Published:Updated:

நேட்டிவ் பிராண்ட்! 98 ஆண்டுகள்... 900 கடைகள்... ‘கண்ணன் & கோ’ கோலி சோடா!

கண்ணன்  & கோ
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன் & கோ

புதிய தொடர்

நேட்டிவ் பிராண்ட்! 98 ஆண்டுகள்... 900 கடைகள்... ‘கண்ணன் & கோ’ கோலி சோடா!

புதிய தொடர்

Published:Updated:
கண்ணன்  & கோ
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன் & கோ

எந்த மரமும் விதைத்தவுடன் வளர்ந்து விடாது. நான்கு தலைமுறை வியர்வைத் துளிகளை ஊற்றி, விடாமுயற்சியுடன் எழுந்து நின்று, கோலி சோடா தயாரிப்பில் நூற்றாண்டைத் தொடவிருக்கிறது வேலூரைச் சேர்ந்த 98 ஆண்டுக் காலமாக கோலி சோடா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் கண்ணன் அண்ட் கோ நிறுவனம்.

வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள சிற்றூர் களிலும் கண்ணன் & கோ கோலி சோடா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வயிற்று வலி, வாயுக் கோளாறு இத்யாதி, இத்யாதி பிரச்னைகள் வந்தால், இந்த நிறுவனத்தின் கோலி சோடாவை உடைத்து பருகினால் போதும். நொடிப் பொழுதில் அஜீரணக் கோளாறுகள் பறந்துவிடும் என்பது மக்களின் கருத்து. அந்த அளவுக்குத் தன்னிகரில்லாத பாட்டி வைத்திய பானமாக இருக்கிறது இந்த கோலி சோடா.

நேட்டிவ் பிராண்ட்! 98 ஆண்டுகள்... 900 கடைகள்... ‘கண்ணன்  & கோ’ கோலி சோடா!

ரசாயனக் குளிர்பானங்களுக்கு மாற்று...

இன்றைக்கு ரசாயனக் குளிர்பானங்கள் நம் மனத்தை ஆக்கிரமித்துவிட்டதால், கோலி சோடாவை மக்கள் தூக்கியெறிந்துவிட்டனர். பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ரசாயன சோடாக்களைப் பலரும் வாங்கிக் குடித்து வருகிற நிலையில், கோலி சோடாவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

கிராமங்களின் பெட்டிக்கடைகளில் மட்டுமே கிடைக்கும் அரிதான பானமாகப் பார்க்கப்பட்ட கோலி சோடா, தற்போது நகரங்களில் இருக்கும் அதிநவீன ரெஸ்டா ரன்ட்டுகள், திரையரங்குகளிலும்கூட ரசாயன சோடாக்களுக்கு நிகராக சில்லர் பாக்ஸ்களில் வைத்து சில்லென்று விற்பனை செய்யப் படுகிறது கண்ணன் & கோ கோலி சோடா.

நாகரிகக் காலத்துக்கேற்ற வகையிலும் பிரீமியம் குவாலிட்டியில் பாட்டிலின் வடிவத்தை மாற்றி, தனி முத்திரைப் பதித்துக் கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சுமார் 900 கடைகளுக்குத் தங்களது கோலி சோடாவை விநியோகம் செய்வதுடன், பிசினஸையும் பல மடங்காக உயர்த்தியிருக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தாலும் சரி, மண்டபத்தில் நடந்தாலும் சரி, ஒரு போன் செய்தால், இந்த நிறுவனத்தின் பணியாளர்களே கோலி சோடாக்களைக் கொண்டு வந்து தந்து விடுகிறார்கள்.

1924-ல் விதைத்த விதை...

கண்ணுசாமி என்பவர்தான் ‘கண்ணன் அண்ட் கோ’ கோலி சோடாவின் நிறுவனர். 1924-ம் ஆண்டு அவர் போட்ட விதைதான் மரமாக வளர்ந்து 98 ஆண்டுக் கால விருட்சமாக நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் இந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை நான்காவது தலைமுறை யான கண்ணுசாமியின் கொள்ளுப் பேரனான ஆனந்த கிருஷ்ணன் நடத்தி வருகிறார். எம்.பி.ஏ பட்டம் பெற்ற இவருக்குத் உறுதுணை யாகத் தாத்தாவும் அப்பாவும் இருக்கிறார்கள். கண்ணன் அண்ட் கோ நிறுவனத்துக்குச் சென்று கோலி சோடாவைத் தயாரிக்கும் முறைகளைப் பார்வையிட்ட பின்னர், அதன் நிர்வாகி ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரின் முந்தைய தலைமுறையினரிடம் பேசினோம்.

நேட்டிவ் பிராண்ட்! 98 ஆண்டுகள்... 900 கடைகள்... ‘கண்ணன்  & கோ’ கோலி சோடா!

தமிழர்களின் பாரம்பர்ய பானம்...

‘‘கோலி சோடா என்பது தமிழர்களின் பாரம்பர்ய பானம். என் கொள்ளுத் தாத்தா கண்ணு சாமியும், அவரின் அண்ணன் ஜனார்த்தனனும் 1915-ல் வேலூரில் செயல்பட்டு வந்த ‘கணேசா’ சோடா கம்பெனியில் வேலைபார்த்து வந்தனர். அந்த சமயம் சோடாவுக்கு ஏகப்பட்ட மவுசு இருந்தது. எனவே, அது தொடர்பான தொழில் நுணுக்கங் களைக் கற்றுகொண்டு 1924-ல் ‘கண்ணன் அண்ட் கோ’ தொழிற் சாலையைச் சிறிய அளவில் தொடங்கினர். கொள்ளுத் தாத்தா கண்ணுசாமியின் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர் களில் முக்கியமானவர் அவரின் மனைவி விட்டோபாய் அம்மாள் தான். லண்டனிலிருந்து பாட்டில்களை இறக்குமதி செய்தார்கள். இதன் சுவை எல்லோருக்கும் பிடித்துப் போகவே, கோலி சோடாவின் விற்பனை அமோகமாக இருந்தது” என்றார் ஆனந்த கிருஷ்ணன்.

1961-ல் நிறுவனர் மறைந்த பின்னர், அடுத்து அவரின் மகன் தியாகராஜன், மூன்றாவதாக பேரன் மோகன கிருஷ்ணன், நான்காவதாக கொள்ளுப்பேரன் ஆனந்த கிருஷ்ணன் என நான்கு தலைமுறையாக இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

தியாகராஜன், மோகன கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன்
தியாகராஜன், மோகன கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன்

பாரம்பரியமும் பிரீமியமும்...

“நாங்கள் பாரம்பர்யம், பிரீமியம் என இரண்டு ரகமான பாட்டில் களில் புளூ பெரி, ஆரஞ்சு, கோலா, பன்னீர், பைனாப்பிள், ஜிஞ்சர், ப்ளைன் சோடா என ஏழு சுவைகளில் சோடாவைத் தயார் செய்து, விற்பனைக்கு அனுப்பு கிறோம்.

பாரம்பர்ய கோலி சோடாவின் பாட்டிலின் தன்மை தடிமனாகவும், அதிக எடையுடனுடன் இருக்கும். அதிலிருந்து, மாறுபட்டு எடை குறைவாக, குழந்தைகளும் பயன் படுத்தும் வகையில் பிரீமியம் பாட்டிலைக் கொடுக்கிறோம்.

இந்த 98 ஆண்டுகளில் எங்கள் நிறுவன பாட்டில்களை ஏழு வடிவங்களில் மாற்றி அமைத்திருக் கிறோம். உயர்தர முறையில்தான் ஃபில்லிங் (நிரப்புதல்) முறையும் நடக்கிறது. மார்க்கெட்டிலிருந்து ரிட்டர்ன் வரும் பாட்டில்களில் தூசி, துகள்கள் இருக்கும். இயந்திர முறையில் மூன்று கட்டமாகப் பாட்டிலை சுத்தப்படுத்துகிறோம். முதலில், ஆயில் கலந்த சோப்பைக் கொண்டு கழுவுகிறோம். பின்னர், இயந்திரத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் நவீன ப்ரஸ் மூலமாக தேய்த்து அழுக்குகளை நீக்குகிறோம். கடைசியாக, சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு பாட்டிலைப் பளீச்சிட வைக்கிறோம். தொடர்ந்து, டோஸ் முறையில் புளூ பெரி, ஆரஞ்சு, கோலா, பன்னீர், பைனாப் பிள், ஜிஞ்சர், ப்ளைன் சோடா என ஏழு சுவைகளில் எது தேவையோ, அதில் 50 மில்லி அளவுக்குப் பாட்டிலில் விடுகிறோம். பாட்டிலின் அளவு 200 மில்லி லிட்டர். எனவே, மீதமுள்ள 150 மில்லி அளவுக்கு சோடாவை நிரப்புகிறோம். பின்னர், கோலியை காஸ் ஃபில்லிங் மூலம் ஸ்டாப் செய்து, தரத்தைப் பரிசோதிக்கிறோம். தொடர்ந்து, லேபிள் பிராசஸிங் நடக்கும்.

இப்படித் தயாரான கோலி சோடாக்கள் திரையரங்குகள், ரெஸ்டாரன்ட், கஃபே ஷாப் என அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலி சோடா விற்பனையில் நாங்கள்தான் முன்னிலையில் இருக்கிறோம். வேலூர் மக்கள், எங்கள் கம்பெனிப் பெயரைக் குறிப்பிட்டு சோடா வாங்கிக் குடிக்கிறார்கள். விலையும் மிகக் குறைவாக அதாவது, பாட்டில் ஒன்று ரூ.15 என்கிற அளவில்தான் விற்கிறோம்.

கெமிக்கல் குளிர்பானங்களைப் பலரும் குடித்து வந்தாலும், கோலி சோடாவைப் பயன்படுத்தும் மக்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம்தான் இதற்குக் காரணம்.

இத்தனை ஆண்டுக்காலம் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நன்மதிப்புக்குக் காரணம், கடின உழைப்புடன் நாங்கள் தயாரித்துக் கொடுக்கும் பொருளின் தரம்தான். எங்கள் கோலி சோடாவை மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்’’ என்கிறார்கள், வெற்றியின் புன்சிரிப்போடு அடுத்த தலைமுறை நிர்வாகிகள் மூவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism