ராய்டர்ஸ் நிறுவனம் அமேசான் நிறுவனத்தின் இந்தியப் பரிவர்த்தனைகள் குறித்து வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அமேசான் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்கியது.

அமேசான் நிறுவனம் பொருள்களை வாங்கி விற்கும் தளமாக மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தளத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள சிறிய வணிகர்கள் பலர் தமது பொருள்களை விற்பனை செய்ய முடியும் என்று அமேசான் கூறி வருகிறது. ஆனால் சிறு வணிகர்களோ, `தமது பொருளை அமேசான் மூலம் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அமேசான் முன்னுரிமை அளிக்கிறது' என்று கூறி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அமேசான் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
தனது நிறுவனம் திறந்த வெளியில் இயங்கும் ஒரு நிறுவனம். இதில் எந்த சிறு வணிகரும் அமேசான் நிறுவனத்துடன் தம்மை இணைத்துக்கொள்ள முடியும். எந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை என்று கூறி வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவணிகர்களின் குற்றச்சாட்டின் காரணமாக இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் புரியும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளை 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது.
இதன் காரணமாக அமேசானின் இந்திய வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், அமேசானின் முக்கிய நிர்வாகி ஜே கார்னே 2019 -ம் ஆண்டு அமெரிககாவில் உள்ள இந்தியத் தூதரை சந்தித்துப் பேசினார். கார்னே, இந்தியத் தூதரிடம் என்ன விஷயங்களை பேச வேண்டும், என்ன விஷயங்களை பேசக்கூடாது என்று அமேசான் நிறுவனம் தங்களுக்குள் முன்தயாரிப்பு செய்திருந்தது. அப்படித் தயாரிக்கப்பட்ட ஆவணம்தான் இப்போது ராய்டர்ஸுக்குக் கிடைத்துள்ளது.
அந்த ஆவணத்தில் இந்தியத் தூதரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயம் என்னும் அடிப்படையில், அமேசான் இந்தியாவில் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகவும் அதன் மூலம் நான்கு லட்சம் சிறு வணிகர்கள் அமேசான் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தூதரிடம் தெரிவிக்கக் கூடாத விஷயம் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள்தான் இப்பொழுது பிரச்னையைக் கிளப்பியுள்ளது.
அமேசான் செய்யும் வர்த்தகத்தில் மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு, வெறும் 33 வணிகர்கள் மூலமே செய்யப்படுவதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அமேசான் நேரடியாகப் பங்குகளைக் கொண்டிருக்கும் இரண்டு பெரிய நிறுவனங்கள் அமேசான் தளத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் 35% பொருள்களை விற்பதாகக் குறிப்பிட்டிருந்தது. ஆக 35 பெரு வணிகர்கள் மட்டும்தான் அமேசான் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 65 சதவிகிதத்துக்கும் மேல் வணிகம் செய்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தத் செய்தியைத்தான் அமேசான் இந்தியத் தூதரிடம் மறைக்க வேண்டும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்த ஆவணத்தின் தொடர்ச்சியாக பல மின்னஞ்சல்கள், பலதரப்பட்ட ஆவணங்கள் ராய்டர்ஸ் புலனாய்வுக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. அவை யாவும் அமேசான் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 65% செய்வது 35 பெருநிறுவனங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
இதைப் பற்றி அமேசான் நிறுவனத்திடம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டதற்கு, ``அமேசான் நிறுவனம் அனைத்து சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தில் பல சிறு வர்த்தகர்கள் பயன்பெற்று வருகிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தி குறித்து இந்திய அமைச்சகத்திடம் கேட்டபோது, ``தங்களுக்கு எந்தப் பதிலும் இந்திய அமைச்சகத்திடமிருந்து கிடைக்கவில்லை'' என்று ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் தற்போது இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2019-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 10 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது.
அமேசான் நிறுவனம் மீண்டும் தங்கள் நிறுவன வியாபாரிகளிடம் எந்த பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தருவதாகக் கூறி வருகிறது; ஆனால், தமக்குக் கிடைத்துள்ள ஆவணத்தில் உள்ள தகவல்கள் இதற்கு முரணாக இருப்பதாக ராய்டர்ஸ் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னை வெளிவந்திருப்பது இந்தியாவில் அமேசான் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒழுங்குமுறைகள் அமேசான் நிறுவனத்தால் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இதன் மூலம் வலுக்கலாம்.
இந்திய அரசும் சிறு வியாபாரிகளுக்கு தொடர்ந்து பாதுகாவலாக இருந்து வருவதாகக் கூறி வருகிறது. இந்திய அரசின் சட்டத்தின் படி அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பொருள்களை சேமித்து வைத்து விற்பதற்குத் தடை விதித்துள்ளது. ஆனால், அமேசான் குறுக்கு வழியில் சில நிறுவனங்களின் மூலம் பெரும்பாலான வர்த்தகத்தை செய்து வருவதாக அந்த ஆவணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது
இப்போது இந்திய மக்கள் பல் குத்தும் குச்சி முதல் விலை உயர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனைகள் வரை அமேசான் மூலம் வாங்கி வருகிறார்கள். அமேசான் நிறுவனம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக விளம்பரங்களில் கூறிவருகிறது. ஆனால், உண்மையில் சிறு வணிகர்கள் அமேசான் போன்ற பெரு நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ராய்டர்ஸின் புலனாய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நிலையில், அமேசான் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது அமலாக்கப் பிரிவு. ஃப்யூச்சர் நிறுவனத்தில் அமேசான் செய்திருந்த முதலீடு குறித்த விவரங்களையும் அமலாக்கப் பிரிவு கேட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் - ஃப்யூச்சர் நிறுவனத்தை வாங்குவதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது அமேசான் நிறுவனம். இப்போது அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படத் தொடங்கியிருப்பதால், அமேசான் தனது எதிர்ப்பைக் குறைத்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் அடுத்த சில நாள்களில் நடக்கும் நிகழ்வுகள் முக்கியமானவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.