Published:Updated:

ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

நர்சரி
பிரீமியம் ஸ்டோரி
நர்சரி

தொழில்

ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

தொழில்

Published:Updated:
நர்சரி
பிரீமியம் ஸ்டோரி
நர்சரி
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், வனத்துறையின் யூக்கலிப்டஸ் காட்டுக்கிடையே எங்கும் பசுமை போர்த்தியபடி விரிந்து கிடக்கிறது கல்லுக்குடியிருப்பு கிராமம். கிராமத்துக்குள்ளே நுழைந்தவுடனே, பல வகையான மரங்கள், பூச்செடிகளின் கலவையான நறுமணம் நாசியை கமழச்செய்கிறது. கிராமத்தில் திரும்பிய பக்கமெல்லாம் நர்சரி கார்டன்கள். கல்லுக்குடியிருப்பிலிருந்து வாங்கிச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இன்று இந்தியா முழுவதும் மரங்களாக ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.
ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

30 வருடங்களுக்கு முன்பு மரம் வெட்டி, சாராயம் காய்ச்சி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கிராமம் இன்று தினம் தினம் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து விவசாயப் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தக் கிராம மக்கள் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியோ, தொழில்நுட்பமோ படிக்கவில்லை. ஆனாலும், நர்சரி மூலம் சத்தமில்லாமல் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்துகொண்டிருக்கின்றனர். பேருந்தின் சக்கர சுவடுகள்பதியாத கரடு முரடான சாலைகளில், இன்று தினம் தினம் டெம்போ வாகனம், சரக்கு லாரிகள் என ஏராளமான வாகனங்கள் மரக்கன்றுகளை ஏற்றிச் சென்ற வண்ணம் இருக்கின்றன. இந்தத் தொழிலுக்கு இவர்கள் வந்த கதை சுவாரஸ்யமானது.

கருப்பாயி
கருப்பாயி

கிராமத்துக்கு முதன்முதலில் நர்சரி தொழிலை அறிமுகம் செய்த முத்து நம்மிடம்... “90-கள்ல எங்க ஊருல சொல்லிக்கிற அளவுக்கு பெருசா எந்தத் தொழிலும் இல்ல. ஊரைச் சுத்திலும் யூக்கலிப்டஸ் காடுதான். மரம் வெட்டுவோம், கூடை மொடைவோம். பொம் பளைங்க பெரும்பாலும் பக்கத்து ஊருக்கு விவசாய வேலைக்குப் போவாங்க. எந்தத் தொழிலும் கைகொடுக்காத நேரத்துல சாராயம்தான் காய்ச்சிக்கிட்டு இருந்தோம். கெடுபிடி ரொம்ப இருந்ததால நான் அதையெல்லாம் விட்டுட்டு, முழு நேரமா கூடை மொடஞ்சு வித்துக்கிட்டு இருந்தேன். ஒருநாளு மொடஞ்ச கூடைகளை எடுத்துக்கிட்டு பள்ளத்தூர் சந்தைக்குப் போயிட்டு இருக்கும்போது, ரோட்டுல கோழிக்கொண்டை செடி ஒண்ணு மழைக்கு மொளச்சிருந்ததைப் பார்த்தேன். அந்தச் செடிதான் இன்னிக்கு எங்களோட வாழ்க்கையையே மாத்தியிருக்கு’’ என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்திய முத்து, தன்னுடைய நர்சரியில் மல்லிகை குச்சிகளைப் பதியம் போட்டுக்கொண்டே தொடர்ந்தார்.

“பூ மாலையிலிருந்து உதிர்ந்த அந்தக் கோழிக்கொண்டை பூ, மழைக்குத் துளிர்த்து செடியாக வளர்ந்து கிடந்துச்சு. பூவைப் பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகாக இருந்துச்சு. அதுல உள்ள விதையை எடுத்து வந்து சும்மா வீட்டுல பதியம் போட்டுப் பார்த்தேன். செடி வந்திருச்சு. கொஞ்ச நாள்ல ஒரு செடி, 10 செடியா மாறுச்சு. அதோட, சுண்டைக்காய் செடியையும் போட்டு வளர்த்தேன். கூடை களோட கோழிக்கொண்டை, சுண்டைக்காய் செடிகளையும் விற்பனைக்கு எடுத்துக்கிட்டுப் போவேன்.

ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

கொஞ்ச நேரத்துல செடிகள் எல்லாம் வித்துடும், கூடைகள் அப்படியேதான் இருக்கும். கூடைகளைவிட செடிகள்ல லாபமும் அதிகமா இருந்துச்சு. ஒருகட்டத்துல கூடை மொடை யுறதை நிறுத்திட்டு, செடிகளை மட்டும் வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். கிணத்து தண்ணீரை இறைச்சிதான் பதியம் போடணும். கொஞ்சம், கொஞ்சமா மத்த செடிகளையும் வளர்க்க முடிவு செஞ்சோம். தாய்ச்செடியில இருந்து குச்சிகளை ஒடிச்சிக்கிட்டு வந்து பதியம் போட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோட்டக்கலைத்துறை விஞ்ஞானம் எல்லாம் தெரியாது. 100 பதியம் போட்டா, 10 மொளச்சிருக்கும். சில நேரத்துல எல்லாமும் வீணாகிப்போயிடும். எந்தக் கன்னுக்கு வெப்பம் தேவை, எதுக்குக் குளிர்ச்சி தேவைன்னு அனுபவத்துலதான் கத்துக்கிட்டோம். இன்னிக்கு ரோஸ், அரளி, சம்பங்கி, மல்லி, முல்லைனு எல்லா வகையான பூச்செடிகளையும் வளர்த்து விற்கிறோம். எங்க கிராமத்தைத் தேடி வந்து மரக்கன்றுகளை வாங்கிக்கிட்டுப் போறாங்க. அன்னிக்கு எல்லாம் தக்காளிப்பெட்டியில மரக் கன்றுகளை வெச்சு சைக்கிள்ல கட்டிக்கிட்டு வியாபாரத்துக்குப் போகணும். வித்துட்டு வர்றதுக்குள்ள நாக்குத் தள்ளிடும். ஆனா, நல்ல லாபம் இருந்துச்சு’’ என்று சொல்லும் முத்துவை தொடர்ந்து, அவரின் தம்பி, உறவினர்கள் எனப் பலரும் நர்சரி ஆரம்பித்து, இன்று கிராமத்தில் 150 குடும்பங்கள் நர்சரி தொழிலில் ஈடுபடுகின்றன.

ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

‘‘என்னைப் பார்த்துட்டு என் தம்பி அடைக்கலம் இந்தத் தொழிலுக்கு வந்தான். அப்புறம் மாமா, மச்சான்னு சொந்தக் காரங்களும் நர்சரி வைக்கத் தொடங்கிட்டாங்க. கொஞ்ச வருஷம் எல்லாருக்கும் தொழில் நல்லாவே போச்சு. நடுவுல ஒரு வருஷம் தண்ணிக்கு பஞ்சம் ஏற்பட்டுப் போச்சு. கிணத்துத் தண்ணி எல்லாம் சுத்தமா வறண்டு போச்சு. மரக்கன்று, பூச்செடிகள் எல்லாம் தண்ணி இல்லாம காய்ஞ்சு கருகிப்போச்சு. அந்த நேரத்துல புதுசா தொழில் தொடங்கினவங்களுக்கு பெருத்த நஷ்டம். என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல, கலெக்டரம்மா ஷீலாராணி சுங்கத் எங்களுக்கு உதவிக்கு வந்தாங்க. என் வீட்டுக்காரம்மா உட்பட பொண்ணுங்க 20 பேர் சேர்ந்து ‘செவ்வந்தி மகளிர் குழு’வை ஆரம்பிக்க வெச்சு, குழு மூலமா அரசாங்க லோன் கிடைக்க ஏற்பாடு செஞ்சாங்க. அதோட, ஒரு போர்வெல்லும் போட்டுக் கொடுத்தாங்க. அதுலயிருந்து மறுபடியும் துளிர்க்க ஆரம்பிச்சது எங்க வாழ்க்கை. இன்னைக்கு நல்லாயிருக்கோம்’’ என்று கூறும் முத்து தன் வீட்டுக்கு அருகே இரண்டு நர்சரித் தோட்டங்கள் வைத்திருக்கிறார்.

முத்து, காமாட்சி, கருப்பையா
முத்து, காமாட்சி, கருப்பையா

‘செவ்வந்தி மகளிர் குழு’ உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர் காமாட்சி. 20 பெண்களைத் தனி ஆளாக ஒருங்கிணைத்துக் கடந்த 30 ஆண்டுகளாக அந்தக் குழுவின் தலைவராக இருக்கிறார். பூச்செடிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த காமாட்சியிடம் பேசினோம்... ‘‘ஆரம்பத்துல தைலமரக்கன்னு, வேம்புன்னு ரொம்ப குறைவான கன்றுகளைத்தான் போட்டுக்கிட்டு இருந்தோம். தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராஜக்கண்ணு, ‘ஒரு குழுவா சேர்ந்து ஏன் நீங்க அரசாங்கத்தோட உதவிகள் பெற்று மரக்கன்றுகள் நடக்கூடாது..?’னு கேட்டாரு. ‘எங்க ஊருல பெரும்பாலானவங்களுக்கு எழுத, படிக்கக்கூட தெரியாது, அதப்பத்தியெல்லாம் எங்களுக்குத் தெரியாதே சார்’னு சொன்னேன். ‘20 பேரை சேருங்க, நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்’னு சொல்லி எங்களுக்கு வழிகாட்டுனாரு.

20 பேரை சேர்த்துட்டேன். கலெக்டர் ஆபீஸ், தோட்டக்கலைத்துறை ஆபீஸ்னு அலைஞ்சதுக்கு கொஞ்ச நாள்ல பலன் கிடைச்சது. கூடுதலா மரக்கன்று நடவுசெய்ய லோன் கிடைச்சது. அதோட ஒரு போர்வெல்லும் போட்டுக்கொடுத்தாங்க. அந்த போர்வெல்லயிருந்து நாங்க 20 பேரும் தினமும் சுழற்சி முறையில ஒரு மணி நேரம் தண்ணி எடுத்துக்கு வோம். நாளுக்கு நாள் நர்சரி வளர்ச்சியடைய ஆரம்பிச்சது.

ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

எங்களுக்கு அப்புறம் ஊர்ல மல்லிகை, முல்லைக் குழுனு ஏகப்பட்ட சுய உதவிக் குழுக்கள் உருவாகியிருச்சு. எல்லாரும் வீட்டுல போர்வெல் போட்டு மரக்கன்று வளர்க்கிறோம். இப்போ எங்க ஊர்ல மட்டும் 250 நர்சரிகள் இருக்கு. அதுக்கான தேவையும் இருக்கு. மரங்களுக்கான விதைகளைப் பெரும்பாலும் வெளி மாநிலங்கள்லயிருந்து வரவழைச்சு நடவுசெய்றோம். ஆந்திரா, குஜராத், ஒடிசா, கேரளான்னு இந்தியா முழுசும் நாங்க நடவு செய்ய மரக்கன்றுகளைத் தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. தினமும் லட்சக்கணக்குல வர்த்தகம் நடக்குது’’ என்கிறார் பூரிப்புடன்.

மொத்த விற்பனைக்காக கன்றுகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள்...
மொத்த விற்பனைக்காக கன்றுகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள்...

கருப்பையா மண்ணை வெட்ட, அவரின் மனைவி கருப்பாயி பையில் மண்ணை நிரப்பிக் கொண்டிருந்தார். கருப்பையா நம்மிடம், “மரக்கன்றைப் பொறுத்தவரை மா, பலா, மாதுளை, கொய்யா, பூவரசு, வேம்பு, மகிழம், மகாக்கனி, செம்மரம், சந்தனமரம்னு எல்லா வகையான கன்றுகளும், மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, அலமண்டா, அரளி, செம்பருத்தி, ரோஸ்ன்னு எல்லா வெரைட்டி பூச்செடிகளும் இருக்கு. துளசி, தூதுவளைன்னு ஏராளமான மூலிகைச் செடிகளும் இருக்கு. இப்படி ஆயிரத்துக்கும் அதிகமான செடி வகைகள் எங்ககிட்ட இருக்கு. மரக்கன்றுகளைப் பொறுத்தவரை ரூ.3-லிருந்து ரூ.500 வரையிலும் விற்கிறோம். கல்யாணம், காதுகுத்துனு மொத்த ஆர்டரும் ஓரளவுக்கு கொடுக்கிறாங்க. முன்னாடி வெளிமாநிலங்களுக்கு நேரடியா போய் விதைகளை வாங்கிக்கிட்டு வந்தோம். இப்போ, என் பையன் ஆன்லைன்ல ஆர்டர் எடுக்குறான்.

செம்மர விதைகளைச் சேகரிக்கிறதுதான் கொஞ்ச சிரமம். ஆந்திராவில் உள்ள செம்மரக் காட்டுக்குள் அனுமதி பெற்றுப் போய் விதைகளை அடிச்சு சேகரிச்சிக்கிட்டு வருவோம். ஆந்திராவுல வானுயர வளர்ந்துள்ள செம்மரங்கள் எல்லாம் எங்க கல்லுக்குடியிருப்பு கன்றுகள்தான். கடந்த சில வருஷங்கள்ல லட்சக்கணக்கான செம்மரக்கன்றுகள ஆந்திராவுக்கு ஏற்றுமதி செஞ்சிருக்கோம். மொத்தத்துல, யாருகிட்டயும் போய் கைக்கட்டி நிக்காம குடும்பத்தோட உழைக்கிறோம், நல்லாயிருக்கோம்’’ என்கிறார் நிறைவாக.

துளிர்த்தலில் செழிக்கட்டும் வாழ்வு!

‘‘250 நர்சரிகள் இருக்கு!”

ல்லுக்குடியிருப்பு மக்கள் தொழிலை மேம்படுத்த அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தவர், ராஜக்கண்ணு. “கிராமங்களை முன்னேற்றும் ‘காசா’ங்கிற தொண்டு நிறுவனத்துல அப்போ பணிபுரிஞ்சிக்கிட்டு இருந்தேன். அரிமளம் பிளாக்ல இருந்த இந்த ஊருக்கு விசிட் போயிருந்தப்போ, ஊருக்குள்ள நுழைஞ்சா பெரிய, பெரிய பானைகள்ல சாராயம் காய்ச்சி இருக்கும்.

ஊரெங்கும் நர்சரி... உழைப்புக்கு முன்னோடி!

அதை மாத்த நினைச்சப்போ, மக்கள்கிட்ட பெரிய எதிர்ப்பு. இந்த நிலையில மூணு குடும்பங்கள் மட்டும் மரக்கன்றுகள் நடவு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதையே அவங்களுக்கு நம்பிக்கையா கொடுக்கலாம்னு, சுய உதவிக்குழு ஆரம்பிக்க எழுத படிக்கத் தெரியாதவங்களுக்குக் கூட நின்னு உதவிகளைச் செய்தோம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராஜன் இவங்களுக்கு சப்போர்ட் பண்ணினார். கலெக்டர் முதற்கொண்டு அதிகாரிகள் எல்லாம் நேரடியாக இந்தக் கிராமத்துக்கே வந்துடுவாங்க. எனக்கும் அந்த நேரத்துல ஊரக வளர்ச்சித்துறையில கவர்ன்மென்ட் வேலைகிடைச்சது. வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத் துறைன்னு எல்லா துறைகளையும் இவங்களோட இணைத்து பயிற்சிகள் கொடுத்தோம். கொடுத்த மானியத்தை 100% பயன்படுத்தினாங்க. தொழில்ல ரொம்ப ஈடுபாட்டோட இருந்தாங்க. கொஞ்ச நாள்ல, சாராயம் காய்ச்சிய பானைகள்ல மரக்கன்றுகளை வளர்க்கத் தொடங்கிட்டாங்க. 3 நர்சரி, 20 நர்சரியா மாறுச்சு. இன்னிக்கு 250 நர்சரிகள் வரையிலும் இருக்கு. 6 மாநிலங்களுக்கு மரக்கன்றுகளை ஏற்றுமதி செய்யுறாங்க. தொழிலில் இவங்க காட்டிய ஈடுபாடு இந்தக் கிராமத்தையே உயர்த்தியிருக்கு’’ என்றார்.