Published:Updated:

பால் வியாபாரத்தில் புதுமை... பட்டையை கிளப்பும் 'சின்னத்திரை’ பாலமுருகன்!

பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன்

வியாபாரம்

பால் வியாபாரத்தில் புதுமை... பட்டையை கிளப்பும் 'சின்னத்திரை’ பாலமுருகன்!

வியாபாரம்

Published:Updated:
பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன்

வித்தியாசமாக யோசித்து செயல் பட்டால், எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் வெற்றி பெறலாம் என்பதற்கு ஓர் உதாரணமாக இருக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பாலமுருகன். பேரணாம்பட்டு பகுதியில் பால் பண்ணை நடத்திவரும் இவர், ‘சண்டே மில்க்’ என்கிற பிராண்டில் பாலை மதிப்புக்கூட்டி விற்று, நல்ல முறையில் வியாபாரம் செய்து வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டை சார்ந்த 42 வயதான பாலமுருகனை நாம் சந்திக்கச் சென்றபோது, பண்ணை வேலைகளில் அவர் பிசியாக இருந்தார். 2005-ம் ஆண்டு சின்னத்திரையில் நிருபராகப் பணியாற்றிய இவர், 2013-ம் ஆண்டு ‘சண்டே புரடக்‌ஷன்’ என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து, ஜூனியர் சூப்பர் ஸ்டார், காமெடி கில்லாடிஸ், நம்பினால் நம்புங்கள், ஜூனியர் சீனியர், தமிழா தமிழா, பிரியாத வரங்கள் போன்ற ஹிட் தொடர்களைத் தந்திருக்கிறார். தொலைக்காட்சியில் நிருபராக இருந்த இவர், பால் விற்கும் தொழிலுக்கு வந்தது எப்படி என்கிற கேள்விக்கான பதிலை அவரே சொல்ல ஆரம்பித்தார்.

பாலமுருகன்
பாலமுருகன்

‘‘என் நண்பரின் குழந்தைக்கு சுத்தமான நாட்டுப் பசுவின் பால் கிடைக்காமல் தினமும் சென்னை அமைந்தகரையில் இருந்து மாங்காடு வரை சென்று பாலை வாங்கி வருவதாகக் கேள்விப்பட் டேன். பேரணாம்பட்டில் நான் வசிக்கும் எருக்கம்பட்டியில் திரும்பிய இடமெல்லாம் நாட்டு மாடுகள்தானே இருக்கிறது. நாம் ஏன் இந்த பாலை தரம் மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது என்று யோசித்துதான் 2020, செப்டம்பர் முதல் இந்தத் தொழிலை செய்ய ஆரம்பித்தேன். ‘சண்டே மில்க்’ என்கிற பெயரில் பிராண்டிங் செய்து விற்க ஆரம்பித்தேன். நான் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை என்பதால் சண்டே மில்க், சண்டே புரடக்‌ஷன் என்று பெயர் வைத்தேன்.

பொதுவாக, தொழிற்சாலைக்கு வந்துசேரும் பால், மாட்டு பண்ணையில் இருந்தோ, வீடுகளில் வளர்க்கும் மாடுகளில் இருந்தோ வரும். அதுவும் 98% ஜெர்சி மாட்டின் பாலாகத்தான் இருக்கும். மேலும், தொழிற்சாலைக்கு வரும் பால் கெடாமல் இருக்க சில வேதிப்பொருள்களும் சேர்ப்பார்கள். ஆனால், நான் எந்த கெமிக்கலையும் சேர்ப்பதில்லை.

ஆந்திரா, தமிழ்நாடு இடையில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 15 கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள். காடுகளில் இருக்கும் இலை தழை மற்றும் மருத்துவக் குணம் உள்ள அனைத்துச் செடி களையும் சாப்பிட்டு வளர்வதால் இயற்கையாகவே அதிக சத்து கொண்ட பால் கிடைக்கிறது. ஜெர்சி மாடுகளைப்போல் இல்லாமல் இந்த நாட்டு மாடுகள், ஒன்றிலிருந்து இரண்டு லிட்டர் வரை மட்டுமே பால் கறக்கும்.

சுமார் தினமும் 500 கறவை மாடுகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் கொழுப்புச் சத்து சராசரியாக 3% மற்றும் எஸ்.என்.எஃப் (SNF - Solid nonfat) 8.5% இருப்பதை உறுதி செய்து கொள்வோம். கறந்த பால் சில மணி நேரத்தில் கெட்டுவிடும் என்பதால், இவை கெடாமல் இருக்க பாலில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கக் குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலை சூடுபடுத்தி, பின்பு அதைக் குளிரவைத்து பதப்படுத்துவோம். எந்த வேதிப்பொருளையும் (preservative) சேர்க்காமல் 4 டிகிரி செல்சியஸில் பாலை ஒரு வாரம் வரை வைத்திருக்க முடியும்.

பால் வியாபாரத்தில் புதுமை...
பட்டையை கிளப்பும் 'சின்னத்திரை’ பாலமுருகன்!

விற்பனை முறை, முதலீடு, கொள்முதல்...

தினம்தோறும் ஒருவேளை மட்டும் 1,000 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். ஒரு லிட்டர் பால் ரூ.27 முதல் ரூ.35 வரை கொள்முதல் செய்யப்படு கிறது. பதப்படுத்தப்பட்ட பாலை இரண்டு முறைகளில் விற்பனை செய்கிறோம்.

பாட்டிலில் ஒரு லிட்டர் பால் 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பாக்கெட்டில் ஒரு லிட்டர் பால் 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இப்போதைக்கு பாட்டிலில் விற்பனை செய்யப்படும் பால் சுத்தமான நாட்டு மாட்டின் பால் ஆகும். பாக்கெட்டில் அனைத்து வகை மாட்டின் பாலை பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம்.

பாக்கெட் பால் விற்பனை மூலம் எங்களுக்கு நிறைய வருமானம் கிடைப்பதில்லை. எனவே, இனிவரும் காலங்களில் பாட்டில்களில் மட்டும் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு லிட்டர் பால் ரூ.75 எனில், ஒரு நாளுக்கு ரூ.75,000 வரை கிடைக் கிறது. ஒரு மாதத்துக்கு ரூ.22,50,000 வருவாய் கிடைக்கிறது. இதில் எங்களுக்கு ஆகும் மொத்த செலவு என்று பார்த்தால், ரூ.21,00,000. இந்த செலவை மொத்த வருவாயில் இருந்து கழித்தால் ரூ.1,50,000 லாபம் கிடைக்கிறது.

இது மட்டுமல்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான ஃபிரஷ் க்ரீம், நெய், பால்கோவா, மக்கன் பீடா, பன்னீர், ரோஸ் மில்க் போன்றவை ஆர்டரின் மூலம் செய்து வருகிறோம். ஒரு லிட்டர் நெய் 1,500 ரூபாய்க்கும், பால்கோவா 1 கிலோ 400 ரூபாய்க்கும், பன்னீர் 600 ரூபாய்க்கும், ஃபிரஷ் க்ரீம் 350, ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறோம். இவற்றை நாங்கள் ஆர்டர் பெற்றபின் செய்து வருவதால், எங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.‌

நாங்கள் விற்பனைக்கு அனுப்பும் பால், பெரும்பாலான சமயங்களில் திரும்ப வருவது கிடையாது. அப்படியே திரும்ப வந்தாலும், அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்துவிடுவதால், இழப்பு என்று எதுவும் வருவதில்லை.

தற்போது பேரணாம்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, சென்னை போன்ற நகரங்களுக்கு மட்டும் பாலை விற்பனை செய்து வருகிறோம். இந்த நகரங்களில் இருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத் திருப்பதால், வேறு நகரங்களுக்கும் சென்று நாங்கள் பால் விற்பனை செய்யப் போகிறோம்.

எங்கள் பிராண்ட் பால் பற்றி இதுவரை நாங்கள் எந்த விளம்பர மும் செய்யவில்லை. பால் தரமாக இருப்பதால், மக்களே ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல, விற்பனை அதிகரித்து வருகிறது’’ என்ற பாலமுருகன, பால் விற்பனைத் தொழிலைப் புதிதாக செய்ய நினைப்பவர்களுக்கு தகுந்த டிப்ஸ் வழங்கினார்.

பால் வியாபாரத்தில் புதுமை...
பட்டையை கிளப்பும் 'சின்னத்திரை’ பாலமுருகன்!

“நான் எந்தவொரு அனுபவமும் பயிற்சியும் இலாமல்தான் இந்தத் தொழிலைத் தொடங்கினேன். பிற்பாடு அனுபவத்தின் மூலம் எல்லா அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொண்டேன். இதனால் நான் அடைந்து நஷ்டம், சுமார் 20 லட்சத்துக்கும் மேல். நான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் பட வேண்டாம். எனவே, இந்தத் தொழிலில் இறங்க நினைப்பவர்கள் இதில் இருக்கும் சாதகம், பாதகம் என்னென்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தொழிலில் உள்ள நுணுக்கங்களை முறையாகக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு, இறங்கி செய்தால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும்’’ என்றார்.

பால் விற்பனைத் தொழிலுக்கு மட்டுமல்ல, எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும், அது பற்றிய பயிற்சி இல்லாமல் அதில் இறங்கக் கூடாது. தவிர, பிராண்டிங், மார்க்கெட்டிங் சூட்சுமங்களையும் நன்கு தெரிந்து கொண்டு செய்தால், எந்தத் தொழிலாக இருந்தாலும் ஜெயிக்க முடியும் என்பதே உண்மை!