Published:Updated:

மாத்தியோசித்த `மாஸ்டர்'... உலகின் முதல் `ஐஸ் டீ' பிறந்தது இப்படித்தான்! ​#BusinessMasters - 1

Louisiana Purchase Exposition
Louisiana Purchase Exposition

புதிய அணுகுமுறையால், மாற்றுச் சிந்தனையால், ரிஸ்க் எடுத்ததால் பிசினஸில் `மாஸ்டர்’களான நிஜ மனிதர்கள், வரலாறெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களை உரிய முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சிதான் இந்தத் தொடர்.

`பிசினஸ்’ (Business) என்ற வார்த்தையை கூகுள் பண்ணினால், அதை `bɪznəs’ என்று உச்சரிக்க வேண்டும் (Pronunciation) என்பதில் ஆரம்பிக்கின்றன அதன் தேடல் முடிவுகள். பிறகு `பிசினஸ்’ என்பதற்கான விளக்கம், ஒரு குட்டித் தொழில் தொடங்க 10 ஐடியாக்கள், வணிக வழிகாட்டி, லாக்டௌன் காலத்தில்கூட லாபம் சம்பாதித்துத் தரும் பிசினஸ்கள்... எனக் கொட்டித்தீர்த்து, `கெத்து’ காட்டுகிறது கூகுள். ஆதிமனிதன் என்றைக்கு முதலில் பண்டமாற்று செய்ய ஆரம்பித்தானோ அன்றைக்கே `வணிகம்’ என்பதற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கட்டும். அவற்றில் பிசினஸுக்குத் தனித்துவமான இடம் உண்டு. இது மட்டும் இல்லையென்றால், நாகரிகம் தொடங்கி தொழில்நுட்பம் வரை எத்தனையோ விஷயங்களில் நாம் பின்தங்கிப் போயிருப்போம். இந்தத் துறையின் ருசியறிந்தவர்கள் ஈடுபாட்டோடு இதில் மூழ்கிப்போகிறார்கள்; நிறைய சம்பாதிக்கிறார்கள்; புகழ் பெறுகிறார்கள்; சுகமான, நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

Lord beaverbrook
Lord beaverbrook

`எந்த ஒரு விளையாட்டைவிடவும் அதிகமான கிளர்ச்சியை ஊட்டுவது பிசினஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் லார்டு பீவர்புரூக் (Lord Beaverbrook). இவர் லேசுப்பட்ட ஆளில்லை, 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரிட்டிஷ் மீடியா உலகில் செல்வாக்குப் படைத்தவர்களில் முக்கியமானவர்; அதிக பிரதிகள் விற்பனையான பத்திரிகை ஒன்றின் பதிப்பாளர். இவர் மட்டுமல்ல, பிசினஸ் குறித்து உலக அளவில் பிரபலங்கள் உதிர்த்த பொன்மொழிகளைத் தொகுத்தால் பல வால்யூம்களுக்குப் புத்தகமே போடலாம்.

ஒரு நிறுவனத்திற்கு ஒரே ஒரு முதலாளிதான் இருக்கிறார். அவர் அதன் வாடிக்கையாளர்தான். வழக்கமான இடத்தை விட்டுவிட்டு, வேறோர் இடத்தில் தன் பணத்தைச் செலவழிப்பதன் மூலம், ஒரு நிறுவனத்தின் சேர்மனிலிருந்து அத்தனை பேரையும் அவரால் காலி செய்துவிட முடியும்.
சாம் வால்டன் (Sam Walton), வால்மார்ட் நிறுவனர்.

பிசினஸ் என்பது ஒரு மாயக் கம்பளம். அதை வசப்படுத்திவிட்டால், அலாவுதீன்போல அதில் ஏறி எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம்; நாம் நினைத்தபடி அதை ஆட்டிவைத்து, `பறத்தல் சுகம்’ என்பது போன்ற வாழ்க்கையை அனுபவிக்கலாம். ஆனால், அதைக் கைகொள்வது அத்தனை சுலபமான காரியமில்லை. அதிக மெனக்கெடல் வேண்டும்; கடும் உழைப்பு வேண்டும்; புதுப்புது ஐடியாக்களால் அதை வசீகரித்துத் தன் வசம் இழுக்கத் தெரிந்திருக்க வேண்டும்; எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் வேண்டும்; முக்கியமாக, ரிஸ்க் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை `வேண்டும்’களைக் கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்தார்கள்; செய்கிறார்கள். அவர்கள்தாம் சாதனை படைத்தார்கள். அதுவரை யாரும் பார்த்திராத புதிய பொருள்களை அறிமுகப்படுத்தினார்கள். மக்களை `பாருடா...’ என்று மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்தார்கள். பிசினஸில் உச்சத்தைத் தொட்டார்கள். அவர்களை `பிசினஸ் மாஸ்டர்கள்’ என்றே சொல்லலாம்.

நம்மில் பெரும்பாலானோர் புதிய ஐடியாக்களைக் கண்டுபிடிப்பதில்லை. யாரோ ஒருவரிடமிருந்துதான் சிறந்த ஐடியாக்களை எடுத்துக்கொள்கிறோம்.
சாம் வால்டன் (Sam Walton), வால்மார்ட் நிறுவனர்.

புதிய அணுகுமுறையால், மாற்றுச் சிந்தனையால், ரிஸ்க் எடுத்ததால் பிசினஸில் `மாஸ்டர்’களான நிஜ மனிதர்கள், வரலாறெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களை உரிய முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சிதான் இந்தத் தொடர். ஓர் எளிய உதாரணத்தோடு ஆரம்பிக்கலாமா?

இந்த அத்தியாயத்தில் ரிச்சர்டு பிளெச்சிண்டென் (Richard Blechynden). அமெரிக்கரைப் பற்றிப் பார்ப்போம். தேயிலையைப் பயிரிடுவதும், அதை வியாபாரம் செய்வதும்தான் அவரின் பிரதான தொழில்.

அது 1904-ம் வருடம். அமெரிக்கா தன் அரசை நிலைநிறுத்திக்கொள்ளவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தன் எல்லைகளை உலகெங்கும் விரிவாக்கவும் முயன்றுகொண்டிருந்த தருணம். தன் நாட்டின் வணிக வளர்ச்சியை, வியாபார முன்னெடுப்புகளைத் தானும் அறிந்துகொண்டு, பிற நாடுகளுக்கும் அறிவிக்கத் தயாரானது அமெரிக்கா. செயின்ட் லூயிஸ் நகரத்தில் ஒரு பொருள்காட்சியை நடத்துவதாக அறிவித்தது.

Cold tea
Cold tea

உலகின் பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் செயின்ட் லூயிஸில் வந்து குவிந்தார்கள். அந்தப் பொருள்காட்சியில் தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களைக் காட்சிப்படுத்தினார்கள். ரிச்சர்டு பிளெச்சிண்டெனும் அந்தப் பொருள்காட்சிக்கு வந்தார். கடைவிரித்தார். பொருள்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு தன் டீயை சூடாக, இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பது அவர் திட்டம். சூடான டீ. அதைப் பரிமாற கண்ணைக் கவரும் அழகான பீங்கான் டீ கோப்பைகள். ஆர்வத்தோடு காத்திருந்தார் பிளெச்சிண்டென். ஏராளமான பேர் பொருள்காட்சிக்கு வந்தார்கள். அவர் கடைப் பக்கமும் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார்கள். ஆனால், ஒருவர்கூட அவர் கொடுத்த டீயை வாங்கிப் பருகத் தயாராக இல்லை. உற்சாகமிழந்துபோனார் பிளெச்சிண்டென்.

`ஏன் யாரும் டீ பருக வரவில்லை’ என்று ஆராய்ந்தபோது ஓர் உண்மை புரிந்தது. அது கடுமையான கோடைக்காலம். சுட்டெரிக்கும் வெயில்; ஆறாகப் பெருகும் வியர்வை; புழுக்கம்; கசகசப்பு. இந்த நேரத்தில் யார் சூடான டீயை விரும்புவார்கள்?! அத்தனை பேரும் `கூல்’ஆக ஏதாவது கிடைக்காதா என்று தேடியபடி நகர்ந்துகொண்டிருந்தார்கள். `இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தது வீண்தானா?’ யோசித்தார் பிளெச்சிண்டென். ஒரு முடிவோடு செயலில் இறங்கினார்.

Ice tea
Ice tea
Image by seagul from Pixabay

தெரிந்த ஒருவரிடம் சொல்லி ஒரு ஐஸ்கட்டிப் பாளத்தைக் கொண்டு வரச் சொன்னார். வடிகட்டிய டீயோடு ஐஸ்கட்டிகளை உடைத்துப்போட்டு கொஞ்சம் சர்க்கரையையும் கலந்தார். கடைப் பக்கம் வந்த ஒரு பார்வையாளரிடம் ``ஜில்லுனு ஒரு டீ சாப்பிடுறீங்களா?’’ என்று கேட்டார். வந்தவர் ஆச்சர்யமாகப் பார்த்தார். `சூடாத்தானே டீ தருவாங்க... இது என்ன புதுசா இருக்கு...’ என்று ஒரு கணம் யோசித்தார். ஆர்வமிகுதியில் பிளெச்சிண்டென் கொடுத்த டீ கோப்பையை வாங்கி ஒரு மிடறு விழுங்கினார். அசந்துபோனார். `ஆஹா... என்ன ஒரு சுவை. அதுவும் ஜில்லுனு இருக்கு டீ...’ கொஞ்ச நேரத்தில் விஷயத்தைக் கேள்விப்பட்டு பிளெச்சிண்டென் கடையில் மக்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பொருள்காட்சியில் அவரின் டீ `மெகா ஹிட்.’ உலகின் முதல் `ஐஸ்டு டீ’ (Iced Tea) இப்படித்தான் பிறந்தது.

- (பாடம் எடுப்பார்கள்)
இனி வாரந்தோறும் திங்கள் கிழமை, பிசினஸ் மாஸ்டர்கள் விகடன் தளத்தில் உங்களுக்கு உற்சாகமூட்டுவார்கள்!
அடுத்த கட்டுரைக்கு