Published:Updated:

ரஜினி முதல் விஜய் வரை... ஆடை தயாரிப்பில் அசத்தும் ராஜீவ்! வெற்றி அனுபவம் பகிர்கிறார்...

ராஜீவ் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜீவ் ஷா

BUSINESS

தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். பிசினஸ் களத்தில், மக்களுக்கான தேவைகள் தான் நமது வெற்றியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன. இதைச் சரியாக அறிந்து, தனது பிசினஸ் பயணத்தை மாற்றியமைத்து வெற்றிகண்ட ராஜீவ் ஷா, மேற்கத்திய ஆடைகளைச் சென்னையில் பிரபலப்படுத்தியதில் முதன்மை யானவர். சென்னை தி.நகரிலுள்ள ‘லகான்’ ஆடையகத்தின் உரிமை யாளரான ராஜீவ், சாமானியர்கள் முதல் பலதுறை வி.ஐ.பி-க்கள் வரை அனைவரையும் வாடிக்கையாளர் களாகக் கொண்டிருக்கிறார். தனது தொழில் பயண அனுபவங்களைப் பகிரும் ராஜீவுடன் சந்திப்பு, நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கூட்டின.

“என் பூர்வீகம் குஜராத். என்னோட முன்னோர்கள், 1950-கள்ல சென்னையில் குடியேறினாங்க. காலேஜ் முடிச்சதுமே பிசினஸ்ல இறங்கின என்னோட அப்பா, 1960-கள்ல பாண்டிபஜார்ல ஜவுளிக்கடை ஆரம்பிச்சார். சீரான வளர்ச்சியுடன் பிசினஸ் போன நிலையில, திடீர்னு அப்பாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுச்சு. அதனால, ஸ்கூல் படிப்பை முடிச்சதுமே அப்பாவின் பிசினஸை நான் கவனிக்க ஆரம்பிச்சேன். 1990-கள்லதான் இருபாலருக்குமான தனித்தனி டிரஸ் ஷோரூம் தொடங்குறது பிரபலமாச்சு. அந்தச் சூழலைச் சரியா கணிச்சு, ஆண் களுக்கான ஆடைகளை மையப் படுத்தி புதுப்புது தொழில் வாய்ப்புகளை உருவாக்கினோம்.

பிரபல பாண்டலூன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வுடன் புது ஷோரூம் ஆரம்பிச்சோம். முன்னணி ஜீன்ஸ் ஆடை தயாரிப்பு நிறுவனத்துடன் இணைஞ்சு, தெற்கு ஆசியாவுல ஆண்களுக்கான முதல் பிரத்யேக ஷோரூமை சென்னையில ஆரம்பிச்சு, குறைந்த விலைக்கு ஜீன்ஸ் பேன்ட் விற்பனை செஞ்சோம். அடுத்தடுத்த புது முயற்சிகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சாலும், எங்களுக்குனு தனித்துவமான அடையாளம் கிடைக்கல” - இப்படி சுய அடையாளத்துக்கான தேடலில் இருந்த ராஜீவ், தனது திருமணத்தின் மூலம் மேற்கத்திய ஆடைகளுக்கான வரவேற்பை அறிந்து, புதிய ஷோரூமைத் தொடங்கி பிரபலப் படுத்தியிருக்கிறார். அதை அவரே தொடர்ந்து சொன்னார்.

ராஜீவ் ஷா
ராஜீவ் ஷா

“20 வருஷங்களுக்கு முன்பே, வட இந்திய கல்யாணங்கள்ல ஆடம்பர மான மேற்கத்திய ஆடைகளை மணமகன்கள் உடுத்துவது பிரபலமாச்சு. அடிப்படையில நானும் வட இந்தியாவைச் சேந்தவன் என்பதால, என்னோட கல்யாணத்தின்போது எனக்கான வெஸ்டர்ன் டிரஸ் வாங்க சென்னையில நிறைய கடைக்கு ஏறி இறங்கினேன். அப்போ சென்னையில ஒரே ஒரு ஷோரூம்ல மட்டும் கோட் - சூட் கிடைச்சது. ஷெர்வானி, குர்தா உள்ளிட்ட மற்ற வெஸ்டர்ன் கிளாத்ஸ் எதுவும் கிடைக்கல. இதுக்காக, பெங்களூர், மும்பை போன்ற இடங்களுக்குத்தான் போக வேண்டிய நிலை இருந்துச்சு.

அந்த அலைச்சல் எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்புச்சு. மணமகனுக்குத் தவிர, ஆபீஸ்ல உயர் பொறுப்புகள்ல இருப்போர், சமூகத்துல முக்கியமான பொறுப்புல இருப்போர், சினிமா மற்றும் பிசினஸ் நட்சத்திரங்கள்னு பலதரப்பினருக்கும் இந்த மேற்கத்திய ஆடைகள் தேவைப்படும். வருங்காலங்கள்ல இந்த ஆடைகளுக்கான தேவை அதிகரிக்கும்னு கணிச்சேன். இதுக்கான பிரத்யேக ஷோரூம் தொடங்கினா, நமக்கான தனித்துவமும் உருவாகும்னு முடிவெடுத்து, எங்களுடைய டிரஸ் ஷோரூம்ஸ் எல்லாத்தையும் மூடிட்டு, 2001-ல் இந்த பிரத்யேக ஷோரூமைத் தொடங்கினோம். ‘எந்த விசேஷமா இருந்தாலும், தமிழ்நாட்டு ஆண்கள் வேட்டி சட்டைதான் உடுத்துவாங்க. இந்த ஆடைகளுக்கெல்லாம் பெரிசா வரவேற்பு கிடைக்காது. இது தவறான முடிவு’னு பலரும் எதிர்மறையா சொன்னாங்க. ஆனா, என்னோட நம்பிக்கையில உறுதியா இருந்தேன். எனக்குப் பக்கபலமா இருந்த அப்பா, என்னோட ஒவ்வொரு முயற்சிக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார்.

முதல் ரெண்டு வருஷங்கள்ல பெரிசா வளர்ச்சி இல்ல. வட இந்தியர்கள் விரும்பும் அடர்நிறம், ஆடம்பரமான டிசைன்கள் தென்னிந்தியர்களுக்குப் பிடிக்கலைனு தெரிஞ்சது. இது போன்ற ஆடைகளின் விலை அதிகமா இருந்ததும் மைனஸா தெரிஞ்சது. மக்களின் தேவைக்கு ஏற்ப, நம்மோட தயாரிப்புகளும் விற்பனைப் பொருள்களும் இருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும் என்கிற படிப்பினை மூலமா அதை அழுத்தமா உணர்ந்து, தென்னிந்திய மக்களின் ரசனை மற்றும் தேவைக்கு ஏற்பவும், அதிகளவிலான கலெக்‌ஷன்களுடனும் எங்க ஷோரூமை மாத்தினோம். நடுத்தர மக்களுக்கும் கட்டுப்படியான விலையில ஆடைகளைத் தயாரிச்சோம். பிசினஸ் படிப்படியா வளரவே, அதற்கேற்ப ஷோரூமையும் விரிவுபடுத்தினோம். இப்போ பத்தாயிரம் சதுர அடியிலுள்ள எங்க ஆடையகத்துல, ஷெர்வானி, இண்டோ - வெஸ்டர்ன், கோட் - சூட், குர்தா உட்பட எல்லா வகையான மேற்கத்திய ஆடைகளும் இருக்குது” என்றார். மேற்கத்திய ஆடைகளுக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த ராஜீவ் இப்போது பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்து அசத்துகிறார்.

“மேற்கத்திய ஆடைகளைப் பொறுத்த வரை, டிசைன்ஸ் ரொம்ப முக்கியம். டெல்லியிலுள்ள எங்க உற்பத்திக் கூடத்துல, இதுக்காகவே ஏராளமான தொழிலாளர்கள் மெனக்கெட்டு புதுப்புது ஆடைகளைத் தயாரிக்குறாங்க. அஞ்சு பேர் 20 நாள்களுக்கு வேலை செஞ்சாதான், ஓர் ஆடையைத் தயாரிக்க முடியும். ஒரு வெரைட்டி ஆடையில ஒரு டிசைன் மட்டுமே தயாரிப்பதை வாடிக்கையா கொண்டிருக்கோம். ‘தசாவதாரம்’ படத்துல கமலும், ‘துப்பாக்கி’ படத்துல விஜய்யும் எங்க தயாரிப்பு ஆடைகளைப் பயன்படுத்தியிருக்காங்க. ரஜினி ரெகுலரா பயன்படுத்துற வெள்ளை நிற குர்தா பைஜாமா ஆடைகள் எங்களோட தயாரிப்பு தான். சினிமா, அரசியல், தொழில் பிரபலங்கள் பலரும் எங்களோட ரெகுலர் வாடிக்கையாளர்கள் என்பதுல கூடுதல் பெருமை.

பத்து வருஷங்களுக்கு முன்புவரை, இது போன்ற மேற்கத்திய ஆடைகளை விசேஷ தருணங்கள்ல மட்டுமே ஆண்கள் பயன்படுத்தினாங்க. ஆனா, நாகரிக வளர்ச்சி, சினிமா, சமூக வலைதளங்களின் தாக்கம், தொழில் பயணத்துல இந்த ஆடைகள் பயன்பாடு பலருக்கும் அன்றாட தேவையா மாறிடுச்சு. தேவை கூடக்கூட, எங்களுக்கான பொறுப்பும் வேலைகளும் கூடுது.

20 வருஷங்களுக்கு முன்னாடி, எங்களுக்குப் போட்டியாளர்கள் யாருமில்ல. இப்போ போட்டி யாளர்கள் பலரும் பெருகிட்டாங்க. பிசினஸைப் பொறுத்தவரை, நாளைக்கான வளர்ச்சியைப் பத்தி இன்னிக்கு யோசிக்கக் கூடாது. அடுத்த 5 - 10 வருடங்களுக் கான வளர்ச்சிக்கு இப்போதே வேலை செய்யணும். அப்போ தான் போட்டிச் சூழல்களைச் சமாளிச்சு, நீண்டகாலத்துக்கு வளர முடியும். நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப, எங்களோட உழைப்பு நிச்சயம் உயரும். அதற்கு, எப்போதும் உற்சாகமா உழைக்கத் தயாரா இருக்கோம்” - உறுதியுடன் முடிக்கும் ராஜீவ் ஷா, தனது பாசிட்டிவிட்டியை நமக்கும் கடத்த, நமக்குள்ளும் அந்த பாசிட்டிவ் எனர்ஜி பற்றிக் கொள்கிறது.