Published:Updated:

சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்... ஆனால்? - வணிகர்கள் முன்வைக்கும் பிரச்னைகள்!

Electronic Shop
Electronic Shop ( Anupam Nath | AP )

``சீனாக்காரன்கிட்ட 5 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி, 2 ரூபாய் லாபம் வைத்து 7 ரூபாய்க்கு விற்பனை செய்திடலாம். ஆனால், நம் நாட்டில் உற்பத்தி செலவே 8 ரூபாய் ஆகிறது என்பதுதான் நிதர்சனம்" - விக்கிரமராஜா

இந்தியா - சீனா எல்லை விவகாரம்தான் கொரோனாவுக்கு இணையாக, தற்போது தேசம் முழுவதும் முக்கிய பேசு பொருளாகியிருக்கிறது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணித்த செய்தி இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சிலர், `சீன பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்’ என முழக்கங்கள் எழுப்பினர். பலர் சீன தயாரிப்பான தொலைக்காட்சிகளை உடைத்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

இந்தச்சூழலில் தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, `சீனப் பொருள்களை விற்பதை படிப்படியாகக் குறைப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அது நடைமுறையில் சாத்தியமா, சீனப் பொருள்களின் விற்பனையைக் குறைக்க என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள்..?

விக்கிரமராஜாவிடம் பேசினோம்.

Boycott Chinese Products
Boycott Chinese Products
Rajesh Kumar Singh | AP
இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?

``நம் கடைகளில் விற்கிற 80 விழுக்காடு பொருள்கள் சீனத் தயாரிப்புகள்தான். ஃபேனில் தொடங்கி எலெக்ட்ரானிக் பொருள்கள் வரைக்கும் பலவும் சீனாவில் இருந்து வருபவைதான். இதை உடனடியாக முழுமையாக புறக்கணிப்பது என்பது நம்மால் முடியவே முடியாத காரியம். ஏனென்றால், சீனப் பொருள்களை நம் தயாரிப்புகளை வைத்து ஈடுசெய்ய முடியாது. அந்த அளவுக்குச் சீனத் தயாரிப்புகள் நம்மை ஆக்கிரமித்துள்ளன.

முதற்கட்டமாக, குழந்தைகள் விளையாடுகிற சீன பொம்மைகளைப் புறக்கணிக்கச் சொல்லியிருக்கிறோம். பொம்மைகளிலேயே 100 வகையான சீன வெரைட்டீஸ் உள்ளன. மாணவர்கள் பயன்படுத்துகிற பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருள்களில் பலவும் சீனத் தயாரிப்புகள்தாம். அவற்றை மெல்ல மெல்ல தவிர்க்க வேண்டும். இன்று நாம் சமையலறயில் காய்கறிகள் நறுக்க பயன்படுத்தும் கத்திகள் உள்ளிட்ட விதவிதமான பொருள்கள் அனைத்தும் சீனத் தயாரிப்புகள். இவை அனைத்தும் சீனப்பொருள்கள் என்று தெரியாமலே பலர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் மட்டுமன்றி குழந்தைகளின் கரங்கள் வரை சீனத் தயாரிப்புகள் குடியேறிவிட்டன. இவற்றைப் படிப்படியாகத்தான் குறைக்க முடியும்.

நம் நாட்டின் பிரச்னை என்னவென்றால், இங்கே தயாரிக்கிற பொருளின் உற்பத்தி செலவு அதிகம். ஆனால், சீனாவில் 5 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி, 2 ரூபாய் லாபம் வைத்து 7 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடலாம். ஆனால், நம் நாட்டில் உற்பத்தி செலவே 8 ரூபாய் ஆகிறது என்பதுதான் நிதர்சனம். அப்போது பொருளை, பத்து ரூபாய்க்கு விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இயல்பாகவே மக்களுக்கு 10 ரூபாய்க்கு வாங்குவதற்குப் பதில் 7 ரூபாய்க்கு சீனாவில் பொருளை வாங்கி விடுகிறார்கள் என்பதுதான் இயல்பாய் நடக்கிற ஒன்று.

மக்கள் விலையைத்தான் சிந்திப்பார்கள். இதற்குக் காரணம் மக்களின் பொருளாதார சூழல்தான். வணிகத்தில் லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். இதனால்தான் சீனப் பொருள்கள் விற்பனை உச்சத்தில் இருக்கிறது. படிப்படியாக இதைக் குறைக்கலாம். சில மாதங்களுக்கு முன்புகூட சீன பொம்மைகளில் நச்சுப்பொருள்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனாலும் இன்னும் விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

இது வியாபாரிகளின் தவறு மட்டுமல்ல. ஆனால், இறுதியில் வியாபாரிதான் குற்றவாளியாகிறார். லாக்டெளன் காலத்தில் நடந்தவை அதற்கு உதாரணம். அரசுப் பேருந்தில் அறுபது பேர் ஏறிச் செல்கிறார்கள். மதுபானக் கடையில ஆயிரம் பேர் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் கண்டிப்பதில்லை. ஆனால் மளிகைக் கடையில ஆறு பேருக்கு மேல் நின்றால் கடையை அடைக்கச் சொல்லிவிடுகிறார்கள். யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டுறேன். வியாபாரிகளுக்கு இப்படி பல அசாதாரண சூழல் நிலவுகிறது.

நாமே பொருள்களைத் தயாரித்து விற்க அரசிடம் அனுமதி பெறுவது பெரும் சிரமமாக உள்ளது. பலகட்ட வழிமுறைகள், அனுமதிகள் பெறுவதற்குள் வியாபாரிகள் தொய்வுறுகிறார்கள். இவற்றை அரசு எளிமைப்படுத்தி `சிங்கிள் விண்டோவாக' அனுமதி பெற வகை செய்தால் நல்லது. ஒரு அப்ளிகேஷன் போட லஞ்சம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. பத்து அப்ளிகேஷனுக்கு பத்து முறை லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. இதைத் தவிர்த்து ஒரே குடையின் கீழாக அனுமதி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில் பல பொருள்களை இங்கே தயாரித்துவிட முடியும். அதேபோல உற்பத்திக்கான `Raw Material ' க்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். Raw Material-க்குதான் 5 சதவிகிதம் கேட்கிறோம். பொருளாக விற்பனைக்கு வரும்போது 18 சதவிகிதம் அரசுக்கு வருவாயாக வரும். அரசுக்கு நஷ்டம் வராது. இப்படியான சூழல் அரசால் ஏற்படுத்தித் தரப்படும்போது சீனத் தயாரிப்புகளை எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

ஓர் இந்தியா பிராண்ட் எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைக் கண்காணித்து விற்பனை செய்யச் சொல்ல வேண்டும். இறக்குமதி செய்து பிராண்டாக விற்பனை செய்யக் கூடாது. இதை அரசு தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.

Boycott Chinese Products
Boycott Chinese Products
AP
உள்நாட்டு குளிர்பானங்களை ஊக்கப்படுத்தக்கோரியும், வரி விகிதத்தை குறைக்கச் சொல்லியும் அரசிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். இவை கிடைக்கும் பட்சத்தில்தான் நாம் பிற நாட்டுத்தயாரிப்புகளுடன் துணிச்சலாகப் போட்டிப்போட்டு வியாபாரம் செய்யமுடியும்
தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா

யானை பலத்தோடு இருக்கும் அந்த நிறுவனங்களை எதிர்கொள்ள அரசின் ஆதரவு எங்களுக்கு வேண்டுமல்லவா... இதைத்தான் சீனப் பொருள்கள் விவகாரத்திலும் கேட்கிறோம். நாங்கள் சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கத் தயாராகிவிட்டோம்.

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் துவங்கி ஸ்டேஷனரி, ஹேண்ட்பேக், பெண்கள் பயன்படுத்துற க்ளிப் வரை சீனத் தயாரிப்புகள்தான்.

சீனா கால்பதிக்காத ஒரே தயாரிப்பு `ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்' தான்.

சீனாவிலிருந்து வாங்கிவரும் பொருள்களை நம் ஆட்கள் 100 சதவிகித லாபத்துக்கு இங்கே விற்கிறார்கள். நம் நாட்டில் இதே தரத்துடன் பொருள்களைத் தயாரித்து விற்றால் மக்களுக்குக் குறைந்த விலையில பொருள் கிடைக்கும்.

கொரோனா காரணமாகச் சீனப் பொருள்களின் விலை 50 சதவிகிதம் அதிகமாகி உள்ளது. சீனாவை மீறி எதுவும் பண்ண முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அரசு உடன் நின்றால் அனைத்தும் சாத்தியம். லாக்டெளன் முடிந்தவுடன் மாநில முழுவதும் கூட்டம் போட்டுச் சொல்ல பத்து செயல்திட்டங்கள் வைத்திருக்கிறோம். பத்தாவது செயல்திட்டம் நடைபெறுகையில் சீனத் தயாரிப்புகள் முழுவதும் புறக்கணித்திருப்போம்" என்றார்

அடுத்த கட்டுரைக்கு