Published:Updated:

லாக்டௌனுக்குப் பிறகு சீன ஷோரூம்களில் குவிந்த மக்கள்... அதென்ன ரிவெஞ்ச் ஷாப்பிங்?

உள்ளுணர்வால் திடீரென பொருள்களை வாங்கித் தீர்க்கும் படலம் (Revenge shopping) என்பது நம்மூரில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே காணக்கூடிய போக்காக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவிட் லாக்டௌன் முடிந்து, இப்போது நம்மில் பலரும் வெளியே உலாவத் தொடங்கிவிட்டோம். மனதில் கொஞ்சம் பயம் இருந்துகொண்டே இருந்தாலும், `அதை எல்லாம் பார்த்தா வாழ முடியுமா?’ என நமக்கே நமக்கு தைரியம் சொல்லிக்கொண்டு, ஊர் சுற்றத் தொடங்கிவிட்டோம். பழையபடி மால், சூப்பர் மார்க்கெட் என்று நம் கால்கள் போகத் தொடங்கிவிட்டன.

பாதுகாப்பாக இருக்கும்பட்சத்தில் இதில் தவறொன்றும் இல்லைதான். ஏப்ரல், மே மாதம் முழுக்க நாம் வாழ்ந்தது வீட்டு ஜெயில் வாழ்க்கைதானே! சந்தோஷமாக வீட்டை விட்டு வெளியே வர முடிந்ததா, இஷ்டப்பட்ட உணவை வாங்கிச் சாப்பிட முடிந்ததா, கடை கண்ணிகளுக்குச் சென்று வாங்க நினைத்த பொருள்களை வாங்கத்தான் முடிந்ததா? ம்ஹூம்.

``இந்த லாக்டௌன் மாதங்களில் நாம் எதையெல்லாம் நாம் வாங்க வேண்டும் என்று நினைத்தோமோ, அதை எல்லாம் இப்போது வாங்கிவிட வேண்டும்" என்கிற வெறி பலரது மனங்களில் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கலாம். ``இத்தனை நாளும் எந்தப் பொருளையும் வாங்கவிடாமல் போயிற்றல்லவா? இனி எல்லாப் பொருள்களையும் வாங்கி அனுபவிப்போம்" என்கிற ஆசை சிலருக்குத் துளிர்விட்டிருக்கலாம்.

இப்படிப்பட்ட, உள்ளுணர்வுகளால் திடீரென பொருள்களை வாங்கித் தீர்க்கும் படலம் (Revenge shopping) என்பது நம்மூரில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே காணக்கூடிய போக்காக இருக்கிறது. சீனாவிலும் சரி, இத்தாலியிலும் சரி, கோவிட் முடிந்த பிறகு கைக்குக் கிடைத்த பொருள்களை எல்லாம் வாங்கிவிட வேண்டும் என்கிற பரபரப்பு எல்லாரிடமும் இருக்கவே செய்கிறது. அப்படித்தான் சீனாவின் ஷோரூம்கள் முன்னர் லாக்டௌன் முடிந்ததும் மக்கள் குவிந்தனர்.

பலரது வருமானம் பாதியாகக் குறைந்துள்ள இந்த நிலையிலும், அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று நம் காதுகளில் வந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன பல விளம்பரங்கள்.

Shopping
Shopping
Photo by Morning Brew on Unsplash

வாங்கத் தூண்டும் விளம்பரங்கள்

மால்களில் இருந்து வெளியே வரும் மக்களைக் கவனியுங்கள். கையில் குறைந்தபட்சம் ஏழெட்டு பைகளாவது இருக்கும். அவற்றில் பலவற்றையும் அவர்கள் வாங்க வேண்டும் என்று எண்ணி வரவில்லை. ஆனால், அங்கு ஷோரூம்களில் காட்டப்படும் விளம்பரங்கள், சலுகைகள் ஆகியவற்றைப் பார்த்ததும் அதை வாங்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றன. திரும்பிய இடமெல்லாம் காணப்படும் `சேல், சேல்’ என்ற அறைகூவல்கள், இப்போது விட்டால் பிறகு விலை ஏறிவிடுமோ என்ற டென்ஷனை ஏற்படுத்துகின்றன. விளைவு, ஏழெட்டு பைகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விற்பனையாளர்கள், தங்கள் விளம்பரங்களை மிக சாதுர்யமாக நம் உணர்வுகளோடு பிணைத்து அவர்களுடைய பிராண்டுகளை நம் மூளையில் பதிய வைத்துவிடுகிறார்கள். பற்பசை முதல் உள்ளாடைகள் வரை பிராண்டட் பொருள்களையே நாம் நாடுவதற்குக் காரணம், விளம்பரங்கள் படுத்தும் பாடுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வரை விளம்பரத்தின் நோக்கம் தங்கள் பொருள்களின் நன்மைகளை எடுத்துரைத்து மக்களை வாங்கும்படி தூண்டுவது மட்டுமாகத்தான் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் கம்பெனிகள் உளவியலாளர்களின் உதவியை நாடத் துவங்கின. காதல், பாசம், பயம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலம் ஒரு விளம்பரம் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்று உளவியலாளர்கள் கண்டறிந்தனர். அல்லித் தண்டு கால்கள் தள்ளாட நடைபழகும் ஒரு குழந்தை அல்லது வாஞ்சையுடன் ஓடிவரும் ஒரு நாய்க்குட்டி போதும்... ஒரு பிராண்டை நிலைநிறுத்துவதற்கு என்று நிரூபித்தனர்.

Shopping
Shopping
Photo by Lucrezia Carnelos on Unsplash

இருபதாம் நூற்றாண்டில் இவற்றுடன் நிறங்களும் சேர்ந்துகொண்டன. வெறும் பேப்பரில் கறுப்பு வெள்ளையாக விளம்பரங்கள் வந்த காலம் போய், டிவி, சினிமா தியேட்டர் ஆகியவற்றில் வரும் விளம்பரங்கள் வண்ணமயமாக மின்னி நம் கருத்தைக் கவர்கின்றன. சிவப்பு நிறம் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தூண்டுவதையும், பச்சை நிறம் ஆரோக்கியம், இயற்கை போன்றவற்றை நினைவூட்டி, மனதை அமைதி கொள்ளச் செய்வதையும் விளம்பரங்கள் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

கல்யாணம், திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளைக் காட்டி, அவற்றைப் பார்க்கும்போது நம் மனதில் ஏற்படக்கூடிய பாசிட்டிவ் எண்ணங்களை அந்தப் பொருள்களுடன் பிணைத்துவிடுவதால், நகை என்றால் இந்தக் கடைதான், புடவை என்றால் அந்தக் கடைதான் என்பது போன்ற எண்ணங்களை எளிதில் விதைத்துவிடுகின்றன.

தப்பிப்பது எப்படி?

சரி, இந்த விளம்பர வலையில் சிக்கி, ரிவெஞ்ச் ஷாப்பிங் என்கிற வெறித்தனத்துக்குள் நாம் விழுந்துவிடாமல் தப்பிப்பது எப்படி?

1. பொருள்களை வாங்கச் செல்லும்போது தவறாமல், ஒரு லிஸ்ட் எடுத்துச் செல்லவேண்டும். அந்த லிஸ்ட்டில் இல்லாத பொருள்களை வாங்கக் கூடாது.

2. அதிக விலை உள்ள டிவி, செல்போன் போன்ற பொருள்களை வாங்க முற்படும்போது, ரிசர்ச் எனப்படும் ஆராய்ச்சி முக்கியம். வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே இந்தப் பொருளை இன்ன விலையில்தான் வாங்க வேண்டும் என்று தீர்மானித்து விட வேண்டும்.

3. பிராண்டட் பொருள்கள் மட்டுமே தரமானவை என்ற எண்ணம் கூடாது. திறந்த மனதுடன் விலை குறைந்த பொருள்களை பரிசோதனை முறையில் வாங்கும் பழக்கம் வேண்டும்.

4. நம்மை அவசரப்படுத்தி வாங்கத் தூண்டும் `சேல்’ பக்கம் போவதை தவிர்க்க வேண்டும்.

5. ஃபோமோ (Fear Of Missing Out) உணர்வுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், மற்றவருடன் போட்டி போட்டு வாங்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

6. டிவியில் வரும் விளம்பரங்களை தர்க்கரீதியாக அணுகப் பழகுவதோடு, வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

கோவிட் காலத்தில் மீதமாவது போல இனிவரும் காலங்களிலும் பணம் மீதமாக வேண்டும் என்றால், செலவுகள் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்; விளம்பரங்களில் மயங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதை எல்லாம் செய்தால், ரிவெஞ்ச் ஷாப்பிங் என்கிற பரபரப்பிலிருந்து விடுபடலாம்; நம் பணமும் கணிசமாக மிச்சமாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு