Election bannerElection banner
Published:Updated:

`உங்கள் சொத்துகளை கையகப்படுத்துவோம்!' - இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கும் கெய்ர்ன்... ஏன்?

Cairn Energy
Cairn Energy

இந்திய அரசுக்கு வெளிநாடுகளில், தூதரகங்களின் வங்கிக் கணக்குகள், தூதரகம் அல்லாத வளாகங்கள், ஏர் இந்தியா விமானங்கள் போன்ற பல சொத்துகள் உள்ளன. இந்தத் சொத்துகளை நீதிமன்ற உதவியுடன் அந்த நிறுவனம் முடக்க முயற்சி செய்ய முடியும்.

பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் நிறுவனத்துக்கு இந்திய அரசு தர வேண்டிய 1.4 பில்லியன் டாலரைத் தரவில்லை என்றால் இந்திய அரசுக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துகளை கையகப்படுத்தப் போவதாக அந்த நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

கெய்ர்ன் நிறுவனம், 2006-07-ம் நிதி ஆண்டில் தமது இந்திய சொத்துகளை மறு சீரமைப்பு செய்த பொழுது, இந்திய அரசு அந்நிறுவனம் 10,247 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று கணக்கிட்டு கூறியது. ஆனால், கெய்ர்ன் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ``இந்திய அரசின் இந்த கணக்கீடு இரட்டை வரிவிதிப்பு விதிகளின் கீழ் வருகிறது. ஒரு ஆதாயத்துக்கு இரண்டு வரிகள் விதிக்கப்படக் கூடாது" என்று இதற்குத் தடை கோரியது.

ஆனால், இந்திய அரசு தடைவிதிக்க மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக கெய்ர்ன் நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள சொத்துகளை விற்றும் அந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் தொகையை நிறுத்தி வைத்தும், அந்த நிறுவனத்துக்குத் திருப்பி தர வேண்டிய வரித்தொகையை நிறுத்தி வைத்தும் இந்த வரித் தொகையை இந்திய அரசு அந்த நிறுவனத்திடமிருந்து வசூலித்து விட்டது.

Cairn Energy
Cairn Energy

இந்திய அரசு அவ்வாறு செய்தது தவறு என்று கூறி சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த முறையீட்டுக்கான தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளிவந்தது. `தி ஹேக்' நகரில் உள்ள மூன்று நீதிபதிகளைக் கொண்ட நடுவர் மன்றம் தமது தீர்ப்பை வழங்கியது. இதில், இந்திய அரசு வரி விதித்தது இந்தியா - ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) நாடுகளுக்கான இரு நாட்டு ஒப்பந்தத்தின் படி தவறு என்று கூறி வட்டி மற்றும் நீதிமன்ற செலவுகளையும் சேர்த்து இந்திய அரசு கெய்ர்ன் நிறுவனத்துக்கு 1.4 பில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சைமன் தாம்சன், தமது நிறுவனத்தின் பங்குதாரர் நலன் கருதி இந்திய அரசு உடனடியாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். தமது நிறுவனம் கடந்த காலங்களில் இந்திய அரசசுக்கு 20 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் கிடைப்பதற்கு உதவியதாகவும் குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள தனது நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைப்பதற்கு உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கெய்ர்ன் நிறுவனத்தின் அதிகாரிகள் தொடர்ச்சியாக இந்திய தரப்பினரை சந்தித்து வந்தனர். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாம்சன் உட்பட அந்த நிறுவனத்தின் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் பலரும் இந்திய அரசின் பிரதிநிதிகளிடம் இந்தப் பேச்சு வார்த்தையை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

Cairn Energy
Cairn Energy

இந்தக் கால தாமதத்தை எதிர்த்து கெய்ர்ன் நிறுவனம் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் (UK), சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்துள்ளது. ``இந்திய அரசு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது தவறானது. தொடர்ந்து இந்திய அரசு இந்தத் தொகையைத் திரும்ப செலுத்தவில்லை என்றால் வெளிநாட்டு நீதிமன்ற உதவியுடன் வெளிநாட்டில் உள்ள இந்திய அரசின் சொத்துகளை தமது நிறுவனம் கையகப்படுத்தும்" என்று கெய்ர்ன் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

உலகில் உள்ள பல நாட்டு தலைநகரங்களில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான சொத்துகளைக் கைப்பற்ற இருப்பதாகக் குறிப்பிட்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்த நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதம் வெளியுறவுத் துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் பிரதமரின் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசுக்கு வெளிநாடுகளில், தூதரகங்களின் வங்கிக் கணக்குகள், தூதரகம் அல்லாத வளாகங்கள், ஏர் இந்தியா விமானங்கள் போன்ற பல சொத்துகள் உள்ளன. இந்தத் சொத்துகளை நீதிமன்ற உதவியுடன் அந்த நிறுவனம் முடக்க முயற்சி செய்ய முடியும். ஐக்கிய ராஜ்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இந்திய அரசின் சொத்துகளை அவ்வாறு முடக்க முடியும்

இதே போன்ற பிரச்னையில் கடந்த காலங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச விமானம் ஒன்று அயர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்துடனான பிரச்னை காரணமாக மலேசியா நாட்டில் கையகப்படுத்தப்பட்டது. இதே போன்று அமெரிக்க நிறுவனமான கான்கோ பிலிப்ஸ் சார்பில் வெனிசுலா நாட்டு கப்பல் ஒன்று அமெரிக்க நாட்டில் கையகப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்திய அரசு சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் முயற்சியில் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக இந்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. `தி ஹேக்' நகரில் உள்ள சட்ட வல்லுநர்களின் துணை கொண்டு இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக இந்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Cairn Energy
Cairn Energy

கெய்ர்ன் நிறுவனம் தமது கெய்ர்ன் இந்தியா பங்குகள் அனைத்தையும் வேதாந்தா குழுமத்திடம் 2011-ம் ஆண்டு விற்றுவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது மிகக் குறைந்த அளவில், அதாவது அந்த நிறுவனத்தின் 10% கீழான பங்குகளை மட்டுமே அந்த நிறுவனம் கொண்டுள்ளது.

முன்னதாக இதே போன்ற பிரச்னையில் வோடஃபோன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பும் இந்திய அரசுக்கு எதிராக செப்டம்பர் 25 அன்று வழங்கப்பட்டது.

வோடஃபோனைத் தொடர்ந்து இப்போது கெய்ர்ன் நிறுவனத்திற்கு எதிரான வழக்கிலும் தோற்றது இந்திய அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. `வரி சொர்க்கபுரி' என்று அழைக்கப்படுகிற சில நாடுகளில் எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை. இந்த நாடுகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் வரி மோசடி செய்யும் நடவடிக்கை பெருகுவதற்கு இந்தத் தீர்ப்பு பயன்படும். அதனால் இந்திய அரசால் இது இரு நிறுவனங்களின் பிரச்னை என்கின்ற அளவில் மட்டும் பார்க்க முடியாது.

Finance Minister Nirmala Sitharaman
Finance Minister Nirmala Sitharaman
Photo: AP

பெரு நிறுவனங்கள் கொல்லைப்புறம் வழியாக சட்டத்துக்கு உட்பட்டு வரி மோசடி செய்வதைத் தடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அரசு உள்ளது. கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சைமன் தாம்சன், ``பெரு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார். இது மறைமுகமாக அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாக விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொருளாதார வல்லுநர்களும், உலக நாடுகளும் உற்று நோக்குகின்றன. இந்திய அரசு தமது மேல்முறையீட்டில் வெற்றி பெறுவதே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு