Published:Updated:

நான்காம் தலைமுறை... தித்திக்கும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..!

இருட்டுக்கடை
பிரீமியம் ஸ்டோரி
இருட்டுக்கடை

நேட்டிவ் பிராண்ட் - 2

நான்காம் தலைமுறை... தித்திக்கும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..!

நேட்டிவ் பிராண்ட் - 2

Published:Updated:
இருட்டுக்கடை
பிரீமியம் ஸ்டோரி
இருட்டுக்கடை

நெல்லையின் அடையாளமாக நெல்லையப்பர் கோயில், தாமிரபரணி ஆறு என நீளும் வரிசையில் இருட்டுக்கடை அல்வாவும் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் என்பவர் 1900-களில் நெல்லையில் தொடங்கிய அல்வாக் கடைதான் இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தெரியும் அளவுக்கு விரிந்துள்ளது.

ராஜஸ்தானிலிருந்து வந்த கிருஷ்ணா சிங்...

நெல்லையைச் சேர்ந்த ஜமீன் ஒருவர் வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அல்வாவின் சுவையால் கவரப்பட்டார். இதைத்தொடர்ந்து, ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணா சிங்கை நெல்லைக்கு அழைத்து வந்ததுதான் நெல்லை அல்வாவின் ஆரம்பப் புள்ளி. வணிக நோக்கத்துடன் ராஜஸ்தானி லிருந்து நெல்லைக்கு வந்த கிருஷ்ணா சிங் தயாரித்த இனிப்பு, சுவையாக இருந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அவர் இங்கேயே கடை அமைத்துத் தங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கிருஷ்ணா சிங் காலத்துக்குப் பின்னர், அவர் மகன் பிஜிலி சிங், இந்தக் கடையின் வணிகத்தைக் கவனித்துள்ளார். மத்திய கலால் துறையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார் அவர். அவரது காலத்துக்குப் பிறகு, அவரின் வாரிசுகள் இந்தக் கடையை நிர்வகித்து வருகிறார்கள். தற்போது நான்காவது தலைமுறையாக இந்தக் கடை நெல்லையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நான்காம் தலைமுறை... தித்திக்கும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..!

100 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில்...

நெல்லையப்பர் கோயிலின் எதிரில் இருக்கிறது, இருட்டுக்கடை. அந்தக் காலத்தில் காண்டா விளக்கு வெளிச்சத்தில் கடை செயல் பட்டதால் ‘இருட்டுக்கடை’ என்று காரணப் பெயரால் அழைக்கப் பட்டிருக்கிறது. மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, கடை 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் மட்டுமே இருந்துள்ளது.

எந்தக் கடையாக இருந்தாலும் ஒளி விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் இந்தக் காலகட்டத்திலும் 100 வாட்ஸ் மின் விளக்கின் சற்றே மங்கலான ஒளியில் பாரம்பர்யம் மாறாமல் இந்த அல்வா கடை செயல்படுகிறது. எண்ணெய்ப் பசை தோய்ந்த பழங்கால மரச்சட்டத்தால் ஆன கதவுகளுடன் காட்சியளிக்கும் இந்தக் கடைக்கு பெயர் பலகைகூட பெரிய அளவில் கிடையாது.

அதனால் சில வருடங்களுக்கு முன்பு, பேருந்து நிலையத்தின் எதிரே, கண்ணைப் பறிக்கும் நியான் மின் விளக்குகளின் ஒளியில் இருட்டுக்கடை என்ற பெயரில் அல்வா கடை திறக்கப்பட்டது. அதனால் அல்வா பிரியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். ஆனால், இருட்டுக்கடை அல்வா கடையின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்தப் பெயரை பிறர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகே இருட்டுக்கடை என்ற பெயரைப் பதிவு செய்தார்கள். தினமும் மாலையில் 5 மணிக்குத் திறக்கும் கடையின் விற்பனை இரவு 7 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தக் கடைக்கு விடுமுறை என்பதால், சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கிறது.

வியாபாரம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக கூடுதலாக அல்வா தயாரித்தால் சுவை குறைந்து விடக் கூடாதே என்கிற அக்கறையில், தங்களால் முடிந்த அளவுக்கு மட்டுமே அல்வா தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள், கிருஷ்ணா சிங் பரம்பரையினர். தற்போது நான்காம் தலை முறையாகக் கூட்டுக் குடும்பமாக இருக்கும் இவர்கள் தங்களை யாரும் போட்டோ எடுக்க விரும்புவதில்லை. ‘அல்வாவை மட்டும் படம் எடுத்துக்கோங்க சார்...’ என்று ஜென்டிலாக ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

கிருஷ்ணா சிங், பிஜிலி சிங்
கிருஷ்ணா சிங், பிஜிலி சிங்

ஷர்பதி கோதுமை...

நம்மிடம் பேசிய இருட்டுக் கடை அல்வா குடும்பத்தினர், “நூறு வருடங்களுக்கும் மேலாக எங்கள் கடை செயல்பட்ட போதிலும், அப்போது என்ன சுவை இருந்ததோ அதே சுவை யுடன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனத்தோடு செயல்படுகிறோம். இயற்கை முறையில் விளைவிக் கப்படும் ஷர்பதி கோதுமையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

கோதுமைகளில் தங்கம் என வர்ணிக்கப்படும் ஷர்பதி கோதுமையை உரிய நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து அதில் இருந்து பால் எடுத்து பக்குவமாக காய்ச்சி அல்வா செய்வோம். மழை, வெயில், குளிர்காலங்களில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி கோதுமையைக் கூடுதல் நேரம் அல்லது குறைவான நேரம் ஊற வைப்போம்.

அதே போல, அதில் இருந்து எடுக்கும் பாலையும் உரிய நேரத்துக்குப் பக்குவமாக வைத்து அல்வா தயாரிப்புக்குப் பயன் படுத்துவோம். அல்வாவில் கோதுமை, பசும் நெய், சீனி தவிர வேறு எதையும் நாங்கள் சேர்ப்ப தில்லை. குறிப்பாக, நிறத்துக் காகவோ, நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கவோ எதையும் சேர்ப்பதில்லை.

நான்காம் தலைமுறை... தித்திக்கும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..!

தாமிரபரணி ஆற்று நீரில் அல்வா தயாரிப்பதால், தண்ணீரில் இயல்பாக இருக்கும் தாமிரச் சத்து சேர்வதால், கூடுதல் சுவை சேர்கிறது. இயற்கையாகவே நாங்கள் தயாரிக்கும் அல்வா ஒரு வருடம் வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இருட்டுக் கடை அல்வாவில் ‘குளூட்டன்’ என்னும் புரதத்தைக் கோதுமையில் இருந்து பால் எடுக்கும்போதே பிரித்துவிடுகிறோம்.

அதனால் அல்வா சாப்பிடு பவர்களுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. கோதுமையை ஊறப் போடுவது முதல் அல்வாவைக் கிண்டி அதை பார்சல் போடும் வரை நாங்கள் மிகுந்த கவனத்தோடு பார்த்துக்கொள்கிறோம். குறிப்பாக, சுவையில் எந்த மாற்றமும் இல்லாத படி கவனமாக இருக்கிறோம். அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரையிலும் எங்களின் இருட்டுக்கடை அல்வாவின் சுவை மாறாமல் இருக்கிறது” என்றார்கள்.

விசாகம் ஸ்வீட்ஸ்...

இருட்டுக்கடை அல்வாவின் சகோதர நிறுவனமான விசாகம் ஸ்வீட்ஸ் 1985-ல் தொடங்கப்பட்டது. இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கடையில் விற்கப் படும் அல்வாவும் ஒரே இடத்தி லேயே தயாராகிறது. விசாகம் ஸ்வீட்ஸ் எல்லா நேரத்திலும் திறந்திருக்கும். ஆனால், உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இங்கு விற்கப்படும் அல்வா, இருட்டுக் கடைக்கு தயாராகும் இடத்தில் இருந்தே வருகிறது என்பது தெரிவதால், அங்கு வாங்குகிறார்கள்.

இது பற்றி இருட்டுக்கடை அல்வா குடும்பத்தினரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம்: “சிறு தொழில் களுக்கான சட்ட விதிகளின்படி, நாங்கள் இப்போது ‘பவுச்’ உள்ளே அல்வாவை வைத்து விற்பனை செய்கிறோம். இருட்டுக்கடை மற்றும் விசாகம் ஸ்வீட்ஸ் ஆகியவற்றுக்கு தனித்தனியே பவுச் தயாரித்துள்ளோம். இதன் மூலம் போலியாக ‘இருட்டுக்கடை அல்வா’ என்ற பெயரில் ரயில்களிலும் சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் விற்பனை செய்யப்பட்டன.

அதை உண்மை என நம்பி பலரும் வாங்கியதால், எங்கள் கடைக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கால் கிலோ, அரை கிலோ மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட அல்வாவை பவுச்சில் வைத்து விற்கிறோம். தரமான அல்வா கிலோ 300 ரூபாய்க்கு கொடுக்கிறோம். இருட்டுக்கடையில் அல்வா தவிர, வேறு ஸ்வீட்ஸ் வகைகள் கிடையாது.

ஆனால், எங்களின் பிற ஸ்வீட்ஸ்களை விற்பதற்காக விசாகம் ஸ்வீட்ஸ் கடையில் கருப்பட்டி அல்வா, பால் அல்வா உட்பட நூறு வகையான இனிப்பு மற்றும் காரம் வகைகளைத் தயாரித்து விற்கிறோம். எங்களின் இரு கடைகளிலும் தரம் மற்றும் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அல்வா உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறோம்” என்று தெரிவித்தார்கள்.

தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அல்வா விற்பனை செய்யப்பட்டபோதிலும் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இருட்டுக்கடையில் விற்பனையாகும் அல்வாவுக்கு வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism