Published:Updated:

போரடித்த வேலை... வெற்றி தந்த சுயதொழில்! - சாதித்த குளித்தலை இன்ஜினீயர்

சரியாக ஐ.டி ஃபைல் பண்றதைப் பார்த்துட்டு, குளித்தலை கனரா வங்கியில ரூ.4 கோடிக்கு கடன் தந்தாங்க!

பிரீமியம் ஸ்டோரி
ன்ஜினீயர் படிப்பு, பெரிய கம்பெனியில் வேலை’ என்று இதுநாள்வரை இருந்த இளைஞர்கள், இன்று ‘சொந்தத் தொழில், உழைப்புக்கேற்ற வருமானம்’ என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களில் ஒருவர்தான் கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த ரமேஷ். இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, குஜராத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர், இப்போது சொந்த ஊரில் சொந்தத் தொழிலில் ஜொலிக்கிறார்.

குளித்தலை பேருந்து நிலையம் அருகில், ‘ஸ்மார்ட் பாயின்ட்’ என்ற பெயரில் அவர் தொடங்கிய வீட்டு உபயோக எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மற்றும் செல்போன்கள் விற்பனை நிலையத்துக்கு குளித்தலைப் பகுதி மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு. ஊரடங்கு முடிந்து விற்பனை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் நாம் அவரைச் சந்தித்தோம்.

போரடித்த வேலை... வெற்றி தந்த சுயதொழில்! - சாதித்த குளித்தலை இன்ஜினீயர்

“என் அப்பா கிருஷ்ணனுக்கு தச்சுவேலை. கஷ்டப்பட்டு உழைச்சு ரூ.10 லட்சம் வரை செலவு பண்ணி, என்னை இன்ஜினீயரிங் படிக்க வச்சார். அந்தக் கடனை அடைக்க முடியாம சிரமப்பட்டார். என்மீது என் குடும்பம் வச்சிருந்த நம்பிக்கையைக் காப்பாத்தவே நான் நல்லா படிச்சேன். 2014-ல் இன்ஜினீயரிங் முடிச்சேன். உடனே, 8,000 ரூபாய் சம்பளத்துல குஜராத்துல உள்ள ஒரு கம்பெனியில் வேலை கிடைச்சுது. அதன்பிறகு, ஒரு வருஷத்துலேயே இன்னொரு கம்பெனியில 26,800 ரூபாய் சம்பளத்துல வேலையில் சேர்ந்தேன். அடுத்த வருஷத்துலேயே 42,000 ரூபாய் சம்பளத்துல இன்னொரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். சோலார் பேனல்கள் பதிக்கிற கம்பெனி அது. 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாசத்தோட அந்த புராஜெக்ட் முடிஞ்சது. அந்த கம்பெனியில தொடர்ந்து வேலை இல்லை. அதனால, வேற கம்பெனியில வேலைக்கு முயற்சி செஞ்சேன். அவங்க, வெறும் ரூ.25,000 சம்பளம் தர்றேன்னாங்க. அவ்வளவு குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்குப் போக எனக்கு விருப்பமில்லை. ‘ஊருக்குப் போய், ஏதாச்சும் தொழில் தொடங்குவோம்’னு முடிவெடுத்தேன். வீட்டுல ஒப்புக்கலை. ‘தொழில் ஆரம்பிக்க எந்த வசதியும் கிடையாது. வேலையை விட்டுட்டு, இங்க வந்து என்ன பண்ணப்போற?’னு தடுத்தாங்க. ஆனா, நான் உறுதியான மனசோட ஊருக்குக் கிளம்பி வந்துட்டேன்.

இங்க வந்ததும், ஒருமாசம் ஒண்ணும் புரியாம சும்மா இருந்தேன். அப்போ, குளித்தலையில் செல்போன் கடை வச்சுருந்த எங்க அண்ணன் ரெத்தினகிரிகிட்ட ஐடியா கேட்டேன். ‘என்ன வேணும்னாலும் பண்ணு, நான் சப்போர்ட்டா இருக்கேன்’னு சொன்னார். குளித்தலையில் சரியான வீட்டு உபயோக எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யுற ஷோரும் இல்லை. அதனால், ‘அதைத் தொடங்கலாம்’னு முடிவு பண்ணினேன். எங்கப்பா ரூ.3 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்தார். நான் கடைசியா வேலை பார்த்த சேலரி ஸ்லிப்பைக் காட்டி ஒரு தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கினேன். இதைத் தவிர, தினமும் கட்டுற மாதிரி மூணு லோக்கல் ஃபைனான்ஸ் கம்பெனிகள்கிட்ட ரூ.7 லட்சம் கடன் வாங்கினேன். இந்த ரூ.22 லட்சத்தையும் மூலதனமா வச்சு இந்தக் கடையைத் திறந்தேன். ‘நாம இருக்கிற நிலைமையில் இவ்வளவு பணத்தை கடன் வாங்கி, தொழில் நடத்தி ஜெயிக்க முடியுமா?’னு முதல்ல மலைச்சு நின்னேன். இருந்தாலும், என்னோட உள்மனசு, ‘தைரியமா இறங்கு’னு சொல்லிச்சு. நேரடியாக, எல்லா பெரிய நிறுவனங்கள் கிட்டயும் பேசி, அவங்க நேரடி டிஸ்ட்ரபியூட்டராக ஆனேன். டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கூலர், ஏ.சி, இன்டெக் ஷன் ஸ்டவ்னு பல எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை ஆன்லைன் விலைக்கே விற்க ஆரம்பிச்சேன்.

ரமேஷ்
ரமேஷ்

இருந்தாலும், ஆரம்பத்துல கூட்டம் வரலை. ‘மேற்கொண்டு என்ன பண்றது’னு புரியாம விழிபிதுங்கி நின்னப்ப எங்க அண்ணன் கொடுத்த ஐடியாபடி, இரண்டு லோக்கல் டிவி சேனல்கள்ல விளம்பரம் செஞ்சேன். எல்.இ.டி போர்டுடன் விளம்பரம் செய்யக்கூடிய ஆட்டோ மூலமா ஒருமாதம் முழுக்க குளித்தலையைச் சுற்றியுள்ள கிராமங்களின் மூலைமுடுக்கெல்லாம் விடாமல் விளம்பரம் செஞ்சேன். அதன்பிறகு, கடைக்குக் கொஞ்சம் கூட்டம் வந்துச்சு. முதல்மாசம், வெறும் ரூ.6,000-க்குதான் விற்பனையாச்சு. வாங்கிய கடனைக் கட்ட சிரமப்பட்டேன். நான் கஷ்டப்படறதைப் பார்த்து, எங்க அண்ணன் என்னோட பார்ட்னரானார். அதனால கூடுதல் தொழிலாக செல்போன்களையும் சேர்த்து விற்க ஆரம்பிச்சேன். இதனால, வியாபாரம் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சுது. தீபாவளி, பொங்கலுக்கு சிறப்பு ஆஃபர்களை அறிவித்தோம். அது மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆச்சு. தவிர, குளித்தலை ஒன்றியத்தில் உள்ள சிறுசிறு ஊர்களில் நடத்தப்படும் செல்போன் விற்பனைக் கடைகளுக்கு, நாங்க மொபைல் கவர், டெம்பர் கிளாஸ், ஹெட்போன்கள், செல்போன் பேக் கவர்கள்னு ஹோல்சேலா தர ஆரம்பிச்சோம். இதனால மாதம் 120 ஆண்ட்ராய்டு போனை விக்கிற அளவுக்கு விற்பனை அதிகமாச்சு.

அதேபோல், எங்ககிட்ட பிரிட்ஜ் வாங்கினா, பிரிட்ஜ் கவர், ஸ்டாண்ட், வீட்டுக்கே டோர் டெலிவரினு பல விஷயங்களைச் சேர்த்துப் பண்ணினோம். ஒரு கஸ்டமர் டிவியை வாங்கின உடனே பிட் பண்ணி, படம் பார்க்கணும்னு நினைப்பார். அதைப் புரிஞ்சுகிட்ட நாங்க, டிவி வாங்கும் கஸ்டமர்களுக்கு டோர் டெலிவரி செய்றதோட, அதை உடனே பிட் பண்ணித் தந்தோம். வாரத்துக்கு ஒரு தடவை கஸ்டமர்களுக்கு போன் பண்ணி, ‘டி.வி எப்படி ஓடுது’, ‘வாஷிங் மெஷின் சரியா ஓடுதா?’னு விசாரிச்சு, குறை சொன்னா, அதை உடனே சரிசெஞ்சு தந்தோம். இதனால கஸ்டமர்களுக்கு எங்க மேல நல்ல அபிப்ராயம் வந்துச்சு. எங்க வருமானம் பெருகிடுச்சு. நான் வாங்கின கடனையெல்லாம் வேகமா கட்ட முடிஞ்சது.

போரடித்த வேலை... வெற்றி தந்த சுயதொழில்! - சாதித்த குளித்தலை இன்ஜினீயர்

அடுத்து, சரியாக ஐ.டி ஃபைல் பண்றதைப் பார்த்துட்டு, குளித்தலையில் இயங்கிவரும் கனரா வங்கியில ரூ.4 கோடிக்கு கடன் தந்தாங்க. அதை வச்சு, குளித்தலை பேருந்து நிலையம் அருகிலேயே பெரிய பில்டிங்கை சொந்தமா வாங்கினோம். கூடியவிரைவில நாங்க அந்தக் கட்டடத்துக்குப் போயிடுவோம். நான் இன்னும் வாடகை வீட்டுலதான் இருக்கேன். ஆனா, சொந்தக் கட்டத்துல எங்க நிறுவனம் நடக்கிறதை நெனைச்சா எனக்கு நெகிழ்ச்சியா இருக்கு. சென்னை மாதிரியான பெரிய நகரங்கள்ல கிடைக்கிற அத்தனை எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களையும் குளித்தலைக்குக் கொண்டுவந்து விற்பதே என் லட்சியம்’’ என்று கண்கள் முழுக்க கனவுகளுடன் பேசி முடித்தார் ரமேஷ். உழைப்பு என்றும் வெற்றி தரும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன்லைனிலும் விற்பனை!

போரடித்த வேலை... வெற்றி தந்த சுயதொழில்! - சாதித்த குளித்தலை இன்ஜினீயர்

ப்போதைக்கு நேரடி விற்பனை மட்டுமே செய்துவரும் ரமேஷ், ஆன்லைனில் எலெக்ட்ரானிஸ் பொருள்களை விற்க பிரத்யேகமாக ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறார். ‘‘குளித்தலையைச் சுற்றியிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்க இதன்மூலம் வழிசெய்து தந்திருக்கிறோம்” என்றார் ரமேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு