Published:Updated:

சரியும் பிட்காயின் மதிப்பு; முதலீட்டாளர்களை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறாரா எலான் மஸ்க்?

 Elon Musk
Elon Musk ( Will Heath/NBC via AP )

அனுதினமும் ஏற்றம் கண்டுவந்த பிட்காயின் மதிப்பில், எலான் மஸ்ஸ்கின் ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.

எலான் மஸ்க், முன்னதாக தன் வாகன நிறுவனமான டெஸ்லாவில் கார் வர்த்தகத்தில் பிட்காயின் பேமென்ட்டாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், அண்மையில் டெஸ்லாவில் இனிமேல் பிட்காயினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ட்விட்டர் மூலம் அறிவித்தார். இதனையடுத்து பிட்காயின் விலை கடும் சரிவினைச் சந்தித்துவருகிறது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அதிகபட்ச விலையான 64,778 டாலரிலிருந்து குறைந்து, மஸ்க் அறிவித்த அடுத்த சில நாள்களிலேயே 43,556 டாலருக்கு வந்துவிட்விட்டது.

Warren Buffett
Warren Buffett
AP / Nati Harnik

அமெரிக்காவின் வாரன் பஃபெட், இந்தியாவின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஆகிய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எந்த நிறுவனப் பங்குகளில், எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் என்பதை கண்கொத்திப் பாம்பாக ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டேயிருக்கும். ஏனெனில், அவர்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்தாலும், அந்தப் பங்கின் விலை ஏற்றத்தைச் சந்திக்கும். எந்தப் பங்குகளை விற்கிறார்களோ அந்த பங்கின் விலை இறக்கத்தைச் சந்திக்கும். இது போலத்தான் எலான் மஸ்க்கின் பிட்காயின் விவகாரமும். எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்வதை நம்பி, பலரும் இதில் முதலீடு செய்தார்கள். இப்போது அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியிருக்கிறது.

பிட்காயின் விலை - வரலாறு!

கடந்த டிசம்பர் 17-ம் தேதி பிட்காயின் விலை முதன்முறையாக 20,000 டாலரைக் கடந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 10.5% ஏற்றம் கண்டு, 23,655 டாலருக்கு பிட்காயின் வர்த்தகமானது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் பிட்காயின் பக்கம் திரும்பியது அன்றுதான். அதன்பிறகு மறுபடியும் பிட்காயின் பற்றி, உலகமெங்கிலும் பேசு பொருளாக மாறிய தினம் பிப்ரவரி 8, 2021.

ஏனெனில் அன்றுதான் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் 10,000 கோடி ரூபாயை ஒரே நாளில் பிட்காயினில் முதலீடு செய்திருப்பாதாக அறிவித்தார். மேலும், இனி தங்கள் டெஸ்லா நிறுவனங்களில் பொருள்கள், சேவைகளை பிட்காயின் மூலம் செலுத்திப் பெறலாம் எனவும் அவர் அறிவித்தார்.

பிட்காயின்
பிட்காயின்

இவருடைய இந்த அறிவிப்பினால் பிட்காயினின் விலை தாறுமாறாக ஏறியது. அறிவிப்பு வெளியான அன்றைய தினத்தில் மட்டுமே பிட்காயின் மதிப்பு 16% அதிகரித்து, வரலாற்றில் முதன்முறையாக 44,000 டாலரைக் கடந்து வர்த்தகமானது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால், அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலையும் 1.3% வரை அதிகரித்து வர்த்தகமாகின. அதன் பிறகு ஏற ஆரம்பித்த பிட்காயின் விலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ஒரு 64,778 டாலர்கள் வரை ஏற்றம் கண்டது. அதன்பிறகு தொடர்ந்து சரிந்து வந்த பிட்காயின் மதிப்பு, கடந்த மே-13-ம் தேதி காலை ஒரே தினத்தில் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே 54,819 டாலர்களில் இருந்து, சுமார் 45,700 டாலர் என்ற நிலைக்கு சரிந்தது. இதற்கு காரணமும் எலான் மஸ்க்தான்.

போக்கு காட்டும் எலான் மஸ்க்!

elon musk
elon musk

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, கிரிப்டோகரன்சிகள் பற்றி உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. உலகின் பல பெரும் நிறுவனங்களும் முதலீடு செய்தன. பிட்காயின் பற்றி யோசிக்காத பலரும் பிட்காயின் முதலீட்டில் களமிறங்கினார்கள். அமெரிக்கா மற்றும் சீனாவில் பிரபலமாக இருந்த பிட்காயின் முதலீடு, எலான் மஸ்க்கின் முதலீட்டுக்குப் பிறகுதான் இந்திய முதலீட்டாளர்களையும் பெருவாரியாக ஈர்த்தது. இந்திய முதலீட்டாளர்கள் பலரும் அதில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி அனுதினமும் ஏற்றம் கண்டுவந்த பிட்காயின் மதிப்பில், எலான் மஸ்ஸ்கின் ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.

50,000 டாலரைக் கடந்து புதிய உச்சத்தில் பிட்காயின்... வர்த்தகத் தடை விதிக்குமா மத்திய அரசு?

பிட்காயின் விலையை ஏற்றுவது போல ஏற்றிவிட்டு, முதலீட்டாளர்கள் அதிகம் பேர் அவரை ஃபாலோ செய்து பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, மிகப்பெரிய சரிவையும் அவரே உருவாக்கியிருக்கிறார். மக்களால் ஃபாலோ செய்யப்படும் பிரபலங்கள் எப்போது எது செய்தாலும் அதை ஃபாலோ செய்வதற்கென்றே தனிக்கூட்டம் இருக்கும். நம்மூரில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பிரபலங்கள் செய்வதை ஃபாலோ செய்வது போல. அதனால்தான், பிரபலங்கள் செய்கிற தனிப்பட்ட செயலை பொதுவெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது எனச் சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக முதலீடு சார்ந்த நடவடிக்கைகளை சொல்லாமல் இருப்பது மிக மிக நல்லது.

பணக்காரர் பட்டியலில் சரிவு!

பிட்காயின்
பிட்காயின்

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2020-ம் ஆண்டு கிட்டத்தட்ட 750% வரை உயர்ந்ததை அடுத்து 49 வயதான எலான் மஸ்க் ஜனவரி 2021-ல் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தார். ஆனால், தற்போது 2-வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டெஸ்லா நிறுவனம் பிட்காயின் பேமென்ட் முறையை நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்ததையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியதே இதற்கு மிக முக்கிய காரணம். பங்குகளின் விலை குறைந்ததால், எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் 160.6 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு சரிந்தது.

வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin

இதற்கிடையில், 72 வயதான பெர்னர்ட் அர்னால்ட் என்பவரின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 47 பில்லியன் டாலர் அதிகரித்து 161.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் இவர் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்லா ஏன் பிட்காயினை ஏற்காது?

எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை உருவாக்கியதற்கு மிக முக்கியமான காரணம் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்காத ஒரு போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் எலக்ட்ரிக் கார் உருவாக்கும் இதேவேளையில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பெரிய அளவில் ஊக்குவித்து அதை முக்கியமான வர்த்தகமாக மாற்றினார்.

ஆனால் பிட்காயின் உருவாக்குவதில் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்கும் வழியில் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால், இது தனது கொள்கைக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் டெஸ்லா கார்களுக்குப் பிட்காயின் ஏற்பதை நிறுத்த உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

Bitcoin
Bitcoin
bitcoin-3089728__340

அதாவது, பிட்காயின்களை மைனிங் செய்வதற்கும் அதனைப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்துவதற்கும் புதை படிவ எரிபொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக நிலக்கரி அதிக அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அது காலநிலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனாவின் 10 பெரிய நகரங்கள் வெளியிடும் கரிம வாயுவின் அளவை விட கிரிப்டோகரன்சிகளைத் தயாரிப்பதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் வெளியிடப்படும் கரிம வாயுவின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவேதான் பிட்காயின் பரிவர்த்தனையை டெஸ்லா ஏற்காது என எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

`பிட்காயின்களை இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!' - எலான் மஸ்க் சொல்லும் சூழலியல் காரணம் சரியா?

``கொள்கைக்கு முரண்பாடான ஒரு விஷயத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும், அதை ஏன் பொது வெளியில் பகிர வேண்டும், பொது வெளியில் பகிர்ந்தால் அதை மற்றவர்களும் ஃபாலோ செய்வார்கள் என்பது எலான் மஸ்க்குக்குத் தெரியாதா, இது மற்ற முதலீட்டாளர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பது ஏன் அவருக்கு தெரியவில்லை அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே விளையாடினாரா?" என்கிற எண்ணற்ற கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது உலாவிக் கொண்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு