Published:Updated:

கைகொடுக்காத டெலிகாம், துரத்தும் சீன வங்கிகள்... எப்படி சறுக்கினார் அனில் அம்பானி?

அனில் அம்பானி
அனில் அம்பானி

அனில் அம்பானி செல்லும் அனைத்து இடங்களும் முட்டுச்சந்துகளாகவே இருக்கின்றன. இவர் வசம் இருக்கும் அத்தனை தொழில்களும் கடும் சிக்கலில் இருக்கின்றன.

சிலருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும், சிலருக்கு செல்லும் இடமெல்லாம் பலத்த அடி காத்திருக்கும். முதல் வாக்கியத்துக்கு உதாரணம் முகேஷ் அம்பானி, இரண்டாம் வாக்கியத்துக்கு உதாரணம் அனில் அம்பானி.

இந்த கொரோனா காலத்தை முகேஷ் அம்பானி அளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியவர் கிடையாது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 13 வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற்றதன் மூலம் ரிலையன்ஸ் சந்தை மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தி வந்தார். தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துக்கும் நிதி திரட்டும் வேலையில் இருக்கிறார்.

ஆனால், மாறாக அனில் அம்பானி செல்லும் அனைத்து இடங்களும் முட்டுச்சந்துகளாகவே இருக்கின்றன. இவர் வசம் இருக்கும் அத்தனை தொழில்களும் கடும் சிக்கலில் இருக்கின்றன. ரிலையன்ஸ் பவர், இன்ஃபிரா என அனைத்தும் சிக்கலில் உள்ளன. ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் (ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்) விற்கப்பட்டன. தற்போது, ``என்னுடைய நெட்வொர்த் ஜீரோ, அம்மாவிடம் கடன் வாங்கி இருக்கிறேன்; மகன் அன்மோலிடம் கடன் வாங்கி இருக்கிறேன்; சொல்லிக் கொள்ளும்படியாகச் சொத்துகள் ஏதும் இல்லை, ஒரே ஒரு கார் மட்டுமே இருக்கிறது" எனச் சிறுபிள்ளைகள் சொல்லும் காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் அனில் அம்பானி.

எப்படி வந்தது இந்தக் கடன்?

ரிலையன்ஸ் குழுமம் பிரிக்கப்பட்டபோது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தவிர, இதர நிறுவனங்களாக ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனில் அம்பானி வசம் வந்தன.

இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்காக 2012-ம் ஆண்டு மூன்று சீன வங்கிகளிடமிருந்து கடன் வாங்கப்பட்டது. 92.5 கோடி டாலர் அளவுக்கு கடன் வாங்கப்பட்டது. கடன் வாங்கிய சில காலத்துக்கு கடன் தவணையைச் செலுத்தி வந்தாலும், டெலிகாம் துறையில் ஏற்பட்ட பல மாறுதல்களால் இந்தக் கடனை ஆர்.காம் நிறுவனத்தால் செலுத்த முடியவில்லை.

அனில் அம்பானி
அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூடப்பட்டாலும், இந்தக் கடனுக்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் வழங்கி இருக்கிறார். அதனால் இந்த கடனை செலுத்தியாக வேண்டும் என சீன வங்கிகள் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன.

இந்த வழக்கில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ரூ.5,281 கோடியை அனில் அம்பானி செலுத்த வேண்டும் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சீன வங்கிகளின் சட்ட செலவுகளுக்காக ரூ.7 கோடியை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை ஜூன் 12-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகையைச் செலுத்தாததால் அனில் அம்பானி வசம் உள்ள சொத்துகளை (ரூ.74 லட்சத்துக்கு மேல் உள்ள) பட்டியலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சொத்து பட்டியலில் அனில் அம்பானி வசமுள்ளது, கூட்டாக உள்ளது என அனைத்தும் சமர்ப்பிக்க வேண்டும், தவிர கடந்த 24 மாதத்துக்கான வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அனில் அம்பானி விளக்கம் கொடுத்தார். அப்போது, ``சீன வங்கிகளுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதமான உத்தரவாதமும் நான் வழங்கவில்லை. நான் புகை பிடிப்பதில்லை, அசைவம் சாப்பிடுவதில்லை, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். சொகுசு வாழ்க்கையை வாழ்வதாக ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சொல்லிக்கொள்ளும்படியாகச் சொத்துகள் ஏதும் என்னிடம் இல்லை. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை சுமார் 9.9 கோடி மதிப்புள்ள தங்கத்தை விற்றிருக்கிறேன். இதன் மூலமே வழக்கு செலவுகளைப் பார்த்து வருகிறேன்.

Telecom Tower
Telecom Tower

ஊடகங்களில் வெளியாவது போல என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஹெலிகாப்டர் இல்லை. என்னுடைய செலவுகள் என்பது மிகவும் குறைவு. அதை என் மனைவி மற்றும் குடும்பம் பார்த்துக்கொள்கிறது. மேலும் பணத்தைத் திரட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதிக்குப் பிறகே இதர சொத்துகளை விற்க முடியும்" என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

``அம்மா கோகிலா பென்னிடம் ரூ.500 கோடி கடன் வாங்கி இருக்கிறேன். மகன் அன்மோலிடம் ரூ.310 கோடி கடன் வாங்கி இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் ரிலையன்ஸ் இன்பிரா நிறுவனத்துக்கு ரூ.500 கோடி கடன் கொடுத்திருக்கிறேன். ஆனால் அந்தக் கடனைத் திரும்பப் பெறமுடியவில்லை.

ரிலையன்ஸ் இன்னொவென்ச்சர்ஸ் நிறுவனத்தில் 1.2 கோடி பங்குகள் உள்ளன. ஆனால், அவை பயனில்லாதவை" என்றும் கூறியிருக்கிறார். லண்டன், பெய்ஜிங், கலிபோர்னியா ஆகிய நகரங்களில் அனில் அம்பானியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்த கேள்விக்கு, ``இவை அனைத்தும் என்னுடைய அம்மா பயன்படுத்தினார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அனில் அம்பானியின் இந்த வாதத்தை சீன வங்கிகளின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பம்கிம் தங்கி (Bankim Thanki) நிராகரித்திருக்கிறார். ``சீன வங்கிகளுக்கு ஒரு ரூபாயைக்கூட தரக்கூடாது என்னும் முடிவில் அனில் அம்பானி இருக்கிறார். அவரிடம் 11 சொகுசு கார்களைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. தனியாக விமானமும், கப்பலும் இருக்கிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அனில் அம்பானியின் குடும்பம் (அம்மா, மனைவி, மகன்) உதவ முடியாத சூழலில் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை" என வாதாடினார்.

வழக்கில் 10 கோடி டாலர் செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரியிலே உத்தரவிடப்பட்டது. ஆனாலும் அந்த உத்தரவை இன்னும் அனில் அம்பானி பின்பற்றவில்லை.

Mukesh ambani
Mukesh ambani
Photo: AP

இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் சொத்துகளை சீன வங்கியால் எதுவும் செய்ய முடியாது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாக்கு செலுத்த வேண்டிய கடன் காரணமாக திவால் சட்ட நடைமுறைகளில் இந்தச் சொத்துகள் மாட்டிக்கொண்டுள்ளன. (ரூ.1,200 கோடிக்கு தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் கொடுத்திருப்பதாக எஸ்.பி.ஐ வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால், இதையும் அனில் நிராகரித்திருக்கிறார்) அதனால் அனில் அம்பானிக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துகளைக் கைப்பற்ற சீன வங்கிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

2018-ம் ஆண்டு நிலவரப்படி அனில் தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துக்கு 1.72 லட்சம் கோடி கடன் உள்ளது. 2019-ம் ஆண்டு ஆர்.காம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் (ரூ.46,000 கோடிக்கு மேல்) திரும்ப செலுத்தப்படாததால் இந்திய வங்கிகள், ஆர்.காம் மீது திவால் வழக்கைத் தொடுத்தன.

2006-ம் ஆண்டு முகேஷ் அம்பானியை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக அனில் இருந்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிகைபடி சர்வதேச அளவில் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர் அனில் அம்பானி. ஆனால், இன்று என்னிடம் சொல்லிக் கொள்ளும்படியாகச் சொத்துகள் எதுவும் இல்லை என அறிவிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டார்.

இந்த பரமபத விளையாட்டில் யார் மேலே செல்வார்கள், யார் சறுக்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு