Published:Updated:

ட்விட்டர் நிறுவனத்தைத் தன்வசப்படுத்திய எலான் மஸ்க்!

எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
எலான் மஸ்க்

நிறுவனம்

ட்விட்டர் நிறுவனத்தைத் தன்வசப்படுத்திய எலான் மஸ்க்!

நிறுவனம்

Published:Updated:
எலான் மஸ்க்
பிரீமியம் ஸ்டோரி
எலான் மஸ்க்

எலான் மஸ்க் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘I Love Twitter’ என்று ட்வீட் செய்தபோது, எதிர்காலத்தில் ட்விட்டர் நிறுவனத்தை அவர் கையகப்படுத்துவார் என்று யாரும் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3.30 லட்சம் கோடி கொடுத்து வாங்கி, எல்லோரின் வாயையும் பிளக்க வைத்திருக்கிறார்.

அண்மையில் ட்விட்டர் சமூக வலை தளத்தில், அதன் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். கேள்விதானே கேட்கிறார் என்று கடந்து செல்வதற்குள், ஒரு சில நாள்களுக்குள்ளாகவே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கி அதிரடி காட்டினார்.

இந்த அளவுக்கு பங்குகளை வாங்கியதால், நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்து கொள்ள ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்குக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அதை அவர் மறுத்தார். ட்விட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்கத் திட்டம் தீட்டியிருக்கிறார் என்கிற விஷயம் அப்போதுகூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படித்தான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் முன்பும் அதைப் பற்றி ட்வீட் செய்து, அதன் விலையை ஏகத்துக்கும் உயர்த்தினார். இப்போதும் ட்விட்டர் பங்குகளை வாங்கிய அன்று, அதன் பங்கு விலை 10 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் அடைந்தது. ட்விட்டரின் பங்குதாரராக மாறிய பிறகு, ட்விட்டர் பக்கத்தில் எடிட் பட்டன் உருவாக்குவது குறித்தும் அவர் பேசியிருந்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இப்படி அடிக்கடி ‘பேசியது போதும் செயலில் இறங்குவோம்’ என்று நினைத்தாரோ என்னவோ, ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,154 கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் வாங்கியிருக்கிறார் எலான் மஸ்க்.

முதலில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதைத் தடுக்க முயற்சி செய்த அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு, அந்த முயற்சிகள் பலிக்காததால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பின்னர் எலான் மஸ்க் முன்வைத்த பேரத்தின்படியே மொத்தம் சுமார் ரூ.3.30 லட்சம் கோடி என்ற விலைக்கு அவர் ட்விட்டரை வாங்கிக் கொள்வது எனத் தற்போது ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. அவர் நிறுவனத்தை வாங்கியதும் பங்குச் சந்தையிலிருந்து விலக்கிக்கொள்ளப் பட்டு, அது அவரது தனிநபர் நிறுவனமாக மாறிவிடும் என ட்விட்டர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்தத் திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தைக் கையப்படுத்துவது குறித்து பேசியிருக்கும் எலான் மஸ்க், `தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்க வில்லை’ என்றும் `பயனர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு நம்பிக்கையான ஒரு சமூக வலைதளத்தைக் கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்குவதாகவும்’ தெரிவித்துள்ளார்.

மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் ரூ.1.90 லட்சம் கோடியைக் கடனாகத் தர முன்வந்துள்ளதாகவும், எஞ்சிய தொகையை தம் பங்கு முதலீடாகத் தரவிருப்ப தாகவும் அறிவித்துள்ளார் மஸ்க்.

இதன் பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஜனநாயகத்தின் அடித்தளமே கருத்துச் சுதந்திரம்தான். மனிதகுலத்தின் எதிர்காலம் விவாதிக்கப்படுவது ட்விட்டர் என்ற டிஜிட்டல் நகர சதுக்கத்தில்தான். ஆகவே, வரும் நாள்களில் ட்விட்டரில் மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்த விருக்கிறோம். தேவையற்ற செய்திகளைப் பரப்புவதைத் தடுப்பதற்கும் அனைத்து மனிதர்களையும் அனுமதிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தம்மை பற்றி மிக மோசமாக விமர்சிப்பவர் களும் ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என விரும்புவதாகவும் அதுவே கருத்துச் சுதந்திரம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கியிருப்பது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், எலான் மஸ்க்கின்கீழ் ட்விட்டர் எந்தவிதமான மாறுதல்களை எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்க உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism