Published:Updated:

முன்பு இன்ஃபோசிஸ்; இப்போது அமேசான்; கார்பரேட்களுக்கு அழுத்தம் தரும் ஆர்எஸ்எஸ்; பின்னணி என்ன?

இதற்கு சில வாரங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுவனம் பற்றி இதேபோல ஒரு கட்டுரை வெளியிட அது பலத்த சர்ச்சைக்குள்ளானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அக்டோபர் 3-ம் தேதி முதல் அமேசானின் `கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்’ விற்பனை தொடங்கவிருக்கும் இந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழான பாஞ்ஜன்யா (Panchjanya) இந்த நிறுவனம் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுவனம் பற்றி இதேபோல ஒரு கட்டுரை வெளியிட அது பலத்த சர்ச்சைக்குள்ளானது.

பாஞ்ஜன்யா
பாஞ்ஜன்யா
Twitter Image:// @epanchjanya

இந்தியச் சந்தையைத் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதுதான் அமேசானின் நோக்கம் என்றும், அதற்காக பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனம் செய்தது போன்ற செயல்பாடுகளில், அதாவது அரசியல், பொருளாதாரம், தனிநபர் சுதந்திரத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அந்நிறுவனம் செய்துவருவதாகக் கூறி பராக் தோபே (Parag Tobe) எழுதிய `ஆபரேஷன் ரெட் லோட்டஸ் (Operation Red Lotus)' என்கிற நூலை மேற்கோள் காட்டி விமர்சித்திருக்கிறது இந்தப் பத்திரிகை.

2013-ம் ஆண்டு ஜூன் மாதம் அமேசான் தனது செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் புத்தகம் மற்றும் குறைந்த விலையிலான சிறிய பொருள்களை மட்டும் விற்று வந்தது. நாளடைவில் இது விற்காத பொருள்களே இல்லையெனும் அளவுக்கு அனைத்துப் பொருள்களையும் தள்ளுபடி விலையில் விற்று வருகிறது. இது தள்ளுபடியில் பொருள்களை விற்கும் அளவுக்கு மற்ற வியாபாரிகளால் விற்க முடியாது. அப்படி விற்றாலும் அதில் அவர்கள் லாபம் சம்பாதிக்க முடியாது.

இதனால் வாடிக்கையாளர்களும் பல்கிப் பெருக அது குறு சிறு நடுத்தர வியாபாரிகளை வெகுவாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பதாகவும் இதன் மூலமாக அவர்களது `பொருளாதாரச் சுதந்திரம்’ பறி போய்க்கொண்டிருக்கிறது என்றும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் சந்தையைத் தங்களின் ஆளுகைக்குள் கொண்டு வர எத்தனிக்கிறது எனவும் கூறியிருக்கிறது.

இந்தியாவில் ஆன்லைன் வணிகம் சம்பந்தப்பட்ட விதிமுறையின்படி, இந்திய வியாபாரிகள் தங்கள் பொருள்களையும் சேவைகளையும் விற்பதற்கான `சந்தைத் தளமாகத் (Market Place)’ தான் அமேசான் மற்றும் வேறு சில ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனங்களின் பொருள்களை இதன் மூலம் விற்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், இதைத் தவிர்க்கும் வகையில் அமேசான் க்ளவுட்டெயில் (Cloudtail), ஆப்ரியோ (Apprio) ஆகிய துணை நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் பொருள்களை விற்று வருவதாகக் குற்றம் சுமத்தியிருக்கிறது.

Business (Representational Image)
Business (Representational Image)
Image by Free-Photos from Pixabay

க்ளவுட்டெயில் நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் நாராயாணமூர்த்திக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் 77 சதவிகித பங்கு இருந்தது என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் சர்ச்சை ஏற்பட்ட பின் அவர் அதிலிருந்து விலகி விட்டார் எனவும் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.

தங்கள் தளம் மூலமாக 7 லட்சம் சிறு, நடுத்தர வியாபாரிகள் அவர்களது பொருள்களை விற்று வருகிறார்கள் என அமேசான் கூறினாலும் சுமார் 35 சதவிகிதமான விற்பனை மேற்குறிப்பிட்ட இரண்டு துணை நிறுவனங்கள் வாயிலாகத்தான் செய்யப்படுகிறதென்றும், மீதமுள்ள 65 சதவிகித விற்பனையை வெறும் 35 வியாபார நிறுவனங்கள் மட்டுமே செய்கின்றன என்றும் அமேசான் மூலம் தனது பொருள்களை விற்று வந்த வியாபரி ஒருவர் கூறியிருக்கிறார். அதோடு அமேசானில் பொருள்களைத் தரப்படுத்தும் செயல்பாட்டை `இந்திய காம்பெட்டிஷன் கமிஷன்’ ஆராய வேண்டுமெனவும் சொல்லியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை தவிர, 2018-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை தன் நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கும் வகையில் அரசின் கொள்கைகள் இருக்க வேண்டுமென்பதற்காகவும், ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நம்ப முடியாத அளவுக்கு தன்னுடைய ஆறு நிறுவனங்களின் மூலமாக ரூ. 8,500 கோடியை நிறுவனத்தின் வக்கீல்கள் மூலம் பல இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

Amazon
Amazon
அதிகாரிகளுக்கு ₹8,546 கோடி லஞ்சம் கொடுத்ததா அமேசான்? விசாரிக்கும் மத்திய அரசு!

இது நிறுவனத்தின் வருமானத்தில் சுமார் 20.3 சதவிகிதமாகும். ரூ. 8,500 கோடியில் சுமார் ரூ. 3,417 கோடி ரூபாய் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் `அமேசான் செல்லர் சர்வீஸஸ் பிரைவேட் லிமிட்டெட்' மூலமாக விநியோகிக்கப்பட்டிருப்பதாக அமேசானின் சமீபத்திய நிதி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாக இந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

``இது தவிர, சரக்கு மற்றும் சேவை வரி சம்பந்தமான முறைகேட்டுக்கு ரூ. 54.55 கோடிக்கு வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டுமென்று இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆல் இண்டியா மொபைல் ரீடெயிலர்ஸ் அசோஸியேஷன் (இதோடு சுமார் 1.5 லட்சம் மொபைல் போன் விற்கும் கடைகள் தொடர்பில் இருக்கின்றன) பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் அமேசான் மூலம் விற்பனையாகும் மொபைல் போன்களின் தினசரி விற்பனைக்கு வரம்பு விதிக்க வேண்டுமென்று கேட்டிருப்பதோடு அதனுடைய வணிக நடவடிக்கைகளையும் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறது.

2018-ம் ஆண்டு DIPP பிரிவு அறிக்கையின் படி, ஆன்லைன் நிறுவனங்கள் அதனுடைய மொத்த விற்பனையில் அது சார்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் 25 சதவிகிதத்துக்கு மேலான பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. அமேசான் விஷயத்தில் இந்த விதிமுறையும் மீறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Amazon
Amazon
`தேச விரோத சக்திகளுடன் இன்ஃபோசிஸ்!' - ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகையால் வெடித்த சர்ச்சை; என்ன பிரச்னை?

அமேசான் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லையெனில், இதுவும் கிழக்கிந்திய நிறுவனம் 2.0 ஆகிவிடும். எனவே, இந்தியச் சந்தையையும் வியாபாரிகளின் நலனையும் மனதில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இதில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஃப்யூச்சர் குழும விற்பனை பிரச்னையில் அமேசானும், ரிலையன்ஸும் நீதிமன்றத்தில் மோதிக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.

ஆக, அமேசான் இன்னொரு கிழக்கிந்திய நிறுவனமாகி இந்தியச் சந்தைக்கு ஊறுவிளைவிக்கும் என்பது சரியான வாதமா இல்லை, அதிகாரத்துக்கு நெருக்கத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு உதவ வேண்டுமென்பதற்காக புகார்கள் ஊதி பெரிதாக்கப்படுகின்றனவா?

- சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு