Published:Updated:

``அரசு உதவி செய்ய வேண்டாம்... எங்க தொழிலை ஒழுங்கா நடத்தவிட்டாப்போதும்” - குமுறும் நெசவாளர்கள்!

நெசவுத் தொழில்
நெசவுத் தொழில்

"கண் பார்வை சீக்கிரமா பாதிச்சுரும். ஆனாலும் இந்தத் தறியை விட்டுட்டு வேற எந்தத் தொழிலுக்குப் போகவும் மனசு வரல. என்ன கஷ்டம் வந்தாலும், நீங்களும் நெசவுதான் செய்யணும்னு என் புள்ளைங்ககிட்ட சொல்லி வெச்சுருக்கேன்."

கொரோனா, மக்களின் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நோய் குறித்த பயம் ஒருபுறம், வாழ்வாதார இழப்பு மறுபுறம் என மக்கள் திண்டாடி வருகிறார்கள். இத்தகைய வாழ்வாதார இழப்பைப் பொருளாதார வீழ்ச்சி என்ற ஒரு வார்த்தையில் எளிதாகக் கடந்து விடுகிறது அரசு. கொரோனாவுக்குப் பிறகு வேலையிழப்பு பிரச்னை உலகை உலுக்கும் ஒன்றாக மாறலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் வேலை வாய்ப்பானது தொழில் நிறுவனங்களை நம்பி மட்டும் இல்லை. விவசாயம், நெசவு போன்ற பாரம்பர்ய தொழில்களை நம்பியும் இருக்கிறது என்பதால் உரிய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் வேலையிழப்பு பெருமளவு ஏற்படுவதை அரசால் தவிர்க்க முடியும்.

நெசவாளர்கள்
நெசவாளர்கள்

ஆனால், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதால் விவசாயிகள் நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்வதில் தொடங்கி, அதை சந்தைகளில் விற்பனை செய்வது வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அறுவடை செய்த பொருள்களை, வாங்க ஆள் இல்லாது குப்பைகளில் வீசிச் செல்கிறார்கள். விவசாயிகளின் நிலை இதுவென்றால், நெசவாளர்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

உலகளவில், இந்திய நெசவானது சிறப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகளவில் கைகளால் நெசவு செய்த துணிகளில் 95 விழுக்காடு இந்தியாவிலிருந்துதான் பெறப்படுகிறது என மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது. மேலும், இந்தியளவில் கைத்தறிவு நெசவில் மட்டும் 43.32 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். நாட்டின் துணி உற்பத்தியில் 15 சதவிகிதம் உற்பத்தி செய்வதோடு, அந்நியச் செலாவணி அதிகரிக்கவும் நெசவு பெருமளவில் உதவுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் நெசவாளர்களின் நிலை, தலைமுறை தலைமுறையாக இன்னும் எந்த ஏற்றமும் இல்லாமலேயே இருக்கிறது. இந்தக் கொரோனா ஊரடங்கு நெசவாளர்களின் வாழ்க்கையை இன்னும் சோதனைக் காலமாக மாற்றிவிட்டது. துணிகளை உற்பத்தி செய்ய நூல், பாவு போன்ற அடிப்படை பொருள்களே கிடைக்காமல் நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். இது குறித்து சில நெசவாளர்கள், நெசவை நம்பி தொழில் செய்பவர்கள் சிலரிடம் பேசினோம்.

கொரோனா ஊரடங்கு உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் நெசவாளர்கள்... #Lockdown #Weavers வீடியோ ஒருங்கிணைப்பு சு.சூர்யா கோமதி

Posted by Vikatan EMagazine on Thursday, May 14, 2020

``கொரோனா வந்துச்சு, ஊரடங்கு அறிவிச்சாங்க, வாழ்க்கையே இருண்டு போச்சும்மா. தறியில கை வெச்சு முழுசா ரெண்டு மாசம் ஆகப்போகுது. எப்போ கேட்டாலும் இன்னும் நூல் வரலைனு சொல்றாங்க'' என்று பேசத் தொடங்குகிறார் மூன்று தலைமுறையாக பட்டு நெசவில் இருக்கும் சரவணன்.

``தறி எங்களுக்கு அம்மா மாதிரி. நாங்க பொறந்ததிலிருந்து சாகுற வரை எப்போதும் அந்தச் சத்தம் எங்க காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கும். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து தறி நெஞ்சுட்டு இருக்கேன். முதல் முறையா தறிச்சத்தம் கேட்காம என்னோட இத்தனை நாள்கள் போயிருக்கு. சாதாரண நாளில் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் தறியில் உட்காருவோம். மாசத்துக்கு மூணு சேலைதான் நெய்ய முடியும். ஒரு சேலைக்கு நாலாயிரத்திலிருந்து ஆறாயிரம் வரை அதன் டிசைனைப் பொறுத்து காசு கொடுப்பாங்க. வாங்குற காசு வாயிக்கும் வயித்துக்கும் சரியா இருக்கும். நிறைஞ்ச வருமானம் இல்லைனாலும், எங்களோட சந்தோஷம் இந்தத் தறியிலதான் இருக்கு. முதுகு வலி வரும், கூர்ந்து பார்த்து கண் பார்வை சீக்கிரமா பாதிச்சுரும். ஆனாலும் இந்தத் தறியை விட்டுட்டு வேற எந்தத் தொழிலுக்குப் போகவும் மனசு வரல. என்ன கஷ்டம் வந்தாலும், நீங்களும் நெசவுதான் செய்யணும்னு என் புள்ளைங்ககிட்ட சொல்லி வெச்சுருக்கேன்'' என பாதி நெய்தவாறு தறியில் இருக்கும் புடவையை தொட்டுப்பார்த்து சில நிமிடங்கள் அமைதியாகித் தொடர்கிறார் சரவணன்.

``நாங்கெல்லாம் அன்றாடாங்காட்சிகள், தறியில உட்கார்ந்தால்தான் காசு. இந்த ரெண்டு மாசமா எந்த வேலையும் இல்ல. எங்களுக்குனு எந்தச் சேமிப்பும் கிடையாதும்மா. காசில்லாத நாள்களில் டீயைக் குடிச்சு வயித்த நிரப்புவோம். ஆனா, இப்போ அதுக்கும்கூட வழியில்லாம போச்சு. நெசவு நம்முடைய பாரம்பர்யம்னு சொல்லிக்கிற யாரும், எந்த அரசும் நெசவாளர்களுக்குனு பெரிசா ஒன்னும் பண்ணல. ஊரடங்குக்கு அரசு கொடுத்த பொருள்கள் எத்தனை நாளைக்கு வரும். நெசவாளர்களுக்கு நிதியுதவி கொடுக்குறதா சொன்னாங்க. ஆனா, இப்போ நெசவாளர் அட்டை இல்லாதவங்களுக்கு இல்லைனு சொல்றாங்க. காஞ்சிபுரத்துல 2000 குடும்பத்துக்கு மேல நெசவாளர் குடும்பங்கள் இருக்கோம். எல்லோரும் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுட்டு இருக்கோம். ஊரடங்கை நீட்டிக்க போறோம்னு சொல்றாங்க. இன்னும் 10 நாள் ஊரடங்குனு அறிவிச்சா கண்டிப்பா எங்க நிலைமை என்ன ஆகும்னு கூட யோசிக்க முடியலம்மா. குழந்தைகளுக்கு மூணுநேரம் சாப்பாடு கொடுக்க முடியாத கஷ்டத்தை வார்த்தையில் சொல்லிட முடியாது. எங்களுக்கு அரசு உதவிகள் எல்லாம் செய்யணும்னு எதிர்பார்க்கல. எங்க தொழிலைத் தொடர்ந்து செய்ய அனுமதி கொடுத்தா போதும். நாங்க பொழைச்சுக்குவோம்" என்கிறார் சரவணன்.

Vikatan

கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த சிவாவிடம் பேசினோம். ``நெசவாளர்களுக்குத் தேவையான நூல், டிசைன், பாவு கொடுத்து, அவங்க நெய்யுற சேலையை மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வியாபாரம் செஞ்சுட்டு இருக்கேன். இதன்மூலமா 40 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைச்சுருந்தது. நூல்கள் எல்லாம் வெளியூர்களிலிருந்து வரும், போக்குவரத்து முடங்குனதால் நூல்கள் உட்பட எந்த மூலப்பொருளும் வாங்க முடியல. நெய்த சேலைகளையும் விற்பனை செய்ய முடியாம குடோன்ல அடுக்கி வெச்சுருக்கோம்.. நெசவாளர்கள் குடும்பங்களும் வேலைவாய்ப்பு இல்லாம தவிக்கிறாங்க. பொதுவா, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நிறைய திருமணங்கள் நடக்கும். அதனால, நிறைய ஆர்டர்களும் வரும். ஊரடங்கு இருப்பதால் நிறைய பேர் திருமணத்தை ரொம்ப சிம்பிளா வீட்டிலேயே செய்வதால் வியாபாரமே இல்லாமல் போச்சு.

ஊரடங்கு முடிஞ்சாலும் கூட பெரிய அளவு வியாபாரம் இருக்கும்னு சொல்லமுடியாது. கடனை வாங்கிதான் நிலைமையைச் சரிசெய்யணும். ஏற்கெனவே இருக்க கடன்களையும் அடைக்கணும். அரசு தினமும் கடனுதவிகள் அறிவிச்சுட்டு இருக்காங்க. அந்தக் கடனையும் நாங்கதானே கட்டியாகணும். அதுக்குப் பதிலா ஜி.எஸ்.டி வரி விலக்கு கொடுக்கலாம். தொழிலாளர்கள் நிலைமையைச் சரிசெய்யாம தொழிலை முன்னேற்ற செய்ய திட்டம் போடுறதுல என்ன பயன் இருக்கு'' எனகிறார் சிவா.

கைத்தறி நெசவுக்கூடம்
கைத்தறி நெசவுக்கூடம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம், ``நெசவாளரா பிறந்ததுக்கு இன்னும் என்ன கஷ்டங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியல. நாங்க நெய்யற பட்டுதான் வண்ணமயமாக இருக்கு. ஆனா, எங்க வாழ்க்கை இருட்டுலதான் இருக்கு. எல்லாமே நவீனம் ஆனதால் கைத்தறி நெசவுக்கு மவுசு குறைஞ்சு போச்சு. கிடைக்குற ஆர்டர்களை வெச்சுதான் வாழ்க்கை நடத்திட்டு இருந்தோம். இந்தக் கொரோனா வந்ததால் இன்னும் பாதிப்பு அதிகமாயிருக்கு.

தறியில் நூல் சுத்தி 50 நாள் ஆச்சு. கடனை வாங்கித்தான் ரெண்டு மாச பொழுதைக் கழிச்சுருக்கோம். பாதி நெஞ்சதோட சீலை தறியில நிக்கிது. அது கலரு வெளுத்தாலும் அதுக்கும் சேர்த்து நாங்க தான் காசு கொடுக்கணும். இதுல கரென்ட் பில் வேற கட்டச் சொல்லி கெடு கொடுத்துருக்காங்க. சாப்பாடுக்கே வழியில்லாம இருக்கும்போது கரென்ட் பில் கட்டச் சொன்னா எங்கம்மா போவோம்.

சேலைகள்
சேலைகள்

ஊரடங்கு தொடரும்னு சொல்றாங்க. சினிமா வேலை நடக்க அனுமதி கொடுக்குற அரசு, தறி நெய்ய அனுமதி கொடுத்தா, எங்க புள்ள குட்டிகளாவது வாழும். ஒட்டுமொத்த நெசவாளர்களும் கையெடுத்து கும்பிட்டுக் கேக்கிறோம் எங்க தொழிலுக்கு தளர்வு கொடுங்க" என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு