Published:Updated:

“தடைகளைப் படிக்கற்களாக மாற்றிய தருணம்..!” - ‘இதயத்தின்’ வெற்றிக்கதை

இதயம் வி.ஆர்.முத்து
பிரீமியம் ஸ்டோரி
News
இதயம் வி.ஆர்.முத்து

நீங்கள் விரும்பும் வேலையைச் செய்தால், வாழ்க்கையில் ஒரு நாள்கூட அந்த வேலையைச் செய்ய உங்களுக்குச் சலிப்பு தட்டாது!

ரு வியாபாரத்தைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் வளர்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. தன்முனைப்புடன் சில வெற்றிச் சூட்சுமங்களைக் கையாளும்போதுதான் ஒரு வியாபாரத்தையோ, ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் ‘இதயம்’ கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.

‘தினந்தோறும் வாங்குவேன் இதயம்’ - இது நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான விளம்பரம். நல்லெண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவரும், ஆர்.ஜே மந்த்ரா பள்ளியின் புரவலருமான வி.ஆர்.முத்துவிடம் பேசினோம். அவர் தன்னுடைய வெற்றிக்கதையை நம்மிடம் `நச்’சென்று எடுத்துச் சொன்னார்.

இதயம் வி.ஆர்.முத்து
இதயம் வி.ஆர்.முத்து

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நூற்றாண்டைத் தொடும் குடும்ப பிசினஸ்..!

“1925-ம் ஆண்டு முதல் எங்கள் பாட்டனாரும் அவர் சகோதரர்களும் வியாபாரம் செய்துவந்தனர். 1943-ம் ஆண்டில் எங்கள் பாட்டனார் விருதுநகரில் தனியாக நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதோடு, வட இந்தியாவிலிருந்து பல வகையான பொருள்களை வரவழைத்து கமிஷன் முறையில் வியாபாரம் செய்துவந்தனர் எங்கள் குடும்பத்தினர். 1978-ம் ஆண்டு நான் வியாபாரத்துக்குள் நுழைந்தேன். அப்போது எங்கள் நல்லெண்ணெய் வியாபாரத்தை இரண்டு மாவட்டங்களில் மட்டுமே செய்துவந்தோம். நிகர விற்பனை ரூ.2 கோடி என்ற அளவில் இருந்தது. இரண்டு மாவட்டங்களில் இருந்த வியாபாரத்தை 1986-ம் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதுமாக விரிவாக்கினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெங்களூரு கற்றுத் தந்த பாடம்..!

1986-ம் ஆண்டு `இதயம் நல்லெண்ணெய்’ என்ற புது பிராண்டை ஆரம்பித்தோம். எங்கள் கடின உழைப்பால் தமிழ்நாடு முழுக்க அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டைப் போல் அண்டை மாநிலங்களிலும் இதயம் நல்லெண்ணெயை அறிமுகப்படுத்த நினைத்தேன். அதற்காக பெங்களூரிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு இரண்டு இதயம் நல்லெண்ணெய் பெட்டிகளை எடுத்துச்சென்று, ‘‘எங்கள் எண்ணெயை வாங்குகிறீர்களா?’’ என்று அந்தக் கடையின் உரிமையாளரிடம் கேட்டேன். அவர் என்னை, அவரின் தம்பியைப் பார்க்கச் சொன்னார். அவர் தம்பி, கடையின் மேலாளரைப் பார்க்கச் சொன்னார். அவர்கள் நடந்துகொண்டதிலிருந்து என்னை புறக்கணிக்கப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.

இதயம் நல்லெண்ணெய்
இதயம் நல்லெண்ணெய்

மேலாளரிடம் செல்வதற்கு முன்னர் என் முடிவை மாற்றிக்கொண்டேன். மேலாளரிடம், ‘‘உங்கள் கடையில் 1,000 ரூபாய்க்குமேல் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு எங்கள் இதயம் நல்லெண்ணெய் அரை கிலோ பாக்கெட்டை இலவசமாகத் தர விரும்புகிறேன்’’ என்று கூறினேன். இதைக் கேட்டு உற்சாகமடைந்த மேலாளர், அவருடைய இரு முதலாளிகளிடமும் கூற, அதன் பிறகு அவர்கள் என்னை நடத்தியவிதம் வேறாக இருந்தது. `தடைகளைப் பார்த்து பயப்படக் கூடாது. தடைகளைத் தகர்க்க வேண்டும். தடைகளைப் படிக்கல்லாக மாற்ற யோசிக்க வேண்டும். சிறப்பான எண்ணங்கள் கஷ்ட காலத்தில்தான் தோன்றும்’ என்பதை நான் உணர்ந்துகொண்ட நேரம் அது.

இரண்டு பெட்டி விற்கச் சென்ற நான் அன்று எடுத்த முடிவால் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றேன். இன்று வடமேற்கே டொரொன்டோ முதல் தென்கிழக்கே நியூசிலாந்து வரை பலரும் எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க 38 நாடுகளில் எங்கள் தயாரிப்பை விற்பனை செய்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரச்னையை மாலை போட்டு வரவேற்போம்!

தொழிலில் நாம் முன்னேறப் பிரச்னைகள் அவசியம். முன்பு விற்பனை வரித்துறை என்ற ஒரு துறை இருந்தது. அந்தத் துறையிடமிருந்து 1990-ம் ஆண்டு எங்களுக்கு ரூ.1.5 கோடி வரிகட்டச் சொல்லி நோட்டீஸ் வந்தது. அந்தக் காலகட்டத்தில், இது எங்களால் தாங்க முடியாத ஒரு தொகை. அந்தப் பணத்தை நாங்கள் கொடுத்தால் எங்களால் வியாபாரம் செய்ய முடியாது. அதிலிருந்து எப்படி மீள்வது என்று யோசித்தோம். எங்கள் வியாபாரத்தைப் பற்றி நாங்கள் தீர ஆராய்ந்தபோது நாங்கள் லாபம் இல்லாமல் வியாபாரம் செய்து வந்திருப்பதைத் தெரிந்துகொண்டோம். அதற்குப் பிறகு எங்கள் விலை நிர்ணயம் மாறியது. எங்கள் லாபம் கூடியது. `லாப நோக்குடன் வியாபாரம் இருக்க வேண்டும்’ என்ற பாடத்தை அந்தப் பிரச்னை மூலம் தெரிந்துகொண்டோம். அந்த ரூ.1.5 கோடி விற்பனை வரி வழக்கையும் நாங்கள் ஜெயித்துவிட்டோம். ஒரு பிரச்னை வரும்போது அதை மாலை போட்டு வரவேற்க வேண்டும். காரணம், அந்த மாதிரியான பிரச்னைகள் மூலம் மிகப்பெரிய வெற்றி நமக்குக் கிடைக்கும்.

இதயம் நல்லெண்ணெய்
இதயம் நல்லெண்ணெய்

தரம்தான் முக்கியம்!

எங்கள் தயாரிப்புகள் தரமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் காட்டும் ஆர்வம் தனித்துவமானது. பாரதப் பிரதமர் மோடி, ரஷ்யாவுக்குப் போனபோது எங்கள் எண்ணெயைத்தான் பயன்படுத்தினார் என்பதிலிருந்தே எங்கள் தயாரிப்பின் தரத்தை அறிந்துகொள்ளலாம். எங்கள் தயாரிப்புகள் பற்றி வாடிக்கையாளர்களின் கருத்துக்கும் மற்றும் வாடிக்கையாளர்களின் நிறை குறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதுவும் எங்கள் வெற்றிக்கான ஒரு படிக்கல்.

புதிய உத்திகளைக் கையாளுங்கள்..!

இந்த கொரோனா காலம் கஷ்டகாலம்தான் என்றாலும் பாதிப்பிலிருந்து மீள புது உத்திகளைக் கையாள வேண்டும். உதாரணமாக, இந்திய அளவில் சலவை செய்யும் நிறுவனம் வைத்துள்ள ஒருவர், இந்த கொரோனாவால் தன் தொழில் 30% மட்டுமே நடப்பதை உணர்ந்து மாற்று யோசனையாக இணையவழியில் வகுப்புகள் எடுப்பதன் மூலம் சம்பாதித்து, தன் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறார். இதுபோல் ஏதோ ஒரு மாற்று முறையைக் கையாள்வதன் மூலம் இக்கட்டான சூழலிலும் தொழிலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். எங்கள் நிறுவனம் உணவு சார்ந்தது என்பதால், எந்தத் தடையும் இன்றி நாங்கள் இயங்குகிறோம்.

விரும்பும் வேலையைச் செய்யுங்கள்!

நீங்கள் விரும்பும் வேலையைச் செய்தால், வாழ்க்கையில் ஒரு நாள்கூட அந்த வேலையைச் செய்ய உங்களுக்குச் சலிப்பு தட்டாது (Do the job you love, you don’t have to work a day in your life). இதுதான் இளைஞர்களுக்கு நான் சொல்லும் யோசனை” என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் இதயம் வி.ஆர்.முத்து.