பல்வேறு நாடுகளைச் சார்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒன்றிணைந்து, 91 நாடுகளில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், விளையாட்டு பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்கள், திரைப்பட நடிகர்கள் போன்ற பெரும் செல்வந்தர்களின் வெளிநாட்டு முதலீடுகளை ஆய்வு செய்தனர். இதில் சட்டத்துக்குப் புறம்பான முதலீடாக கண்டறியப்பட்டவற்றை `பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இது இந்தியா உட்பட பல நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி மற்றும் நமது நாட்டைச் சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்பட உலகின் பல்வேறு முன்னணி பத்திரிகைகள் இந்தப் புலனாய்வில் ஈடுபட்டிருந்தன. புலனாய்வின் இறுதியில் ஏறக்குறைய 1.2 கோடி ஆவணங்களை வெளியிட்டிருக்கின்றனர். நமது நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி, பிரபல தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா, பல முன்னணி ஐ.பி.எல் அணியை வைத்துள்ள நிறுவனங்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசில் பங்கு வகிக்கும் நிதி அமைச்சர், ஜோர்டான் அரசர் மற்றும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் சொத்து விவரங்களும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக, நமது நாட்டைச் சேர்ந்த 300 பிரபலங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், எப்படியும் அரசின் கண்களின் மண்ணை தூவிவிட்டு வெளிநாடுகளில் இப்படி முதலீடு செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது பண்டோரா பேப்பர்ஸ்.
இந்த ஆவணங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கம்போல அதன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர் பிரபலங்கள். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வழக்கறிஞர் இதைப் பற்றி குறிப்பிடும்போது, ``சச்சினின் வெளிநாட்டு முதலீடுகள் சட்டத்துக்கு உட்பட்டு வெளிநாடுகளில் வரி செலுத்தப்பட்டு செய்யப்பட்ட முதலீடுகள் ஆகும். இவற்றுள் வரி ஏய்ப்பு எதுவும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை வெளிநாட்டில் திறந்துள்ளது இதில் கண்டறியப்பட்டுள்ளது. அனில் அம்பானிக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கடன் உள்ளது. லண்டன் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் தன்னுடைய நிகர சொத்து மதிப்பு பூஜ்யம் என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் சார்ந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கடுமையான நஷ்டத்தை கடந்த காலங்களில் கொடுத்திருக்கின்றன. ஆனால், இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவரின் வெளிநாட்டு சொத்து விவரங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன.
வெளிநாட்டு முதலீடுகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன?
கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு உதவுவதற்காக பல நாடுகளில் ஏஜென்சிகள் வேலை செய்கின்றன. மொரீஷியஸ், ஸ்விட்சர்லாந்து, கேமேன் தீவுகள், துபாய், பனாமா தீவுகள் போன்ற நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு அல்லது அந்த முதலீடுகளில் பெறப்படும் லாபத்துக்கு பெரும்பாலும் வரி எதுவும் விதிக்கப்படுவது இல்லை. இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை பெரும்பாலும் செல்வந்தர்கள் இது போன்ற நாடுகளில்தான் முதலீடு செய்கின்றனர். இந்த நாடுகளில் செல்வந்தர்கள் போலியாக புதிய நிறுவனங்களை தோற்றுவித்து தமது கறுப்புப் பணத்தை இந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த முதலீட்டிலிருந்து லாபம் வந்தது போல போலி கணக்குகள் காட்டப்படுகின்றன.

இந்த நிறுவனங்கள் பொதுவாக ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களில் பணியாளர்கள் பெரியளவில் வேலை செய்ய மாட்டார்கள். போலியாக அந்த நிறுவனம் லாபம் ஈட்டியது போல கணக்குகள் காட்டப்படும். அந்த நாடுகளில் ஈட்டிய வருமானத்துக்கு பெரும்பாலும் வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. அவ்வாறு ஈட்டிய வருமானத்தைக் கொண்டு வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர். அல்லது அந்தப் பணத்தை மீண்டும் நமது நாட்டிற்கு முதலீடாகக் கொண்டு வருகின்றனர். இவ்வாறாக கறுப்புப் பணம் சுழற்சியில் வெளிநாடுகளில் சொத்துக்களாகவோ, மீண்டும் நமது நாட்டில் வெள்ளை பணமாகவோ மாற்றப்படுகிறது. இதைச் செய்து கொடுக்கும் ஏஜென்டுகளுக்கு கமிஷன் தொகை கொடுப்பதன் மூலம் இந்த சுழற்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு தரப்பு, ``பண்டோரா பேப்பர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள விவரங்களை விசாரிப்பதற்கு சி.பி.ஐ தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ஆராய்ந்து தவறு எதுவும் நடைபெற்று இருந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணம் என்ற விஷ விதை நமது நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. இது உலகளாவிய பிரச்னையாகும். அதைத்தான் 91 நாடுகளில் நடைபெற்ற முறைகேட்டை வெளிக்கொண்டுவந்ததன் மூலம் பண்டோரா பேப்பர்ஸ் நிரூபித்திருக்கிறது. ஊடகங்கள் தங்கள் வேலையைச் செய்துவிட்டன; இனி அந்தந்த நாட்டு அரசுகள் அதனதன் வேலையைச் செய்யுமா?