Published:Updated:

`நிதி அமைச்சரின் அறிவிப்புகளால் பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்படவில்லையே.. ஏன்?' - நிபுணரின் விளக்கம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ( vikatan )

பிரதமரின் அறிவிப்பு வெளியாகிய மே 12-ம் தேதி வர்த்தக நாளின் இறுதியில் ஏறியிருந்த சந்தை, மறுநாளில், நிதி அமைச்சரின் திட்ட அறிவிப்புமீதான எதிர்பார்ப்பில் அதே ஏற்றத்தில் இருந்தது. ஆனால், அவரது முதல்கட்ட அறிவிப்பு வெளியானதுமே மறுநாளில் சந்தை இறங்கிவிட்டது.

மே 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தால் மொத்த இந்தியாவும் பரபரப்பானது. அடுத்த நாள் நிதி அமைச்சரின் அறிவிப்பில் என்னென்ன இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. மறுநாளில் "சுயசார்பு பாரதம்" என்ற தலைப்பில், கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கான, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான முதல்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர். அதன்பின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பிரிவினருக்கான திட்டங்களை அறிவித்துவருகிறார். பொதுவாக, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தால் அதன் எதிரொலியைப் பங்குச்சந்தையின் ஏற்றத்தில் பார்க்க முடியும். இதற்கு முன்பு கார்ப்பரேட் வரியைக் குறைத்தபோது மிகப்பெரிய ஏற்றத்தைப் பங்குச்சந்தையில் பார்க்க முடிந்தது, இதேபோன்ற ஏற்றம் இப்போதும் ஏற்படும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, பங்குச்சந்தையில் இறக்கம் ஏற்பட்டது.

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு
vikatan

கடந்த மே 11ம் தேதி, 32,200 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், நேற்று, வெள்ளியன்று வர்த்தக வாரத்தின் இறுதியில் 31,065 புள்ளிகளாக, கிட்டத்தட்ட 1,100 புள்ளிகளுக்குமேல் சரிந்துள்ளது. குறிப்பாக, பிரதமரின் அறிவிப்பு வெளியாகிய மே 12-ம் தேதி வர்த்தக நாளின் இறுதியில் ஏறியிருந்த சந்தை, மறுநாளில், நிதி அமைச்சரின் திட்ட அறிவிப்புமீதான எதிர்பார்ப்பில் அதே ஏற்றத்தில் இருந்தது. ஆனால், அவரது முதல்கட்ட அறிவிப்பு வெளியானதுமே மறுநாளில் சந்தை இறங்கிவிட்டது. அதன்பின் கடந்த இரண்டு நாள்களாக இறக்கத்திலேயே செயல்பட்டது.

"நிதி அமைச்சரின் அறிவிப்புகளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்படியான அறிவிப்புகள் பெரிதும் இல்லாததே பங்குச்சந்தையில் எதிரொலிக்காததன் காரணம்" என்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

அவர் மேலும் கூறுகையில், "நிதி அமைச்சரின் அறிவிப்புகளில் முக்கியமாகச் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கான அறிவிப்புகள், வேளாண் துறையின் மீட்சிக்கான அறிவிப்புகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான அறிவிப்புகள் போன்றவையே முக்கியமாக இடம்பெற்றன. இவற்றால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சிறிய ஹோட்டல்கள், சலூன்கள் முதல்கொண்டு பெரிய நிறுவனங்கள்வரை அனைத்திலும் வெளி மாநிலத்தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கட்டமைப்புப் பணிகள் என அனைத்திலும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு இருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்கூட அவர்கள் அனைவரும் மீண்டும் வேலைக்கு வருவது உறுதியில்லை. எனவே இந்தப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் இயங்குவது கடினமே.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
vikatan

அதேபோல, பிரதமரின் அறிவிப்பைப் பார்க்கும்போது நிதி அமைச்சர் அறிவிக்கும் திட்டங்களில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடியான திட்டங்கள் இல்லை. வருமான வரி ரீஃபண்டைத் திருப்பிச்செலுத்துவது என்பது மக்கள் அளித்த பணத்தை மக்களிடமே திரும்பக்கொடுப்பதுதான். இதையும்கூட அவர்களின் திட்டக்கணக்கில்காட்டுவது எப்படிச் சரியானதாக இருக்கும்? இவர்களின் அறிவிப்புகளில் பெரும்பாலும் வங்கிகளிடம் கடன் பெறுவது குறித்து இருக்கிறது. இந்தக் கடன்களைத் தனியார் வங்கிகள் பெரும்பாலும் தர மறுப்பார்கள். எனவே, பொதுத்துறை வங்கிகள்தான் தந்தாக வேண்டும். ஏற்கெனவே வாராக்கடன் சிக்கலில் இருக்கும் சூழலில், எந்தவிதப் பிணையும் இல்லாமல் கடன் கொடுத்தால் வாராக்கடன் அதிகரிக்கத்தான் செய்யும். அது வங்கி அதிகாரிகளைப் பாதிக்கும். எனவே, பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் இதே சிக்கல்தான்.

வங்கிகள்
வங்கிகள்
vikatan

நிதி அமைச்சரின் அறிவிப்புகளால், வருங்காலத்தில், ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்படும் சூழலில், நுகர்வோர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வேண்டுமானால் ஓரளவு வருமானம் ஈட்டலாம். அதேபோல, மருந்து தயாரிப்பு நிறுவனப் பங்குகள், கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வளர்ச்சி மட்டும் தொடர்ந்தபடி இருக்கும். மற்றபடி பங்குச்சந்தைக்கு மகிழ்ச்சியான செய்தி இதில் இல்லாததால் பங்குச்சந்தையில் எதிரொலிக்கவில்லை" என்றார் விரிவாக..

அடுத்த கட்டுரைக்கு