Published:Updated:

ரூ.2,000 கோடி நிறுவனமாக வளர்ச்சி... வெற்றிநடை போடும் ‘வாக்கரூ!’

நவ்ஷத்
பிரீமியம் ஸ்டோரி
நவ்ஷத்

பிசினஸ்

ரூ.2,000 கோடி நிறுவனமாக வளர்ச்சி... வெற்றிநடை போடும் ‘வாக்கரூ!’

பிசினஸ்

Published:Updated:
நவ்ஷத்
பிரீமியம் ஸ்டோரி
நவ்ஷத்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் சாதாரண குடும்பத்தில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தந்தைக்குப் பிறந்தவர் தான் நவ்ஷத். அவரின் தந்தை, காலணி உற்பத்தி செய்யும் தொழிலில் இறங்கி, வி.கே.சி என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, சிறிய அளவில் செய்து வந்தார். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வசதியெல்லாம் அவருக்குக் கிடையாது. ஆனால், அன்று தொடங்கிய வி.கே.சி நிறுவனம், 2013-ல் ‘வாக்கரூ’ நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. இன்று ரூ.2,000 கோடி டேர்ன் ஓவர் கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக முன்னேற்றம் கண்டிருக்கிறது வாக்கரூ. சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நவ்ஷத்தை சந்தித்தோம். வாக்கரூ நிறுவனத்தின் வெற்றிக் கதையைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

நவ்ஷத்
நவ்ஷத்

‘‘என் அப்பா டீக்கடை யிலும், ஒப்பந்தத் தொழிலாளி யாகவும் இருந்தவர். 1984-ல் தான் வி.கே.சி ரப்பர் காலணி உற்பத்தி செய்யும் பிசினஸை தொடங்கினார். அதுவும் சின்னதாகத்தான். பல ஆண்டுகளுக்கு அதை ஒரு சிறிய நிறுவனமாக, எஸ்.எம். இ மனநிலையில்தான் நடத்தி வந்தார். அவர் படிக்காத காரணத்தால் படிப்பின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

ஒருகட்டத்தில் நான் என்னவாகப் போகிறேன் என்ற கேள்வியைக் கேட்ட போது, எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. படித்து ஏதாவது வேலைக்குப் போகலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால், வேலைக்குச் செல் வதைவிட தொழில் செய்தால் பலருக்கு வேலை தரலாம்; பலருடைய வாழ்க்கையை மாற்றலாம் என்று அப்பா சொன்னார். அப்பாவின் வார்த்தைகள் எனக்குள் உத்வேகத்தைக் கொடுத்தன.

எனவே, காலணி உற்பத்தித் தொழில் சார்ந்தே படிக்கலாம் என்று நினைத்தேன். பி.டெக் முடித்ததும், எம்.டெக் பாலிமர் சயின்ஸ் படிப்பைப் படித்தேன். அதுதான் என் ஃபுட்வேர் பிசினஸ் வளர்ச்சிக் குப் போட்ட விதை.

படித்து முடித்தவுடனே அப்பாவுடன் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று தான் யோசித்தேன். ஆனால், பிடெக் முடித்ததும் பெரிய அளவில் தொழிலுக்கு என்னால் உதவ முடியவில்லை. தொழில் சார்ந்து மேலும் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளவே எம்.டெக் பாலிமர் சயின்ஸ் படித்தேன். அது மிகவும் உதவியாக இருந்தது.

ஒரு காலத்தில் ஒரு சிலர் மட்டுமே செருப்பு அணிந்தனர். பிற்பாடு எல்லோரும் காலணி அணியத் தொடங்கிய பின்பும்கூட பொருளாதாரம் காரணமாக பலர் காலணிகளுக்காக அதிகம் செலவு செய்ய விரும்பவில்லை. இன்று நாகரிகம் வளர்ந்து, நவீன யுகத்தில் இருக்கிறோம். காலணி என்பது அத்தியாவசியம் என்பதிலிருந்து மாறி, ஃபேஷன் என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறோம். எல்லாப் பயன்பாட்டுக்கும் ஒரே காலணி என்பதும் மாறி, அந்தந்தப் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வகை காலணிகளும் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

சிலர் ஒவ்வொரு வகையான உடைக்கும் ஏற்ப காலணிகள் அணியவும் விரும்புகிறார்கள். அதனால் காலணிகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. டிமாண்ட் அதிகரிக்கும்போது எங்களுக்கான பிசினஸ் வாய்ப்பும் அதிகரித்தது. குறிப்பாக, எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் தரமான காலணிகளை உருவாக்கும் நிறுவனமாக வாக்கரூ இருந்தது.

முன்பே கூறியதுபோல காலணி ஃபேஷன் சாதன மாக மாறிய பிறகு, அது பணக்காரர்களுக்கானதாக மட்டுமே மாறிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். குறைந்த விலையில் காலணிகளை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் ஃபேஷனை ஜனநாயகப்படுத்துவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களையும், காலணி வகைகளையும் ஆய்வு செய்து எங்களுடைய தயாரிப்புகளை டிசைன் செய்தோம்.

வாடிக்கையாளர்களின் தேவை, விருப்பத்தை முதலில் ஆய்வு செய்து அதற்கேற்ப மாடல்களைக் கொண்டுவந்தோம். நான்-லெதர் என்று சொல்லப் படுகிற பி.வி.சி, பாலி யூரித்தேன் ஆகியவற்றிலான காலணிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் முழுக் கவனத்தைச் செலுத்தினோம். சந்தையில் இருக்கும் ட்ரெண்டுக்கேற்ப புராடக்டுகளை சுழற்சி முறையில் உற்பத்தி செய்துவருவதால், தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விருப்பமான பிராண்டாக வாக்கரூ மாறியிருக்கிறது.

ஆனால், வாக்கரூ நிறுவனத்தின் திருப்புமுனை தருணத்தை நிகழ்த்தியது தமிழ்நாடுதான். கேரளத்தில் சிறிய எஸ்.எம்.இ-ஆக இருந்த எங்களுடைய பிசினஸ், நான் கோயபுத்தூருக்கு வந்த பிறகுதான் வளர ஆரம்பித்தது. அங்கிருந்த பெரிய பெரிய தொழில் நிறுவனங்களைப் பார்த்துதான் நாங்களும் எஸ்.எம்.இ மனநிலையிலிருந்து வெளியே வந்தோம். அதுவரை இருந்த இதுபோதும் என்ற மனநிலையும், பெரிய அளவில் விரிவுபடுத்தினால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகமும் உடைந்தது. கோயம்புத்தூரில் 2004-ல் உற்பத்தி நிலையத்தை அமைத்தோம். அதை விரிவுபடுத்தியதால் கஷ்டமோ, சிக்கலோ இல்லை. துணிந்து இறங்கி னோம். பிசினஸ் நன்றாக வளர ஆரம்பித்தது.

இப்போது தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. வடக்கில் ஹரியானா, பஞ்சாபில் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 700-க்கும் மேலான டீலர்கள் உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேலான ரீடெயில் கடைகள் வாக்கரூ பிராண்டுகளை விற்பனை செய்து வருகின்றன. 20 ஆண்டுகால உழைப்பின் மூலம் இந்தியா முழுவதும் வாக்கரூ பிராண்டுக்கான விநியோக சங்கிலியைக் கட்டமைத்திருக்கிறோம்.

ரூ.2,000 கோடி நிறுவனமாக வளர்ச்சி... வெற்றிநடை போடும் ‘வாக்கரூ!’

வாக்கரூ நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மொத்த விற்பனை மதிப்பு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் காலணி சார்ந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட போது, உற்பத்திக்கான மூலப் பொருள்களின் விலையெல்லாம் 65% அளவுக்கு உயர்ந்தது. இதனால் காலணிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இது நேரடியாக ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதித்தது. அதிக விலை கொடுத்து வாங்க முடியாததால், குறைந்த விலைக்கு தரமில்லாத காலணிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இதனால் குறிப்பிட்ட சதவிகிதத்தில் வாடிக்கையாளர் களை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகவே தொடர்ந்து குறைந்த விலையிலான தயாரிப்பு களை தரமாக வழங்கும் முயற்சி களைத் தீவிரமாக வாக்கரூ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது” என்று முடித்தார்.

உலக அளவில் நான்-லெதர் காலணி சந்தையில் சீனா 60 சத விகிதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறது. இதில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் வாக்கரூ நிறுவனமும் ஈடுபட்டுவருகிறது. இதனால் உள்நாட்டுச் சந்தையில் மட்டு மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. அதற்கேற்ப விநியோக சங்கிலியை உருவாக்கிவருகிறது.

சீனாவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனம் ஒன்று, அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் வளர்வது பெருமைக்குரிய விஷயம்தானே!