Published:Updated:

`தலைவர் பதவியிலிருந்து விலக்கப்படும் முகேஷ் அம்பானி' - என்ன காரணம்?!

முகேஷ் அம்பானிக்கு வயதும் திறனும் இருந்தாலும், அதை ஏற்க சட்டம் மறுக்கிறது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் ஒருவரே இருக்கக் கூடாது. இரண்டு பதவிகளுக்கும் தனித்தனி நபர்களை நியமிக்க வேண்டும் என, செபி அமைப்பு கடந்த ஆண்டே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை முன்னணி 500 நிறுவனங்களில் சுமார் 200 நிறுவனங்கள் இந்த மாற்றத்தைச் செய்யாமல் இருப்பதால், அந்த நிறுவனங்களுக்குச் செபி, 2020 ஏப்ரல் 1-ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருக்கிறது. 

`கடனே வேணாம்!' - `அப்டேட் ஆர்வலர்' முகேஷ் அம்பானி சொல்லும் செய்தி!

இது, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை என்பதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு வயதும் திறனும் இருந்தாலும், சட்டப்படி மாறுதல் தேவை ஏற்பட்டிருப்பதால், அவரது குடும்பத்தினரும் இந்தப் பதவியை வகிக்க முடியாது என்பதால், யார் வருவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் மிகத் திறமையுள்ள பல மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிகில் மெஸ்வானியின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் நம்பிக்கைக்குரியவரும் அவருடைய வலதுகையுமான மனோஜ் மோடிக்கும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. மேலும், ஹிட்டல் மற்றும் பி.எம்.எஸ். பிரசாத் ஆகியோரது பெயரும் பட்டியலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு முகேஷ் அம்பானி, நிறுவனத்தின் `Non-Executive Director' பதவியில் இருப்பார் எனத் தெரிகிறது. ரிலையன்ஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக முகேஷ் அம்பானி அதிகாரபூர்வ பதவியில் இருக்க மாட்டார் என்பது தொழில்துறையினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போலவே பஜாஜ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட், ஸ்ரீசிமென்ட்ஸ், யூ.பி.எல், லிபின் உள்ளிட்ட நிறுவனங்களும் செபியின் பட்டியலில் இருக்கின்றன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும் என்பதும் செபியின் உத்தரவுகளில் ஒன்றாகும்.