Published:Updated:

`ஜியோ' அம்பானி vs `ஸ்டார்லிங்க்' எலான் மஸ்க்... இந்திய இன்டர்நெட் சந்தையில் ஜெயிக்கப்போவது யார்?

` வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பதற்கு உதாரணமாகத்தான் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்திய வருகை கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராகக் குறுகிய காலத்தில் உயர்ந்த எலான் மஸ்க்குடைய ஸ்பேஸ் X நிறுவனம் ஸ்டார்லிங்க் என்ற பெயரில் இந்தியாவில் பிராட்பேண்ட் சேவையை அடுத்த வருடத்திலிருந்து தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதி வேண்டி கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்திடம் (Telephone Regulatory Authority of India - TRAI) விண்ணப்பித்துள்ளது.

ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவைகள் இந்தியாவின் மிக விரைவான பிராட்பேண்ட் சேவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை அந்த நிறுவனம் பெற்று வருகிறது. இதற்கான முன்பதிவை ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் 99 டாலர் டெபாசிட் தொகை செலுத்தி (இந்திய மதிப்பில் சுமார் 7,300 ரூபாய்) செய்துகொள்ள முடியும்.

ஸ்டார்லிங்க்
ஸ்டார்லிங்க்

இந்தச் சேவைகள் எப்போதிலிருந்து தொடங்கும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. என்றாலும், அடுத்த ஆண்டு மத்தியிலிருந்து ஸ்டார்லிங்க் சேவைகள் இந்தியாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா என்ற நம் நாட்டின் கனவில் பிராட்பேண்ட் சேவை என்பது மிக முக்கிய இடம் பிடிக்கிறது. இந்தச் சேவைகளை வழங்குவதில் எந்த நிறுவனம் வருங்காலத்தில் கோலோச்ச இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு ஸ்டார்லிங்க் வருகைக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மட்டுமே தொலைபேசி சேவைகள் வழங்கும் நிறுவனமாக விளங்கியது. பின்னர் தொலைத்தொடர்புத்துறை வளர்ச்சியின் அங்கமாகத் தனியார் நிறுவனங்களும் தொலைத்தொடர்புத் துறை சேவைகளை வழங்கத் தொடங்கின.

தற்போது தொலைத்தொடர்புத் துறை சேவைகள் வழங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட வெகு சில நிறுவனங்களே பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகின்றன. 

இந்த பிராட்பேண்ட் போட்டியில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருகை திருப்புமுனையாக அமைவதற்கு அதன் தொழில்நுட்பமே காரணமாக உள்ளது. ஜியோ போன்ற நிறுவனங்கள் தொலைத் தொடர்புத்துறை சாதனங்களைப் பயன்படுத்தி கேபிள்கள் மூலம் மட்டுமே பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது அதிவிரைவு பிராட்பேண்ட் சேவைகள் வழங்கும் ஒரு பகுதியாக பைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தி அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தச் சேவைகள் தொலைத் தொடர்புத்துறை டவர்களின் சிக்னலைப் பொருத்தே அமையும். சிக்னல் சரியாகக் கிடைக்காத இடங்களில் பிராட்பேண்ட் சேவை விரைவாகக் கிடைக்காது. மேலும் இதன் கட்டமைப்புக்கு அதிகமான செலவு செய்ய வேண்டியிருக்கிறது. என்றாலும் தற்போது இந்த நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 எம்.பி.பிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகின்றன.

Mobile Tower
Mobile Tower

ஸ்டார் லிங்க் தொழில்நுட்பம் இதில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்குகிறது. அந்த நிறுவனம் பிரத்யேகமான சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி அதன் துணை கொண்டு பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு பைபர் கேபிள்களைப் பதிக்க வேண்டுமென்ற தேவை கிடையாது. இந்தச் சேவையைப் பெறுபவர்கள் சிறிய ஆண்டனா ஒன்றைத் தமது வீட்டில் நிறுவுவதன் மூலம் எளிதாக பிராட்பேண்ட் வசதி பெற முடியும்.

உதாரணமாக விமானம், கப்பல்களில் பயணம் செய்யும்போதோ டவர் நிறுவப்படாத பகுதிகளிலோ சிக்னல் கிடைக்காததால் இணைய வசதி பெற முடியாது. மேலும் கேபிள்களில் பழுது அடிக்கடி பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக இணைய சேவை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் அதிவேக இணைய வசதி இல்லாத நிலையே உள்ளது. இது போன்ற எந்த நடைமுறைச் சிக்கல்களும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் இல்லை என்பதே ஸ்டார்லிங்க் சேவைகளை உற்று நோக்க வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது அந்த நிறுவனம் 100 எம்.பி.பிஎஸ் வேகத்தில் இணைய சேவைகளை வழங்கினாலும் அடுத்த ஆண்டில் 300 எம்.பி.பிஎஸ் என்ற வேகத்தில் தமது சேவைகள் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்திய நிறுவனங்கள் வழங்குவதை விட மூன்று மடங்கு அதிவிரைவு பிராட்பேண்ட் வசதி ஆகும். மேலும் இன்னும் சில ஆண்டுகளில் 1 ஜிபிபிஎஸ் என்கின்ற அளவிற்கு அதிவேக பிராட்பேண்ட் வசதிகளை வழங்குவதை இலக்காக வைத்து அந்த நிறுவனம் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

இப்போது பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து தமது ஊழியர்களைப் பணிபுரிய அனுமதித்துள்ளன. இந்த அதிவேக இணைய வசதி இந்த நிறுவனங்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதற்கு வாய்ப்புள்ளது.

இன்று நமது நாட்டில் பிராட்பேண்ட் வசதி என்பது அனைத்து வீடுகளிலும் தேவைப்படும் அத்தியாவசிய வசதிகளில் ஒன்றாக ஆகிவிட்டது. எனவே இந்த சேவைகளை குறைந்த செலவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கினால் அது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உண்டு செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

Mukesh ambani
Mukesh ambani
Photo: AP

ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு பல இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தின. முன்னணி நிறுவனமாக திகழ்ந்த ஏர்செல், டாட்டா நிறுவனத்தின் டாட்டா கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எம்டிஎஸ் போன்ற பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் நஷ்டம் காரணமாக தமது சேவைகளை நிறுத்தின. பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க்கின் முன்பதிவு தொடங்கியது. இரண்டு வாரங்களில் 10,000 பேர் இந்தச் சேவைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா மற்றும் சீனா நாட்டின் வலை தளச் சந்தை என்பது 1 டிரில்லியன் டாலர் என்கின்ற அளவிற்கு பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் சந்தையைப் பிடிப்பதற்கு ஸ்டார்லிங்க் இப்போது தமது கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. சாட்டிலைட் மூலம் இணைப்பு கிடைப்பதால் எளிதாக இணைய வசதிகளை குக்கிராமங்களுக்கும் இந்த நிறுவனத்தால் கொண்டு செல்ல முடியும்.

ஜியோ நிறுவனம் புதிதாக இந்திய சந்தைக்குள் நுழைந்த போது குறிப்பிட்ட கால அளவிற்கு தமது சேவைகளை தொடர்ந்து இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. மேலை நாடுகளுடன் ஒப்பிட்டால் தற்போது இந்திய நிறுவனங்கள் குறைந்த விலையில் இணைய சேவைகளை வழங்கி வருகின்றன.

ஸ்டார்லிங்க் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு ரூ.7,300 டெபாசிட் கட்டணமாக நிர்ணயம் செய்யபட்டிருப்பது அந்நிறுவனத்திற்கு சற்று பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய சந்தை என்பது அதிக நடுத்தர குடும்பங்களைக் கொண்ட சந்தையாகும். எனவே இது அவர்களை ஈர்க்க வாய்ப்பில்லை. ஆனால் வரும் காலத்தில் ஸ்டார்லிங்க் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு விலையை குறைப்பதற்கும் பல சலுகைகளை வழங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு விலையைக் குறைத்து இணைய வசதிகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கினால் போட்டி இன்னும் பலமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Elon Musk
Elon Musk
James Duncan Davidson

இந்திய சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் பல நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பெரிய நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரராக விளங்கி வருகிறார். அதற்கு சற்றும் குறைவில்லாமல் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் உலக அரங்கில் பெரு வளர்ச்சியைக் கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளன. அவற்றால்தான் எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆகியிருக்கிறார்.` வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' என்பதற்கு உதாரணமாகத்தான் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்திய வருகை கருதப்படுகிறது. இந்தப் போட்டி காரணமாக இன்னும் தரமான இணைய சேவை குறைந்த விலையில் நமக்கு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது நமக்கு மகிழ்வான செய்தி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு