Published:Updated:

ஊரடங்கு தளர்வு... தமிழகத்தில் வர்த்தக, தொழில் நிலவரம்..! - ஒரு ரவுண்ட்அப் ரிப்போர்ட்

ஊரடங்கு தளர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
ஊரடங்கு தளர்வு

ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், உற்பத்தி செய்வதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கின்றன.

மிழகத்தில் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைகள் ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளன.

பேருந்துகள் ஓடுகின்றன, உணவகங்களும் வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால், இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில், தமிழகத்தில் வர்த்தக மற்றும் தொழில் நிலவரங்கள் இப்போது எப்படியிருக்கின்றன என்பதைச் சொல்லும் ஒரு ரவுண்ட்அப் ரிப்போர்ட் இது...

மதுரை மக்களிடம் பணப்புழக்கம் இல்லை!

மதுரையின் கடைத்தெருக்களில் எப்போதும்போலக் கூட்டம் அதிகமாக இருந்தாலும், வியாபாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. உணவுப் பொருள்கள் மட்டுமே வேகமாக விற்பனையாகின்றன. மற்ற கடைகளில் மிகச்சிலர் மட்டுமே தென்படும் நிலையே இருக்கிறது.

money
money

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கொரோனா வந்த பிறகு பஜார்ல சில்லறை வியாபாரமும் மொத்த வியாபாரமும் குறைஞ்சிடுச்சு. தொழிலெல்லாம் முடங்கினதால, அடுத்து என்ன செய்யறதுனு தெரியாம தவிக்கிறாங்க தொழிலாளிங்க. சமீபத்துல ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகும் எந்த மாற்றமும் இல்லை. நிலைமை பழையபடி வர்றதுக்கு இன்னும் எத்தனை மாசமாகுமோ?’’ என்று புலம்பித் தீர்த்தார் விளக்குத்தூண் பக்கத்தின் சாலையோர வியாபாரி ஒருவர்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசத்திடம் பேசினோம். ‘‘தற்போது மதுரையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே தொழில்கள் நடந்துவருகின்றன. சிறு, குறு தொழிலதிபர்களும், மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியி ருக்கிறார்கள். அரசின் விதிமுறைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதில் பல பிரச்னைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், தற்போது வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பிவைத்திருக்கக் கூடாது. அவர்கள் ஊருக்குப் போனதால், பல வேலைகளைச் செய்ய ஆட்கள் இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மக்களிடம் பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. வேலை பார்த்த பலருக்கு ஏப்ரல் மாதச் சம்பளமே கிடைக்கவில்லை. கட்டுமான வேலைகள், சிறுதொழில்கள் முன்புபோல இல்லாததால், எளிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வசதியானவர்களும் குடும்ப நிகழ்ச்சிகளைச் சிம்பிளாக நடத்த வேண்டிய சூழல் என்பதால் திருமணம், சுப நிகழ்ச்சிகள் மூலம் நடைபெறும் வியாபாரமும் நின்றுவிட்டது. முதலில் சென்னை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களையும் ஒரே மண்டலமாக ஆக்க வேண்டும். கடை திறக்கவும், சரக்குகளை அனுப்பவும் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை நீக்க வேண்டும். வங்கிக் கடனுதவி, அரசு அறிவித்த சலுகைகள் அனைத்தும் ஏட்டளவில்தான் உள்ளன’’ என்றார்.

ஊரடங்கு தளர்வு
ஊரடங்கு தளர்வு

கோவையில் வியாபாரம் டல்..!

ஊரடங்கு நடைமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பல வர்த்தக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியிருந்தாலும், வாங்குபவர்கள் எப்போது வருவார்கள் என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையையே கோவை நகரில் பல்வேறு கடைகளில் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்ட தலைவர் இருதயராஜாவுடன் பேசினோம். “ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும், மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. ஊரடங்கு தொடங்கியபோது பயத்தில் பல பொருள்களை வாங்கிச் செலவு செய்துவிட்டார்கள் மக்கள். அதன் பிறகு, மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. பல இடங்களில் வேலை இல்லை; வேலை இருந்தாலும் ஊதியம் இல்லை என்ற நிலையே நிலவுகிறது. மேலும், விடுதிகள், தியேட்டர்கள், மால்கள் போன்றவை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், வியாபாரம் டல்லாகத்தான் இருக்கிறது. தற்போது அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை 40-50 சதவிகிதமாகவும், ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை 25 சதவிகிதமாகவும் இருக்கிறது. வியாபாரம் டல்லாக இருந்தாலும், கடை வாடகை, சம்பளம் என்று கடமைகள் இருப்பதால், வியாபாரிகள் எல்லோருமே நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர்’’ என்றார்.

ஜெயப்பிரகாசம், இருதயராஜா, ஜேம்ஸ்
ஜெயப்பிரகாசம், இருதயராஜா, ஜேம்ஸ்

கோவை குறு, சிறு தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ், “கோவையிலுள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பியுள்ளன. ஆனால், தற்போது ஜாப் ஆர்டர்களே வருவதில்லை. மக்களிடம் பொருள்களை வாங்கக்கூடிய சக்தி இல்லை. அதனால் உற்பத்தி தொடங்கவில்லை. ஊரடங்கு நடைமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னரும் 70% தொழில்கள் முடங்கிக்கிடக்கின்றன. குறுந்தொழில்களைக் காப்பாற்ற கடன்களும் தரப்படவில்லை. பழைய கடன்களுக்கான அசலைச் செலுத்த கால அவகாசம் தந்தாலும், வட்டியை விட்டுத் தர வங்கிகள் தயாரில்லை. அதேபோல, மின்சாரத்துக்குச் சலுகைகள் இல்லை. எங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், நான்கு மாதங்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஓராண்டு வரை 50 சதவிகிதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சியில் பொதுப் போக்குவரத்து வந்தால்தான் கலகலக்கும்!

திருச்சி மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தரேசன், “திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அனைத்துத் தொழிலுக்கும் கிராமங்களிலிருந்து வரும் மக்கள்தான் வாடிக்கையாளர்கள். அவர்கள் பொதுப் போக்குவரத்து இல்லாததால், திருச்சி நகரத்துக்கு வருவது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோட்டல் தொழில் மட்டுமல்லாமல் ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட அனைத்துத் துறைசார்ந்த தொழில்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. பல கடைகளைத் திறந்துவைத்தும் வாடிக்கையாளர்கள் வராமலேயே இருக்கின்றனர். கொரோனா பற்றிய பயம் மக்களிடம் இன்னும் அதிகமாகவே உள்ளது. பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்து, கொரோனா அச்சம் மெள்ளக் குறைந்தால்தான் திருச்சி மாவட்டத்தில் வர்த்தக மற்றும் தொழில் நிலவரம் கலகலப்படையும். ஊரடங்கு நேரங்களில் உணவகங்களில் பார்சல் மூலம் விற்பனை தொடர்ந்ததில் 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வியாபாரம் நடந்தது. தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக சுமார் 25% மட்டுமே வியாபாரம் நடக்கிறது” என்றார்.

ஊரடங்கு தளர்வு
ஊரடங்கு தளர்வு

திருச்சி பெல்சியா கூட்டமைப்பின் துணைத் தலைவர் பன்னீர்செல்வம், “திருச்சி பெல் நிறுவனத்தைச் சார்ந்து சுமார் 600 சிறு தொழிற்சாலைகள் உள்ளன. ஏற்கெனவே இந்த நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குறைந்த காரணத்தால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா காரணமாக ஆர்டர்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறோம். மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடித் தொகுப்பில், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்குப் பல நல்ல திட்டங்களை அறிவித்த மத்திய நிதியமைச்சர், நாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியைக் குறைத்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

சுந்தரேசன், பன்னீர்செல்வம்
சுந்தரேசன், பன்னீர்செல்வம்

ஈரோடு - ரூ.5,000 கோடி டு ரூ.500 கோடிக்கு..!

ஜவுளி மற்றும் விவசாயத்தை முதன்மையாகக்கொண்ட ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரம் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. கடைகள், வியாபார நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்ட பின்னரும்கூடப் பொருள்களை வாங்க மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளர் சிவநேசன், “சில்லறை வணிகம் 70 சதவிகிதத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருக்கிறது. காய்கறி, மளிகை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களைத் தவிர, மற்ற வியாபாரங்களில் சுத்தமாகப் பணப்புழக்கம் இல்லை.

வெளி மாநிலங்களிலிருந்து பருப்பு போன்ற தானியங்கள் வராததால், மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. ஈரோட்டிலிருந்து காய்கறி, கீரை, பால் போன்றவை அதிக அளவில் விற்பனைக்காகச் சென்னைக்குத்தான் செல்கின்றன. சென்னையின் சூழல் சரியில்லை என்பதால், இவற்றின் விற்பனை கடும் பாதிப்படைந்திருக்கிறது.

சிவநேசன், பாலகிருஷ்ணன்
சிவநேசன், பாலகிருஷ்ணன்

ஈரோடு ஜவுளித் தொழில் சார்ந்த பகுதி. ஆண்டுக்கு ரூ.5,000 கோடியாக இருந்த ஜவுளி வர்த்தகம் ஏற்கெனவே ரூ.500 கோடியாகச் சுருங்கிவிட்டது. இந்த ஆண்டு அந்த 500 கோடி வர்த்தகமாவது கிடைக்குமா என்பது சந்தேகம்தான். வட மாநிலங்களுக்கு ஏற்கெனவே அனுப்பிய ஜவுளிக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை. மறுபடியும் பொருள்களை அனுப்ப முடியாத சூழல். இதனால் உற்பத்தியான சரக்குகள் ஏராளமாகத் தேங்கிக்கிடக்கின்றன. இதையெல்லாம் சரிசெய்ய எந்தப் பிணையமும் இல்லாமல் ஒவ்வொரு வணிகர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கடன் தர வேண்டும். அடுத்த ஆறு மாத காலத்துக்கு வணிகர்களிடமிருந்து எந்தவித வட்டியும் வசூலிக்கக் கூடாது. வணிகர்களுக்கு ரூ.50 லட்சத்துக்குக் காப்பீடு செய்து தர வேண்டும். மின் கட்டணத்தைச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் தர வேண்டும்’’ என்றார்.

ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், “சிறு, குறு வணிகர்கள்தான் பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கின்றனர். ஆனால், இவர்களுக்காக அரசு எந்தச் சலுகையையும் தரவில்லை. உற்பத்தி செய்பவர்களுக்கே அரசு எல்லாச் சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. கடைகளுக்கு வருபவர்கள் மாஸ்க் போன்றவற்றை முறையாக அணிவதில்லை. அதைக் கேள்வி கேட்டால் வியாபாரம் போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது. பொதுப் போக்குவரத்து இன்னும் இயல்பாகாததால், கிராமத்து மக்களின் வியாபாரம் பெரிதாகக் குறைந்திருக்கிறது” என்றார்.

கவலையின் உச்சத்தில் டாலர் சிட்டி!

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் திருப்பூர் நகரம் உள்நாட்டு வியாபாரம் சரிவு, வெளிநாட்டு ஏற்றுமதிக்குத் தடை, ஆள் பற்றாக்குறை எனப் பல்வேறு சிக்கல்களில் சிக்கி, கவலையின் உச்சத்திலிருக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சண்முகத்துடன் பேசினோம்.

“பொதுவாகவே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் திருப்பூர் பனியன் தொழிலுக்கு மந்தமான காலகட்டம். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்குவதால் நம்முடைய துணிகள் அவர்களுக்குத் தேவைப்படாது. ஸ்வெட்டர் போன்ற குளிருக்கு இதமான பொருள்களை சீனா தயாரிக்கும் அளவுக்கு தயாரித்துக் கொடுக்க திருப்பூர் இன்னும் வளரவில்லை. இதனால், ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், உற்பத்தி செய்வதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கின்றன. ஏற்கெனவே உற்பத்தி செய்த ஆடைகளே கோடிக்கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. இந்தியாவிலும் மால்கள், கடைகள் என முழுதாகத் திறக்காததாலும் உள் நாட்டிலும் பெரிய அளவில் வியாபாரமோ, பணப் பரிவர்த்தனைகளோ இல்லாததால் முன்னேற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறோம்’’ என்றார்.

ராஜா சண்முகம், வெங்கட்ராமன்
ராஜா சண்முகம், வெங்கட்ராமன்

கரூர் - ரூ.1,000 கோடி நஷ்டம்!

சிறிதும் பெரிதுமாக கரூரில் 5,000 தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று லட்சம் தொழிலாளர்கள் இந்த நிறுவனங்களை நம்பியிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு இவர்கள் எல்லோரையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது குறித்து அனைத்து வணிகர்கள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமனிடம் பேசினோம்.

“வீட்டு உபயோகத் துணி ஏற்றுமதியில்தான் வருடத்துக்கு ரூ.2,000 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால், அந்தத் தொழில் முடங்கிப் போயிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார் செய்யப்பட்ட துணிகள் பேக்கிங் நிலையில் அப்படியே குடோன்களில் முடங்கிக் கிடக்கின்றன. வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட வீட்டு உபயோகத் துணிகளுக்கு உரிய தொகையும் வராமல் நிற்கிறது. கடந்த இரண்டரை மாதங்களில் இந்தத் தொழிலில் மட்டும் ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கொசுவலையை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்குப் போதிய போக்குவரத்து வசதியில்லாததால், அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளும் பெரிதாக இயங்கவில்லை. விவசாயம் சார்ந்த தொழில்களும், விலைச்சரிவு மற்றும் போக்குவரத்துப் பிரச்னையால் பேரிழப்பைச் சந்தித்துள்ளன. போக்குவரத்து வசதி குறைவாக உள்ளதால், தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள்களைக் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒட்டுமொத்த தொழில்களிலும் சேர்த்து, இந்த ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவி செய்யவில்லையென்றால், பல தொழில்கள் அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்படும்” என்றார்.

ஊரடங்கு நடைமுறைகள் ஓரளவுக்குத் தளர்த்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் நிலவரங்கள் சுமாராக இருக்கும் நிலையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள நிலைமையைப் பற்றிப் பேச வேண்டியதே இல்லை. எப்போது மாறுமோ இந்த நிலை?