Published:Updated:

`எல்லாத்தையும் மாத்தணும்!' - பி.டி.ஆரின் வெள்ளை அறிக்கையும் விளக்கங்களும் சொல்வது என்ன?

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையானது, கடந்த காலத்தில் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்வதாக இருக்கிறது!

மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசின் சொத்துகளைக்கூட விற்கத் தயங்காத அரசியல்வாதிகள்தாம் நம் நாட்டில் அதிகம். அரசின் நிதி நிர்வாகத்தை சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக யோசித்துச் செயல்படும் அரசியல்வாதிகள் மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது, கடந்த காலத்தில் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்னார். அந்தப் புள்ளிவிவரங்களை எல்லாம் திறமையாக வெளிக்கொண்டு வந்ததுடன், நிதி நிர்வாகம் பற்றி அவர் முன்வைத்த பல விஷயங்கள் இதுவரை இருந்த நிதி அமைச்சர்கள் யாரும் சிந்தித்துப் பார்க்காத வகையில் இருக்கிறது.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

`ஜீரோ டாக்ஸ் என்பது ஏமாற்று வேலை!'

இன்றைக்குப் பொதுமக்கள் அனைவரிடமும் உள்ள எண்ணம், வரி குறைவாக அல்லது வரி எதுவும் இல்லாத ஜீரோ டாக்ஸ் பட்ஜெட்டை அரசாங்கங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். ஜீரோ டாக்ஸ் பட்ஜெட் என்பது சாத்தியமே இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். ``ஒரு அரசாங்கமானது வரி வருமானம் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துதான் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிறது. அரசாங்கங்கள் குறைந்த அளவில் வரி விதித்தாலோ, வரியை விதிக்காமலே இருந்தாலோ, அரசுக்கு வருமானம் கிடைக்காது. அப்போது நலத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான பணத்துக்கு எங்கே போவது?

ஜீரோ டாக்ஸ் அல்லது குறைந்த வரி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கும். குறைவான வருமானம் பெறுகிறவர்கள் எப்போதும் குறைவாகத்தான் வருமான வரி கட்டுகிறார்கள். அதிகம் சம்பாதிக்கிறவர்கள் அதிகம் வரி கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். யாரிடமிருந்து எவ்வளவு வரியை நியாயமாக வாங்க வேண்டும் என்று யோசித்து அதன்படி வரி விதிப்பதே சரியே தவிர, வரி குறைவாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமில்லாத பேச்சு'' என்று பேசினார் நிதி அமைச்சர்.

வளர்ந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாட்டு அரசாங்கங்கள், அங்கு நலத் திட்டங்களுக்கு பெரிய அளவில் செலவு செய்யக் காரணம், அதிகம் வரி விதிக்கப்படுவதுதான். வரி விதிகம் குறைவாக இருக்க வேண்டும்; ஆனால், அரசிடமிருந்து எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது யதார்த்தத்தில் நடக்க வாய்ப்பில்லாத செயல் என்பதை மக்களுக்கு தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் நிதி அமைச்சர்.

`இலவசத் திட்டங்களைப் பெறும் தகுதி!'

அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகை இலவசத் திட்டங்களை நிறைவேற்றவே செலவாகிறது. இந்த இலவசத் திட்டங்களின் மூலமான பயனானது தகுதியானவர்களுக்குப் போய் சேருவதைவிட, தகுதி இல்லாதவர்களுக்கே போய்ச் சேருகிறது என்பதே உண்மை.

பி.டி.ஆர்
பி.டி.ஆர்

``இலவசத் திட்டங்கள் மூலமான பயனை யாருக்கெல்லாம் தரலாம், யாருக்கெல்லாம் தரக்கூடாது என்பதற்கான தகவல்கள் நம்மிடம் இல்லை. அதனால், எல்லோருக்கும் இலவசத் திட்டங்களைத் தருகிறோம். உதாரணமாக, தி.மு.க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4,000-த்தை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடுங்பங்களுக்குத் தந்தோம். தகுதியில்லாத பலரும் இந்தப் பணத்தை வாங்கியிருப்பதாக எங்களுக்குப் புகார் வந்தது. வரி கட்டுபவர்கள் யார் என்கிற தகவல் நம்மிடம் இருந்தால், அந்தத் தகவல்களின் அடிப்படையில் தகுதியானவர்களுக்குத் தரலாம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு ஊழியர்களின் வருமானம் குறையவில்லை. ஆனால், அவர்களும் அரசின் இலவசத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பயனை அடையத்தான் செய்திருக்கிறார்கள்’’ என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிதி அமைச்சரின் இந்தச் சிந்தனையும் மிக மிக வித்தியாசமானது. அவ்வப்போது இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகப் பெரும் பணம் செலவழிக்கிறது அரசாங்கம். இந்தப் பணம் தகுதியான நபர்களுக்குப் போய்ச் சேரும்பட்சத்தில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. ஆனால், ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள்கூட ரேஷனில் அரிசி வாங்குவதும் ஏழை எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டிய உதவித் தொகைகளைப் பெறுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல.

பி.டி.ஆர்
பி.டி.ஆர்
10 ஆண்டுகளாக `வெற்றிநடைபோடாத தமிழகம்' - வெள்ளை அறிக்கை சொல்லும் பகீர் உண்மைகள்!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அனைவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மானியத்தைத் தருவதில் மத்திய அரசாங்கம் பல மாற்றங்களைக் கொண்டுவந்த பிறகு, தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் இந்த மானியம் சென்று சேரும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது. மத்திய அரசாங்கத்தால் இப்படிச் செயல்பட முடியும் என்கிறபோது, நமது மாநில அரசாங்கத்தால் ஏன் இப்படிச் செயல்பட முடியாது?

நிர்வாகம் சரியாகச் செயல்பட வேண்டும்?

பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் பாதிப்படையும்போது நிதி நிலைமை மோசமடைவதைத் தவறு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது நிதி நிர்வாகத்தை சரியாகச் செய்யவில்லை எனில், நாம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றார் நிதி அமைச்சர்.

கடந்த 15 ஆண்டுக் காலத்தில், தி.மு.க ஆட்சியில் உற்பத்தியும், அரசின் வருமானமும் எப்படி உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்ன நிதி அமைச்சர், 2016-க்குப் பிறகு, நிர்வாகம் எப்படி எல்லாம் மோசமாகச் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். அரசின் நடைமுறைகள் மாறாமல் நிர்வாகம் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, அரசின் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டால்தான் அரசின் வருமானமும் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் சொன்னது மிகச் சரியான விஷயமே!

Minister PTR Palanivel Thiagarajan
Minister PTR Palanivel Thiagarajan
Photo: Twitter / OfficeOfPTR
Live Updates: தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: ``அதிரடி மாற்றங்களுக்கு தமிழக அரசு தயார்!" - பி.டி.ஆர்

ஏற்றுக்கொள்வார்களா, எதிர்ப்பார்களா?

தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன கருத்துகளை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்களா அல்லது எதிர்ப்பார்களா என்பது முக்கியமான விஷயம். ஆனால், அழுகிக் கிடக்கும் அரசு நடைமுறைகளைச் சரிசெய்ய இப்போதாவது நடவடிக்கை எடுக்காவிட்டால், இனிவரும் காலத்தில் என்ன நடவடிக்கை எடுத்தும் எந்தப் பயனும் இல்லை என்கிற நிலை உருவாகிவிடும். `எல்லாத்தையும் மாத்தணும்' என்று செயல்படத் தொடங்கியிருக்கும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிச்சயம் வித்தியாசமானவர்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு