Published:Updated:

அட்சய திருதியை: ஆன்லைனில் தங்கம் வாங்கப்போறீங்களா... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Gold
Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நகைக் கடை உரிமையாளர்கள் அட்சய திருதியை தினத்தில் மக்களைத் தங்கம் வாங்க வைப்பதற்கு, ஆன்லைன் புக்கிங் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், பெரிய வணிக வளாகங்கள், நகைக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் நாளை (14.05.2021) அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல, லாக்டௌன் நேரத்தில்தான் அட்சய திருதியை கொண்டாடப்பட்டது.

தங்கம்
தங்கம்

பொதுவாக, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், வளம் பெருகும் என்பதும், வாழ்க்கை சுபிட்சமாகும் என்பதும் மக்கள் பலரிடம் இருக்கும் நம்பிக்கை. அதனால், ஒவ்வோர் ஆண்டும் அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

கொரோனா பாதிப்பின் காரணமாக, அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டிருப்பதால், ``சக்ரா கோல்டு, மேரி கோல்டு, கோல்டு வின்னர் எனப் பெயரில் மட்டுமே தங்கம் இருக்கும் பிராண்டுகளை வேண்டுமானால் வாங்கலாம். நேரடியாகக் கடைக்குப் போய் தங்கம் வாங்க முடியாது" என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நகைக் கடை உரிமையாளர்கள் அட்சய திருதியை தினத்தில் மக்களைத் தங்கம் வாங்க வைப்பதற்கு, ஆன்லைன் புக்கிங் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, அட்சய திருதியை தினத்தில், வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். எவ்வளவு கிராம் தங்கம் வேண்டுமோ, அதற்கான பணத்தைச் செலுத்தி அதை வாங்கலாம். ஊரடங்கு காலம் முடிந்ததும், எந்தக் கடைகளில் `புக்கிங்’ செய்தீர்களோ, அந்தக் கடைக்குச் சென்று தங்க நாணயமாகவோ, நகையாகவோ வாங்கிக் கொள்ளலாம். நகையாக வாங்க விரும்பினால், அதற்கான செய்கூலி, சேதாரத்துக்கு என்று தனியாகப் பணம் செலுத்தி நகையாகவும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இப்படி வாங்குவதற்கு முன்னர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

முதலில், தங்க நகையை ஆர்டர் செய்வதற்கு முன்பாக, நகைக்கடை உரிமையாளர்கள் இன்றைய தங்கத்தின் விலையைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்களா அல்லது அதிகமான விலையைக் குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

தங்கம் 24, 22,18 மற்றும் 14 காரட் போன்ற பல வகைகளில் கிடைக்கின்றன. நீங்கள் வாங்கப்போவது தங்க நாணயம் என்றால், ஆர்டர் செய்வதற்கு முன்னால் காரட் விஷயத்தில் தெளிவாக இருங்கள்.

Gold
Gold

தங்கத்தை நேரடியாகக் கடைக்குப்போய் வாங்கும்போது, ஹால்மார்க் முத்திரை, தங்கத்தின் தரம் மற்றும் எடை சரியாக இருக்கிறதா எனப் பல்வேறு விஷயங்களைப் பார்த்து வாங்குவோம். ஆன்லைனில் ஆர்டர் அல்லது பிரீ புக் செய்யும் போதும் அதே கவனம் இருக்கட்டும்.

நீங்கள் வாங்கப்போகும் தங்கம் சார்ந்த விவரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து, அதன்பிறகே பணத்தை செலுத்துவது நல்லது.

ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் எனத் தங்க நாணயங்கள் பல அளவுகளில் இருப்பதால், ஒரு கிராம் வாங்க நினைத்து 8 கிராம் தங்கத்தை மாற்றி `கிளிக்' செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. பணத்தைச் செலுத்துவதற்கு முன்னர் ஒருமுறைக்கு, இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் தங்கநகை வாங்குபவர்கள், உங்களுடைய பெயர், பிழையில்லாத வீட்டு முகவரி, மெயில் முகவரி மற்றும் அலைபேசி எண்ணைக் கொடுக்கவும். நகைக்கடை உரிமையாளர்கள் தரக்கூடிய கூப்பன் அல்லது ரசீது எதுவாக இருந்தாலும் நீங்கள் கொடுக்கப்படும் விவரங்களின்படிதான் கொடுப்பார்கள் என்பதில் கவனம் இருக்கட்டும்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் பெரும்பாலான பொருள்கள் சகாய விலையில் கிடைக்கும் என்பது பொது அபிப்ராயம் என்றாலும், இது தங்கத்துக்குப் பொருந்தாது. மலிவான விலையில் தங்கம் என யார் சொன்னாலும், விளம்பரம் செய்தாலும் நம்ப வேண்டாம்.

Gold
Gold

நகைக் கடை உரிமையாளரின் ரிட்டர்ன் அல்லது பைபேக் பாலிஸியைக் கட்டாயமாக ஆய்வு செய்யுங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தவரை, ஆன்லைனில் விற்கப்படும் ஏனைய பொருள்களுக்கு உள்ளதைக் காட்டிலும் தங்கத்துக்கான விதிமுறைகள் மிகவும் கெடுபிடியானவை. எனவே, தங்கத்தை ஆன்லைனில் வாங்க முடிவு செய்யும் முன் இந்த நிபந்தனைகளை நன்கு படித்துப் புரிந்துகொண்டு முடிவெடுங்கள்.

நகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது `ஹோம் டெலிவரி' ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தினால், வீட்டுக்கு நகை வரும்போது, அதன் பேக்கேஜ் ஒழுங்காகச் சீல் செய்யப்பட்டிருக்கிறதா என்பதோடு, அது எவ்வித சிதைவுக்கும் உள்ளாகாமல் இருக்கிறதா என்பதையும் பார்க்கவும். பேக்கேஜிங்கைப் பற்றித் துளியளவு சந்தேகம் உங்களுக்குத் தோன்றினாலும், அதைப் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.

இன்னும் தங்க நகைகள் மூலம்தான் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #HerMoney - 5

சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் காலகட்டம் இது என்பதால், நீங்கள் தங்கம் வாங்கப்போகும் விற்பனையாளர் வலைதளத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி நன்கு உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். ஜாக்கிரதை!

அடுத்த கட்டுரைக்கு