Published:Updated:

என்ன ஆகும் திருப்பூரின் எதிர்காலம்? - தவிக்கும் டாலர் சிட்டி!

திருப்பூர் டாலர் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
திருப்பூர் டாலர் சிட்டி

ஊரடங்குக்குப் பிறகு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் 20 சதவிகிதம் நிச்சயமாக மூடப்பட வாய்ப்பிருக்கிறது.

என்ன ஆகும் திருப்பூரின் எதிர்காலம்? - தவிக்கும் டாலர் சிட்டி!

ஊரடங்குக்குப் பிறகு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் 20 சதவிகிதம் நிச்சயமாக மூடப்பட வாய்ப்பிருக்கிறது.

Published:Updated:
திருப்பூர் டாலர் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
திருப்பூர் டாலர் சிட்டி
ந்தியாவின் ‘டாலர் சிட்டி’ என்ற புகழுடன் விளங்குவது திருப்பூர் நகரம்.

இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் உலகம் முழுக்க ஏற்றுமதியாவதால், இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது; மத்திய அரசுக்கு டாலர் கணக்கில் நல்ல வருமானமும் கிடைக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்திவரும் கொரோனோநோய்த் தொற்று திருப்பூரையும் முடக்கிப்போட்டிருக்கிறது. இதிலிருந்து திருப்பூர் எப்படி மீண்டுவரப் போகிறது என்பது குறித்து திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சிலரிடம் பேசினோம்.

என்ன ஆகும் திருப்பூரின் எதிர்காலம்? - தவிக்கும் டாலர் சிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அரசு உணர வேண்டும்!’’

- ராஜா சண்முகம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு.

“மேற்கத்திய நாடுகளில் மார்ச் முதல் வாரத்திலேயே ஊரடங்கு நடைமுறைக்கு வந்துவிட்டது. அதிலிருந்து திருப்பூருக்கு ஆர்டர்கள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஆடைகள் விற்பனையாகாததால், எங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் தள்ளுபடி கேட்கிறார்கள். இப்படியான அவசரச் சூழலில் பல லட்சம் பேருக்கு வேலை தரக்கூடிய திருப்பூரின் தொழில் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஆர்.பி.ஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அதை ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொருவிதமாக நடைமுறைப்படுத்துகிறது. அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியாகச் செயல்பட தீர்க்கமான உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். வேலை தெரியாதவர்கள்கூட திருப்பூருக்கு வந்தால் மாதம் 8,000 ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால், மக்களுக்கு ஜன்தன் கணக்கில் 1,500 ரூபாய் தர இந்த அரசாங்கம் திணறுகிறது. தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவம் என்னவென்று இப்போதாவது மத்திய அரசாங்கம் உணர வேண்டும்.

என்ன ஆகும் திருப்பூரின் எதிர்காலம்? - தவிக்கும் டாலர் சிட்டி!

நிறுவனங்களுக்குத் தரப்பட்ட கடன் தவணைகளை ஓர் ஆண்டுக்குத் தள்ளிவைக்க வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். லாபத்தைக் கணக்கிட்டுச் செயல்படாமல், வங்கிகள் தாமாக முன்வந்து வட்டி விகிதத்தை முடிந்த அளவுக்குக் குறைக்க அரசு உத்தரவிட வேண்டும். ஊரடங்குக்குப் பிறகு நிறுவனங்களை இயக்கத் தேவையான கடன்களை வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நிறுவனங்கள்தான் ஏகப்பட்ட கடன்களை வாங்கி, கடனாளியாகி இருக்கின்றன. திருப்பூர் ஜவுளி நிறுவனங்கள் லாபகரமாக இயங்கினால், கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு துணிக்கு நாங்கள் இரண்டு சென்ட் அதிகம் விலை வைத்தால், அந்த ஆர்டர் பங்களாதேஷுக்குப் போய்விடும்.

ஊரடங்கு முடிந்த பிறகும் திருப்பூர் ஜவுளி நிறுவனங்கள் இயல்புநிலைக்கு வந்துவிட முடியாது. அதுவரை நிறுவனங்கள் இயங்குவதற்குப் பெருமளவில் ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள். லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படியான சூழலில் திருப்பூர் ஜவுளித் தொழில் துறையின் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தால்தான் திருப்பூரின் நிலைமை மாறும்.”

ஊரடங்குக்குப் பிறகு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் 20 சதவிகிதம் நிச்சயமாக மூடப்பட வாய்ப்பிருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘புதிய கடன்களைத் தர வங்கிகள் முன்வர வேண்டும்!’’

- என்.சந்திரன், தலைவர், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் க்ளாத்திங்.

“திருப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஆடைகளுக்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வர வேண்டியிருக் கிறது. வெளிநாடுகளிலும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வியாபாரம் முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கிறது. இதனால் எங்களுக்குத் தரவேண்டிய பணத்தைத் தர கால அவகாசம் கேட்கின்றன நிறுவனங்கள்.

ராஜா சண்முகம் , என்.சந்திரன்
ராஜா சண்முகம் , என்.சந்திரன்

இதற்கிடையே ஊரடங்கால் திருப்பூரில் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஜவுளி வியாபாரத்தின் சங்கிலி முழுவதுமாக உடைந்துபோயிருக்கிறது. சில நிறுவனங்களுக்குத் தரப்பட்ட ஆர்டர்கள் கேன்சல் செய்யப்பட்டதையடுத்து, ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

கடன்களுக்கான தவணைகளைக் கொஞ்ச காலம் தள்ளிப்போடவும், பழையபடி தொழில் சுமுகமாக இயங்க புதிய கடன்களைத் தரவும் வங்கிகள் முன்வர அரசு அறிவுறுத்த வேண்டும். காட்டன், பாலியஸ்டர், சிந்தெடிக் என எல்லாமும் இந்தியாவில் கிடைக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது. தொழில் துறை மீண்டுவர வேண்டிய உதவிகளையும் நிச்சயம் செய்ய வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு திருப்பூர் மீண்டெழுந்து, பழைய நிலைமைக்கு வரும் என்பதில் எங்களுக்குப் பெரும் நம்பிக்கை இருக்கிறது. ’’

‘‘கடன் நிலுவையைத் தள்ளி வைக்க வேண்டும்!’’

- எம்.பி.முத்து ரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா).

“சீனா, பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அரசின் சலுகைகள் அதிகமாகவும், ஊழியர்களின் சம்பளம் குறைவாகவும் இருக்கின்றன. இதனால் நமக்கு வர வேண்டிய பல ஆர்டர்கள் இந்த நாடுகளுக்குச் செல்வதுடன், நம்முடைய ஏற்றுமதியும் குறைந்துவருகிறது.

எம்.பி.முத்து ரத்தினம், குமார் துரைசாமி
எம்.பி.முத்து ரத்தினம், குமார் துரைசாமி

மேலும், சீனாவிலிருந்து பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் இறக்குமதியாகும் துணிகளால் நம்முடைய உள்நாட்டு வியாபாரமும் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும், 7.5 முதல் 10% வரை வழங்கப்பட்டு வந்த ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை தற்போது இரண்டு சதவிகிதமாக இருக்கிறது. இப்படி அரசின் சலுகைகள் ஒருபக்கம் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோக ஜி.எஸ்.டி பணத்தை தாமதமாக விடுவிப்பது போன்ற பல சிக்கல்கள் எங்களுக்கு இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் திருப்பூரின் நிலைமையை மேலும் சிக்கலாக்கி இருக்கின்றன. ஊரடங்கு முடிந்தபின்னரும் உள்நாட்டு வியாபாரமும் ஏற்றுமதியும் சுமுக நிலைக்கு வர ஆறுமாத காலமாகும். வெளிநாட்டில் இருந்தும், உள்நாட்டிலிருந்தும் என்ன ஆர்டர் வருகிறதோ, அதைத்தான் திருப்பூர் முழுக்க செய்து தருவோம். ஆர்டர் வராமல் ஆடைகளைத் தயார் செய்து அரிசியைப்போல குடோன்களில் அடைத்துவைக்க முடியாது.

கொரோனாவால் சாமானிய மக்களுக்கு இரண்டு மாதம் பாதிப்பு என்றால், நிறுவனங்கள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர ஒரு வருடம் பிடிக்கும். குறைந்தது ஆறுமாத காலத்துக்காவது கடன் நிலுவைகளைத் தள்ளிவைக்க வேண்டும். வங்கி வட்டிகளை முழுமையாகத் தள்ளுபடி செய்வதுடன், பழையபடி நிறுவனங்களை இயக்க எளிய முறையில் கடன்களையும் தர வேண்டும்.

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக ஜவுளித் தொழில் இருக்கிறது. அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிலும்கூட. இந்தத் துறையை ஆறு மாதங்கள் காப்பாற்றிவிட்டால், பிழைத்துக்கொள்ளும். சீனாவிடம் ஆடைகளை வாங்கிவந்த பல நாடுகளின் ஆர்டர்கள் நமக்குக் கிடைக்கும். மேலும், மற்ற நாடுகளுடன் வரி இல்லா ஒப்பந்தம் போட்டால், எதிர்காலத்தில் நமக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்; அதிக அளவில் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அரசாங்கம் உதவி செய்யவேண்டும்.

‘‘தொழில்துறைக்கும் சிகிச்சை அவசியம்!’’

- குமார் துரைசாமி, பின்னலாடை ஏற்றுமதியாளர், திருப்பூர்.

“திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 65% வெளிநாடு களுக்கு ஏற்றுமதி ஆகிறது. 35% ஆடைகள் மட்டுமே உள்நாட்டுத் தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்துக்கு சுமார் ரூ.45,000 கோடி வருமானம் ஈட்டும் நகரமாக திருப்பூர் இருக்கிறது.

என்ன ஆகும் திருப்பூரின் எதிர்காலம்? - தவிக்கும் டாலர் சிட்டி!

ஆனால், திருப்பூரின் தற்போதைய நிலையும் எதிர்காலமும் கொரோனாவால் பெரும் கேள்விக்குறியாகி யிருக்கின்றன. குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் திருப்பூரிலிருந்து அதிக அளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்த நாடுகள் அனைத்தும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இந்த நாடுகளிலிருந்து கொடுத்த ஆர்டர்களை நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘நீங்கள் அனுப்பும் சரக்குகளை எடுத்துக்கொள்கிறோம் ஆனால், பணம் கொடுக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும்’ என்கிறார்கள். வேறு வழியில்லாமல் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு கப்பலில் போய்க்கொண்டிருக்கும் சரக்கு, தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகாமல் இருக்கும் சரக்கு, தயாரிக்கப்பட்டு பாதி நிலையில் இருக்கும் சரக்கு... என சுமார் ரூ.12,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. இவற்றில் 20-30% வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், இந்த ஆடைகள் அனைத்தும் ஃபேஷன் மற்றும் பருவநிலைகளை மையப்படுத்தியவை. இதுவரை நாங்கள் ஏற்றுமதி செய்த, ஏற்றுமதியாகாமல் முடங்கிக்கிடக்கும் ஆடைகள் அனைத்தும் கோடைக் காலத்துக்காகத் தயாரிக்கப்பட்டவை.

ஆனால், இந்த கொரோனா பாதிப்பு முடியும் போது ஜரோப்பிய நாடுகளில் வெயில் காலம் முடிந்து, குளிர்காலம் தொடங்கிவிடும். அப்போது குளிர்காலத்துக்குத் தேவையான ஆடைகள்தான் அவர்களுக்குத் தேவைப்படும். இதனால் தேக்கமடைந்திருக்கும் ஆடைகளை நாங்கள் ஆறுமாத காலத்துக்குப் பிறகுதான் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவரை வங்கி வட்டி, கடன்களால் ஏற்பட்ட சுமை என சுமார் ரூ.2-3 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படும்.இப்படியான நிதிச் சிக்கல்களைச் சரிசெய்யவும், ஊரடங்குக்குப் பிறகு ஆடை நிறுவனங்கள் முன்பைப்போல இயங்கவும் அரசின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது.

`கொரோனா பாதிப்புக்கு சீனாதான் காரணம்’ என உலக நாடுகள் நினைக்கின்றன. இதன் பிறகு பிற நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்தாலும், இன்னொரு வர்த்தகம் செய்யும் தேசத்தை மாற்றாக உருவாக்கிக்கொள்ள நினைக்கும். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

ஊரடங்குக்குப் பிறகு 20% ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நிச்சயமாக மூடப்பட வாய்ப்பிருக்கிறது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும். ஆனால், சம்பளம், நிர்வாகச் செலவு, வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து வேலை தந்தால், அடுத்த ஒரு வருடத்தில் திருப்பூரின் நிலைமை பிரகாசமாகிவிடும். இதற்கு ஏற்கெனவே உள்ள எந்தச் சலுகையையும் குறைத்துவிடாமலும், நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி தொகையை நிறுவனங்களுக்கு விடுவித்தும், ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தும் அரசு உதவ வேண்டும்.

ஊரடங்குக்குப் பிறகு நிறுவனங்கள் சிக்கலின்றி இயங்க, ஏற்கெனவே வாங்கிவந்த கடன் தொகையில் 30 சதவிகிதத்தை அதிகப்படுத்தித் தரவேண்டும். `இந்த அசாதாரணச் சூழலிலிருந்து மீண்டு வந்துவிடுவோம்’ என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எங்களுடைய நம்பிக்கை ஜெயிப்பதும், பொய்த்துப்போவதும் அரசின் கைகளில்தான் இருக்கிறது.”

ஏற்றுமதியாளர்கள் கேட்கும் கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றித் தந்தால், எதிர்காலத்தில் திருப்பூர் நம்மைச் செழிக்கவைக்கும் என்பதை மத்திய, மாநில அரசாங்கங்கள் மறக்கக் கூடாது!