Published:Updated:

எதிர்காலம் குறித்து திட்டமிடாமல் இருக்கிறீர்களா? வெனிட்டாவின் கதை உங்களுக்குத்தான்! #BusinessMasters

Venita
Venita

வெனிட்டா வேன்கேஸ்பெல்... இன்றைக்கும் இவரை `ஃபர்ஸ்ட் லேடி ஆஃப் ஃபைனான்ஷியல் பிளானிங்’ என்று அமெரிக்கா கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு வீணைக் கலைஞர், அவருடைய வீணை பல மாதங்களாக உறைகூடப் பிரிக்கப்படாமல் பரணிலேயே கிடைக்கிறது... என்ன பயன்?

திறமை வாய்ந்த ஒரு மருத்துவர் தன் கிளினிக் பக்கம் திரும்பிப் பார்க்காமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்... என்னவாகும்?

எப்பேர்ப்பட்ட கிரிமினல் வழக்கிலும் ஆஜராகி வெற்றிவாகை சூடும் வாதத்திறமை படைத்த ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறார்... யாருக்கு என்ன லாபம்?

ஒருவர் தன் புரஃபஷனைப் பயன்படுத்தாமல், அதை மேம்படுத்திக்கொள்ளாமல் இருப்பது என்பது அவருக்கு இழப்பு; அவர் சார்ந்த துறைக்கு பேரிழப்பு. ஆங்கிலத்தில் `Dead Asset’ என்பார்கள். அதாவது, யாருக்கும் பயன்படாமல், வெறுமனே கிடக்கிற உயிர்ப்பற்ற சொத்து. இதை `Live Asset’-ஆக, அதாவது உயிர்ப்புள்ள, லாபம் தரக்கூடிய சொத்தாக மாற்றுவதுதான் ஒரு புரஃபஷனலின் வேலை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அப்படி ஒரு சொத்து வெறுமனே கிடக்கிறது.

இதை வாழ்க்கையின் ஒரு முக்கியமான புள்ளியில் புரிந்துகொண்டார் வெனிட்டா வேன்கேஸ்பல். அதற்குப் பிறகு அவர் கவனமெல்லாம் தன் புரஃபஷன் மேல்தான் அழுத்தமாகக் குவிந்தது.

money
money

1922, அக்டோபர் 3-ம் தேதி அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்திலுள்ள, ஸ்வீட்வாட்டர் என்ற இடத்தில் பிறந்தார் வேன்கேஸ்பல். `துறுதுறு சுட்டிப்பெண்’ என்று இளம்வயதில் பெயர் வாங்கினார். ஆனால், இயல்பாகவே விளையாட்டில் ஆர்வம் மிகும் அந்தப் பருவத்தில் பெற்றோரின் வேலைகளில் உதவியாக இருந்தார். வீட்டில் உள்ளவர்கள் பயிரிடும் நிலக்கடலை, தர்ப்பூசணி, பட்டாணி ஆகியவற்றின் அறுவடைக் காலங்களில் ஒத்தாசையாக இருந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒப்பனைக் கலைஞராகக்கூட வேலை பார்த்திருக்கிறார்.

அதிக வசதியில்லாத குடும்பம். அதனாலேயே ஒவ்வொரு டாலரின் மதிப்பும் வேன்கேஸ்பலுக்குத் தெரிந்திருந்தது. பணத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்ததால், கல்லூரியில் பொருளாதாரத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தார். கல்லூரியில் அவர் ஒருவர்தான் பொருளாதாரம் படிக்கும் மாணவி. எல்லா வகுப்புகளிலும் ஆண்கள் நிறைந்திருக்க அவர் மட்டும் தனித்துத் தெரிவார்.

அவருடைய குடும்பத்திலிருந்து கல்லூரிக்குப் போன முதல் நபர் அவர்தான். ஆனால், வீட்டுச் சூழ்நிலை அவருடைய கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தும் நிலையில் இல்லை. படித்துக்கொண்டே சின்னச் சின்ன வேலைகள் பார்த்தார் வேன்கேஸ்பல். கல்லூரி உணவகத்தில் கேஷியர் வேலை, விடுதி லாண்டரியில் கிளார்க் என வேலை பார்த்துத் தன் கல்லூரிச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார்.

1948-ம் ஆண்டு, கொலொராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் (University of Colorado Boulder) பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அந்தப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் பட்டம் பெற்ற பெண்ணும் அவர்தான். பட்டம் வாங்கிய கையோடு திருமணம். அந்தநேரத்தில் அவருக்கு இருந்த எண்ணமெல்லாம் குருவிக்கூடு மாதிரி அமைதியான வீடு, அருமையான கணவன், குழந்தைகள்... பிறகென்ன, அவருடைய பொருளாதார அறிவெல்லாம் பரணுக்குள் மூட்டைகட்டி வைக்கப்பட்டது.

Financial Planner
Financial Planner

கணவர் சேல்ஸ்மேன். அவர் கொண்டுவரும் வருவாயும் சொற்பம்தான். அதிலும்கூட மிச்சம் பிடித்து சேமித்து வைத்தார் வேன்கேஸ்பல். ஆனால், அதை எப்படி முறைப்படி சேர்த்து வைப்பது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் வாழ்வில் நடந்த பெரிய துயரச் சம்பவம் அதற்கும் வழிகாட்டியது.

அது, 1959-ம் வருடம். அவருடைய கணவர் ஒரு சேல்ஸ் மீட்டிங்குக்காக ஹூஸ்டனுக்குப் போயிருந்தார். அவர் திரும்பிவரும் நேரத்தைக் கணக்கிட்டு, டல்லாஸ் விமான நிலையத்துக்குப் போய் அவரை அழைத்துப் போவதற்காகக் காத்திருந்தார் வேன்கேஸ்பல். காத்திருந்ததுதான் மிச்சம். அன்றைக்கு அந்த விமானம் ஏர்போர்ட்டுக்கு வரவில்லை. 90 பயணிகளை ஏற்றிவந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. அவர் கணவரையும் சேர்த்து, ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடிந்துபோனார் வேன்கேஸ்பல். எதிர்காலம் சூன்யமாகத் தெரிந்தது. ஆனாலும், வாழ்ந்தாக வேண்டுமே! அவருடைய கணவர் இறந்ததற்கு இன்ஷூரன்ஸ் தொகையாகக் கொஞ்சம் பணம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு இறுதி வாழ்நாளை ஓட்டவும் முடியாது. என்ன செய்யலாம்? யோசித்தார். அந்தப் பணத்தை மேற்கொண்டு படிப்பதற்குப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்.

முதலீடு (Investment) தொடர்பான படிப்பு. அதைப் படிக்கும்போதுதான் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. அமெரிக்காவில் 65 வயதை நெருங்கியவர்களில் நூற்றுக்கு 2% பேர் மட்டுமே பொருளாதாரரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக்காலில் நின்றார்கள்; 23% பேர் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்; மீதமிருக்கும் 75% பேர் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு உறவினர்களையோ, நண்பர்களையோ, ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தையோ சார்ந்திருந்தார்கள். இதற்குக் காரணம் என்ன என்று யோசித்தார் வெனிட்டா வேன்கேஸ்பல். வாழும் காலத்தில் ஃபைனான்ஷியல் பிளானிங் இல்லாததுதான் காரணம் என்பது தெளிவாகத் தெரிந்தது.

Money Dynamics
Money Dynamics
`ஆன்லைன் மூலம் அனைவருக்கும் வேலை!' - சாதித்த மீனாட்சியின் கதை தெரியுமா? #BusinessMasters - 5

எல்லோருமே உழைக்கிறோம். அவரவருக்கான வருமானத்தை ஈட்டுகிறோம். ஆனால், நம்மில் பலரும் செய்யத் தவறுவது எதிர்காலத்துக்கான நிதித் திட்டமிடல். `எதிர்காலத்துக்கு என்ன சேத்துவெச்சிருக்கீங்க?’ இந்தக் கேள்விக்கு பலரிடம் பதிலில்லை. ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை விழும் பட்ஜெட்டில் வாழும் குடும்பஸ்தர்களால் எதிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க முடியாது. 100 ரூபாய் சம்பாதித்தாலும், அதில் ஒரு 10 ரூபாயைச் சேமிக்கத் தெரிந்தால்தான், எதிர்காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த உண்மை ஃபைனான்ஸ் படிக்கும் காலத்தில் அப்பட்டமாக உறைத்தது வேன்கேஸ்பலுக்கு. யோசித்தார். இதில் ஆழமாக இறங்குவது என்று முடிவெடுத்தார்.

போராட்டம்தானே வாழ்க்கை? அதைப் போராடி எதிர்கொள்ள முடிவெடுத்தார் வேன்கேஸ்பல். அடுத்து அவர் ஃபைனான்ஷியல் ஆலோசகராக வேண்டும். அப்போதுதான் அவர் நினைத்ததைச் செயல்படுத்த முடியும். அதற்குப் பயிற்சி வேண்டும்; அனுபவம் வேண்டும். ஹூஸ்டனிலுள்ள ஒவ்வொரு ஷேர் மார்க்கெட் புரோக்கர் அலுவலகமாக ஏறி, இறங்கினார். கிட்டத்தட்ட 15 நிறுவனங்கள். அத்தனையிலும் உதடு பிதுக்கினார்கள்; `உங்களுக்கு இங்கே வேலை இல்லை’ என்று கைவிரித்தார்கள். வேலை இருந்தாலுமேகூட அவர் பெண் என்பதால், அவரை நிராகரித்தார்கள். ஒரு பங்குச் சந்தை தரகர் சொன்னார்... ``நாங்க ஒரு பொண்ணை வேலைக்கு எடுத்தோம். அது வேலைக்கு ஆகலை.’’

ஆனாலும் நம்பிக்கை இழந்துவிடவில்லை வேன்கேஸ்பல். நியூயார்க் பங்குச் சந்தையின் விதிகளைப் படித்தார். அதில் ஒருவர், பங்குச் சந்தை தரகர் ஆக வேண்டுமென்றால், சில விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆறு மாதக் காலத்துக்கு ஒரு ஷேர் புரோக்கரிடம் வேலை பார்த்திருக்க வேண்டும். பிறகு, ஒரு தேர்வெழுதி, அதில் பாஸாக வேண்டும். `அவ்வளவுதானே! பண்ணிட்டா போச்சு’ என்று முடிவெடுத்தார். ஒரு பங்குத் தரகர் அலுவலகத்தில் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தார். கூடவே, நியூயார்க் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைனான்ஸில் ஒரு கோர்ஸில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஆறே மாதங்கள். யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த பரீட்சையில் பாஸானார். அதன் பிறகு அவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான். பல நிறுவனங்களுக்குப் போய், நிதி தொடர்பான, எதிர்கால சேமிப்பு குறித்த வகுப்புகளைப் பெண்களுக்கு எடுத்தார். சிறந்த பேச்சாளர் என்ற பெயரெடுத்தார்.

Finance
Finance
₹2000 கோடி டேர்ன் ஓவர்; விதை போட்ட மேப்... VKC சாம்ராஜ்யம் வளர்ந்தது எப்படி? #BusinessMasters - 6

பங்குச் சந்தையில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய காலம் அது. 1968-ம் ஆண்டு, வேன்கேஸ்பல் & கோ. இங்க் என்ற பங்குச் சந்தை புரோக்கர் நிறுவனத்தை ஆரம்பித்தார் வேன்கேஸ்பல். பசிபிக் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் முதல் பெண் உறுப்பினராக ஆனார். பிறகு, முதலீடு தொடர்பாகப் பல புத்தகங்கள் எழுதினார். அவற்றில் பல நியூயார்க் டைம்ஸின் `பெஸ்ட் செல்லர்’ பட்டியலில் இடம்பிடித்தன. குறிப்பாக, `Money Dynamics: How to build financial independence’ என்ற புத்தகம் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

வெனிட்டா வேன்கேஸ்பல் செய்ததெல்லாம் இதுதான்... சில பங்குச் சந்தை புரோக்கர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளரிடம் சில கம்பெனி ஷேர்களில் முதலீடு செய்யச் சொன்னார்கள்; இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள், தங்கள் வாடிக்கையாளர்களை பாலிசிகளில் முதலீடு செய்யச் சொன்னார்கள்; ஆடிட்டிங்கில் இருப்பவர்களோ, வரிகளைத் தவிர்க்க சில வழிமுறைகளைச் சொல்லி திசை திருப்பினார்கள். வேன்கேஸ்பெல் அவர்களை அரவணைத்துக்கொண்டார்.

`நாம் எங்கிருக்கிறோம்; நமக்கு என்ன தேவை; எதிர்காலத்துக்கு எப்படி முதலீடு செய்தால் நம்மைக் காத்துக்கொள்ளலாம்...’ இதை அரிச்சுவடிபோல அழகாக உணர்த்தினார். அதனால்தான், இன்றைக்கும் அவரை `ஃபர்ஸ்ட் லேடி ஆஃப் ஃபைனான்ஷியல் பிளானிங்’ என்று அவரை அமெரிக்கா கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு