நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மக்களின் ஆரோக்கியம்... மகத்தான வருமானம்... கலக்கும் தம்பதி! சிறப்பான சிறுதானிய உணவுப்பொருள் ஏற்றுமதி

சிவராமகிருஷ்ணன், அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
News
சிவராமகிருஷ்ணன், அனுராதா

B U S I N E S S

வெளிநாட்டுக்கு எங்க தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யணும்; எங்க பிராண்டுக்கு தனி அடையாளம் கிடைக்கணும்; விற்பனை செய்ற பொருள் மக்களின் நலனுக்கானதா இருக்கணும். இந்த மூணு விஷயத்தையும் சாத்தியப் படுத்துறதுதான் எங்களோட பெரிய கனவா இருந்துச்சு. அதுக்காக ரொம்பவே நம்பிக்கையுடன் உழைச்சோம். புறக்கணிப்புகள், தோல்விகள், விடாமுயற்சினு பல விஷயங்களைக் கடந்து, இப்போ எங்க இலக்கைச் சாத்தியப்படுத்தியிருக்கோம்” - பெருமிதத்துடன் கூறுகின்றனர், திருச்சியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் அனுராதா தம்பதியர்.

பிசினஸ் கனவைச் சரியாக நகர்த்தி, விரைவாக வெற்றிக் கோட்டைத் தொட்டுள்ள இவர்கள், சிறுதானியங்களை மதிப்புக்கூட்டல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றனர். இந்த பிசினஸ் தம்பதியுடன் பேசினோம்.

சிவராமகிருஷ்ணன்,  அனுராதா
சிவராமகிருஷ்ணன், அனுராதா

“என்னுடைய தாத்தாவைத் தொடர்ந்து அப்பாவும் ரைஸ் மில் நடத்திட்டிருந்தார். ஆனா, அந்தத் தொழில்ல நான் பெரிசா கவனம் செலுத்தல. வெளிநாட்டுல வேலை செய்யணும்ங்கிறதுதான் இளமைக் காலத்துல என்னோட பெரிய கனவா இருந்துச்சு. எம்.பி.ஏ முடிச்சேன். அடுத்து, சென்னையில தனியார் நிறுவனத்துல விற்பனைப் பிரிவுல சில வருஷங்கள் வேலை செஞ்சேன். ஒருகட்டத்துல திருச்சிக்கே வர வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு.

பிறகு, நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தரா சேல்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சேன். வங்கிக் கடனுதவி யுடன் சின்ன அளவுல நடத்திய அந்த நிறுவனத்தின் மூலம், அயல்நாட்டு கம்பெனியின் பிரபலமான பயன் பாட்டுப் பொருள் ஒன்றை வாங்கி விநியோகம் செஞ்சுட்டு இருந்தேன். பிறகு, டெலிகாம் நிறுவனத்துடன் இணைஞ்சு வேலை செஞ்சேன்.

தொழில் நல்லபடியா போயிட்டு இருந்துச்சு. எம்.பி.ஏ உள்ளிட்ட படிப்புகளில் அடிப்படையான தொழில் விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறதுல வெறும் அடிப்படைத் தகவல்தான் கிடைக்கும். ஆனா, வாடிக்கையாளர் களின் மனநிலையையும் அணுகு முறையையும் தெரிஞ்சுக்கும் அனுபவப் பாடம் களத்துல இறங்கி வேலை செஞ்சாதான் கிடைக்கும். அதெல்லாம், நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தர் தொழில்ல நிறையவே கிடைச்சது.

இந்த அனுபவத்தின் மூலம், ஒரு கட்டத்துல பன்னாட்டு நிறுவனத்துடன் இணைஞ்சு மக்காச் சோளம் மற்றும் கம்பு விதைகளை வாங்கி, தமிழ்நாட்டுல இருக்கிற நிறுவனங்களுக்கு விநியோகம் செய்ற வாய்ப்பு கிடைச்சது. தற்போது வரை இந்த வேலை தொடருது. இதுக்கிடையே, அப்பாவின் உடல்நிலை காரணமா அவரோட ரைஸ் மில் தொழிலை நான் நிர்வகிக்கும் சூழல் ஏற்பட்டுச்சு.

நிறைய ரைஸ் மில்கள் பெருகிட்ட இந்தக் காலகட்டத்துல வெறும் அரிசியை மட்டுமே விற்பனை செய்றதுனால பெரிசா லாபம் கிடைக்காது. அதைவிட, நம்ம விற்பனை பொருளுக்குத் தனிப் பட்ட அடையாளத்தையும் தனித்துவத் தையும் உருவாக்க முடியாது. இந்த விஷயம்தான் என்னை ரொம்பவே யோசிக்க வச்சது. காலேஜ் படிக்கும் போதிலிருந்தே, எதிர்காலத்துல நம்ம விற்பனைப் பொருளுக்குத் தனித்துவத்தை உருவாக்கணும்னு நினைச்சுகிட்டே இருப்பேன். அதுக்கு விடை தேடியபோது தான் புது பிசினஸுக்கான வாசல் திறந்துச்சு” என்றவர், அதன் பிறகு முறையான அனுபவத்துடன் சிறுதானியங் களை மதிப்புக்கூட்டல் செய்து ஏற்றுமதி செய்யத் தொடங்கி யிருக்கிறார். அந்தத் தருணத்தில்தான் இவரின் மனைவியும் இதே தொழிலில் இணைந்திருக்கிறார்.

“என்னுடையது பிசினஸ் குடும்பம் இல்ல. கல்யாணத்துக்குப் பிறகு, எதிர்காலத்துல இருவரும் பிசினஸ் பண்ணலாம்னு என்னை எம்.பி.ஏ படிக்க இவர்தான் ஊக்கப் படுத்தினார். பிறகு, கணவரோட பிசினஸுக்கு இயன்ற சப்போர்ட் கொடுத்திட்டிருந்தேன். இந்த நிலையில, நிறைய தேடலுக்குப் பிறகு, சிறுதானிய மதிப்புக் கூட்டலில் இறங்க ஆயத்த மானோம். இதுக்காக 2016 முதல் 2018 வரைக்கும் பல்வேறு இடங் களுக்கும் போய், சிறு தானியங் களை மதிப்புக்கூட்டல் செய்றது பத்திய நிறைய பயிற்சி வகுப்பு கள்ல இவர் கலந்துகிட்டார். அப்போ எங்க பிசினஸ் வேலைகள் எல்லாத்தையும் நான் கவனிச்சு கிட்டேன்.

இதுக்கிடையே சோதனை முயற்சியா வெவ்வேறு சிறு தானியங்கள்ல இருந்தும் ஒவ்வொரு விதமான மதிப்புக் கூட்டுப் பொருளையும் தயாரிச்சோம். அதைப் படிப் படியா பல இடங்கள்லயும் விற்பனை செஞ்சோம். ‘ஶ்ரீவேலவன் ஆக்ரோ’ங்கிற பெயர்ல தனி நிறுவனத்தைத் தொடங்கினோம். ஆரம்ப காலத்துல தொழில் ரீதியான நம்பிக்கை கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆச்சு. ஆனாலும், சிறுதானியங்களுக்கு வருங் காலத்துல வரவேற்பு அதிகரிக் கும்னு உறுதியா நம்பினோம். எனவே, புதுப்புது தயாரிப்புகள்ல கவனம் செலுத்தினோம். 2018-ல் ‘Bliss tree’ங்கிற தனி பிராண்ட் பெயர்ல எங்க தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்” என்று புன்னகையுடன் கூறுகிறார் அனுராதா.

ஆரம்பகாலத்தில் பல்வேறு உணவுக் கண்காட்சிகளிலும் ஸ்டால் அமைத்து, தங்களின் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்தி உள்ளனர். சிக்கல்களும் சவால்களும் துரத்தினாலும், அதை யெல்லாம் சரிசெய்து விரைவாகவே வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி, ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் டேர்ன்ஓவர் ஈட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளனர்.

பேக்கிங்
பேக்கிங்

“விவசாயிகள்கிட்ட இருந்து தரமான விளைபொருள்களை வாங்குகிறோம். அதுல, எந்த ரசாயன சேர்மானங்களையும் சேர்க்காம மதிப்புக்கூட்டல் செய்றோம். சிறுதானியங்களை நேரடியாகப் பயன்படுத்தும் வகையிலும் (stable food), மதிப்புக்கூட்டல் செய்யப்பட்டு சில நிமிடங்களில் சமைத்துச் சாப்பிடும் ‘ரெடி டு குக்’ முறையிலும், ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்பு வகைகள் போன்ற ‘ரெடி டு ஈட்’ முறையிலும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்றோம்.

இந்த மூணு விதமான உணவுகளுமே, அனைத்துவிதமான மக்களையும் ஈர்க்க உதவுது. வாடிக்கையாளர்களின் சிரமங்களைக் குறைப்பதிலும், அவங்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதிலும்தான் அதிக கவனம் செலுத்துறோம்.

ஓரளவுக்கு வளர்ச்சி கிடைச்சதும், எங்க உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்றதுல கவனம் செலுத்தினோம். இப்ப அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சுகிட்டு இருக்கோம். ஹெல்த் மிக்ஸ், குக்கீஸ், சேமியா, மாவு வகைகள் உட்பட இப்போ 100-க்கும் அதிகமான உணவுப் பொருள்களை விற்பனை செய்றோம். கூடவே, புதுத் தயாரிப்புகளையும் கவனம் செலுத்துறோம். மரச்செக்கு எண்ணெய் வகைகளையும் தயாரித்து ஏற்றுமதி செய்றோம். ரைஸ் மில் தொழிலும் நல்லபடியா போகுது. அந்தத் தொழிலுடன், பாரம்பர்ய அரிசி ரகங்களையும் விற்பனை செய்றோம்.

ஆரம்பகாலத்துல பல்வேறு புறக்கணிப்பு களை எதிர்கொண்டோம். நமக்கான ஓர் அடையாளம் கிடைக்கிற வரை, சவால்களைக் கடந்து வந்துதான் ஆகணும். அதன்படியே பொறுமையா உழைச்சோம். வெற்றி வசமாச்சு” என்று நம்பிக்கையுடன் முடித்தார் சிவராம கிருஷ்ணன். வெற்றிக்கொடி நாட்டட்டும் இந்த பிசினஸ் தம்பதி.