதிகளுக்குச் சென்று மரம் வாங்கி வர வேண்டியுள்ளது.

அதே போல, நுணுக்கமாகச் செய்யக்கூடிய வேலை என்பதால், கூலி வேலைக்கு ஆள்கள் கிடைப் பதில்லை. வீணை தயாரிக்கும் கலைஞர்களை அரசு பல வகையில் ஊக்குவிக்கிறது. 60 வயதுக்கு மேல் உள்ள கலைஞர் களைத் தேர்ந்தெடுத்து வாழும் கைவினைப் பொக்கிஷம் என்ற விருதை வழங்கி வருகின்றனர்.வீணை தயாரிப்பில் சிறந்து விளங்கும் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்ட, மாநில அளவில் வருடத்துக்கு ஒரு முறை விருதுகளும் வழங்கப்படுகின்றன.

தனித்துவமிக்க தஞ்சாவூர் வீணை!

குடிசைத் தொழில் என்பதால், இவற்றுக்கு விற்பனை வரி, ஜி.எஸ்.டி போன்ற வரிகள் கிடையாது.நபார்டு வங்கியின் மூலம் தனியார் அமைப்புகள் விற்பனையை அதிகப்படுத்த அவ்வப்போது வீணை பொருள்காட்சி நடத்து கிறது. அரசு விற்பனைக்கான பொருள்காட்சி நடத்த ஏற்பாடு செய்தால், விற்பனை அதிகரிக்கும்.

வீணை தயாரிப்பதைக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி மையம் அரசு சார்பில் அமைக்க வேண்டும்.மானிய விலையில் பலா மரக் கட்டை கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வீணை செய்யப் பட்டாலும் தஞ்சாவூர் வீணைக்கு என தனிச் சிறப்பும் மேன்மையும் உண்டு. பாரம்பர்யம் மிக்க கலைப்பொருள், தஞ்சையின் அடையாளம். அதன் மதிப்பைக் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுத்தால் வீணையின் இசை எங்கும் ஒலிக்கும்’’ என்றார்.

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி

சென்னை உயர்நீதி மன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருள்களுக்கான தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைப்பாளருமான சஞ்சய் காந்தி என்பவரிடம் பேசினோம். ‘‘தஞ்சையின் அடையாளமாகத் திகழும் ஏகாந்த வீணைக்கு 2013-ல் புவிசார் குறியீடு கிடைத்தது. அதன் பிறகு, அதன் மகத்துவம் பல மடங்கு பெருகி, வர்த்தகம் உயர்ந்துள்ளது. அரசின் உயர்ந்த பொறுப்புகளில் வகிப்பவர்கள் தஞ்சாவூர் வரும்போது தஞ்சை மண்ணுக்குப் புகழ் சேர்க்கும் கலைப் பொருளான வீணையை நினைவுப் பரிசாக வழங்குகிறார்கள்.

தற்போது ஷோகேஸில் அழகுப் பொருளாக வைப்பதற் கும் சிறிய வகையிலான வீணை தயார் செய்யப்படுகிறது.இதன் மூலம் விற்பனை அதிகரித்திருப்பதுடன் எங்கும் வீணை சென்றடைவதற்காக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தோட்டக் கலைத்துறை மூலம் பலா மரக்கன்று நட்டு வளர்க்கவும், அதன் மூலம் வீணை தயாரிக்கும் கலைஞர் களுக்கு பலா மரம் கிடைக்கும் வகையிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்’’ என்றார்.

வீணை என்கிற அற்புதமான இசைக்கருவி உலகின் பல பகுதிக்கும் சென்றடைய நமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism