Published:Updated:

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதும், இப்போது செய்வதும்! - நகைக்கடன் விவகாரத்தில் பல்டி?

தங்க நகைக்கடன் (Representational Image)
News
தங்க நகைக்கடன் (Representational Image)

தேர்தல் வாக்குறுதிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் இரண்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்தபின் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பல்டி அடிப்பதும் நம் நாட்டில் ஆண்டாண்டு காலமாக நடக்கும் விஷயம்தான். தி.மு.க.வும் அதே மாதிரியான பல்டியை இப்போது அடித்திருக்கிறது.

``நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம்'' என்று தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தது. பிறகு தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ``கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தச் செய்தி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கி இருந்த பலருக்கும் தேனாக இனித்தது.

அடடா, நகைக்கடன் கட்ட வேண்டிய பணம் மிச்சம் என கனவு கண்டுகொண்டிருந்த மக்கள் மனதில் இப்போது இடி விழுந்திருக்கிறது. ``கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ள 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது'' என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை
DMK manifesto

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேர்தல் சமயத்தில் தந்த வாக்குறுதியில், ``நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலானோர் அதன்பிறகே நகைகளை கூட்டுறவு வங்கியில் வைத்துக் கடன் பெற்றனர். திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ந்து காத்திருந்தனர்.

இந்நிலையில், நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில், நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய நிபந்தனைகள் மற்றும் பட்டியலையும் கூட்டுறவுத்துறை இப்போது வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வது, அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், பொது நகைக்கடன்களை கள ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு, சேலம் மாவட்டம் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பணி முடிவடைந்து, தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி முடிவடைவதற்கு மேலும் காலதாமதமாகும் என்பதைக் கருத்தில் கொண்டும், இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையின்றி நிதி இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டும் பின்வரும் அறிவுரைகளின்படி, நகைக்கடன் தள்ளுபடி செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 15-க்கும் மேலான காரணங்களைப் பட்டியலிட்டு இந்த நிபந்தனைகளின்படிதான் நகைக்கடன் தள்ளுபடி பெறுவோரின் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி 48 லட்சம் பேரில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என்றும் கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கடன்
கடன்

யாருக்கெல்லாம் தள்ளுபடி கிடைக்காது?

1. ஏற்கெனவே, 2021-ம் ஆண்டுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் அவர்தம் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர்.

2. நகைக்கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியவர்கள்.

3. 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகமாக நகைக்கடன் பெற்றிருக்கும் குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்.

4. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

5. கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

6. அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்

7. குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

8. ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்

9. எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர், அவர்தம் குடும்பத்தினர்

10. ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற AAY குடும்ப அட்டைத்தாரர்கள்

11. 31.03.2021-க்குப் பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன்கள்

12. ஆதாரில் தமிழக முகவரி இல்லாமல் வேறு மாநில முகவரி இருந்தால்

13. நகைகளே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட கடன்கள்

14. போலி நகைகள் உள்ள நகைக்கடன்கள்

15. நகைக்கடன் தள்ளுபடி பெற விரும்பாதவர்கள் (சுய விருப்பத்தின்பேரில், படிவம் 3 உறுதிமொழிச்சான்றுடன்)

16. நகைக்கடன் நகைகளின் எடை, தரம் போன்றவற்றில் குறைபாடுகள், விவரங்களில் முரண்பாடுகள் இருப்பின்

கடன்
கடன்

மேலும் இந்த அரசாணையில் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடிக்கு தகுதிப்பெறும் நகைக்கடன்தாரர்களின் மாவட்ட வாரியான பட்டியலும் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பொங்கலை ஒட்டி 25 சதவீத நகைக்கடன்தாரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும் என கூறியுள்ளது.

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் இரண்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் நிபந்தனைகளுடன்தான் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லி இருந்தால், மக்கள் தங்கள் எதிர்பார்ப்பைக் குறைவாக வைத்திருந்திருப்பார்கள். ஆனால், ஓட்டு வாங்குவதற்குமுன் ஒன்றைச் சொல்லிவிட்டு, ஓட்டு போட்ட பிறகு வேறொன்றைச் சொல்வது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் என்று பலரும் கருதுகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகளை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது.