Published:Updated:

தங்க நகை விற்பனை: அரசின் புதிய ஹால்மார்க் விதிகளை நகை வியாபாரிகள் எதிர்ப்பது ஏன்?

Gold (Representational Image)
Gold (Representational Image) ( Photo by vaibhav nagare on Unsplash )

நகை வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தரப்பிலேயே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

தங்கநகைகளில் ஹால்மார்க் கட்டாயம், 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்கிற பல்வேறு விதிமுறைகள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்திருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்தப் புதிய விதிமுறைகளை எதிர்த்து `சென்னை நகை வியாபாரிகள் சங்கம்' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி

இது குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் பேசினோம். ``தற்போதைய நிலையில் 14, 18 மற்றும் 22 காரட் தங்கம் உட்பட 15, 16, 17, 19, 20, 21 மற்றும் 24 காரட் தங்கத்தையும் விற்பனை செய்யும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறை 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் சார்ந்த நடவடிக்கைகளையும், ஹால்மார்க் சிஸ்டத்தையும் கொண்டுவந்திருக்கிறது. இது குறு, சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகளைப் பெரிதும் பாதிக்கும். மேலும், தற்போது அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து நகைக்கடைகளிலும் ஹால்மார்க் தங்க நகைகள்தான் விற்கப்பட்டு வருகின்றன.

மூன்று காரட்டுகளில் மட்டுமே நகைகளை விற்க முடியாது!

ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட காரட் நகைகள் விற்பனையை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு பிரச்னையாக இருக்கிறது. அரசு சொல்வது போல 14, 18 மற்றும் 22 காரட் நகைகளை மட்டுமே விற்பனை செய்வதாக இருந்தால் 19 மற்றும் 14 காரட்டுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் இத்தாலி நாட்டு நகைகளையும், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 21 காரட் நகைகளையும் வியாபாரிகளால் விற்பனை செய்ய முடியாது.

ஹால்மார்க் முத்திரை
ஹால்மார்க் முத்திரை

மேலும், தமிழகத்தில் மட்டும் சின்னதும் பெரியதுமாக மொத்தம் 35,000 நகைக்கடைகள் இருக்கின்றன. ஆனால், மொத்தம் 104 ஹால்மார்க் சென்டர்கள் மட்டுமே இயங்குகின்றன. இது மிக மிகக் குறைவு. இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும்.

ஒரு ஹால்மார்க் பிரின்ட் இயந்திரம் கொண்ட ஒரு ஹால்மார்க் சென்டரில் ஒரு நாளைக்கு (8 மணிநேரம்) அதிகபட்சம் 500 நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் செய்ய முடியும் என்கிற நிலை இருப்பதால், ஏற்கனெவே நகைகளுக்கு ஹால்மார்க் பெறுவதில் அதிக நேரம் விரயம் ஆகிறது.

10 நாள்களில் ஒரு பவுனுக்கு ₹1,360 வீழ்ச்சி; தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

மேலும், தங்க நகைகளை ஆன்லைனில் ஆவணப்படுத்துவதில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகளால் நேரம் விரயமாவதுடன், வேலையாட்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகளுக்கு இது போன்ற விஷயங்களை நடைமுறைப்படுத்து முடியாத காரியம்.

நடைமுறைச் சிக்கல்!

நகை வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தரப்பிலேயே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அவர்கள் ஹால்மார்க் சென்டர்களை அதிகப்படுத்த வேண்டும். தங்க நகைகள் குறித்த ஆவணங்களை அப்லோடு செய்யும் அரசு ஆன்லைன் போர்ட்டலை எளிமையாக்க வேண்டும்.

தங்கத்துக்கு இனி ஹால்மார்க் கட்டாயம்; அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள் சொல்வது என்ன?

பல மாதங்களாக கொரோனாவால் தங்க நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சில வாரங்களாகத்தான் மக்கள் தங்க நகைகளை வாங்க கடைகளுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அனைத்து விதமான காரட் நகைகளையும் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வரும்போது, மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட காரட் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இல்லை.

தங்கம்
தங்கம்

அனைத்து நகைகளையும் 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்தில் செய்துவிட முடியாது. டிசைன்களுக்கு டிசைன் தங்கத்தின் கலப்பு வித்தியாசப்படும். நுகர்வோர்கள்தானே தாங்கள் என்ன நகைகளை அணிய வேண்டும், எந்த டிசைன்களில் அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய விதிமுறைகளைக் கடைப்பிடித்தால், வாடிக்கையாளர்களின் விருப்பம் அடிபடும். இதனால் எங்களுடைய நகை வியாபாரத் தொழிலும் பாதிப்படையும்.

இப்படியான பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால்தான், புதிய விதிமுறைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்கான பதிலை வழங்க வேண்டும் என, நிதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசாங்கம் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று, நல்ல பதிலைச் சொல்லும் என நம்புகிறோம்" என்றார் தெளிவாக.

சென்னை தி.நகரில் உள்ள பி.ஐ.எஸ் அங்கீகாரம் பெற்ற கேசர் ஹால்மார்க்கிங் சென்டர் உரிமையாளரான ராஜ்குமார் ஜெயினிடம் இது குறித்து பேசினோம். ``தங்க நகை வியாபாரிகள் சொல்வது போல, தற்போதைய விதிமுறைகள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல் ஆப்ஷன்கள் மூலம் ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) ஒரு இயந்திரம் கொண்ட ஹால்மார்க் சென்டரில், 500 நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் செய்ய முடியும் என்பது உண்மைதான். ஆனால், ஒரு ஹால்மார்க் சென்டர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் கிடையாது.

பி.ஐ.எஸ்
பி.ஐ.எஸ்

ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்ய ஹால்மார்க் சென்டர்களை அரசு அனுமதித்திருக்கிறது. அதன்படியே பல ஹால்மார்க் சென்டர்கள் தற்போது இயங்கி வருகின்றன. டிமாண்ட் அதிகரிக்கும்போது, தேவையான வேலையாட்களைக் கொண்டு, வேலை செய்யும் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஹால்மார்க் சென்டர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

அதே போல, பெரும்பாலான ஹால்மார்க் சென்டர்களின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹால்மார் பிரின்ட்டிங் மெஷின்கள் இயக்கத்தில் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ஹால்மார்க் சென்டர்கள் குறைவு, அதனால் ஹால்மார்க் முத்திரையிடுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது போல, அவர்கள் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், ஹால்மார்க் சென்டர்களின் தேவை எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஹால்மார்க் சென்டர்களை அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

உதாரணமாக, சென்னையில் 28 ஹால்மார்க் சென்டர்கள் இருக்கின்றன. ஏனெனில், சென்னையில் விற்பனையாகும் தங்க நகைகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், மற்ற மாவட்டங்களில் அந்த அளவுக்கு விற்பனை ஆவதில்லை.

ராஜ்குமார் ஜெயின்
ராஜ்குமார் ஜெயின்

அப்படி இருக்கும்போது, வர்த்தகம் குறைவான மாவட்டங்களில் ஹால்மார்க் சென்டருக்கு லைசென்ஸ் வாங்கி, அங்கு அதை அமைப்பது நஷ்டத்தையே ஏற்படுத்தும். முறையான உட்கட்டமைப்பை ஏற்படுத்தக்கூடியவர் யாராக இருந்தாலும், ஹால்மார்க் சென்டரை அமைக்க பி.ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து லைசென்ஸை வாங்கிவிடலாம். ஆனால், சென்டரை நிர்வகிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

தற்போதைய நிலையில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. நகை வியாபாரிகளிடமிருந்து ஒரு நகையை வாங்கி, அதைப் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, ஹால்மார்க் முத்திரையிட்டு, மீண்டும் அதை அந்த நகைக்கடைக்காரரிடம் கொடுப்பது வரை எங்களுடைய ஹால்மார்க்கிங் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைனில் ஆவணப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் அதிக நேரம் பிடிக்கிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் இவை அனைத்தும் அரசால் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு, முன்பு இருந்தது போல ஹால்மார்க்கிங் வேலைகள் வேகமெடுக்கும்" என்றார் தெளிவாக.

போலி தங்க நகைகள், கள்ளச் சந்தையில் புழங்காமல் இருக்க ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுவது நியாயமே. அதே சமயம், வியாபாரிகளின் நடைமுறைச் சிக்கல்களை அரசாங்கம் கவனத்தின் எடுத்துக் கொண்டு, அதற்கான வசதிவாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலான நகைக்கடை வியாபாரிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு