Published:Updated:

மளமளவெனக் குறையும் வெங்காயம் விலை... என்ன காரணம்?

கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-க்கு விற்பனையானது.

வெங்காயம் விலை வீழ்ச்சி
வெங்காயம் விலை வீழ்ச்சி

கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை ஏற்றமாகவே இருந்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100, ரூ.120, ரூ.140, ரூ.200... எனத் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்ததில், மக்கள் அனைவரும் கவலையுடன் காணப்பட்டார்கள். திரும்பும் பக்கமெல்லாம் வெங்காயத்தைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது.

`புதுமண தம்பதியருக்கு நண்பர்கள் தந்த வெங்காய பொக்கே!' -விலை எவ்வளவு தெரியுமா?

வெங்காய தொடர் விலை ஏற்றத்தைத் தடுப்பதற்காகவும் வெங்காயத் தட்டுப்பாட்டைச் சரி செய்வதற்காகவும் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

`வெங்காய விலை உயர்வினால் ஆட்சி கவிழ்ந்த வரலாறு உண்டு!’- திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

அதன்படி எகிப்திலிருந்து மும்பைக்கு 40,000 டன் பெரிய வெங்காயம் வந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அங்கிருந்து திருச்சி, மதுரை மற்றும் சென்னைக்கு வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எகிப்திலிருந்து திருச்சிக்கு 300 டன்னும், மதுரைக்கு 130 டன்னும், சென்னைக்கு 60 டன்னும் வெங்காயம் இதுவரை வந்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரத்து அதிகரிப்பு
வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சற்று குறையத் தொடங்கி உள்ளது. வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களும், அதைச் சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் வெங்காயத்தின் வரத்து அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அபரிமிதமான வரத்து காரணமாக வெங்காயத்தின் விலை மளமளவென குறையத் தொடங்கியுள்ளது.

மொத்த மார்க்கெட்டில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தரமான (நாசிக்) பல்லாரி வெங்காயம், தற்போது ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த 4-ம் தேதி கிலோ ரூ.180 -க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று ரூ.130 ஆகக் குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் விலை கடந்த 6-ம் தேதி ரூ.180 -க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.130 -க்கு விற்பனையாகிறது.