Published:Updated:

`தினமும் 25,000 கப் டீ; ஜெயிச்சது இப்படித்தான்!' - TiEcon-ல் ரகசியம் பகிர்ந்த சாய் கிங்ஸ் நிறுவனர்

`` `சாய் கிங்ஸ்' என பெயர் வைத்தற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். கிங்ஸ் என இருப்பதால் மக்களிடம் எளிதாக சென்றடைய முடியும். தற்போது மூன்று நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த விரிவக்கத்துகாக சென்னை ஏஞ்சல்ஸ் ( 15 லட்சம் டாலர்) பெரிதும் உதவியது."

சென்னையை பொறுத்தவரை தொழில்முனைவோர்களின் முக்கியமான நிகழ்வு டைகான். ஆனால் இரண்டாம் ஆண்டாக விர்ச்சுவல் கருத்தரங்காகவே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் / நவம்பர் மாதங்களில் நடக்கும் கருத்தரங்கு கோவிட் காரணமாக கடந்த ஆண்டு இணையம் மூலமாகவே நடந்தது. இப்போதும் இணையம் மூலமாகவே நடைபெற்றது. தொடக்க உரையை டை அமைப்பின் தலைவர் சி.கே. ரங்கநாதன் நிகழ்த்தினார். இணையம் மூலமாக நடந்ததால் சிறப்பு விருந்தினர்களின் உரையை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கேட்க முடிந்தது.

நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கோச் மார்ஷெல் கோல்ட்ஸ்மித் தொடக்க உரையை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ``பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். அவர்கள் அனைவருக்குமே அனைத்தும் தெரியும். இருந்தாலும் எங்கெல்லாம் முடியாதோ அங்கெல்லாம் அவர்கள் மற்றவர்கள் உதவியை கேட்பதற்கு தயங்குவதில்லை. துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியை கேட்டறிந்து அடுத்தக்கட்டத்துக்கு செல்கின்றன. அப்படிதான் பல தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன். எனக்கும் சில இடங்களில் அனைத்தும் தெரியாது. நான் பெரிய எக்ஸிகியூட்டிவ் கோச், எனக்கு எல்லாம் தெரியும் என நான் கருதுவது கிடையாது.

Marshall Goldsmith
Marshall Goldsmith
Twitter Image: @coachgoldsmith

உயிர்சேதம் போர்களில் மட்டுமே நடப்பது கிடையாது. மருத்துவ துறையிலும் நடக்கிறது. ஆபரேஷன் சமயத்தில் சரியான செக் லிஸ்ட் கடை பிடிக்காததால் பல மருத்துவ தவறுகள் நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நர்ஸ்களால் டாக்டர்களை கேள்வி கேட்க முடியவில்லை. சில டாக்டர்களில் ஈகோவும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. இந்த சமயத்தில் பாதுகாப்பு துறைக்கும் சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இது தொடர்பாக பைட்டர் ஜெட் விமானத்தில் பறந்திருக்கிறேன். அப்போது மிக ஜூனியர் நிலை உதவியாளர் ஒருவர் பைலட்டிடம் சில செக்லிஸ்ட்களை கேட்டு அவை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்துகொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பைலட்டிடம், `ஜூனியர் ஒருவர் வந்து கேட்கும்போது எப்படி உங்களால் இயல்பாக பதில் அளிக்க முடிந்தது. உங்களிடம் ஈகோவே இல்லையா' எனக் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் நம் அனைவருக்குமானது. `ஒரு ஆபரேஷன் தோல்வி அடைந்தால் நோயாளி மட்டுமே இறப்பார். ஆனால் ஒரு விமானம் செயல் இழந்தால் நான் (பைலட்) உள்பட அனைவருமே இறந்துவிடுவார்கள். அதனால் இகோவை விட செக்லிஸ்ட் முக்கியம்' என பைலட் பதில் அளித்தார். பைலட்டின் பதிலை தொழில்முனைவோர்கள் மட்டுமல்ல அனைவரும் நினைவில் வைத்துகொள்வது அவசியம். நம்முடைய ஈகோ நமக்கும் ஆபத்து விளைவிக்கும் என்னும் புரிதல் அவசியம்" என கோல்ட்ஸ்மித் பேசினார்.

இதனை தொடர்ந்து பேஷன் இ-காமர்ஸ் நிறுவனமான `லைம் ரோடு’ நிறுவனத்தின் சுச்சி முகர்ஜி பேசினார். ``இ-காமர்ஸ் துறை என்பதே தள்ளுபடி கொடுத்து விற்பனை நடக்கிறது என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால் தள்ளுபடியை தவிர வாடிக்கையாளர்களுக்கு வசதியை கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். தள்ளுபடி கொடுத்து நிறுவனத்தை வளர்த்தால் நம்மை விட அதிக வசதி கொண்ட (வென்ச்சர் கேபிடல் நிதி உள்ள) நிறுவனங்கள் நம்முடைய சந்தையை எடுத்துக்கொள்ளும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு வசதியை கொடுக்கும் பட்சத்தில் அவர் மற்றொரு நிறுவனத்தை நாட மாட்டார். நாங்கள் பேஷன் துறையில் இருப்பதால் அதிகம் விற்பனையாகும் பொருட்களுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். அதே சமயம் புதிய புதிய புராட்க்ட்களையும் தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருப்போம். அப்போதுதான் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும்.

Suchi Mukherjee
Suchi Mukherjee

தள்ளுபடி கொடுத்து வாடிக்கையாளர்களை கவரும் காலம் முடிந்துவிட்டது. மற்றவர்களை விட சிறந்த சேவையை வழங்க முடிகிறதா, சிறப்பாக லாஜிஸ்டிக்ஸ் இருக்கிறதா என்பதை நோக்கி இ-காமர்ஸ் இருக்கிறது" என சுச்சி முகர்ஜி குறிப்பிட்டார்.

வேறு ஒரு செஷனில் Eruditus நிறுவனத்தின் அஸ்வின் தமிரா பேசினார். அப்போது இணை நிறுவனர் தேர்ந்தெடுப்பது குறித்து பேசும்போது, ``இணை நிறுவனர் இல்லாமலே பலர் வெற்றிகரமாக இருக்கிறார்கள். ஆனால் துணைக்கு ஆள் தேவை என்னும் ரீதியில் இணை நிறுவனரை தேடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறன் தேவை. உங்களிடம் இல்லாத திறன் உங்களுடைய இணை நிறுவனருக்கு இருக்க வேண்டும். எனக்கு சர்வதேச அனுபவம், டிஜிட்டல் தெரியும், நிறுவனத்தை வளர்த்த அனுபவம் இருக்கிறது. என்னுடைய இணை நிறுவனர் சைத்தன்யாவுக்கு எக்ஸிக்கியுட்டிவ் எஜுகேஷன் பிரிவில் அனுபவம் மற்றும் துறை சார்ந்த அனுபவம் இருந்ததால் இணைந்து பணியாற்றினோம்" எனக் குறிப்பிட்டார்.

மேலும், ``விற்பனை பணியாளர்களுக்கு விற்பனை அடிப்படையில் நாங்கள் ஊக்கத்தொகை வழங்குவதில்லை. நாங்கள் கல்வி பிரிவில் இருக்கிறோம், அதனை புராடக்டாக விற்பனை செய்வது நன்றாக இருக்காது. பணியாளர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு மட்டுமே ஊக்கத்தொகை வழங்குகிறோம்" என்றார்.

ட்விட்டரில் வாக்கெடுப்பு; டெஸ்லாவின் 10% பங்குகள் விற்பனை; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

பின்னர் பேசிய ஜெட் செட் கோவின் நிறுவனர் கனிகா தெக்ரிவால், ஏர் டாக்ஸி பிரிவில் செயல்படும் இந்த நிறுவனம் வளர்ந்தது குறித்து பேசினார். ``மார்வாடி குடும்பத்தில் பிறந்தேன். சிறுவயதில் எனக்கு பைலட் ஆக வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு போவதே கடினம் என்பதுதான் எதார்த்தம். ஆனால் ஒவ்வொரு முறையும் குடும்பத்தை ஒப்புக்கொள்ள வைத்து பள்ளிப்படிப்பு, வெளிநாட்டில் கல்லூரி படித்தேன். இதற்கு நடுவில் கேன்சரில் இருந்து மீண்டு வந்தேன்.

ஒரு காலத்தில் காரில் செல்பவர்கள் குறைவாக இருந்தனர். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகமாக இருந்தனர். அதை விட நடந்து செல்பவர்கள் மிக அதிகமாக இருந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கார் இருந்ததோ தற்போது பிரைவேட் ஜெட் இருக்கிறது. வரும் காலத்தில் பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்வது அதிகமாக இருக்கும். தற்போது ஒரு நாளில் 6 மணி நேரம் வரை காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பயணத்துகான நேரத்தை குறைக்க விரும்புவர்களின் எண்ணிக்கௌ உயரும். இவர்கள் விரைவில் பிரைவேட் ஜெட்டுக்கு மாறுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்டுக்கு பிறகு பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கோவிட்டுக்கு முன்பு பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்வது என்பது பணத்தை விரயம் செய்கிறோம் என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் கோவிட்டுக்கு பிறகு அந்த எண்ணம் மாறி இருக்கிறது" என கனிகா பேசினார்.

இதனை தொடர்ந்து சாய் கிங்க்ஸ் நிறுவனர்கள் பாலாஜி சடகோபன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோர் பேசினார்கள். இருவரும் ஐடி நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்கள். அதனை தொடர்ந்து சில பிரான்ஸைசி தொழில்களில் கவனம் செலுத்தினார்கள். ``சலூன், சப்வே, டிஜிட்டல் மார்கெட்டிங் கம்பெனி மற்றும் மெடிக்கல் டிரான்ஸ்கிர்ப்ஷன் ஆகியவை நடத்தி வந்தோம். இந்த சமயத்தில் நாமே சொந்தமான பிராண்டினை ஏன் உருவாக்க கூடாது என திட்டமிட்டோம். அப்போது நான் வெஜ் ரெஸ்டாரண்ட் தொடக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால் அதில் பெரிய சவால்கள்/முதலீடு இருந்தன.

அப்போது (2016) சிறிய காபி கடைகள் தொடங்க திட்டமிட்டோம். ஆனால் மக்கள் பெரும்பாலும் டீ மட்டுமே குடிக்கிறார்கள். ஆனால் தரமான டீ கடைகள் இல்லை. அதனால் அனைத்து தரப்பு மக்களும் வருவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். சாய் கிங்ஸ் என பெயர் வைத்தற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ்தான். கிங்ஸ் என இருப்பதால் மக்களிடம் எளிதாக சென்றடைய முடியும். தற்போது மூன்று நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த விரிவக்கத்துகாக சென்னை ஏஞ்சல்ஸ் ( 15 லட்சம் டாலர்) பெரிதும் உதவியது. பெரும்பாலான முதலீட்டை சென்னை ஏஞ்சல்ஸ் மட்டுமே செய்திருக்கிறது.

Chai Kings
Chai Kings
Twitter Image: @ChaifullyYours
இவற்றிற்காக வாங்கினால், பர்சனல் லோன் கூட கெட்ட கடன்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 43

ஆரம்பத்தில் மக்களை உள்ளே வர வைப்பதே சவாலாக இருந்தது. விலை அதிகமாக இருக்குமோ என்னும் சந்தேகம் இருந்தது. அதன் பிறகு சுவை, சுகாதாரம் மற்றும் விலை ஏற்புடையாக இருந்தால் முதல் மாத முடிவிலே பிஸினஸ் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் எங்களுக்கு இடம் தர நில உரிமையாளர்கள் தயங்கினார்கள். ஆனால் தற்போது பலர் எங்களுடைய இடத்தில் தொடங்கலாம் என அழைப்பு விடுக்கிறார்கள். தற்போது மொத்த விற்பனையில் 50 சதவீதம் அளவுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் நடக்கிறது.

ஒரு நாளைக்கு 25,000 கப் டீ விற்பனை செய்கிறோம். அனைத்து விஷயங்களுக்கும் விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். எங்களிடத்தில் கேஸ் இல்லை. இண்டக்‌ஷன் ஸ்டவ் மட்டுமே. மூலப்பொருட்களை வாங்குவதில் இருந்து டீ தயாரிப்பது வரை அனைத்தையுமே சரியாக செய்வதால் சுவை மற்றும் தரம் அனைத்து கடைகளிலும் சீராக இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.

அடுத்த இரு நாட்கள் நிகழ்வு குறித்து அடுத்து பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு