பொதுத்துறை தேர்வு வாரியத்தின் தலைவர்... யார் இந்த மல்லிகா சீனிவாசன்?

தனியார் துறையில் தலைவராக உள்ள ஒருவர், பொதுத்துறை நிறுவனத் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிக்கானவர்களை தேர்வுசெய்யும் வாரியமாக செயல்பட்டு வருகிறது பி.இ.எஸ்.பி. (Public Enterprises Selection Board - PESB).
இந்த வாரியத்தின் தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் துறையில் தலைவராக உள்ள ஒருவர், பொதுத்துறை நிறுவனத் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தப் பதவியில் இவர் மூன்று ஆண்டுகள் இருப்பார்.

யார் இந்த மல்லிகா சீனிவாசன்?
விவசாயிகளோடு தொடர்புடைய, அவர்களுக்கான விஷயங்களைத் தயார் பண்ணுகிற ஒரு நிறுவனத்தை வழிநடத்துவது என்பது, நகரத்திலேயே பிறந்து நகரத்திலேயே வளர்ந்த ஒருவருக்கு அத்தனை சுலபமல்ல. மல்லிகா ஶ்ரீனிவாசன் அதில் கில்லாடி.
டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டஃபேயின் (Tractors and Farm Equipment Limited - TAFE) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இவர். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவசைலத்துக்கு மகளாகப் பிறந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் மல்லிகா. அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்துவிட்டு, டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனை திருமணம் செய்துகொண்டவர்.
1986-ல் தன் தந்தையின் நிறுவனமான டஃபேயில் இணைந்தார். அப்போது 86 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டிருந்த நிறுவனத்தில், மல்லிகா நுழைந்த நேரத்தில் எண்ணற்ற பிரச்னைகள்; புதிய தொழில்நுட்பங்களின் வரவால் ஏராளமான நஷ்டங்கள்; அவற்றை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்டார் மல்லிகா.

அக்காலக்கட்டத்திலேயே பல கோடி ரூபாய்களைச் செலவழித்து புதிய தொழில்நுட்பங்களை, தங்களுடைய டிராக்டர்களிலும் விவசாயக் கருவிகளிலும் இணைக்க முனைந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இன்று இந்தியாவில் டிராக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக டஃபே இருக்கிறது. அதற்குக் காரணம், மல்லிகாவின் துணிச்சலான முடிவுகள்தான். எண்ணற்ற விருதுகளை வென்ற இவர், 2014-ல் பத்மஶ்ரீ பட்டத்தையும் பெற்றவர்.
இவர் ஏற்கெனவே இந்திய அமெரிக்க வர்த்தகக் கவுன்சில் இயக்குநர் குழுவிலும், டாடா ஸ்டீல் இயக்குநர் குழுவிலும் உள்ளார். இது தவிர சென்னை ஐ.ஐ.டி, பாரதிதாசன் நிர்வாகவியல் மையம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.