Published:Updated:

தித்திப்பான லாபம் தரும் தேன் பிசினஸ்! - கலக்கும் குடும்பத்தலைவி

ஸ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதேவி

கண்ணாடி பாட்டில்களில்தான் தேனை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்தால் வேதிவினை புரிந்துவிடும்!

தித்திப்பான லாபம் தரும் தேன் பிசினஸ்! - கலக்கும் குடும்பத்தலைவி

கண்ணாடி பாட்டில்களில்தான் தேனை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்தால் வேதிவினை புரிந்துவிடும்!

Published:Updated:
ஸ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதேவி
“என் பையனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. வாரத்துக்கு ஒருமுறை ஆன்டிபயாட்டிக் கொடுத்தாலும் அடுத்த வாரமே சளி, காய்ச்சல் வந்து மறுபடியும் மருத்துவமனை செல்ல வேண்டிவரும்.

இதற்காக ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர் என்று பல மருத்துவ முறைகளை நாடினேன். அப்போது ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், ‘சுத்தமான தேன் சாப்பிட்டால் உங்கள் பிள்ளையின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்’ என்றார்.

நிறைய இடங்களில் சுத்தமான தேனைத் தேடி அலைந்தேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. கடைசியில் மேட்டுப்பாளையத்தில் இருக்கிற பழங்குடி மக்களிடம் சுத்தமான தேனை வாங்கி அனுப்பிவைத்தார் என் அப்பா. பிள்ளைக்குக் கொடுக்க ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே நல்ல வித்தியாசம் தெரிந்தது.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன்பிறகு, நல்ல தேன் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொண்டு தேவைப்படுபவர்களுக்குத் தர ஆரம்பித்தேன். இந்த நேரத்தில், நான் 15 வருடங்களாகப் பார்த்துவந்த கால்சென்டர் வேலை திடீரென பறிபோனது. திரும்பவும் இன்னொரு வேலைக்குப் போகலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப என் கணவர், ‘நீ ஏற்கெனவே செஞ்சுகிட்டிருந்த தேன் விற்பனையையே ஒரு பிராண்ட் நேம் வைத்து பிசினஸா செய்யேன்’ என்று ஐடியா தந்தார். களத்தில் இறங்கினேன்; இன்றைக்கு இந்த பிசினஸ்ல நிலைச்சு நிக்கிற மாதிரி ஓரளவு நல்லாவே வளர்ந்திருக்கேன்’’ எனப் பெருமிதத்துடன் பேச ஆரம்பிக்கிறார் ‘ஈக்கோமாம் (Ecomam) நேச்சுரல் அண்ட் ஹெர்பல் டிரேடர்ஸ்’ ஸ்ரீதேவி. இந்தத் தொழிலில், தான் சந்தித்த சவால்கள், வெற்றிகள் பற்றி விளக்கமாக நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘தேன் பிசினஸ் செய்வதென்று முடிவெடுத்தவுடன் நாங்கள் வழக்கமாகத் தேன் வாங்குகிற மலைவாசிகளிடம் 50 கிலோ அல்லது 100 கிலோ தேன் வேண்டும் என்று கேட்டோம். மலைவாசிகள் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் தருகிற தேனில் கலப்படம் செய்து நான் விற்கப் போவதாகச் சந்தேகப்பட்டார்கள். நான் சந்தித்த முதல் சவால் இது. அவர்களுடைய குடிசையில் தங்கி, என் நோக்கத்தை எடுத்துச் சொன்ன பிறகே எனக்குத் தேன் தந்தார்கள்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

பழங்குடி மக்கள் தரும் தேன் சுத்தமான தேன் என்பதால், அவர்கள் கேட்கும் விலைக்கு வாங்கி வருவேன். இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பிசினஸ் பாடம் நம்முடைய பொருள் சுத்தமானது எனில், அந்தப் பொருளுக்கான விலையை நாமே நிர்ணயிக்கலாம் என்பதுதான்.

வாங்கிய தேனை மார்க்கெட்டிங் செய்வதில்தான் என்னுடைய இரண்டாவது சவாலைச் சந்தித்தேன். பெரிய பெரிய பிராண்டட் தேன்களின் ஒரு கிலோ விலையும் என்னுடைய கால் கிலோ தேனின் விலையும் ஒன்றாக இருந்தது. கடைக்காரர்கள் விலை குறைவான பொருளுக்குதானே முதலிடம் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம், என்னுடைய சுத்தமான தேனைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரியவைத்து அவர்களுடைய கடையில் ஒன்றிரண்டு தேன் பாட்டில்களை விற்பனைக்கு வைப்பதே பெரும் சவாலாக இருந்தது. ‘பிராண்டட் தேன் பாட்டில்களே விலை குறைவாக இருக்குறப்ப, நீங்கள் விற்கும் தேனுக்கு இவ்வளவு விலையா?’ என்று கேட்டார்கள். எங்கோ ஒரு சில கடைகளில், நான் சாம்பிளுக்காகக் கொடுத்த தேனை ருசிபார்க்க சம்மதித்தார்கள். அப்படி ருசி பார்த்தவர்களுக்கு தேனின் தரம் புரிந்துவிட்டது. ‘சில பாட்டில்களை வைத்து விட்டுச் செல்லுங்கள்’ என்றார்கள். அப்பத்தான் எனக்கே என் மேல நம்பிக்கை வந்தது’’ என்றவர், தன் பிசினஸ் கதையைத் தொடர்ந்தார்.

எங்கள் தேன் பாட்டிலின் மீது இந்தத் தேன் எந்த அளவுக்கு ஒரிஜினல் என்பதற்கான தகவல்களைக் கொடுத்தேன். அதோடு வார இறுதி நாள்களில் எங்கள் தேன் பாட்டில்களை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு கடைகளுக் கெல்லாம் சென்று, அங்கு வருகிற கஸ்டமர்களிடம் எங்கள் தேன் பற்றிய கையேடுகளைக் கொடுத்து தேனின் சிறப்புகள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தேன். கஸ்டமர்கள், மறுபடியும் எங்கள் தேனையே கேட்டு வந்த பிறகுதான், சூப்பர் மார்க்கெட்டுகள் எங்கள் தேனை முழுமையாக நம்ப ஆரம்பித்து, ஆர்டரும் தர ஆரம்பித்தன’’ என்கிறார்.

‘‘பொதுவாக, சீஸனைப் பொறுத்து தேனின் அடர்த்தியும் மாறும். மழைக்காலங்களில் தேனீக்கள் தேனுடன் நீரையும் சேர்த்துதான் உறிஞ்சும். அதனால் அதனுடைய தேனடையில் கொஞ்சம் தண்ணீரும் இருக்கும். அந்தத் தேனை நான் விற்பனை செய்தால், அதிலும் ஈரப்பதம் இருக்கும். இந்தத் தேனில் புளித்தது போல நுரையும் உருவாகும். இது வாடிக்கை யாளர்களிடம் தேவையில்லாத சந்தேகத்தை உருவாக்கும் என்பதால், அந்த சீஸனில் நாங்கள் தேன் வாங்க மாட்டோம். கோடையில் எடுக்கப்படும் தேன் திக்காக இருக்கும்.

தேன்
தேன்

தேனீக்கள் தேன் எடுக்கிற பூக்களைப் பொறுத்து நிறமும் சுவையும் மாறும். சுத்தமான தேனை எத்தனை முறை வடிகட்டினாலும் அதன்மேலே மகரந்தத்துகள்கள் மிதக்கும். அவை நுண்ணூட்டச்சத்துகள் கொண்டவை என்பதால், அப்படியே சாப்பிடலாம். தேனை கண்ணாடி பாட்டில்களில்தான் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்தால் வேதிவினை புரிந்துவிடும்’’ என்ற ஸ்ரீதேவி, தேனீ வளர்ப்பவர்களுக்கு சில டிப்ஸ்களையும் தந்தார்.

“நீங்கள் தேன்கூடு வைத்திருக்கிற இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் அளவுக்கு நிறைய முருங்கை மரங்கள் இருந்தால், அவற்றிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்கும். இந்தத் தேனில் கால்சியம் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக இருக்கும். ஆண்மை விருத்திக்கும் நல்லது. இதேபோல, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதியில் தேனீ வளர்த்தீர்கள் என்றால், வேப்பம்பூ தேன் கிடைக்கும். இந்தத் தேன் தொண்டையில் இறங்கும்போது கசப்பாக இருக்கும். ‘பிட்டர் ஹனி’ என்று லேபிள் செய்து விற்பனை செய்தால், நீரிழிவு நோயாளிகள் விரும்பி வாங்குவார்கள். இந்த வகைத் தேன்களை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் எஃப்.எஸ்.எஸ்.எ.ஐ (fssai) போன்ற இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இடங்களில் தந்து, பரிசோதனை செய்து, ‘இந்தத் தேன் இரும்புச் சத்து அதிகம்’ என்று சொல்லி விற்கலாம்’’ என்றவர், தன்னுடைய பிசினஸில் பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டின் பங்களிப்பையும் சொன்னார்.

‘‘தேன் பிசினஸை பெரியளவில் செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, ஏ.டி.எம் ஒன்றில், பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, அவர்களைத் தொடர்புகொண்டேன். பேங்க் லோன் வாங்க உதவி செய்வதிலிருந்து, டிரேட் சென்டரில் பிரதானப் பகுதியில் கடை போடுவது என அவர்கள் செய்த உதவிக்கு முடிவே இல்லை’’ என்று சொன்னபடி, நமக்கு விடைதருகிறார் ஸ்ரீதேவி. தித்திக்கும் தேன் பிசினஸில் ஸ்ரீதேவி ஜெயிக்கட்டும்!

புதிய தொழில்முனைவோருக்கு உதவத் தயார்!

தித்திப்பான லாபம் தரும் தேன் பிசினஸ்! - கலக்கும் குடும்பத்தலைவி

ஸ்ரீதேவியின் பிசினஸின் வெற்றிக்கு உதவியவர் பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டைச் சேர்ந்த மென்டார் ஹரிபாஸ்கர். புதிதாக பிசினஸ் செய்ய வருபவர்களுக்கான தங்களின் வழிகாட்டுதல்களை விளக்கினார். ‘‘கடந்த 27 வருடங்களாக பாரதிய யுவசக்தி டிரஸ்ட் மூலம் முதல் தலைமுறை தொழிலதிபர்கள் பலரை உருவாக்கியிருக்கிறோம். எங்களுடைய வழிகாட்டுதலை நாடி வருபவர்களுக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறத் தேவையான வழிமுறைகளைச் சொல்லித் தருவோம். அடுத்து, அவர்களுடைய தொழிலுக்கான பயிற்சி, புராஜெக்ட் ரெடி செய்வது, தொழிலுக்காக வாங்கும் மெஷின் தரமானதா என்பதைச் சரிபார்ப்பது, பொருளை எப்படிச் சந்தைப்படுத்துவது, மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றுவது, அந்தப் பொருளுடைய பயன்பாட்டாளர் யார் என்று கைகாட்டுவது, மக்களைக் கவர்கிற அளவுக்கு சில உத்திகள், அதேநேரம் நேர்மை... இவை அத்தனையையும் சொல்லித் தந்து, ஒரு தொழில்முனைவோரை கைதூக்கிவிடுவோம். நாங்கள் சொல்லித்தந்த பிசினஸ் தந்த பாடங்களை ஸ்ரீதேவி நன்கு புரிந்துகொண்டு செயல்படுத்தினார். அவர் இன்னும் பெரிய வெற்றி பெறுவார்’’ என்றார் அவர்.