Published:Updated:

₹2000 கோடி டேர்ன் ஓவர்; விதை போட்ட மேப்... VKC சாம்ராஜ்யம் வளர்ந்தது எப்படி? #BusinessMasters - 6

VKC
VKC

வி.கே.சி நிறுவனத்தைத் தொடங்கியவர் நௌஷத்தின் தந்தை வி.கே.சி மம்மது கோயா (V.K.C.Mammed Koya). மம்மது கோயாவுக்கு ஒரு லட்சியம் இருந்தது. கட்டுப்படியாகக்கூடிய விலையில் உறுதியான, சௌகரியமான காலணிகளைத் தயாரித்து சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அந்த லட்சியம்

த்தியாவசியப் பொருள்களின் பட்டியலுக்குள் செருப்பு வந்து ரொம்ப காலமாகிறது. இன்றைக்கு கால்களில் செருப்பில்லாமல் நடப்பவர்களைப் பார்ப்பது வெகு அரிது. கால்களுக்குப் பாதுகாப்பு என்பதையும் தாண்டி, சுகாதாரக் காரணங்களுக்காகவாவது அதை அணிய வேண்டியது நம் எல்லோருக்குமே அவசியமாகிறது.

ரீபோக், பூமா, ஸ்பார்க்ஸ், பாட்டா, லிபர்ட்டி, அடிடாஸ், நைக், ஆரோ, ஹஷ் பப்பீஸ்... என்று இந்தியாவில் விற்பனையில் சக்கைபோடு போடும் ஃபுட்வேர் பிராண்டுகளின் பட்டியல் வெகு நீளம். இத்தனை இருந்தாலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிற, நடுத்தர - சாமானிய மனிதர்களால் பயன்படுத்தப்படுகிற, கொண்டாடப்படுகிற ஒரு பிராண்டும் உண்டு. அது, `விகேசி ஃபுட்வேர்’ (VKC Footwear). அதன் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நௌஷத் (Naushad).

VKC Factory
VKC Factory

5,000 ஆண்டுக்கு முன்பே செருப்பு

மனிதர்கள் காலணியைப் பயன்படுத்த ஆரம்பித்தது கி.மு.5,000-க்கும் முற்பட்ட காலமாக இருக்கலாம் என்கிறது வரலாறு. பண்டைய நாகரிகங்களில், குறிப்பாக எகிப்து, கிரேக்க பண்பாடுகளில் காலணி என்பது ஓர் ஆபரணமாக இருந்திருக்கிறது. இந்தியாவில், ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வரை காலணி தயாரிப்புக்கென தனியாக நிறுவனங்கள் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் செருப்பு தைக்கும் தொழிலாளிகள் இருந்தார்கள். அவர்களே உள்ளூர் மக்களுக்கு செருப்பைத் தயாரித்துக் கொடுத்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு தொழிலில் வி.கே.சி நிறுவனம் நுழைந்தது எப்படி?

வி.கே.சி நிறுவனத்தைத் தொடங்கியவர் நௌஷத்தின் தந்தை வி.கே.சி மம்மது கோயா (V.K.C.Mammed Koya). மம்மது கோயாவுக்கு ஒரு லட்சியம் இருந்தது. கட்டுப்படியாகக்கூடிய விலையில் உறுதியான, சௌகரியமான காலணிகளைத் தயாரித்து சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அந்த லட்சியம்.

அது ரப்பர் இண்டஸ்ட்ரி வளர்ந்துகொண்டிருந்த காலம். அப்போது மம்மத், தோல் செருப்புகளுக்கு மாற்றாக வந்திருந்த ஹவாய் செருப்புகளைத் தயாரிக்க முடிவெடுத்தார். ஆனால், அதில் ஒரு பிரச்னை எழுந்தது.

Mohammad koya
Mohammad koya

வாய் பிளந்த ஹவாய் செருப்பு

ஹவாய் செருப்பின் வார் (Strap) எளிதில் பிய்ந்து போகக்கூடியதாக இருந்தது. செருப்புகளை விற்று முடிப்பதற்குள்ளாகவே பாதிக்கும் மேற்பட்ட காலணிகளின் வார்கள் பிய்ந்து போக ஆரம்பித்தன. விற்ற செருப்புகளிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏகப்பட்ட புகார்கள்... `நேத்துதான் வாங்கிட்டுப் போனேன். ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றதுக்கு கிக் பண்ணினேன். அவ்வளவுதான்... வார் பிஞ்சு போச்சு’, `பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்... வார் பிஞ்சுடுச்சு...’ போன்ற புகார்கள். இவை, விற்பனையில் விரிசலை உண்டாக்கின.

இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மம்மது கேரளாவின், கோட்டயத்திலுள்ள ரப்பர் இன்ஸ்டிட்யூட்டின் உதவியை நாடினார். நல்ல தரத்துடன் கூடிய ரப்பர் ஷீட்கள் கிடைக்கும் வரை அந்த நிறுவனத்துடன் சேர்ந்து பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்து, அதில் வெற்றியும் கண்டார்.

தரமான காலணிகளும், பாலிதீன் பைகளும் கேரளாவின் காலிகட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் விற்பனைக்குக் கொண்டு போகப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு வேலைக்காக வந்திருந்த தொழிலாளர்கள் மத்தியில் அந்தக் காலணிகள் பிரபலமாக ஆரம்பித்தன. அவர்கள் அந்தக் காலணிகளை தமிழ்நாட்டுக்கும் கொண்டுபோக ஆரம்பித்தார்கள். வி.கே.சி-யின் சந்தை பெங்களூரைத் தாண்டி விரிய ஆரம்பித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பாவின் சந்தேகங்கள்...

நௌஷத் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே அது ஆரம்பித்திருந்தது. மம்மது தன் கையில் ஒரு ரப்பர் டெக்னாலஜி புத்தகத்துடன் வருவார். ரப்பர் குறித்த சில சந்தேகங்களை நௌஷத்திடம் கேட்பார். அப்பாவுக்கு பதில் சொல்வதற்காகவே ரப்பர் நுணுக்கங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார் நௌஷத். அது, அவர் ரப்பர் டெக்னாலஜியிலும், கெமிக்கல் இன்ஜினீயரிங்கிலும் மேற்படிப்பு படிக்கும் அளவுக்கு அவரை வளர்த்துவிட்டது.

Naushad
Naushad

செருப்பு தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம்

நெளஷத் படித்து முடித்தவுடன் அவரது கைக்கு வி.கே.சி ஃபுட்வேர் நிர்வாகம் வந்தது. அது, சந்தையில் ரப்பரிலிருந்து பி.வி.சி-க்கு (PVC) டிரெண்ட் மாற ஆரம்பித்திருந்த நேரம். தாய்லாந்திலிருந்து பி.யூ செருப்புகள் (Polyurethane Footwear - PU) விற்பனைக்கு வரத் தொடங்கின. சில இந்திய நிறுவனங்களும் அவற்றை வாங்கி விற்கத் தொடங்கியிருந்தன. ஆனால், விலை சாமான்யர்கள் வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. நௌஷத், மைக்ரோ செல்லுலார் பாலிமர் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்; தென் இந்தியாவிலேயே முதன்முறையாக புதுவகை இயந்திரங்களைக்கொண்டு பி.வி.சி சிந்தெடிக் லெதர் பொருள்களில் காலணிகளை உருவாக்கினார். அதற்கு அபார வரவேற்பு கிடைத்தது.

அசந்துபோன இத்தாலி நிபுணர்

ஹவாய், பி.வி.சி, பி.யூ... என எந்த ரகமான காலணி உற்பத்தியை ஆரம்பித்தாலும் திறமை வாய்ந்த தொழிலாளர்கள் நௌஷத்துக்குக் கிடைப்பது அரிதாக இருந்தது. பார்த்தார், ஐ.டி.ஐ முடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக வரும் மாணவர்களை வேலைக்கு எடுத்தார். அவர்களுக்குக் கடுமையாகப் பயிற்சி கொடுத்து தேர்ந்த தொழிலாளர்களாக்கினார்.

ஃப்ரெஷ்ஷாக வந்த மாணவர்களும் சோடை போகவில்லை. நௌஷத்தின் பயிற்சியை `சிக்’கெனப் பற்றிக்கொண்டார்கள். தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டார்கள். அப்போது மைசூரில் வி.கே.சி-க்கு ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே புதிதாக ஒரு மெஷினைப் பொருத்தி, நிறுவ வேண்டியிருந்தது. அதற்காக நௌஷத், இத்தாலியிலிருந்து ஒரு வல்லுநரை வரவழைத்தார். அந்த இத்தாலி வல்லுநர் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்தார். வேலைபார்க்கும் தொழிலாளர்களைப் பார்வையாலேயே எடை போட்டார். அவர், ``புது மெஷினை இன்ஸ்டால் செய்ய 10 நாள்கள் ஆகும்’’ என்றார். ``ஏன்?’’ என்று கேட்டார் நெளஷத்.

VKC
VKC
670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T நாயக்கின் வெற்றிக்கதை! #BusinessMasters - 4

``சாதாரணமாக மற்ற நாடுகள் என்றால், மூன்றே நாள்களில் இந்த மெஷின் இன்ஸ்டால் செய்துவிடுவோம். ஏனென்றால், அங்கே தேர்ந்த தொழிலாளர்கள் இருப்பார்கள். இங்கே அப்படிப்பட்டவர்கள் இல்லை’’ என்று சொன்னவர் கிளம்பிப் போய்விட்டார்.

அதைக் கேட்டு அசந்துபோய்விடவில்லை நௌஷத். தன் தொழிலாளர்களுடன் அதைச் சோதித்துப் பார்க்க முடிவெடுத்தார். மெஷினை நிறுவும் வேலை ஆரம்பமானது. அவர்களில் பெரும்பாலானோர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தட்டிக் கொடுத்தார்; ஊக்கம் கொடுத்தார்; பேசிப் பேசியே கரைத்தார். மூன்றே நாள்களில் அவர்கள் மெஷினை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்துவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்டு வந்துபார்த்த அந்த இத்தாலிய வல்லுநர் அசந்துபோனார். `ஒவ்வொரு தொழிலாளரும் தொடர்ந்து கற்றுக்கொள்வது என்பது வேலையின் ஒரு பகுதி’ என்றே நினைத்தார் நௌஷத்.

தமிழ்நாட்டில் வி.கே.சி காலணிகளின் விற்பனைச் சந்தை விரிவானதும்கூட ஒரு சுவாரஸ்யமான கதைதான். கேரளாவைவிட தமிழ்நாட்டில் அதிக காலணிகளை விற்பனை செய்ய முடியும் என்று நௌஷத்துக்குத் தோன்றியது. விநியோகஸ்தர்களை அணுகினார். அவர்கள் காலணிகளுக்கான அடக்க விலையை இன்னும் குறைக்கச் சொன்னார்கள். அதிகமாகக் கடன் கேட்டார்கள். நிறைய தள்ளுபடி எதிர்பார்த்தார்கள். தானே நேரடியாகக் களத்தில் இறங்குவது என்று முடிவு செய்தார் நௌஷத்.

பத்து ரூபாய் கொடுத்து தமிழ்நாடு மேப் ஒன்றை வாங்கினார். ஒவ்வொரு மாவட்டத்தையும், தாலுகாவையும், நகரத்தையும், சின்னஞ்சிறு ஊரையும் நன்றாக ஆராய்ந்தார். ஊர் ஊராகப் போக முடிவெடுத்தார். ஒவ்வொரு சிறு ஊரிலும் இருந்த செருப்புக் கடைகளுக்கும் தன் ஆட்களை அனுப்பினார். அவரும் நேரடியாகப் பல ஊர்களுக்குச் சென்றார். நௌஷத்தின் ஆட்கள் தங்கள் காலணிகளைக் காட்டினார்கள். அதன் நன்மைகளை விவரித்தார்கள். கடைக்காரர்களிடம் பேரம் பேசினார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நடைபெற்ற இந்தக் களப்பணிக்கு வெற்றியும் கிடைத்தது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டொன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடத்துகிறது வி.கே.சி நிறுவனம்.

முகம்மது கோயா
முகம்மது கோயா
`ஆன்லைன் மூலம் அனைவருக்கும் வேலை!' - சாதித்த மீனாட்சியின் கதை தெரியுமா? #BusinessMasters - 5

சந்தையைப் புரிந்துகொள்ளுங்கள்!

``பல நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பான தளத்தில் இருந்துகொண்டு வியாபாரம் செய்ய நினைக்கின்றனவே தவிர, போதுமான நேரத்தைச் செலவழித்து சந்தை நிலவரத்தை அறிந்துகொள்ள முயல்வதில்லை’’ என்கிறார் நௌஷத்.

இன்றைக்கு இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.2,000 கோடிக்குமேல் டேர்ன் ஓவர் செய்கிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் யூனிட்டுகளை அமைத்து, 6,000-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்த வெற்றிக்கு நௌஷத் அழுத்தமாகச் சொல்லும் ஒரு காரணம் இதுதான்... ``எங்களுடைய வாடிக்கையாளர்களே, எங்களின் பிராண்ட் அம்பாசடர் ஆனார்கள். அதனால்தான் நாங்கள் வளர்ந்தோம்.’’

என்ன ஒரு அனுபவபூர்வமான வார்த்தை!

(- பாடம் எடுப்பார்கள்)
அடுத்த கட்டுரைக்கு