Published:Updated:

சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி உதவும் டை கேட்டலிஸ்ட்! எஸ்.எம்.இ-க்கள் கவனிக்கலாமே!

MSME

பிரீமியம் ஸ்டோரி

நமக்குப் பிடித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே நாம் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகிறோம். ஆனால், தொழில்துறை அமைப்பான டை சென்னை (TiE Chennai) ‘கேட்டலிஸ்ட்’ (Catalyst) என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுக்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுதொழில்முனைவோர்களை ஒன்று திரட்டி, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்பதைக் கேள்விப்பட்டு, இந்த அமைப்பின் செயல் இயக்குநரான அகிலா ராஜேஷ்வருடன் பேசினோம். இந்தத் திட்டம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

அகிலா ராஜேஷ்வர்
அகிலா ராஜேஷ்வர்

‘‘கடந்த ஆண்டு ஏப்ரலில் ஊரடங்கு அறிவிப்பு வந்தவுடன் எல்லோரும் வீட்டில் முடங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம். எல்லாத் தொழில்களும் கடுமையாகப் பாதிப்படைந்தன. குறிப்பாக, சிறு தொழில் நிறுவனங்கள் என்று சொல்லப்படும் எம்.எஸ்.எம்.இ-க்கள் செயல்பட முடியாமல் மனம் தளர்ந்து போனார்கள். அந்தச் சமயத்தில், ‘‘இவர்களை அப்படியே விட்டுவிடக் கூடாது. தளர்ந்துபோயிருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கையோடு மீண்டும் தொழில் செய்யத் தூண்ட வேண்டும்.

சாதாரண காலத்தில் பிசினஸை நல்லபடியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்து ஓடும் நாம், கஷ்டம் என்று வரும்போதுதான், பல விஷயங் களைக் கற்றுக்கொள்கிறோம். அந்த வகையில், கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி களைச் சமாளிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள இதுவே சரியான தருணம்’’ என்று சொன்னார் டை சென்னை அமைப்பின் தலைவராக இருக்கும் ‘கவின்கேர்’ சி.கே.ரங்க நாதன். எனக்கு இந்த யோசனை மிகச் சரியாகப்பட்டது.

சிறுதொழில் நிறுவனங்களுக்கு 
வழிகாட்டி உதவும் டை கேட்டலிஸ்ட்! எஸ்.எம்.இ-க்கள் கவனிக்கலாமே!

தமிழகம் முழுக்க இருக்கும் சிறு தொழில்முனைவோர்களை எப்படி ஒரே நேரத்தில் தொடர்புகொள்வது என்று நாங்கள் யோசித்தபோதுதான் இந்த வாட்ஸ்அப் ஐடியா தோன்றியது. ‘கேட்டலிஸ்ட்’ என்கிற பெயரில் வாட்ஸ்அப் மூலம் சிறு தொழில்முனை வோர்களை ஒன்று சேர்க்க ஆரம்பித்தோம். ‘கேட்டலிஸ்ட்’ என்றால் வினையூக்கி என்று அர்த்தம். அதாவது, நல்ல சிந்தனைகள் மூலம் பிசினஸை சிறப்பாகச் செயல்படுத்த ஊக்குவிப்பது.

 சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

நாங்கள் முதலில் ஒரு குரூப் தொடங்கினோம். சில நாள்களிலேயே இதில் நூறு பேர் சேர்ந்துவிட, அடுத்த குரூப் ஆரம்பித் தோம். அதிலும் 100 பேர் சேர்ந்துவிட, இன்று மொத்தம் 20 வாட்ஸ்அப் குரூப்களிலும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் முனைவோர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.

பிசினஸை வெற்றிகர மாகச் செய்வதற்கு நம்மிடம் எப்படிப்பட்ட பாசிட்டிவ்வான மனநிலை இருக்க வேண்டும், பிசினஸை சின்னதாக ஆரம்பித்து, எப்படிப் பெரிதாக வளர்க்க வேண்டும், பிசினஸில் தொய்வு வரும்போது அதை எப்படிச் சமாளித்து முன்னேற்றம் காண வேண்டும், பிசினஸில் வெற்றி காண நமது உடலையும் உள்ளத் தையும் எப்படி ஆரோக் கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தினமும் ஒரு தகவலை இந்த வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு அனுப்புவோம்.

இந்தத் தகவல்கள் பற்றி சிறுதொழில் முனை வோர்கள் தங்களுக்குள்ளே பேசி, இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதுடன், இவற்றைத் தங்கள் தொழிலில் சோதனை செய்தும் பார்த்திருக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்குக் கிடைத்த தெளிவால், கோவிட்-19 தந்த நெருக்கடிகளை நம்பிக்கையோடு கடந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

இப்போது 20 குழுக்களாக இருப்பதை அடுத்த ஓராண்டுகளில் 50 வாட்ஸ்அப் குழுக்களாக உயர்த்தி, அதில் குறைந்தது 5,000 சிறு தொழில்முனைவோர்களைச் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. இந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து, எங்கள் வழிகாட்டுதலைப் பெற விரும்புகிறவர்கள், 73388 90422 என்கிற எண்ணுக்கு உங்கள் பெயருடன் எஸ்.எம்.எஸ் அனுப்பி தாராளமாகச் சேரலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

சிறு தொழில்முனைவோர்களிலேயே கொஞ்சம் பெரிய அளவில் தொழில் செய்பவர்களை ஒன்று திரட்டி ‘பர்சனல் போர்ட்’ என்கிற குழுக்களையும் அமைத்திருக் கிறோம். சுமார் 10 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் உள்ள, ஒரே துறை சாராத தொழில்முனை வோர்கள் 10 இந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள்ள பிரச்னைகளை இந்த வாட்ஸ்அப் குழுவில் இருப்பவர்களுடன் மனம்விட்டுப் பேசி ஆலோசனைப் பெறலாம். அவ்வப்போது பெரும் தொழிலதிபர்களை அழைத்து, இவர்களுடன் பேச வைப்பதன் மூலமும் பிசினஸ் தொடர்பாக இவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களைப் போக்குகிறோம்.

கடந்த ஒரு வருடமாக 12 ‘பர்சனல் போர்ட்’ வாட்ஸ்அப் குழுக்களை அமைத்ததன் மூலம், கோவிட்-19 பற்றி இவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படாத நிலையை உருவாக்கி இருக்கிறோம். இந்த வாட்ஸ்அப் குழுவில் சேரவேண்டும் எனில், கட்டணம் உண்டு. அடுத்த ஓராண்டு காலத்தில் குறைந்தபட்சம் 25 வாட்ஸ் குழுக்களையாவது உருவாக்க வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு’’ என்றார் அகிலா ராஜேஷ்வர்.

பிசினஸை சிறப்பாகச் செய்ய நினைக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்பது மட்டும் நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு